Skip to main content

80 மணி நேரம் நடந்தது என்ன... சுஜித்தின் உடல் பாகம் துண்டாக காரணம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்!

Published on 31/10/2019 | Edited on 31/10/2019

ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலகெங்கும் வாழும் தமிழர்களையும் கண்ணீருடன் தன் பக்கம் ஈர்த்துவிட்டது நடுக்காட்டுப்பட்டி. மதம்-சாதி கடந்து அத்தனைபேரும் பிரார்த்தனை செய்தனர். திருச்சியை அடுத்த மணப்பாறையிலிருந்து பிரியும் கிராமப்புற சாலையில் 8-ஆவது கிலோ மீட்டரில் வானம் பார்த்த விவசாய நிலம்தான் நடுக்காட்டுப்பட்டி. தொடர் மழையினால் இரண்டு பக்கமும் பசுமையான நிலங்களை கொண்டதுடன், வீடும் நிலமும் சேர்ந்தே இருக்கும் விவசாய பகுதிகள் என்பதால் ஆட்கள் நடமாட்டமே இருக்கவில்லை. இந்த பகுதியில் இதனை மலைப்பட்டி என்றே அழைக்கிறார்கள்.

 

incident



இங்கே லூக்காஸ் என்பவரின் பிள்ளைகளான வேளாங்கண்ணி, தேவராஜ், வின்சென்ட் 3 பேருக்கும் குடும்ப சொத்தாக நடுக்காட்டுப்பட்டி யில் 5.2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இந்த நிலத்தைச் சுற்றி ரோட்டு ஓரமாக பார்த்து 3 பிள்ளைகளும் தனித்தனியே வீடு கட்டியிருக்கிறார்கள். இந்த நிலத்தில் ஒரு பெரிய கிணறு இருக்கிறது. சுற்றிலும் கம்பி வேலி போட்டிருக்கிறார்கள். இந்த நிலத்தை 3 பேருக்கும் தனித்தனியே எழுதிக்கொடுக்கப்படாததால், தங்களுக்கான விவசாய நிலத்தை ஒதுக்கிக் கொண்டு, மூவரும் தனித்தனியே விவசாயம் பார்க்கிறார்கள்.

 

incident



பொதுக் கிணற்றில் தண்ணீர் இல்லாமல் போனதால் இந்த 5.2 ஏக்கர் நிலத்தில் 3 இடங்களில் ஆழ்குழாய்க் கிணறுகள் தோண்டியிருக்கிறார்கள். இதில் கடைசியாக தோண்டிய இடம்தான் மூத்த அண்ணன் வேளாங்கண்ணி பயிர் செய்துகொண்டிருக்கும் இடம். இந்த கிணறு 10 வருடங்களுக்கு முன்பு 6 இஞ்ச் பைப்பில் 600 அடி ஆழத்திற்கு போட்டும் தண்ணீர் இல்லை என்பதால் கடுப்பாகி அதை மண் போட்டு மூடி வைத்துவிட்டு, சோளம் பயிரிட்டு வந்தனர். நிலத்திற்கான பட்டா இன்னும் லூக்காஸ் பெயரிலே உள்ளது. ஆனால் வறட்சி நிவாரணம் என்று இதுவரை எதுவுமே வாங்கியது கிடையாதாம்.

 

incident



லூக்காஸின் 3 மகன்களில் 2-வது மகன்தான் தேவராஜ். இவருக்கு பிரிட்டோ என்கிற மகன். பிரிட்டோவுக்கும் கலாமேரிக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி 4 வயதில் புனித்ரோஷன் என்ற மகனும், 2 வயதில் சுர்ஜித் என்ற மகனும் உள்ளனர். கொத்தனார் வேலை பார்க்கும் பிரிட்டோ அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். கடந்த 07.10.2019 அன்று சுர்ஜித்தின் 2-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டபோதும், பிரிட்டோ ஊரில் இல்லை. மனைவி கலாமேரி மாட்டு பால் கறந்து வீடுகளுக்கு கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

 

incident



சம்பவம் நடந்த அன்று, தாத்தா தேவராஜ் வெளியே இருக்கும் சிறிய வீட்டில் படுத்திருந்தார். அப்பா பிரிட்டோ வையம்பட்டியில் கொத்தனார் வேலையில் இருக்க, தாய் கலாமேரி வீட்டுக்கு வெளியே மாட்டுக்கு தண்ணீர் குடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில், வீட்டில் உள்ள கட்டிலில் சுர்ஜித் உறங்கி கொண்டிருக்கிறான். எல்.கே.ஜி. படிக்கும் புனித்ரோஷன் மாலை 4.30 மணிக்கு பள்ளிவிட்டு வேனில் வந்து இறங்கி, உறங்கி கொண்டிருக்கும் தம்பி சுர்ஜித்தை எழுப்பி, பின் வாசல் வழியே அழைத்துச் சென்று வயல் பக்கம் விளையாடத் தொடங்கினான். ஓடிப்பிடித்து விளையாடும்போது, பெரியவன் வரப்பில் வேகமாக ஓட, துரத்திய சின்னவன் சுர்ஜித், எதிர்பாராத விதமாக நிலத்தில் கால் வைக்க "அம்மா' என்று அலறிக்கொண்டு கீழே விழுகிறான்.

 

incident



இதைப் பார்த்து அலறிய புனித், தன் தம்பி குழியில் விழுந்து மண்ணுக்குள் சிக்குவதை அழுதுகொண்டே அம்மாவிடம் போய்ச் சொன்னான். ஆழ்துளை கிணற்றில் மகன் விழுந்துவிட்டான் என்பதை அறிந்து தாய் கலாமேரி அழ, மாமனார் தேவராஜ் பதறியடித்து வர... பக்கத்து நிலத்தில் உள்ள அமல்ராஜ் அந்த ஏரியாவில் உள்ள ஹிட்டாச்சி பொக்லைனுக்கு போன்பண்ணி அழைத்தார். ஆழ்துளை கிணற்றில், 6 அடி தொலைவில் அழுது கொண்டிருந்த சுர்ஜித்தை பார்த்து தாய் கலாமேரி கதறியிருக்கிறார். அதன் பிறகு 108 ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறை என தகவல் பறக்க... பொக்லைன் போட்டுத் தோண்டவும், அதிர்வினால் மண் சரிந்து, 6 அடியில் இருந்த குழந்தை 18 அடிக்கு கீழே இறங்கியிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து 80 மணி நேரம் நடந்த நிகழ்வுகள் நேரம் வாரியாக... 

அக்டோபர் 25-ஆம் தேதி மாலை 5:00 மணி: கலாமேரி வீட்டிற்கும் வேளாங்கண்ணி தாத்தா வீட்டிற்கும் இடையில் உள்ள சோளக்காட்டில் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். 5:30 மணிக்கு மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை சுர்ஜித் அண்ணன் கண் முன்னே தவறி விழுந்தான். 6 அடியில் இருக்கிறான்.

6:00 மணி : உள்ளூர் ஜே.சி.பி., ஹிட்டாச்சி ஆகியவற்றை அழைத்து தோண்டி எடுக்க முயற்சி எடுக்கிறார்கள். மண் அதிர்வுகளினால் 6 அடியில் இருந்த சுர்ஜித் 18 அடிக்கு செல்கிறான்.

மாலை 6:30-7:15 மணி : தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியைத் தொடங்கினர். அதற்குள்ளாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, எஸ்.பி ஜியாவுதீன், அமைச்சர்கள் வெல்லமண்டி, வளர்மதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விடுகிறார்கள்.

இரவு சுமார் 8:00 மணி : அமைச்சர்கள் முன்னிலையில் ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் 4 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் குழிதோண்டும் பணி தொடங்கியது. குழந்தை சுர்ஜித் சுமார் 28 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. இரவு சுமார் 8:30 மணிவரை அருகில் 17 அடி ஆழ குழி தோண்டப்பட்டது. அதன் பிறகு பாறைகள் தென்பட்டதால் குழி தோண் டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இரவு 9:00 மணி : குழந்தையிடம் அடிக் கடி பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக தாய் கலா மேரியை பேசச் சொன்னார்கள். கண்ணீருடன் குழியை நோக்கிய கலாமேரி, "அழாத சாமி... அம்மா உன்னை தூக்கிடுறேன்''’என்றபோது ஒட்டுமொத்த மாக அத்தனை பேரின் இதயமும் அதிர்ந்தது.

