Skip to main content

ஜெயலலிதா ஒன்றும் இறுக்கமானவர் அல்ல!- அனுபவங்களைப் பகிர்கிறார் பி.எச்.மனோஜ் பாண்டியன்!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

“சட்டசபை நடவடிக்கைகளில் சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது..” என்று கூறி, அரசியல் நோக்கர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன். அவரது மகன் பி.எச்.மனோஜ்பாண்டியன், முன்னாள் (அதிமுக) நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாக்களை தமிழகம் முழுவதும் ஆளும் கட்சியினர் கொண்டாடி வரும் வேளையில்,‘ஜெயலலிதா ஒன்றும் இறுக்கமானவர் அல்ல! யாராலும் எளிதில் அணுக முடியாதவரும் அல்ல!’ என்று பொதுவெளியில் வலுவாகப் பதிவாகிவிட்ட கருத்து முற்றிலும் தவறானது என்று, தன் மீதும், தன் குடும்பத்தினர் மீதும் ஜெயலலிதா பாசம் காட்டிய நிகழ்வுகளை இங்கே நினைவு கூர்கிறார்.  

துரோகிகளால் அம்மா மனதில் ஆறாத வடு!
 

“1993 முதல் 2015 வரை அம்மா அவர்கள், என்னைத் தன் மகனைப் போலவே நடத்தி வந்தார். அவர் அ.இ.அ.தி.முக என்ற மாபெரும் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்னர், தன்மீதும், இந்த இயக்கத்தின் மீதும் மாறாத பற்று கொண்ட மிகமிகச் சாமான்யர்களைக் கொண்டே, கட்சியை திறம்பட நடத்தி வந்தார். 1991- 1996 வரையிலான அவரது முதல் ஆட்சிக்காலத்தில், அவர் யார் யாரையெல்லாம் முழுமையாக நம்பினாரோ,  அவர்களெல்லாம் அவருக்கும், இந்த இயக்கத்துக்கும் துரோகம் விளைவித்துச் சென்றது அவரது மனதில் ஆறாத வடுவாகவே நிலைத்து விட்டது. அதன் பின்னர்தான், அம்மா அவர்கள் இயக்கத்தை வழிநடத்தத் திறமையும், விசுவாசமும் நிரம்பப் பெற்ற தளகர்த்தர்களைக் கண்டுபிடித்து அவர்களிடத்தில் பொறுப்புக்களை ஒப்படைத்தார்.

former cm jayalalithaa admk former mp ph pandiyan interview

இன்றைக்கு கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ள தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக முதல்வர் மற்றும் கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள எடப்பாடிகே.பழனிசாமி, கழகத்தின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வி.வைத்திலிங்கம், கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அமைப்புச்செயலாளர் நத்தம் இரா.விசுவநாதன் போன்றோர் அவரது நம்பிக்கைக்குரிய தளபதிகளாக இருந்து அவரது எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்தனர். மேலே நான் குறிப்பிட்ட தலைவர்களுக்கெல்லாம் மிகப்பெரிய குடும்பப் பின்னணிகள் எதுவும் கிடையாது. இவர்கள் அனைவருமே சாமான்ய விவசாயக் குடும்பத்தில் பிறந்து தங்கள் உழைப்பால் படிப்படியாக வளர்ந்து இந்த இயக்கத்தில் முன்னுக்கு வந்தவர்கள். உழைப்பும், விசுவாசமும் இருந்தால் சாமான்யர்களும் தலைமைப் பதவிக்கு வரலாம் என்ற தத்துவத்தை இவர்களைக் கொண்டே உண்மையாக்கியவர் அம்மா அவர்கள்.


அம்மா கைதானபோது உடன் இருந்தது ஐந்தே பேர்தான்!
 

எனது தந்தை பி.எச்.பாண்டியன் அவர்களுடன் அம்மா அவர்களை நான் 1993-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதன்முதலாகச் சந்தித்தேன். 1996-ஆம் ஆண்டு இந்த இயக்கம் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்த போதுதான் அம்மா அவர்களுக்காகவும், இந்த இயக்கத்துக்காகவும் உழைக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. ஆம்.. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அம்மா அவர்கள் கைது செய்யப்பட்ட போது அவரது இல்லத்தில் இருந்தவர்கள் ஐந்தே ஐந்து பேர் தான்!  எனது தந்தை பி.எச்.பாண்டியன், சேடபட்டி முத்தையா, சுலோச்சனா சம்பத், வழக்கறிஞர் ஜீனசேனன் ஆகியோரோடு நானும் ஒருவனாக அந்த நிகழ்வில் இருந்தேன்.

