தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் (வயது 80) ஆகஸ்ட் 15, 2025அன்று மாலை சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி அதிகாலை வழுக்கி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த அவர், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரது மறைவு பாஜக தலைமை மற்றும் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

1945 ஆம் ஆண்டு பிப்ரவரி1 ஆம் தேதி தஞ்சாவூரில் பிறந்த இல.கணேசன், சிறு வயதிலேயே தந்தையை இழந்து, தனது அண்ணனின் அரவணைப்பில் வளர்ந்தார். திருமணம் செய்யாமல், தனது வாழ்க்கையை முழுமையாக அரசியலுக்கு அர்ப்பணித்தவர். ஆரம்ப காலத்தில் இருந்தே ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் (RSS) முழுநேரத் தொண்டராக இணைந்து, தேசிய சிந்தனை கொண்ட அமைப்புகளில் தீவிரமாகப் பணியாற்றினார். 1970களில் எமர்ஜென்ஸி காலகட்டத்தில், அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து, சுமார் ஒரு ஆண்டு காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். அந்தக் காலகட்டத்தில், தற்போதைய தமிழ்தேசியப் பேரியக்கத் தலைவர் பழ.நெடுமாறனுடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார்.

பாஜகவில் இணைந்த பிறகு, இல.கணேசன் படிப்படியாக கட்சியில் முக்கியப் பொறுப்புகளை வகித்தார். 1991 ஆம் ஆண்டு தமிழக பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளராகப் பதவியேற்றார். 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டார். இரு தேர்தல்களிலும் வெற்றி பெறாவிட்டாலும், அவரது அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பு கட்சிக்கு முக்கிய பலமாக அமைந்தது. பின்னர், மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ராஜ்யசபாவில் பணியாற்றினார். பாஜகவில் மாநிலத் தலைவர், தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவர் உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகளை வகித்த இல.கணேசன், கட்சியின் வளர்ச்சிக்கு தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். மத்தியில் திமுக-பாஜக கூட்டணி இருந்த காலத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் நெருங்கிய நட்புறவு பேணியவர்.

2015 ஆம் ஆண்டு முதல் இல.கணேசன் ஆளுநராக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், 2021 ஆம் ஆண்டு மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர், மேற்கு வங்க ஆளுநராகப் பணியாற்றிய அவர், 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆளுநர் பதவியில் இருந்தபோதும், சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்திற்கு அவ்வப்போது வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கடந்த மாதம் சென்னை வந்த அவர், நீரிழிவு நோயால் பாதத்தில் ஏற்பட்ட புண்ணுக்கு சிகிச்சை பெற்றார். பின், வீட்டில் ஓய்வில் இருந்த போது, கடந்த 5ம் தேதி, கால் மரத்துப் போன நிலையில் மயங்கி விழுந்தார். கடந்த 8 ம் தேதி அதிகாலை தலைச்சுற்றல் ஏற்பட்ட நிலையில் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், தலையில் ரத்தக்கட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்தார்.

Advertisment

இல.கணேசனின் மறைவு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழக பாஜகவின் மூத்த தலைவராகவும், நாகாலாந்து ஆளுநராகவும் பணியாற்றிய இல.கணேசனின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது அரசியல் மற்றும் சமூகப் பணிகள் என்றும் நினைவு கூறப்படும்,” எனத் தனது இரங்கலைத்தெரிவித்தார். மேலும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இல.கணேசன், தனது அரசியல் வாழ்க்கையில் எளிமையையும், ஒழுக்கத்தையும் முன்மாதிரியாகக் கொண்டவர். RSS இல் தனது பயணத்தைத் தொடங்கிய அவர், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார். பாஜகவில் இருந்தாலும் மாற்றுக் கட்சி நண்பர்களுடன் மிகுந்த நட்பு பாராட்டக் கூடியவராக இருந்தார். அவரது மறைவு, தமிழக அரசியல் களத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.