இரவு 10:00 மணி : புதுக்கோட்டையிலிருந்து கிளம்பி வந்த அமைச்சர் விஜய பாஸ்கர் மற்ற அமைச்சர்களோடு இணைந்து கொண்டு ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்க மதுரையைச் சேர்ந்த மணிகண்டன், திருச்சி டேனியல், டேனியல் மீட்புக்குழுவில் திருச்சியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் மாதேஷ் உள்ளனர். அன்றைய இரவு முழுவதும் அந்த மாணவன் கண் அயராமல் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.


இரவு 11:00 மணி : கோவை பல்லடத்தைச் சேர்ந்த குழுவினர் உள்ளிட்ட மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு ஒவ்வொரு குழுவாக வந்தனர். அவர்கள் மீட்புப் பணியைத் தொடங்கினர். அண்ணா பல்கலைக்கழகக் குழு தங்களிடமிருந்த தெர்மோ கேமராவை சுர்ஜித் தவறி விழுந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் இறக்கினர். 8:30 மணியளவில் சுர்ஜித்தின் உடல் வெப்பச்சூடு 28 டிகிரியாக (நார்மல் 32 டிகிரி) இருந்ததை தெர்மோ கேமரா மூலம் மீட்புக் குழுவினர் அறிந்தனர். சென்னை ஐ.ஐ.டி.யால் அங்கீகரிக்கப்பட்ட கருவி அது. அதன்மூலம் எப்படியும் மீட்டுவிடலாம் என்று நம்பிக்கை இருந்தது. அதிகாலையில் இந்த முயற்சி பலனளிக்காமல் போனது. இதற்கிடையே, மண் துகள்கள் குழந்தையின்மீது விழுந்தன. இது மிகப்பெரிய பின்னடைவாகிவிட்டது.

இரவு 12:00 மணி : மணிகண்டன் குழுவினர் குழிக்குள் கயிறை இறக்கி குழந்தையின் கையில் சுருக்குப் போட்டு அதன்மூலம் மீட்க முயற்சி செய்தனர். குழந்தையின் ஒரு கையில் சுருக்கு மூலம் கயிறு இறுக்கப்பட்டது. ஆனால், இரண்டாவது கையில் சுருக்குக் கயிறை மாட்டுவதில் சிக்கல் நீடித்தது. குழியில் சிக்கியிருக்கும் குழந்தைக்கு குழாய் மூலம் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது. ஒரு கையில் சுருக்குக் கயிறு மாட்டியிருந்த நிலையில்... மேலே தூக்கும் போது... கொஞ்சதூரம் மேலே வந்து மீண்டும் நழுவி கீழே விழுந்தது.

நள்ளிரவு 2:00 மணி : பொக்லைன் இயந் திரங்கள் மூலம் ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகே குழிதோண்டும் பணி மீண்டும் தொடங்கப்பட்டது. அதிர்வு மற்றும் மண் சரிவினால் சிறிது நேரத்துக்குப் பின்னர் அந்தப் பணி நிறுத்தப்பட்டது.

அக்டோபர் 26 

அதிகாலை 3:30 : நாமக்கல்லைச் சேர்ந்த வெங்கடேசன் குழுவினர் அதிகாலை 3.30 மணியளவில் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஐ.ஐ.டி அங்கீகாரம் பெற்ற தங்களது மீட்பு உபகரணம் மூலம் குழந்தையை மீட்கும் பணியை அவரது குழுவினர் தொடங்கினர். அப்போது குழந்தை, முன்னர் சிக்கியிருந்த இடத்தில் இருந்து மேலும் நழுவி, சுமார் 70 அடி ஆழத்துக்கு சென்றிருந்தது தெரியவந்தது.

ஆழ்துளைக் கிணற்றின் விட்டம் மேல் பகுதியில் 6 இன்ச் ஆக இருந்தபோது, கீழ்ப்பகுதி நோக்கி செல்ல செல்ல விட்டம் 4 இன்ச் ஆகக் குறைந்தது. இதனால், 5 இன்ச் அகலம் கொண்ட நாமக்கல் குழுவினரின் மீட்புக் கருவியானது 50 அடி ஆழத்துக்கு மேல் செல்ல முடியவில்லை. அதேநேரம் குழந்தை சுவாசித்துக் கொண்டிருப்பது நவீன கருவிகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. குழந்தையின் அசைவுகளும் கேமரா மூலம் கண்டறியப்பட்டது.

