four people passes away in tiruvaru on banner issue

Advertisment

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகிலுள்ள கோவிலூர் கிராமத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு கோயில் திருவிழாவில் இரு சமூகத்திற்கிடையே பதாகை வைப்பதில் தொடங்கிய மோதல் அடுத்தடுத்து 4 பேரின் தலைகளைச் சீவுமளவுக்கான கொடூரமாக மாறியுள்ளது.

கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்ஜெகன். இவர்சசிகலா, தினகரனின் உறவினராவார். அ.தி.மு.க. பிரமுகராக இருந்து 2 முறை ஊராட்சி மன்றத் தலைவராகவும், ஒருமுறை ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்தவர். ஜெகனுக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராஜேஸுக்கும் கோயிலில் பதாகை வைப்பதில் ஏற்பட்ட பிரச்சனை நாளடைவில் இருதரப்பு பிரச்சினையானது.

இதன் காரணமாக ஜெகன் தரப்பு ராஜேஸை முடிக்கத் திட்டமிட்டு 2015 ஆகஸ்ட் 7 ஆம் தேதி கூலிப்படையுடன் ராஜேஸின் மீன் பண்ணைக்குச் சென்று அங்கு படுத்திருந்த நபரை வெட்டிக் குதறியது. அங்கு படுத்திருந்தது ராஜேஸ் தம்பி வீரபாண்டியன். இந்த வழக்கில் அப்போதைய அ.தி.மு.க. பிரமுகர் ஜெகனின் அண்ணன் மதன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

இதனால் ஊருக்குள் பதற்றம் நிலவிய நிலையில், அதே ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி மதனை வெட்டிப் படுகொலை செய்து பழிக்குப்பழி தீர்த்துக் கொண்டது. இந்த வழக்கில் ராஜேஸ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதனால் ஒற்றுமையாக இருந்த அந்த கிராமத்தில் பகை மேலோங்கியது.

ஒரே கிராமத்தில் இரு தரப்பினரின் மோதல்களையும், உயிர்ப் பலிகளையும் தவிர்க்க வேண்டும் என்று இரு தரப்பு முக்கிய பிரமுகர்களும், அரசியல் பிரமுகர்களும் தலையிட்டு இரு தரப்பிலும் சமாதானம் செய்து வைத்தனர். அதனால் இனி ஊர் அமைதியாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.

அதன்பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஜெகனை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்ட ராஜேஸ் வெற்றி பெற்று மாஜி அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். அ.தி.மு.க.வில் இருந்த ஜெகன் அ.ம.மு.க.வில் இணைந்து மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பதவிக்கு வந்தார். முன்பகையோடு தேர்தல் பகையும் சேர்ந்து கொண்டது.

Advertisment

இந்நிலையில் கடந்த 2021 ஜனவரி 22 ஆம் தேதி கிராமத்தினரின் சமாதானத்தையும் மீறி அ.தி.மு.க. கவுன்சிலர் ராஜேஸை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் வெட்டி, தலையைத்தனியாக எடுத்து வந்து மக்கள் அதிகம் கூடும் முத்துப்பேட்டை ஆசாத் நகர் பிரதான சாலையில் வீசிச் சென்றுவிட்டனர். இந்த வழக்கில் அ.ம.மு.க. பிரமுகரான ஜெகன் உள்பட பலர் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து வருகிறது.

அ.தி.மு.க. கவுன்சிலர் ராஜேஸ் கொல்லப்பட்ட பிறகு தன்னையும் கொன்றுவிடுவார்கள் என்று அஞ்சிய ஜெகன், சிறையிலிருந்து பிணையில் வந்து தன் தாயாரை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு தன் மனைவியை அழைத்துக்கொண்டு வெளியூர் சென்றுவிட்டார். ஜெகன் எந்த ஊரில் இருக்கிறார் என்பது உறவினர்களுக்குக் கூடத் தெரியாமல் இருந்தது. சில மாதங்களுக்கு ஒருமுறை ரகசியமாக வீட்டிற்கு வந்து தன் தாயாரை பார்த்துவிட்டு உடனே சென்றுவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கடந்த வாரம் ஜெகன் தன் தாயாரைப் பார்க்க சொந்த ஊருக்கு வந்துவிட்டுச் சென்ற 3வது நாள், 2023 செப்டம்பர் 5 ஆம் தேதி சென்னை நொளம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முகப்பேர் மேற்கு, ரெட்டிபாளையம் சாலையிலுள்ள அவரது மீன் கடை வாசலில் வைத்தே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து அடுத்த நாள் ராஜேஸ் அண்ணன் மகேஷ் உள்பட முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 5 பேர் நொளம்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

“கிராமப் பெரியவர்களின் சமாதானத்தையும் மீறி ராஜேஸ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதால் ராஜேஸ் தரப்பினர் 2 ஆண்டுகளாகச் சென்னையில் பதுங்கியிருந்து மீன் கடை நடத்தி வந்த ஜெகனை தேடி வந்து வெட்டிச் சரித்துள்ளனர் என்று கூறும் முத்துப்பேட்டை பகுதியினர், 2015ல் கோயில் பிரச்சனை தொடங்கும் முன்பு ஜெகன் முத்துப்பேட்டை பகுதியில் அ.தி.மு.க.வில் வளர்ந்து வந்த இளம் தலைவராக இருந்தார். பணம், செல்வாக்கு நிறையவே இருந்தது. ஆனால் சாதாரணமாக ஒரு பிளக்ஸ் வைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையால் இன்று இரு தரப்பிலும் 4 உயிர்கள் பலியாகிவிட்டது. இதில் மதன், ராஜேஸ், ஜெகன் என 3 பேருக்கும் சின்னக் குழந்தைகள் உள்ளதுதான் வேதனையாக உள்ளது என்கின்றனர்.