ADVERTISEMENT

EXCLUSIVE : பெண் கவுன்சிலர்களின் வீடு புகுந்து மாஜி அமைச்சர் தங்கமணி ஆதரவாளர்கள் மிரட்டல்!

10:30 AM Mar 31, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

குமாரபாளையத்தில், முன்னாள் அமைச்சர் தங்கமணியின் ஆதரவாளர்கள் பெண் கவுன்சிலர்களின் வீட்டுக்குள் திடுதிப்பென்று புகுந்து, தேர்தல் நேரத்தில் கட்சி கொடுத்த பணத்தை இரண்டு நாட்களில் செட்டில்மெண்ட் செய்யும்படி மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. அண்மையில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக 14 வார்டுகளிலும், அதிமுக 10 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. சுயேட்சைகள் 9 இடங்களில் வென்றனர்.

இதையடுத்து தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் திமுக தரப்பில் கவுன்சிலர் சத்தியசீலன் களமிறக்கப்பட்டார். ஆனால், சைக்கிள் கேப்பில் சுயேட்சை விஜய்கண்ணன், 18 கவுன்சிலர்களின் ஆதரவுடன் தலைவராக வெற்றி பெற்றார். இப்படி பல டிவிஸ்ட்கள் நடந்தாலும், முன்னாள் அமைச்சர் தங்கமணியின் கோட்டையாக கருதப்படும் குமாரபாளையத்தில், கட்சித் தலைமையை மீறி அதிமுகவினர் விலை போனதாக புகார்களும் எழுந்தன.

அக்கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் நந்தினிதேவி ராஜகணேஷ் (17வது வார்டு), ரேவதி திருமூர்த்தி (1வது வார்டு), பூங்கொடி வெங்கடேசன் (16வது வார்டு) ஆகியோர் விஜய்கண்ணனுக்கு வாக்களித்ததாகவும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகவும் கூறி அவர்களை டிஸ்மிஸ் செய்தது இலை கட்சியின் தலைமை. மேலும், குமாரபாளையம் அதிமுக நகர செயலாளர் நாகராஜனையும் (61) கட்சியில் இருந்து நீக்க வைத்தார் முன்னாள் அமைச்சர் தங்கமணி. ஒரு காலத்தில், அதிமுகவில் பொன்னையன் உச்சத்தில் இருந்தபோது, சாதாரண நிர்வாகியாக இருந்த தங்கமணியை ஒன்றிய செயலாளராக்கியது இந்த நாகராஜன்தான் என்கிறார்கள் ர.ர.க்கள்.

நாகராஜன்

திமுகவுடன் அன்கோ போட்டுக்கொண்டு, அக்கட்சியின் வேட்பாளர் சத்தியசீலனுக்கு வாக்களிக்க அதிமுக தலைமை கட்டளையிட்டது. அந்த சத்தியசீலன்தான், உள்ளாட்சித் தேர்தலில் நாகராஜனை தோற்கடித்தார். இப்படியான நிலையில் அவரை நகர்மன்றத் தலைவராக்க விரும்பவில்லை என்று வெளிப்படையாகவே நாகராஜன் போர்க்கொடி தூக்கியதோடு, தனது ஆதரவு கவுன்சிலர்களான ரேவதி, பூங்கொடி, நந்தினிதேவி ஆகியோரை விஜய்கண்ணனுக்கு வாக்களிக்க வைத்திருக்கிறார். இதுதான், அவர் மீதான தங்கமணியின் பாய்ச்சலுக்கு காரணம் என்கிறார்கள். 23 ஆண்டாக தொடர்ந்து நகர செயலாளராக இருந்தவரையே கட்டம் கட்டியதால் குமாரபாளையம் அதிமுகவில் பரபரப்பு கிளம்பியுள்ளது.

இந்த கேப்பில்தான், நகர இளைஞரணி செயலாளராக உள்ள சாராயக்காரர் பாலசுப்ரமணியம் என்கிற பாலசுப்ரமணியம், அடுத்த நகர செயலாளராக துடிக்கிறார்; அவரின் கைங்கர்யத்தால்தான் நாகராஜனும், கவுன்சிலர்கள் மூவரும் கட்சியில் இருந்து கட்டம் கட்டப்பட்டதாகவும் சொல்கின்றனர். இந்த நிலையில், இளைஞரணி பாலசுப்ரமணியம், கவுன்சிலர் புருசோத்தமன், ஆகியோர் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிளில் புதன்கிழமை (மார்ச் 30) காலையில் கவுன்சிலர்கள் ரேவதி, நந்தினிதேவி, பூங்கொடி ஆகியோர் வீடுகளுக்கு திடுதிப்பென்று சென்றுள்ளனர்.

