ADVERTISEMENT

"தியேட்டரில் படம் ஓடாது... பெட்டியை தூக்குவோம் என்பதெல்லாம் பழைய கதை... தற்போது வேலைக்கு ஆகாது!!” - முன்னாள் நீதிபதி சந்துரு பேட்டி

11:44 AM Nov 18, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சூர்யா நடித்து பெரிய வரவேற்பை பெற்றுள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளை தினந்தோறும் ஏதாவது ஒரு குழுவினர் எழுப்பிவருகிறார்கள். குறிப்பிட்ட சமூகம் சார்ந்த சில அமைப்புக்கள் இந்தப் படத்தைக் கடுமையாக எதிர்ப்பதுடன் நடிகர் சூர்யாவுக்கு மிரட்டலும் விடுத்துள்ளன. இந்நிலையில், இந்தப் படம் தொடர்பாகவும், அதில் வரும் பெயர் அரசியல் தொடர்பாகவும் முன்னாள் நீதிபதி சந்துரு அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

‘ஜெய் பீம்’ திரைப்படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் தற்போது ஏற்படுத்தப்பட்டுவருகிறது. படத்தில் வக்கீல் கேரக்டரில் நடிக்கும் சூர்யாவுக்கு அந்தக் கதையில் தொடர்புடைய சந்துரு என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ராஜாகண்ணு, பெருமாள் சாமி பெயர்களும் நிஜத்தில் உள்ளதுபோலவே படத்திலும் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தோணி சாமி என்ற காவலர் பெயரை படத்தில் குருமூர்த்தி என்று ஏன் வைக்க வேண்டும் என்று எதிர்தரப்பினர் கேள்வி எழுப்பிவருகிறார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

இந்தப் படம் ஆரம்பிக்கும்போதே இந்தப் படத்தில் வரும் பெயர்கள், காட்சிகள் அனைத்தும் கற்பனையே, யாரையும் குறிப்பிடுவது அல்ல என்று தெளிவாக போட்டுள்ளார்கள். அதையும் தாண்டி இந்தப் படம் நிஜக் கதையைப் படமாக்கவில்லை, உண்மைக் கதையை ஒட்டிய தழுவல் இது. படத்தைப் பார்த்து தற்போது அனைவரும் கருத்து சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இந்தப் படம் தோல்வி படமாக மாறியிருந்தால் அதைப் பற்றி இவ்வளவு பெரிதாக யாரும் பேசியிருக்க மாட்டார்கள். ஆனால் இது ஒரு வெற்றிப் படம்.

எனவே இதில் அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிரச்சனை செய்யப் பார்க்கிறார்கள். படத்தை இன்ச் பை இன்ச்சாகப் பார்த்து குற்றம் கண்டுபிடிக்கப் பார்க்கிறார்கள். ஏன் அந்தப் பெயர் இருக்கும்போது இந்தப் பெயர் இல்லை என்று கேட்கிறார்கள். ஒரு இயக்குநர் கதை எழுதும்போது அந்தக் காட்சிக்கு எது தேவையோ அதைச் சேர்ப்பார். இந்தப் படத்தில் மூன்று பெயர்கள் மட்டும்தான் உண்மையான பெயர்கள். மற்ற அனைத்தும் வேறு பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. எனவே இந்தப் பெயரை ஏன் வைக்கவில்லை, இதை ஏன் வைத்தாய் என்று கேட்பதெல்லாம் சட்டவிரோதம். அதற்கான உரிமை யாருக்கும் இல்லை.

படம் ஆரம்பிக்கும்போதே இந்தப் பெயர்கள் அனைத்தும் கற்பனையே என்று போட்டாலும் அவர்களுக்கு சந்தோஷம் இல்லை என்றால், யார் என்ன செய்ய முடியும். இயக்குநர் நோக்கத்தோடு செய்யவில்லை. தமிழ் சினிமாவில் பெயர் பஞ்சம் இருக்கிறது. உங்களால் படம் திரையிடப்படுவதையோ, படப்பெட்டியையோ திருட முடியாது. ஏனென்றால் அது அமேசான் நிறுவனத்துக்குச் சென்றுவிட்டது. பழைய காலங்களில் பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடியதுபோல் இனி யாராலும் செய்ய முடியாது. இதையும் தாண்டி சிலர் உங்கள் படம் தியேட்டரில் ஓடவிட்டுவிடுவோமா என்று கேட்கிறார்கள்.

நல்ல பொறுப்பில் இருந்தவர்கள் எல்லாம் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் தொடர்ந்து இவ்வாறு பேசுவது ஆரோக்கியமான முறை இல்லை. கருத்து சுதந்திரத்துக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும். யாரையும் இந்த காலத்தில் மிரட்டிப் பணிய வைக்க முடியும் என்று நம்புவது அறிவுப்பூர்வமான முறை அல்லை. எனவே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. இப்போது அரசியலில் கன்டெண்ட் பஞ்சம் இருக்கிறது. எனவே நான் இருக்கிறேன் பார் என்று வேண்டுமென்றே இவர்கள் பிரச்சனை செய்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தில் பிரச்சனை செய்யும் அளவுக்கு எதுவும் இல்லை என்பதே என்னுடைய கருத்தாகும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT