Skip to main content

அஸ்திவாரம் நடுங்குகிறது! பேந்தப் பேந்த

Published on 09/08/2017 | Edited on 09/08/2017
அஸ்திவாரம் நடுங்குகிறது! பேந்தப் பேந்த முழிக்கிறார்கள்! நாஞ்சில் சம்பத் அதிரடி!


அதிமுகவின் பேச்சாளர்கள் எல்லாம் இந்த அணியா அந்த அணியா என்று புரியாமல் நொந்துபோய் வாய்திறக்காமல் இருக்கும்போதும், வந்து சேர்ந்த அணிக்கு, வழிமாறாமல் உரக்கக் குரல் கொடுத்து வருபவர் அதிமுகவின் துணை கொள்கைப் பரப்புச் செயலாளர் 'நாஞ்சில்' சம்பத். 'ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி', 'பயமா...எனக்கா' இப்படி ரஜினி பேசும் 'பன்ச்' வசனங்கள் பிரபலமாவது போல 'காத்திருப்போம்', 'துப்புனா துடைச்சிட்டு போவேன்', 'இன்னோவா' என இவர் பேசும் 'பன்ச்' வசனங்கள் மிகப்பிரபலம். தினகரன் அணியில் அதிரடியாக ஆடி வரும் அவரிடம் அதிமுகவின் தற்போதைய சூழ்நிலை குறித்து கேள்விகளை வைத்தோம். அவர் அளித்த பதில்கள்...  

புதிய நிர்வாகிகள் பட்டியலை டிடிவி தினகரன் அறிவித்தது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, 'கட்சியின் பொது செயலாளர் நியமனம் குறித்த விவகாரம் தேர்தல் கமிஷன் முன்பும், கோர்ட்டிலும் விசாரணையில் உள்ளது. பொதுசெயலாளர்  பதவியே கேள்விக்குறியாக உள்ளது. அவர் நியமித்த துணை பொது செயலாளர் பதவியும் கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில், அவர் வெளியிட்ட நியமனங்கள் செல்லுமா..' என்கிறாரே?

ஜெயக்குமார் தன்னை மறந்து பேசுகிறார். நன்றியில்லாமல் பேசுகிறார். கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாமல் பேசுகிறார். கடந்த காலங்களை கசக்கி எறிந்துவிட்டு பேசுகிறார். அதிகாரம் அவருடைய கண்ணை மறைக்கிறது. ஜெ. முதலமைச்சராக இருந்த காலத்தில் இவர் சபாநாயகராக வீற்றிருந்த அந்த நாட்களில் தன்னுடைய பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடுவதற்கு திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்து, அடுத்த பொதுச்செயலாளர் என்பது மாதிரி ஒரு தோற்றத்தை உருவாக்குவதற்கு இவர் முயற்சித்து அந்த வகையில் சுவரொட்டிகள் தலைநகர் சென்னையில் எல்லா இடங்களிலும் ஒட்டப்பட்டன. ஜெ. நலமாக திடகாத்திரமாக இருக்கிற காலத்திலேயே அந்தப் பதவிக்கு குறி வைத்த புல்லுருவி ஜெயக்குமார். அதனால் கட்சியில் எந்த பொறுப்பும் கொடுக்காமல் இவரை ஒதுக்கியே வைத்திருந்தார் ஜெ. ஆனால் சசிகலா, அதையெல்லாம் மறந்து, மன்னித்து கழகத்தின் மீனவர் அணி செயலாளர் பதவியை நீலாங்கரை முனுசாமியிடம் இருந்து எடுத்து இவருக்கு கொடுத்து, நிதியமைச்சர் பொறுப்பையும் கொடுத்தது சசிகலாவும், டிடிவி தினகரனும்தான்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