அதிகாலை 5:00 மணி : நாமக்கல் குழுவைத் தொடர்ந்து புதுக்கோட்டையைச் சேர்ந்த வீரமணி குழுவினர் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விடிய விடிய அவர்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. பிரசவத்தின்போது குழந்தையின் தலையைப் பிடித்து வெளியே எடுப்பது போன்ற முறை, அதேபோல், பாம்பு பிடிப்பது போன்ற முறை எனப் பலமுறைகள் மூலம் முயற்சிசெய்தும், அந்தக் குழந்தையை வெளியில் எடுக்க முடியவில்லை. பின்னர், அதிகாலையில் அந்தக் குழந்தையிடமிருந்து அழுகுரலையோ மற்ற எந்தவித ஓசையையோ எதையும் கேட்க முடியவில்லை. இதையடுத்து, அதிகாலையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் உதவி நாடப்பட்டது.

அதிகாலை 5:30 மணி : குழந்தையிடம் இருந்து எந்த அசைவையும் பார்க்கமுடியவில்லை என்று மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். மண் முடியநிலையில் கை விரல்கள் மட்டும் மேலே தெரிந்தது. அதேநேரம், குழிக்குள் சிக்கியிருக்கும் குழந்தைக்கு தொடர்ந்து டியூப் மூலம் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. மண்ணும் பாறையும் நிறைந்த குழியில் வேறுவித நச்சு வாயு இருந்தால், அது இந்த ஆக்ஸிஜனையும் விஷமாக்கும் என்ற அச்சமும் ஏற்பட்டது.


காலை 8:00 மணி : குழந்தையை மீட்கும் பணி இரண்டாவது நாளாகத் தொடர்ந்தது. சினிமா சண்டைக் காட்சிகளை வடிவமைக்கும் அன்பறிவ் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள், தங்களின் நவீன இயந்திரங்கள் மூலமாகக் குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஏறக்குறைய ஒரு மணி நேரம் அவர்கள் முயற்சித்த நிலையில், அதுவும் பலனளிக்கவில்லை.

பகல் 11:00 மணி : செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "சென்னை மவுலிவாக்கம் கட்டட விபத்தின்போது உணவு, தண்ணீரில்லாமல் கிட்டத்தட்ட 72 மணி நேரத்துக்கு மேல் சிக்கித் தவித்தவர்களை நாம் உயிரோடு மீட்டிருக்கிறோம். அந்த நம்பிக்கையுடன்தான் நாங்கள் முயற்சி செய்துவருகிறோம். முதல்வர் தகவல் கொடுத்ததை அடுத்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட இருக்கிறார்கள்'' என்றார்.

பகல் 12:00 மணி : இரண்டாவது நாள் மதியம் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களைத் தொடர்ந்து சிறிதுநேரத்தில் அரக்கோணத்தில் இருந்து 33 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஆர்.சி.ஓலா தலைமையில் நடுக்காட்டுப்பட்டிக்கு வந்தனர். இரண்டு குழுவினரும் இணைந்து தங்களிடமுள்ள நவீன உபகரணங்களுடன் மீட்புப் பணியைத் தொடங்கினர். அப்போது லேசாக மழை பெய்யத் தொடங்கியதால் ஆழ்துளைக் கிணறு இருக்கும் பகுதியில் மழை பெய்யாதவாறு தார்பாய் கொண்டு மேற்கூரை அமைக்கப்பட்டது. கேமரா பொருத்திய சிறப்புக் கருவிகள் துணையுடன் குழந்தையை மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.

மதியம் 2:30 மணி : "குழந்தையின் முகத்தைப் பார்க்காமல் சாப்பிட மாட்டேன்' எனப் பிடிவாதமாக இருந்த தாய் கலாமேரி மயக்கமடைந்தார். முதல்நாள் இரவு முழுவதும் தூங்காமல் குழிக்கு அருகில் இருந்து குழந்தை சுர்ஜித்துக்கு தைரியம் கொடுத்துக் கொண்டிருந்த தாய் கலாமேரி தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தார். இதனால், இரண்டாவது நாள் மதியம் அளவில் அவர் மயக்கமடைந்தார். இதையடுத்து உடனடியாக அவருக்கு சம்பவ இடத்தில் இருந்த அரசு மருத்துவக் குழுவினர் சிகிச்சையளித்தனர். மீட்பு நடவடிக்கைகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.

