Skip to main content

பாரதி பதிவுசெய்த சர்வதேச அரசியல்... அடிமை வர்த்தகம் முதல் புதிய ரஷ்யா வரை...

Published on 11/12/2020 | Edited on 11/12/2020

 

fiji island


பல்லவி
கரும்புத் தோட்டத்திலே - ஆ!
கரும்புத் தோட்டத்திலே

சரணங்கள்
கரும்புத் தோட்டத்திலே - அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்து கின்றனரே! ஹிந்து
மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய்
சுருங்குகின்றனரே - அவர்
துன்பத்தை நீக்க வழியில்லையோ? ஒரு
மருந்திதற் கிலையோ? - செக்கு
மாடுகள் போலுழைத் தேங்குகின்றார், அந்தக் (கரும்புத்தோட்டத்திலே)

பெண்ணென்று சொல்லிடிலோ - ஒரு
பேயும் இரங்கும் என்பார்; தெய்வமே! - நினது
எண்ணம் இரங்காதோ? - அந்த
ஏழைகள் அங்கு சொரியுங் கண்ணீர்வெறும்
மண்ணிற் கலந்திடுமோ? - தெற்கு
மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர்
கண்ணற்ற தீவினிலே - தனிக்
காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார், அந்தக் (கரும்புத்தோட்டத்திலே)

நாட்டை நினைப்பாரோ? - எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ? - அவர்
விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல்
கேட்டிருப்பாய் காற்றே! துன்பக்
கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல்
மீட்டும் உரையாயோ? - அவர்
விம்மி யழவுந் திறங்கெட்டும் போயினர் (கரும்புத்தோட்டத்திலே)

நெஞ்சம் குமுறுகிறார் - கற்பு
நீங்கிடச் செய்யும் கொடுமையிலே அந்தப்
பஞ்சை மகளிரெல்லாம் - துன்பப்
பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
தஞ்சமு மில்லாதே - அவர்
சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்
மிஞ்ச விடலாமோ? - ஹே
வீரமா காளி சாமுண்டி காளீஸ்வரி! (கரும்புத்தோட்டத்திலே)

 


‘தெற்கு மாகடலுக்கு நடுவினிலே அங்கோர் கண்ணற்ற தீவினிலே’ என்று இந்த பாடலில் பாரதியார் குறிப்பிடுவது பசிபிக் பெருங்கடலின் மத்தியில் சின்ன புள்ளியாகக் கண்ணில்படும் குறைந்தளவிலான மக்கள் தொகையை கொண்ட ஃபிஜி தீவுதான். பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து தமிழ், இந்தி, வங்காளம் பேசும் பலரை தேயிலைத் தோட்ட வேலைகளுக்காகவும் கரும்புத் தோட்ட வேலைகளுக்காகவும் கங்காணிகளின் ஆசைவார்தைகளால் வீழ்த்தி அவர்களின் சொந்த ஊர்களைவிட்டு வேறு நாடுகளுக்கு , அடிமாடுகளைப்போல எங்கே போகிறோம், என்ன செய்யப்போகிறோம் என்பதைக்கூட அறியாமல் கூட்டிச்சென்றனர் அப்போதைய வியாபாரிகள். அடிமை ஒழிப்புச் சட்டம் இங்கிலாந்தில் 1834ஆம் ஆண்டில் இயற்றப்பட்டுவிட்டது. ஆனால், அதற்கு பின்னரும் ஆங்கிலேயர்களின் பிடியில் இருக்கும் காலனி நாடுகளின் மக்கள் அடிமைகளைப் போல்தான் நடத்தப்பட்டனர் என்பதற்கு இந்த தோட்ட வேலைகள் குறித்த ஆவணங்களே சாட்சி. இந்த சட்டம் இயற்றப்பட்ட அந்த ஆண்டே தென்னிந்தியாவைச் சேர்ந்த பலர் தோட்ட வேலைக்காக மொரீசியஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

மொரீசியஸில் கவர்னராக பணியாற்றிவந்த சர். ஆதர் கோர்டன், ஃபிஜியின் முதல் கவர்னராக பொறுப்பேற்ற பின்பு அவர் செய்த முதல் பணி இந்தியாவிலிருந்து ஃபிஜி தோட்ட வேலைகளுக்கு ஆட்களை கொண்டுவந்து இறக்கியதுதான். 1879ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் நாள் லியோனிதாஸ் கப்பல் மூலம் கொத்து கொத்தாக ஃபிஜி மண்ணில் கொண்டு தள்ளப்பட்டனர் இந்தியர்கள். அப்போதிலிருந்து 1916ஆம் ஆண்டுவரை கப்பல் கப்பலாகக் கொண்டுவரப்பட்டு ஃபிஜியில் குவிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 60,000 பேருக்கு மேல். அதாவது, கப்பலில் காலரா, அம்மை, வாந்தி, வயிற்றுப்போக்கால் இறந்ததுபோக, உயிர்த்தப்பி கரைசேர்ந்தவர்களின் எண்ணிக்கை இது எனவும் வைத்துக்கொள்ளலாம்.