என்றான் வள்ளுவன். செய்த நன்றிக்கு இதுதான் பிராய்சித்தமா என்று அவருடைய மனசாட்சி அவரை எதிர்த்து கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும். கழகத்தின் அதிகாரப்பூர்வமான பொதுக்குழுதான் சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது. ஆகவே எல்லா அதிகாரங்களும் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உரிமை உடையது. அந்த வகையில் பொதுச்செயலாளர் நியமித்த துணைப்பொதுச்செயலாளர் தான் டிடிவி தினகரன். அவரும் ஏனோ தானோ என்று அறிவிக்கவில்லை. பெங்களுரு பரப்பன அக்ரஹாரம் சிறை சென்று பொதுச்செயலாளரை சந்தித்து விவாதித்து அவரின் ஒப்புதலோடுதான் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

ஜெ.வால் ஒதுக்கி வைக்கப்பட்டவர் தினகரன் என்று திரும்ப திரும்ப சொல்லுவது அவர் எதையோ தினகரன் மீது ஒரு வன்மம் கொண்டு பேசுவது மாதிரி தெரிகிறது. எய்தவர் இருக்க அம்பை நொத்து பயனில்லை என்றாலும் கட்சியில் சேர்ந்தவுடனேயே ஒருவருக்கு பொறுப்பு கொடுக்கலாமா என்ற ஒரு கேள்வியையும் அந்த கூடாரத்தில் இருந்து எழுப்புகிறார்கள்.

நாஞ்சில் சம்பத் என்பவன் மதிமுகவில் இருந்து விலகி, ஜெ.வின் தலைமையேற்ற முதல் நாளிலேயே அதிமுக கொள்கைப்பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இன்று சீனியாரிட்டி என்று பேசுபவர்கள் அன்று எங்கே இருந்தார்கள். எல்லா அதிகாரமும் அதிமுகவில் பொதுச்செயலாளருக்குத்தான். எனவே அவர் நியமித்த துணைப்பொதுச்செயலாளர் நாடு தழுவிய அளவில் அதிமுக புதிய வலிவும், பொலிவும் பெற வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தோடு வருகிற நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு கழகத் தொண்டர்களை ஆயத்தப்படுத்துவதற்கு பொதுமக்களின் நல்லண்ணத்தை பெறுவதற்கு தகுதியுள்ள நிர்வாகிகளை அடையாளம் கண்டு கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் நிர்வாகிகளை அறிவித்திருக்கிறார்.

அவர்களுடைய அஸ்திவாரம் இப்போது புளிகரைவதுபோல் கரைந்துகொண்டிருக்கிறது. அவர்களுடைய அஸ்திவாரம் இப்போது நடுங்கிகொண்டிருக்கிறது. ஏதோ ஆபத்தில் மாட்டிக்கொண்டோம் என்று பேந்த பேந்த முழிக்கிறார்கள். தினகரனைப் பற்றி கவலையில்லை என்று தினமும் சொல்லுகின்ற அமைச்சர் ஜெயக்குமாருக்கு அடக்கத்தோடு சொல்லிக்கொள்கிறேன் தினகனைப் பற்றி கவலையில்லை என்று சொல்லும் ஜெயக்குமார் காலமெல்லாம் கவலைப்பட வேண்டியது வரும் என்று நான் எச்சரிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த நியமனம் நகைப்புக்குரியதாக இருக்கிறது, அவர்கள் நியமித்த எம்எல்ஏக்கள் பழனி, சத்யா, போஸ் ஆகியோர் தினகரனிடம் பொறுப்பு தேவையில்லை என்று வெளிப்படையாக சொல்கிறார்கள் என்று அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் கூறியிருக்கிறாரே?

தினகரனால் நியமித்தவர்களை மிரட்டுகிறார்கள். அச்சுறுத்துகிறார்கள். அதனாலேயே அவர்கள் அப்படி சொல்லவும், அறிக்கை விடவும் நிர்பந்திக்கப்படுகிறார்கள். இதுபற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. எல்லோரும் தினகரனின் தலைமையை ஏற்றுக்கொள்ளக் கூடிய பொற்காலம் ஒன்று அக்டோபர் 17க்குள் தமிழ்நாட்டிற்குள் உதயமாகும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

-வே.ராஜவேல்

சார்ந்த செய்திகள்