நள்ளிரவு 1:00 மணி : தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சுமார் 12 மணி நேரத்துக்கு மேலாக முயற்சித்த நிலையில், ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் மற்றொரு குழி தோண்டி மீட்புப் பணியை மேற் கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்காக குழி தோண்டும் ராட்சத ரிக் இயந்திரங்களைக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. குழந்தை சுர்ஜித் அதிக ஆழத்துக்கு சென்று விடாதபடி ஏர்லாக் மற்றும் அழுத்தம் மூலம் குழந்தையின் கை பிடித்துவைக்கப் பட்டது.

 

27-10-2019 

அதிகாலை 4:00 மணி : குழி தோண்டுவதற்காக 6 மீட்டர் தொலை வில் இடம் குறிக்கப்பட்ட நிலையில், திருச்சி லால்குடியில் இருந்து அதிகாலையில் முதல் ரிக் இயந்திரம் சம்பவ இடத்துக்கு வந்தது. 96 டன் எடை கொண்ட அந்த ரிக் இயந்திரம் சம்பவ இடத்துக்கு வரும் வழியில் 4 இடங்களில் பிரேக் டவுன் ஆனது. அதேபோல் 2 இடங்களில் அதன் டயர்கள் பஞ்சர் ஆகியிருக்கின்றன. இதை எல்லாம் சரி செய்து கொண்டுவரப்பட்டது.

காலை 7:10 மணி : ரிக் இயந்திரம் மூலம் ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் குழி தோண்டும் பணி தொடங்கியது. 4 மணிநேரம் துளையிட்டு 10 அடி ஆழமே தோண்டப்பட்டது.

மதியம் 2:30 மணி : செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், அந்தப் பகுதியில் கடினமான பாறைகள் இருப்பதால், குழி தோண்டும் பணி சவாலானதாக இருப்பதாகத் தெரிவித்தனர். அதேபோல், முதல் இயந்திரத்துக்குப் பின்னர் இரண்டாவதாக புதிய ரிக் இயந்திரம் இராமநாதபுரத்தில் இருந்து கொண்டு வரப்பட இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மாலை 5:00 மணி : இரண்டாவது ரிக் இயந்திரம் நடுக்காட்டுப்பட்டிக்குக் கொண்டு வரப்பட்டது. அந்த இயந்திரத் தைப் பொருத்தும் பணி தொடங்கியது.

இரவு 10:00 மணி : முதல் ரிக் இயந்திரம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. அந்த இயந்திரம் சுமார் 26 முதல் 28 அடி ஆழம் அளவுக்குக் குழி தோண்டியதாகத் தெரிகிறது.

இரவு 11:00 மணி : அதிக திறன்கொண்ட எல் அண்ட் டி நிறுவன இரண்டாவது ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி தொடங்கியது.

இரவு சுமார் 11:30 மணி : நடுக்காட்டுப்பட்டிக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தேனி எம்.பி ரவீந்திரநாத் குமார் ஆகியோர் வந்தனர். மீட்புப் பணிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், "குழந்தையை உயிருடன் மீட்க முழு முயற்சிகளையும் தமிழக அரசு செய்யும்'' என்றார்.

கரூர் எம்.பி. ஜோதிமணி, சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டதோடு, குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் மற்ற அமைச்சர்களும் அங்கே தங்கி இருக்க ஆரம்பித்தனர்.

அக்டோபர் 28-ம் தேதி காலை 9:00 மணி : த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நேரில் பார்வையிட்டார். பின்னர், அமைச்சர் விஜயபாஸ்கருடன் இணைந்து அவர் சுர்ஜித்தின் தந்தைக்கு ஆறுதல் கூறினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், "துளையிடும் பணி மிகவும் சவாலானதாக இருக்கிறது. தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள், எல் அண்ட் டி நிறுவன அதிகாரிகள், இவ்வளவு பெரிய இயந்திரத்தை இயக்கும் பணியாளர்கள் என குழுவாக முயற்சி செய்தும், துளையிடும் பணி சவால் நிறைந்ததாகவே இருக்கிறது. துளையிடும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இயந்திரங்களின் பாகங்கள் அனைத்தும் உடைந்துபோகின்றன. இவ்வளவு கடினமான பாறைகளை இதுவரை பார்த்ததில்லை'' என்றார். குழந்தையின் நிலை குறித்து கேட்டபோது, "உள்ளேயிருந்து எந்த சமிக்ஞையும் கிடைக்கவில்லை' என்றார்.

