Skip to main content

மூன்று மாதத்திற்கு ஒரு கலெக்டர்... கடலூர் ரகசியம்!

Published on 19/09/2018 | Edited on 19/09/2018

ரண்டு வருடத்திற்குள் ஏழு ஆட்சியர்களைக் கண்டிருக்கிறது. கடலூர் மாவட்டம் சராசரியாக மூன்று மாதத்திற்கு ஒரு கலெக்டர்.

இரண்டாண்டுகள் பணியாற்றிய சுரேஷ்குமார், 21.6.16 அன்று மாற்றப்பட்டார். விஜயா வந்தார். 31.7.16 அன்று அவர் மாற்றப்பட்டார். ஞானசேகரன் வந்தார். 9.9.16 அன்று அவர் மாற்றப்பட்டார். ராஜேஷ் வந்தார். 29.8.17 அன்று அவரும் மாற்றப்பட்டார். பிரசாந்த் வடநேரே வந்தார். 20.2.18 அன்று அவரும் மாற்றப்பட்டார். தண்டபாணி வந்தார். 23.8.18 அன்று தண்டபாணியும் மாற்றப்பட்டு விட்டார். இப்போது அன்புச்செல்வன் வந்திருக்கிறார்.

கடலூர் மாவட்டக் கலெக்டர்கள் மட்டும் ஏன் இப்படிப் பந்தாடப்படுகிறார்கள்?
sampath
கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் சம்பத் தலைமையில் ஒரு கோஷ்டி. எம்.எல்.ஏ.க்கள் பண்ருட்டி சத்யா, சிதம்பரம் பாண்டியன், காட்டுமன்னார்குடி முருகுமாறன் ஆதரவுபெற்ற தெற்கு மா.செ.யும், எம்.பி.யுமான அருண்மொழித்தேவன் தலைமையில் ஒரு கோஷ்டி. ஒரு கோஷ்டி கலந்து கொள்ளும் விழாவை இன்னொரு கோஷ்டி எட்டிப் பார்ப்பதில்லை. அப்படிப்பட்ட மோதல். இவர்களுடைய கிரிக்கெட் ஆட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் சிக்ஸர்களாகத் தூக்கி அடிக்கப்படுகிறார்கள் என்கிறார்கள் ஆளுங்கட்சிக்காரர்களும், ஆட்சியர் அலுவலக அதிகாரிகளும்.

கடலூர் மாவட்டத்தில் 1585 சத்துணவு மையங்கள். இவற்றில் 997 பணியிடங்கள் காலியாயின. இவற்றுக்கு இக்கோஷ்டிகள் சொன்னவர்களை கலெக்டர்கள் போடவில்லை. அந்தக் கோஷ்டி சிபாரிசை செய்தார். இந்தக் கோஷ்டி சிபாரிசுகளை ஏற்றார் என்ற கோபத்தில் மூன்று ஆட்சியர்கள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டார்களாம்.

""மூன்று மாதம் ஆறு மாதத்திற்கு ஒரு ஆட்சியர் இருந்தால் எந்தப் பணியாவது நடக்குமா? மாவட்டத்தின் நிலைமைகளைப் புரிந்து கொள்ளும் முன்பே மாற்றி விடுகிறார்கள். அரசியல்வாதிகளின் வருமான விளையாட்டுகளால் ஆட்சியர்களை மாற்றுகிறார்களே என்ற கோபத்தில் இருக்கிறார்கள் எங்கள் மாவட்ட மக்கள்'' என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் கல்வராயர்.

""வாம்மா மின்னல்! அப்படீன்னு வடிவேல் காமெடி ஒன்று உண்டு. அப்படித்தான் எங்கள் மாவட்ட கலெக்டர் போஸ்டிங் ஆகிவிட்டது. மாவட்ட நிர்வாகம் சீர்கெட்டுக் கிடக்கிறது! குடிக்கிறதுக்கு தண்ணி கூட கிடைக்கலை. இந்த லட்சணத்தில் இருக்கிறது நிர்வாகம்'' என்கிறார் சமூக ஆர்வலர் பாஸ்கரன்.

""உங்கள் கட்சியினரின் உள்குத்து மற்றும் கோஷ்டி மோதலால்தான் கலெக்டர்கள் பந்தாடப்படுகிறார்களாமே?'' எம்.பி., அருண்மொழித்தேவனிடம் கேட்டோம். ""அப்படிப்பட்ட செயலில் எப்போதும் இறங்கமாட்டோம். மாவட்ட ஆட்சியருக்கு முழு ஒத்துழைப்புக் கொடுப்போம்'' என்றார் அவர்.

இதே கேள்வியை கேட்பதற்காக அமைச்சர் சம்பத்தை தொடர்புகொள்ள முயன்றோம். பலமுறை செல்போனை எடுத்த அமைச்சரின் பி.ஏ., ""அமைச்சர் பிஸி பிஸி'' என்று கிளிப்பிள்ளையாகக் கூறுகிறார்.