 

சுமார் 45,000 பேர் வட இந்தியத் துறைமுகங்களிலிருந்தும், 15,000 பேர் தென்னிந்தியாவிலிருந்தும் கரும்புத் தோட்ட பணிகளுக்காக சென்றிருக்கிறார்கள். 1903ஆம் ஆண்டிலிருந்துதான் தென்னிந்தியர்கள் வருகை தொடங்கியிருக்கிறது. தென்னிந்தியர்கள் மலேயா, சிலோன் போன்ற இடங்களுக்கு அதிகம் போனதால், ஃபிஜிக்கு வந்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்று சொல்லப்படுகிறது. இவர்கள் பெரும்பாலும் விசாகப்பட்டினம், ஆற்காடு, சித்தூர், திருச்சினாப்போலி, சிங்கில்பட், கிருஷ்ணா பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்று ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

எங்கெங்கிருந்தோ முகவர்களின் மூலம் துறைமுகங்களுக்குக் கொண்டு வரப்பட்டு, ‘உடல் நோயோ மன நோயோ இல்லை’ என்று சான்றிதழ் பெற்று ஒப்பந்தத்தில் கைநாட்டு வாங்கப்பட்டு, கழுத்தில் எண் எழுதிய வட்டத் தகரம் கட்டப்பட்டு, கப்பலில் ஏற்றிவிடப்பட்டவர்கள். இவர்கள் அங்குப் போனபின்பு என்னென்ன மாதிரியான துன்பங்களையும் ரணங்களையும் சந்தித்தார்கள் என்பதை நாட்டார் வழக்கு பாடல்களின் மூலமே அவர்களால் ஆவணம் செய்ய முடிந்திருக்கிறது. மக்களின் கவிஞரான பாரதியார் எத்தனையோ சமூக அவலங்களை ஆவணப்படுத்த மறந்ததில்லை, எத்தனை மைல்களுக்கு அப்பாலோ நடைபெற்ற இந்த துயரங்களையும் ஆவணப்படுத்தாமல் இல்லை நம் முண்டாசுக்கவி. இதுமட்டுமல்லாமல் பல வெளிநாட்டு அரசியல்களை தனது கவிதைகளின் வாயிலாக தமிழர்களுக்காக ஆவணம் செய்திருக்கிறார்.

 

அப்போதைய இத்தாலி என்பது இன்றைய பல ஐரோப்பிய நாடுகளின் பல பகுதிகளை உள்ளடக்கியது. அடிமைப்பட்ட இத்தாலி நாட்டின் பல பகுதிகளை விடுதலை செய்யவும், அவற்றில் மக்களாட்சியை நிறுவவும், ஒன்றுபட்ட நாட்டைக் குடியரசு ஆக்கவும் தம் வாழ்வை முழுமையாக அற்பணித்து உழைத்தவர்தான் ஜோசஃப் மாஜினி. இவரது இந்த உழைப்பையும், இத்தாலியின் அக்கால அரசியலையும் ‘மாஜினியின் பிரதிக்கினை’ எனும் கவிதை வாயிலாக நம் மக்களிடம் கொண்டுசேர்த்தார்.

 

அதேபோல, ‘பெல்ஜியம்’ நாட்டிற்கு வாழ்த்து என்னும் கவிதை- முதலாம் உலகப்போரில் ஜெர்மனியிடம் வீழ்ச்சியடைந்த பெல்ஜியம் குறித்த தனது பார்வையையும் தெளிவாக வெளிபடுத்தினார் பாரதி. ஜெர்மனியிடம் கண்ட வீழ்ச்சியால் வருத்தமடைந்து அந்நாட்டு மக்கள் படும் துயரை, சிந்தும் குருதியை வலியுடன் உலகுக்கு உணர்தியவர் பெல்ஜிய நாட்டு கவிஞர் எமிலி வெர்ஹேரன். 1915ஆம் ஆண்டு இதுகுறித்து இவர் எழுதிய கவிதை, 1916ஆம் ஆண்டு கவிதை தொகுப்பாக வெளியானது. ஆனால், அதே 1915 ஆம் ஆண்டு பெல்ஜியத்திற்கு வாழ்த்து என கவிதை ஒன்றை வெளியிட்டு அந்நாட்டு அரசியல் சூழ்நிலைகளையும், பெல்ஜியம் மீண்டும் ஜெர்மனியின் பிடியிலிருந்து விடுதலையாகி உயர்ந்து நிற்கும் என்றும் கூறிய பாரதியாரின் பார்வை எவ்வளவு விரிவானது என்பது இதன்மூலம் நமக்கு புலப்படும். வெர்ஹேரன் எழுதிய அதே வலியுடன் எழுதியிருப்பார். ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடங்காதவர் பாரதியார் என்பது அவருடைய படைப்புகள் சொல்லும்.

