Skip to main content

குரங்குக்கு இறுதிச்சடங்கு! ஒப்பாரி வைத்த பெண்கள்; மனிதநேய மலை கிராமவாசிகள்!!

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பது டார்வினின் பரிணாமக் கோட்பாடு; குரங்குகளை கடவுளின் வடிவமாகக் கருதுவது ஹிந்து மத கோட்பாடு; என்றாலும், குரங்குகளை நாம் ஒருபோதும் வீட்டு விலங்காகவோ, வளர்ப்புப் பிராணிகளாகவோ கருதுவதில்லை. மறைந்த இயக்குநர் ராம.நாராயணன் படங்களில் குரங்குகளின்  சேட்டைகளை நாம் ரசித்துப் பார்த்திருந்தாலும்கூட, அவற்றை நெருங்கிச் செல்வதில்லை.


 

Funeral for Monkey! Humanities Mountain Villagers !!

 

ஆனால், கிருஷ்ணகிரி அருகே ஒரு மலைக்கிராம மக்கள், குரங்குகளை தங்கள் குடும்பங்களில் ஓர் அங்கத்தினராகவே கருதி வருகின்றனர். அதாவது, இறந்த குரங்குக்கு மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய அத்தனை சடங்குகளையும் செய்து, சவ அடக்கம் செய்திருக்கின்றனர். கிராமவாசிகளின் இந்த மனிதநேய செயல்தான் சுற்றுவட்டாரங்களில் கடந்த இரு நாள்களாக வியப்பான பேச்சாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் வனப்பகுதி அருகே, ஜீஞ்சம்பட்டி மலைக்கிராமம் உள்ளது. அடர்த்தியான காப்புக்காடு பகுதி என்பதால் குரங்குகள் நடமாட்டம் அதிகம். அடிக்கடி ஊருக்குள் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் குரங்குகள், பலருடைய வீடுகளின் சமையல்கட்டு வரைக்கும் அழையா விருந்தாளியாக நுழைந்து கைவரிசை காட்டி விடுகின்றன.
 

Funeral for Monkey! Humanities Mountain Villagers !!

 

யாராவது வீட்டை திறந்து போட்டுவிட்டு அரட்டை அடிக்க அக்கம்பக்கம் சென்றுவிட்டால் அவ்வளவுதான்... வந்து பார்த்தால் சமையலறையில் அண்டா குண்டாக்களில் இருந்த சோறு முதல் குழம்பு, பொரியல் வரை எல்லாமே சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டதுபோல் காலியாகியிருக்கும். பல நேரங்களில் குரங்குகள் சமையல் பாத்திரங்களையே களவாடி காப்புக்காட்டுக்குள் ஓடிவிடுவதும், அவை தின்ற பிறகு தூக்கி எறியும் பாத்திரங்களை எடுத்து வருவதும் மலைக்கிராம மக்களிடையே அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள்தான். என்றாலும், வனக்கிராம மக்கள் குரங்குகளின் சேட்டைகளை ரசிக்கவே செய்கின்றனர்.

அவர்கள் குரங்குகளை துன்புறுத்துவதில்லை. சிறுவர்களும் குரங்குகளுக்கு பழங்கள், தண்ணீர் கொடுத்து அவற்றை தங்கள் சினேகிதர்களாக்கிக் கொள்வது உண்டு. பழக்கமான குரங்குகளுக்கு பெயர்களும் சூட்டியிருக்கிறார்கள்.

இந்தநிலையில்தான், செவ்வாய்க்கிழமை (பிப். 4) மாலை, சில குரங்குகள் வழக்கத்தை விட அபாயகரமான தொனியில் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தன. இடைவிடாத கூச்சல். அந்த கூச்சல், மரண ஓலத்தைப் போலவே இருந்ததால், என்னவோ ஏதோ என்று பதறிப்போன மலைக்கிராம மக்கள், குரங்குகளின் ஓசை வந்த திசையை நோக்கி ஓடிச்சென்று பார்த்தனர். அங்கே குரங்கு ஒன்று இறந்து கிடப்பது தெரிய வந்தது. சக குரங்கு இறந்ததால், அதன் வலியைத் தாங்க முடியாமல் மனிதர்களைப் போலவே குரங்குகளும் தங்கள் சோகத்தை வித்தியாசமான ஒலிகளை எழுப்பி தெரியப்படுத்தி இருப்பதாக கிராம மக்கள் புரிந்து கொண்டனர்.

 

Funeral for Monkey! Humanities Mountain Villagers !!

 

இதையடுத்து வனக்கிராம மக்கள், இறந்து கிடந்த குரங்கின் சடலத்தை மீட்டனர். மனிதர்கள் இறந்துவிட்டால் சடலத்தைக் எப்படி குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, இறுதிச்சடங்குகளை செய்வார்களோ அதைப்போலவே அந்த குரங்கின் சடலத்தையும் குளிப்பாட்டி, மஞ்சள், குங்குமம் வைத்தனர். வாசனை திரவியங்களைப் பூசினர். குரங்குகள் விரும்பி சாப்பிடும் பழங்கள், தண்ணீர் வைத்து படைத்தனர். குரங்கின் உடலுக்கு கிராமத்தினர் சாமந்திப்பூமாலை அணிவித்தனர்.

பின்னர், தென்னை ஓலை, மூங்கில் பிரம்புகளால் பாடை கட்டி, அதில் குரங்கின் சடலத்தைக் கிடத்தி ஊர்வலமாகக் கொண்டு சென்று வனப்பகுதிக்குள் குழி தோண்டி அடக்கம் செய்தனர். அதற்கு முன்பாக, வனக்கிராம பெண்கள் குரங்கின் பிரிவைத் தாள முடியாமல் ஒப்பாரி வைத்தும், மார்பில் அடித்துக்கொண்டும் பாடினர். சவ ஊர்வலத்தின்போது பட்டாசுகளும் வெடித்தனர்.


வழக்கமாக நாய், பூனைகளை மட்டுமே செல்லப் பிராணிகளாக கருதி, நெருங்கிப் பழகும் மனிதர்கள் மத்தியில், மலைக்கிராம மக்கள், தங்களின் வாழ்வின் ஒரு பகுதியாக கலந்து விட்ட குரங்குகளையும் சக மனிதர்களைப்போலவே பாவித்து, நல்லடக்கம் நடத்திய சம்பவம் ஒட்டுமொத்த மலைக்கிராம வாசிகளிடமும் பெரும் சோகத்தையும், அதேநேரம் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.