அவர்களிடம், ''தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருள்கள் கொடுப்பதற்காக அதிமுக சார்பில் கொடுக்கப்பட்ட பணத்தை, இன்னும் இரண்டு நாட்களுக்குள் எடுத்து வைக்க வேண்டும். கட்சிக் கட்டுப்பாட்டை மீறி சுயேட்சைக்கு வாக்களித்துவிட்டீர்கள். கட்சிக்கு துரோகம் செய்துவிட்டீர்கள். இன்னும் இரண்டு நாள்களில் பணத்தை கொடுக்காவிட்டால், மேற்கொண்டு நடக்கும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டனர். மூன்று பேரிடமும் இதே டெம்ப்ளேட் மிரட்டல்தான்.

ராஜகணேஷ்

இது தொடர்பாக மேற்சொன்ன கவுன்சிலர்களின் கணவர்களான ராஜகணேஷ், திருமூர்த்தி ஆகியோரை சந்தித்துப் பேசினோம். ''அதிமுக நகர இளைஞரணி செயலாளர் சாராயக்கார பாலசுப்ரமணியம் தலைமையில் முப்பது நாற்பது பேர் பைக்கில் எங்கள் வீடுகளுக்கு வந்தனர். நீங்கள் மந்திரிக்கு (மாஜி அமைச்சர் தங்கமணி) துரோகம் செய்துட்டீங்க. தேர்தல் செலவுக்கு கட்சி கொடுத்த பணத்தை ஒழுங்காக திருப்பிக் கொடுத்துடுங்க. வாக்காளர்களுக்கு புடவை, கொலுசுனு கொடுத்து கட்சி செலவில் ஜெயித்துவிட்டு, இப்போது கட்சிக்கே துரோகம் செய்திருக்கீங்க. கட்சி கொடுத்த பணத்தை இரண்டு நாளில் திருப்பிக் கொடுத்திடணும். இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்று தெரியாது என்று சொல்லிவிட்டு விருட்டுனு கிளம்பிட்டாங்க.

திருமூர்த்தி

எங்களிடம் கட்சிக்காரர்கள் யாரும் பணமோ, பரிசுப் பொருள்களோ நேரடியாக கொடுக்கவில்லை. அப்படி இருக்கும்போது எதன் அடிப்படையில் இவர்கள் வந்து மிரட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. மாஜி அமைச்சர் தங்கமணியின் தூண்டுதலின் பேரில்தான் மிரட்டிவிட்டுப் போயிருக்கிறார்கள். இந்த சம்பவத்தால் எங்கள் மனைவி, பிள்ளைகள் எல்லோரும் ரொம்பவே பயத்தில் உள்ளனர். இதுகுறித்து தங்கமணி மற்றும் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் மீது காவல்துறையில் புகார் அளிக்க முடிவு செய்திருக்கிறோம்'' என ராஜகணேஷ், திருமூர்த்தி ஆகியோர் பதற்றம் குறையாமல் பேசினர்.

இது ஒருபுறம் இருக்க, உண்மையில் அதிமுகவுக்கு தங்கமணிதான் துரோகம் செய்திருக்கிறார் என ஒரே போடாக போட்டார் நாகராஜன். ''நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் குமாரபாளையம் நகராட்சி 8வது வார்டில் நான் போட்டியிட்டு தோல்வி அடைந்தேன். தேர்தலின்போதே என்னை தோற்கடிக்க இளைஞரணி நகர செயலாளர் பாலசுப்ரமணியம், முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆகியோர் என்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் சத்தியசீலனுக்கு மறைமுகமாக வேலை செய்தனர். இந்த நிலையில் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில், என்னை தோற்கடித்த சத்தியசீலனை ஆதரிக்கும்படி கட்சித் தலைமை கேட்டால் என் மனசாட்சி எப்படி ஒத்துக்கொள்ளும்? தலைவர் பதவியை திமுகவுக்கும் துணைத்தலைவர் பதவியை அதிமுகவுக்கும் பிரித்துக் கொள்ள திமுகவுடன் அன்கோ போட்டுக்கொண்டார் தங்கமணி.

அதனால் சத்தியசீலனை ஆதரிக்கும்படி எனக்கு நெருக்கடி கொடுத்தார். நான் மறுத்துவிட்டேன். அதேநேரம், திமுக சார்பில் வேறு யார் நிறுத்தப்பட்டாலும் அவருக்கு ஆதரவு அளிக்கவும் தயார் என்றேன். இந்த பின்னணியில்தான் எனது ஆதரவு கவுன்சிலர்களை சுயேச்சை விஜய்கண்ணனுக்கு வாக்களிக்கும்படி கூறினேன். மற்றபடி அவரை ஆதரிக்க வேண்டும் என்ற ஆசையோ, சிலர் சொல்வது போல பண பேரங்களோ கிடையாது.

கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக எங்களை டிஸ்மிஸ் செய்திருக்கிறார்கள். அதேநேரம், திமுகவை ஆதரிக்க வேண்டும் என்பதெல்லாம் கட்சிக்கு துரோகம் செய்த வகைக்குள் வராதா? எங்களை தவிர மற்ற அதிமுக கவுன்சிலர்களும் கூட சுயேட்சைக்கும், திமுகவுக்கும் வாக்களித்து உள்ளனர். அவர்களை ஏன் கட்சியை விட்டு நீக்கவில்லை?


இப்போது மட்டுமல்ல. கடந்த 2006, 2011 தேர்தல்களின்போதும் எனக்கு சீட் கொடுத்தார் தங்கமணி. ஆனால் தலைவர் தேர்தலில் உள்ளடி வேலை செய்து தோற்கடித்து விடுவார். தங்கமணியின் அப்பா காலத்தில் இருந்து அதிமுகவில் இருக்கிறேன். என் விசுவாசத்தை கட்சி அறியும். அவருடைய போக்கினால் நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக, கவுண்டர் சாதிக்கட்சியாக மாறிவிட்டது'' என்கிறார் நாகராஜன்.

பாலசுப்பிரமணியம்

இது தொடர்பாக குமாரபாளையம் அதிமுக நகர இளைஞரணி செயலாளர் பாலசுப்ரமணியத்திடம் கேட்டோம். ''கட்சிக்கு துரோகம் செய்தவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கணும். கட்சியின் மூலம் பலன்களை அனுபவித்துவிட்டு கட்சிக்கு எதிராகவே செயல்படுவார்களா?. இரட்டை இலை சின்னத்தில் நின்று ஜெயித்தவர்கள் கட்சிக்குதான் விசுவாசமாக இருக்கணும். ரேவதி, பூங்கொடி, நந்தினிதேவி ஆகிய கவுன்சிலர்கள் ஒன்றும் சுயேட்சைக்கு சும்மா ஆதரவு அளிக்கவில்லை. இதைவிட பல மடங்கு பணத்தை வாங்கிக் கொண்டுதான் போனாங்க. 50 லட்சம் ரூபாய் வரை பணமும், வீடும் பெற்றுக்கொண்டுதான் ஆதரவு அளித்துள்ளனர்.

இந்த மூன்று கவுன்சிலர்களையும் அதிமுக முன்னாள் நகர செயலாளர் நாகராஜன்தான் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவர் சொல்லித்தான் சுயேட்சைக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதற்காக விஜய்கண்ணனிடம், நாகராஜன் 2 கோடி ரூபாய்க்கு மேல் வாங்கியதாகச் பலர் சொல்கின்றனர். அவருக்கு உடம்பு சரியில்லை. இனிமேல் கட்சிப்பணி செய்ய முடியாது என்பதால் பெரும் பணத்துடன் செட்டில் ஆகிவிடலாம் என்று நினைத்துகூட இப்படி செய்திருக்கலாம். நாங்கள் யாரையும் அச்சுறுத்தவில்லை. நியாயத்தைச் சொன்னோம். மேற்கொண்டு கட்சியில் உள்ள மற்றவர்களும் இதுபோன்ற தவறுகளை செய்யக்கூடாது என்பதற்காக அப்படி செய்தோம். நாங்கள் கவுன்சிலர்களை சந்தித்து பேசிய சம்பவம் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தெரியாது'' என்றார் பாலசுப்ரமணியம்.

இதுபற்றி முன்னாள் அமைச்சர் தங்கமணியிடம் கேட்டபோது, ''நீங்கள் குறிப்பிடும் சம்பவம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. கட்சி அமைப்பு தேர்தல் பணிகளில் இருக்கிறேன். பாலுவிடம் பேசிவிட்டு உங்கள் லைனில் வருகிறேன்,'' என்றவர், அதன்பின் லைனில் வரவில்லை.

சட்டமன்றம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்குப் பிறகு, குமாரபாளையத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது கட்சியினர் மத்தியில் பலத்த அதிருப்தி உருவாகி இருக்கிறது. விரைவில், இலை கட்சியில் இருந்து பலர் வெளியேறலாம் என்கிறார்கள் ர.ர.க்கள். அதனால் குமாரபாளையம் அதிமுகவில் அடுத்தடுத்த எதிர்பாராத திருப்பங்களை எதிர்பார்க்கலாம் என இப்போதே கட்டியம் கூறுகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT