கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் (வயது 102) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் கடந்த சில வாரங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (21.07.2025) மாலை 03.20 மணியளவில் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அச்சுதானந்தன் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை கேரள மாநில முதல்வராகப் பதவி வகித்து வந்தார். கடந்த 1985ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை மார்க்சிஸ்ட் கட்சியின் பொலீட்பீரோ (பொதுக்குழு) உறுப்பினராக இருந்தவர் ஆவார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவர் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது ஆலப்புழா சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று அம்மாநிலத்தின் 13வது சட்டமன்றத்திலும் உறுப்பினரான தேர்ந்தெடுக்கப்பட்டார். அச்சுதானந்தன் தனது பொதுவுடைமை கொள்கையால் கேரளா மாநில முன்னேற்றத்திற்கு மிக முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவர் ஆவார்.
தொழிற்சங்க ஈடுபாட்டின் காரணமாக இவர் அரசியலுக்குள் நுழைந்தார். இவர் முதன் முதலாகக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதன் பிறகு ஏற்பட்ட பல்வேறு கருத்து வேறுபாடுகள் காரணமாக 1940ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். அதோடு இந்தியச் சுதந்திரப் போராட்டத்திலும் பங்கு பெற்று 5 வருடங்களுக்கு மேலாகச் சிறையிலும் அடைக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக 1964ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் என்ற கட்சியை நிறுவிய 32 முக்கிய உறுப்பினர்களுள் இவரும் ஒருவர் ஆவார்.
சுமார் 82 ஆவது வயதில் முதல்வராக பொறுப்பேற்றதன் மூலம் அதிக வயதில் முதல்வர் ஆனவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. அதாவது 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை கேரள முதலமைச்சராக இருந்தார் அச்சுதானந்தன். அவர் முதல்வராகப் பதவியேற்ற போதே அதிகபட்ச வயதில் முதல்வரான நபர் என்ற பெருமையைப் பெற்றார்.கேரள சட்டப்பேரவில் நீண்ட நாட்கள் (15 ஆண்டுகளுக்கும் மேலாக) பணியாற்றிய எதிர்கட்சி தலைவர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார். அதோடு கம்யூனிஸ்ட் கட்சியினுடைய பல்வேறு தலைவர் பொறுப்புகள் மற்றும் மாவட்ட பொறுப்புகளிலும் இருந்து அவர் படிப்படியாக முதல்வர் பொறுப்பிற்கு வந்தவர் ஆவார்.
அந்த வகையில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில கமிட்டியினுடைய செயலாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். கடந்த 1965ஆம் ஆண்டு தொடங்கி 2016ஆம் ஆண்டு வரை பல்வேறு தொகுதிகளில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சியின் அடிமட்ட தொண்டர் என்ற பொறுப்பிலிருந்து முதல்வராக உயர்ந்த தலைவர் என்ற பெருமையையும் மரியாதையும் அவர் பெற்றுள்ளார். அரசியல் கட்சிகள் என்ற பேதம் இல்லாமல் அனைத்து தரப்பினரையும் நண்பர்கள் என்ற ரீதியில் அணுகியவர் ஆவார்.