 

ஜார் மன்னனின் அராஜகத்தில் ஒடுக்கப்பட்டிருந்த மக்கள், லெனினின் தலைமையில் ஒன்று சேர்ந்து செய்த புரட்சியில், ஜார் மன்னன் ஆட்சி வீழ்த்தப்பட்டு ரஷ்யாவில் 1917ஆம் ஆண்டு மக்களாட்சி அமைந்தது. இதை ‘புதிய ருஷ்யா’ என்று  ஜார் மன்னனின் கொடுங்கோள் ஆட்சி வீழ்ந்ததை கவிதையாக பாடினார் பாரதியார்.  
 

இப்படி எங்கெல்லாம் மக்களின் கை அதிகாரத்தை வலுவிழக்க வைத்ததோ அதையெல்லாம் அழுத்தமாகப் பதிவுசெய்து இந்தியர்களின் சுதந்திர போராட்ட எண்ணத்திற்கு உரமிட்டார். நம்முடைய மக்களின் கைகளும் ஒருநாள் ஓங்கும் என்ற நம்பிக்கையை விதைக்கும் பல சமூக கவிதைகளையும் பாடியிருக்கிறார். அன்றும் இன்றும் அவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. அவை அனைத்தையும் தாண்டி அவருடைய கவிதைகளில் இருக்கும் நல்லவை பரவிக்கொண்டேதான் இருக்கின்றன. அதேபோல இளம்தலைமுறையினரை கவிதை உலகுக்கு அறிமுகம் செய்வதிலும் இவரது எழுத்துக்களின் பங்கு ஏராளம்.

 

 

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

“3ஆம் உலகப்போர் உருவாகும்...” - ரஷ்ய அதிபர் எச்சரிக்கை

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
 Russian president warns about World War 3

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.  இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலை தொடுத்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், மூன்றாம் உலகப் போர் உருவாகும் சூழல் வரும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முறை அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், ரஷ்ய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயகக் கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களம் கண்டன. ரஷ்ய வரலாற்றில் முதல்முறையாக நடைபெற்ற 3 நாட்கள் வாக்குப்பதிவில், 3வது முறையாக அதிபர் தேர்தலில் புதின் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். ஸ்டாலினுக்கு பிறகு தொடர்ச்சியாக 3வது முறையாக வெற்றி பெற்ற புதின், 200 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளார். 

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும், புதின் பேசியதாவது, “அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளும், ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதிக்கொள்வது என்பது முழு அளவிலான மூன்றாம் உலகப் போரை நோக்கி ஒரு படி தொலைவில் இருக்கும் என அர்த்தம். இது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அத்தகைய சூழலை யாரும் விரும்பவில்லை. அதே நேரத்தில், இந்த நவீன உலகில் எல்லாம் சாத்தியமே. உக்ரைனில் ஏற்கனவே, நேட்டோ இராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்களில் ஆங்கிலம் பேசும் வீரர்களும், பிரஞ்சு பேசும் வீரர்களும் உள்ளனர். அவர்கள் அங்கு அதிக எண்ணிக்கையில் இறந்து கொண்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட நாடுகள் தங்கள் வீரர்களை திரும்பப் பெறுவது நலம்” என்று கூறினார். 

முன்னதாக தேர்தல் பரப்புரையின் போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அங்குள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “இங்கே எல்லாம் அணுசக்தி மோதல் வருவதாக நான் நினைக்கவில்லை. உக்ரைன் மீதும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. உக்ரைனுடனான பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால், அவை யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அதே வேளையில், ராணுவ தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் சிந்தித்தால், நாங்கள் நிச்சயமாக தயாராக இருக்கிறோம். 

அணு ஆயுத போரைத் தூண்டும் வகையில் எந்த ஒரு செயலிலும் அமெரிக்கா ஈடுபடாது என்று நம்புகிறோம். மேலும், அமெரிக்கா தனது ராணுவப் படைகளை ரஷ்ய எல்லையில் அல்லது உக்ரைனுக்கு அனுப்பினால், ரஷ்யா இந்த நடவடிக்கையில் ஈடுபடும் என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ளும். ஒருவேளை, அமெரிக்கா ஆணு ஆயுத சோதனை நடத்தினால், அதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.