Skip to main content

முன்னாள் அமைச்சரின் மகளா? இந்நாள் அமைச்சரின் மகனா?

Published on 25/03/2019 | Edited on 25/03/2019

இரு கழகங்களிலும் செல்வாக்குமிக்க வாரிசுகள் களமிறங்கியுள்ள "ஸ்டார்' தொகுதி தென்சென்னை. தி.மு.க.வில் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனை வேட்பாளராக அறிவித்த மறுநாளே கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை, வாக்காளர் அறிமுக கூட்டம், வேட்பாளர் பட்டியல் சரிபார்ப்பு, தேர்தல் பணிமனை திறப்பு, செயல் வீரர்கள் கூட்டம், வாக்கு சேகரிப்பு என டாப் கியரில் தேர்தல் பயணத்தை மா.செ.க்கள் துவக்கியிருக்கிறார்கள். எம்.பி. தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் 2 ஜெ.அன்பழகன் பொறுப்பிலும்,  4 மா.சுப்பிரமணியம் பொறுப்பிலும் உள்ளன. 
 

thamilachi thangapandiyanதேர்தல் பணிமனையை நடிகர் உதயநிதியைக் கொண்டு  திறந்து வைத்து கவனம் ஈர்த்த மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியனிடம் நாம் பேசியபோது, "கடந்த தேர்தலில் அ.தி.மு.க.விடம் பறிகொடுத்த தென்சென்னையை இந்த முறை மீட்டெடுப்போம். மத்திய-மாநில அரசுகளின் ஊழலாட்சி ஒழிக்கப்பட வேண்டுமென்பதில் தென்சென்னை வாக்காளர்கள் உறுதியாக இருக்கிறார்கள். நாடாளுமன்றத்துக்கு எப்படிப்பட்ட நபர்கள் செல்ல வேண்டும் என மக்கள் நினைக்கிறார்களோ, அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ற வேட்பாளராக இருப்பவர் தமிழச்சி தங்கபாண்டியன்'' என்கிறார் அழுத்தமாக. 

தி.மு.க. கூட்டணியில் பிரதான கட்சியாக  இருக்கும் காங்கிரசின் தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜனை வேட்பாளர் தமிழச்சி சந்தித்தார். தென்சென்னை காங்கிரசின் முக்கிய நிர்வாகிகளான செயல்வீரர்கள் 500 பேரை அழைத்து தமிழச்சி தங்கபாண்டியனை அறிமுகப்படுத்தி வைத்தார் தியாகராஜன்.

இதுகுறித்து தியாகராஜனிடம் நாம் பேசியபோது, "கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. ஜெயவர்த்தனுக்கும், தி.மு.க. டி.கே.எஸ்.இளங்கோவனுக்குமிடையே வித்தியாசம்  1 லட்சத்து 36 ஆயிரம் வாக்குகள். அந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 24 ஆயிரத்து 500 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. கடந்த 2 வருடங்களில் தென் சென்னையில் அடங்கியுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 10 ஆயிரம் உறுப் பினர்களைச் சேர்த்திருக்கிறோம். கூட்டணி பலத்தால் 1 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகளுக்கு மேலே தி.மு.க.வுக்கு கூடுதலாக கிடைக்கவிருக்கிறது. தவிர, அ.தி.மு.க.வின் 4 லட்சம் வாக்குகளை தினகரன் வேட்பாளர் பிரிப்பதால், தி.மு.க. கூட்டணி வேட்பாளரான தமிழச்சி தங்க பாண்டியனின் வெற்றி உறுதி செய்யப்படுகிறது'' என்கிறார்.

அ.தி.மு.க.வில்  சிட்டிங் எம்.பி. ஜெயவர்த்தன் நின்றாலும் இன்னும் வேகம் அதிகரிக்கவில்லை. வேட்பாளர் ஜெயவர்த்தனுக்காக அவரது அப்பா அமைச்சர் ஜெயக்குமார்தான் கட்சி நிர்வாகிகளிடம் பேசிவருகிறார். இதனைத் தொடர்ந்து பகுதிவாரியாக அ.தி.மு.க. நிர்வாகிகளைச் சந்திக்கிறார் ஜெயவர்த்தன். "கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிக்கென பெரியதாக எதையும் செய்யவில்லை; தொகுதிப் பக்கம் பார்க்க முடியவில்லை' என இயல்பான குற்றச்சாட்டுகள் இருந்தாலும் மக்களிடம் இவருக்கு தனிப்பட்ட கெட்டபெயர் எதுவும் இல்லை என்பது ப்ளஸ் பாயின்ட். 

 

jayavardhanஅ.தி.மு.க. தொகுதி பங்கீட்டுக் குழுவினரிடம் தென்சென்னை குறித்து விவாதித்தபோது, "கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் 4 லட்சத்து 38 ஆயிரம் வாக்குகளை ஜெயவர்த்தன் பெற்றார். தினகரனால் ஒரு 2,000 வாக்குகள் பிரியலாம். அதேசமயம், கடந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 2 லட்சத்து 56 ஆயிரம் வாக்குகளை வாங்கியுள்ளது. அப்போது பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்த பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும் எங்களுடன் இருப்பதால் கிட்டத்தட்ட 2 லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக எங்க ளுக்கு வரும். புதிய வாக் காளர்களாக இந்தமுறை சுமார் 2 லட்சம் பேர் இணைந்திருக்கிறார்கள். இவர்கள் அனை வரும் தி.மு.க.வை ஆதரிப்பதாக வைத்துக் கொண்டாலும் எங்களுக்கு பாதிப்பு இருக்காது. அதனால் அ.தி.மு.க.விடமிருந்து தென் சென்னையை அவ்வளவு எளிதாக தட்டிப் பறித்திட முடியாது'' என தங்கள் வியூகக் கணக்கை விவரிக்கின்றனர்.

வலிமையாக உள்ள அ.தி.மு.க.-தி.மு.க. இரு கட்சிகளையும் எதிர்த்து களத்தில் நிற்கும் தினகரனின் அ.ம.மு.க. நிர்வாகிகளிடம் பேச்சுக்கொடுத்தபோது, ‘தினகரன் செலவு செய்வதாக இருந்தால் சிலர் போட்டியிட ஆர்வம் காட்டினர். ஆனால், பணம் கொடுப்பதற்கு எந்த உத்தரவாதத்தையும் தினகரன் தராததால் அவர்களும் ஒதுங்கிக்கொண்ட நிலையில்தான் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவை தினகரனே தேர்வுசெய்தார். தனக்கு விருப்பமில்லை என இசக்கி வலியுறுத்தியபோதும், "நான் பார்த்துக்கிறேன். நீங்கள்தான் வேட்பாளர்' என சொல்லி வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டிருக்கிறார் தினகரன். அதனால் அ.ம.மு.க. போட்டியிடுவது அ.தி.மு.க.வில் சிறிய சிராய்ப்பை ஏற்படுத்தலாமே தவிர, எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது'' என்கிறார்கள். 

முன்னாள் அமைச்சரின் மகளா? இந்நாள் அமைச்சரின் மகனா? என்ற அளவில் தென் சென்னை தேர்தல் களம் விறுவிறுப்பாக உள்ளது.