காலை 10:00 மணி

குழந்தை சுர்ஜித்தை பத்திரமாக மீட்க வேண்டி தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளிலும் உள்ள வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

காலை 11:00 மணி

திருச்சி ஆட்சியருடன் சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், "பாறைகளை அடுத்து கரிசல் மண் தென்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், குழந்தையை மீட்பதற்காகத் தோண்டும் பணி தொடர்ந்து நடைபெறும். 98 அடி ஆழத்துக்குப் பள்ளம் தோண்டத் திட்டமிடப்பட்டிருக்கிறது. குழந்தையை மீட்கும் திட்டம் எக்காரணத்தைக் கொண்டும் கைவிடப்படாது'' என்று தெரிவித்தார்.

நண்பகல் 12:00 மணி

பெரிய ரிக் இயந்திரம் குழி தோண்டிக்கொண்டிருந்த நிலையில், இயந்திரத்தில் சிறிய அளவில் பழுது ஏற்பட்டது. சில பகுதிகள் உடைந்துபோனது; பழுதைப் போக்கும் பணியில் அங்கிருந்த பணியாளர்கள் ஈடுபட்டனர். அதுவரை 42 அடி அளவுக்குக் குழி தோண்டப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

நண்பகல் 12:30 மணி

கடினமான பாறைகளை போர்வெல் மூலம் துளையிட்டு அதன்பின்னர் மீண்டும் ரிக் இயந்திரம் மூலம் குழிதோண்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஏணி ஒன்றின் மூலம் குழிக்குள் தீயணைப்பு வீரர் ஒருவர் இறங்கினார். அங்கு அவர் துளையிடப்பட வேண்டிய பகுதிகளை குறியிட்டு வந்தார். பின்னர், போர்வெல் மூலம் துளையிடும் பணி சுமார் 1 மணியளவில் தொடங்கியது.

மதியம் 2:00 மணி

திருச்சியைச் சேர்ந்த கஜோல் தலைமையிலான திருநங்கைகள், சுர்ஜித்தின் தாயை சந்தித்து " எங்கள் தம்பிக்கு நேர்ந்ததாக நினைக்கிறோம்' என்று சொல்லி ஆறுதல்படுத்த ஒருவாய் மட்டும் சாப்பிட்டுவிட்டு "மகனின் முகம் பார்க்காமல் சாப்பிடமாட்டேன்' என்று மறுத்துவிட்டார்.

பிற்பகல் 4:00 மணி : மறுபடியும் போர்வெல் மூலம் கடினமான பாறைகளை 5 பகுதிகளாகப் பிரித்து துளையிடப்பட்டது. ரிக் இயந்திரம் எளிதாக பாறைகளை உடைப்பதற்கு இப்படி துளையிடப்பட்டது. சுமார் 1 மணியளவில் தொடங்கிய பணி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஏற்கனவே 45 அடி வரை ரிக் இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட நிலையில் தற்போது போர்வெல் மூலம் மேலும் 20 அடி ஆழம் வரை தோண்டப் பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. போர்வெல் துளையிட்ட கற்களை ரிக் இயந்திரம் மூலம் அகற்றும் பணிகள் நடைபெற்றன.

இரவு 9:00 மணி : தோண்டப்பட்ட குழிக்குள் ஆக்ஸிஜன் உதவியுடன் வீரர் அஜித்குமார் என்பவர் உள்ளே சென்று சிறு பாறை ஒன்றை எடுத்துவந்தார். இதற்கு இடையில் குழந்தை 88 அடி ஆழத்தில் இருப்பதாகவும் துளையிடுவதற்கு இடையே இருந்த பாறை க்ரேன் உதவியுன் மேலே கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தோண்டும் பணிகள் வேகமெடுத்தன.

இரவு 10:00 மணி : ரிக் இயந்திரம் மூலம் முழுவதும் தோண்டி எடுத்தவுடன் தீயணைப்புத் துறையினர் குழியில் உள்ளே இறங்கி பக்கவாட்டின் வழியே துளையிட்டு செல்வார்கள் என அறிவித்தனர். ஆனாலும் அது சவாலான விசயம் என்றனர்.

நள்ளிரவு 12:10 மணி : அதுவரை பாறைகளை உடைத்துக்கொண்டிருந்த ரிக் இயந்திரம் நிறுத்தப்பட்டது. ஏன் நிறுத்தினார்கள் என்கிற கேள்வி எழுந்தது. குழியில் இருந்து லேசான அழுகிய வாடை வருகிறது என்கிற பேச்சு கேட்க ஆரம்பித்தது.

நள்ளிரவு 1:00 மணி : மத்திய மண்டல ஐ.ஜி. வரதாஜுலு பெரும் படையுடன் உள்ளே வந்தார். அங்கிருந்த பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் என அத்தனை பேரையும் அங்கிருந்து வெளியேற்றினார்.

நள்ளிரவு 2:15 மணி : வருவாய்த்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களிடம் "குழந்தையின் உடல் அழுகிய நிலையில் இருப்பதால் குழந்தையை எப்படி எடுப்பது என்பது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை செய்துகொண்டிருக்கிறோம்'' என்றார்.

அதிகாலை 3:14 மணி : தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஏற்கனவே குழந்தையை எடுக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் புதிய கருவி ஒன்றை அதன் பிறகு அங்கேயே தயார் செய்து வைத்திருந்தனர். இடுக்கி போன்ற அதைவைத்து இந்தமுறை முயற்சி செய்தனர்.

அக். 29 

அதிகாலை 4:15 மணி : அந்த புதிய கருவியின் உதவியுடன் கிட்டதட்ட 80 அடி ஆழத்தின் உள்ளே துண்டுகளாக வெளியே எடுக்கப்பட்டது. அப்படி பையில் சுற்றி மணப்பாறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அதிகாலை 6:00 மணி : பிரிட்டோ குடும்பத்தின் சொந்தஊரான பாத்திமாபுதூர் கல்லறையில் புதைப்பதற்காக குழி தோண்டும் வேலைகள் ஆரம்பம். கல்லறையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தகர சீட்டுகள் எல்லாம் போடப்பட்டன.

காலை 7:30 மணி : மருத்துவமனையிலிருந்து கொண்டுவரப்பட்ட சுர்ஜித்தின் உடல் சுற்றி வண்டியில் பாத்திமாபுதூர் கல்லறையில் வைக்கப்பட்டது. அங்கே சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். கிறிஸ்தவ முறைப்படியும் சடங்குகள் நடை பெற்றன.

காலை 8:45 மணி : 5 நாட்கள் தொடர் போராட்டத்திற்கு பிறகு சுர்ஜித் உடலை அமைச்சர்கள், பெற்றோர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்தனர். திரண்டு வந்த மக்களும் அஞ்சலி செலுத்தினர். இந்த விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில்தான் வேளாங்கண்ணியின் மகனான இராணுவ வீரர் ஒருவர் கடந்த வருடம் கோழி பிடிக்கச் சென்று விழுந்து இறந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Next Story

“இனியும் கட்சியில் நீடிக்க முடியாது” - ஆம் ஆத்மி அமைச்சர் அதிரடி ராஜினாமா!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
 Aam Aadmi Party minister resigns and says Can't stay in the party anymore

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து, அவரிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்புச் சலுகையும் காட்ட முடியாது. மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது. பொதுவாழ்வில் ஈடுபடும் நபர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்’ என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து ராஜ்குமார் ஆனந்த் கூறுகையில், “ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் வலுவான செய்தியைப் பார்த்த பிறகு, நான் அதில் சேர்ந்தேன். ஆனால் இன்று, கட்சி ஊழல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தன்னைக் கண்டறிந்துள்ளது. அதனால்தான் நான் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

ஆம் ஆத்மி ஊழலில் ஆழமாக உள்ளது. மேலும் ஊழல்வாதிகளுடன் என்னால் வேலை பார்க்க முடியாது.  அரசியல் மாறினால் நாடு மாறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். இன்று அரசியல் மாறவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். எங்களிடம் 13 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் பட்டியலினத்தவர், பெண்கள் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்த கட்சியில் பட்டியலின எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை. அத்தகைய சூழ்நிலையில், அனைத்து பட்டியல் இன மக்களும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இதனால், இனியும் நான் கட்சியில் நீடிப்பது கடினம்.” என்றார்.

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.