அவர் கைது செய்யப்பட்ட நாள் முதல் ஜாமீனில் விடுதலையாகும் வரையிலான 28 நாட்களிலும் நீதிமன்றத்துக்கும், மத்திய சிறைக்குமான எனது பணிகள் தொடர்ந்தன. எனது தந்தையுடன், அம்மாவின் வழக்குகள் குறித்து அடிக்கடி அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் என்னை வழக்கறிஞர் அணியின் இணைச்செயலாளராக நியமித்த பின்னர் எனது பணிகள் வேகமெடுத்தன. 
 

அப்போதைய ஆளுங்கட்சியினரால் பாதிக்கப்பட்ட கழக செயல்வீரர்களுக்கு சட்டரீதியாக உதவி செய்தல், ஆளுங்கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல்களை ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்துதல் போன்ற பணிகளை நான் மிகவும் துணிச்சலுடன் எதிர்கொண்டேன். எனது சிறப்பான பணிகள் ஒவ்வொன்றையும் அம்மா அவர்கள் தாயுள்ளத்துடன் பாராட்டத் தவறியதே இல்லை.
 

“ஒருவர் மீது முழுமையாக அன்பு வைத்தால்!”- அம்மா சொன்ன வார்த்தை!
 

என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத நாள் ஒன்று உண்டென்றால் அது எனது திருமணநாள் தான். ஆம்.. 15.7.1997 அன்று மாலை 6 மணிக்கு சென்னை கதீட்ரல் தேவாலயத்தில் எனது திருமண ஆராதனை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. திருமண வரவேற்பு இராணிமெய்யம்மை அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அம்மா அவர்களை நான் எனது திருமணத்துக்கு அழைக்கச் சென்ற போது, “அம்மா நீங்கள் எனது திருமண வரவேற்புக்கு வந்து என்னை வாழ்த்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டேன். அதற்கு அம்மா அவர்கள், “நாம் ஒருவர் மீது முழுமையாக அன்பு வைத்து அவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்றால் திருமணம் நடைபெறும் இடத்துக்கே நேரடியாகச் சென்று அந்த நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்த வேண்டும். 

former cm jayalalithaa admk former mp ph pandiyan interview

அதன்படி நான் உங்கள் திருமணம் நடைபெறும் கதீட்ரல் தேவாலயத்துக்கே வந்து கலந்து கொள்கிறேன்” என்று மகிழ்வுடன் தெரிவித்தார். அதன்படி திருமண நாளன்று மாலை 5.45 மனிக்கு கதீட்ரல் தேவாலயத்துக்கு வந்து முதல் வரிசையில் அமர்ந்து திருமணத்துக்காக அச்சிடப்பட்டிருந்த பாடல் தாள்களை வாங்கி, தானும் பாடினார். திருமண ஆராதனையில் முழுமையாகப் பங்கேற்று இறுதியில் என்னை வாழ்த்தி ஆசீர்வதித்தார். அப்போது எனக்கும், என் மனைவிக்கும் இரண்டு வெள்ளிக் குத்துவிளக்குகளை பரிசாக அளித்தார்.


எனது திருமணத்துக்கு வந்து விட்டு அம்மா அவர்கள் திரும்பும் போது,  நான் அவருக்கு முன்பாகச் சென்று, “அம்மா நான் தேனிலவுக்காக ஒரு வாரம் கொடைக்கானல் செல்கிறேன்” என்ற தகவலைத் தெரிவித்தேன். அம்மாவும் என்னை மனமகிழ்ச்சியுடன் வாழ்த்தி, போய்வாருங்கள் என்றார். நான் கொடைக்கானல் சென்ற மூன்றாவது நாள் அம்மா அவர்கள் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதை அறிந்தவுடன் நான் கொடைக்கானலில் இருந்து உடனடியாக சென்னை திரும்பி வந்தேன். 
 

அம்மா அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானதும் அவருக்கு முன்பாக நின்று கொண்டிருந்த என்னைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். “நீங்கள் தேனிலவுக்காக ஒரு வாரம் கொடைக்கானல் போகப்போவதாகத்தானே சொல்லியிருந்தீர்கள்? இப்போது இங்கே இருக்கிறீர்களே?”என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான்,“அம்மா நீங்கள் நீதிமன்றம் வரும் போது நான் உங்களுடன் இருக்க வேண்டும் என்பதால் தேனிலவை பாதியிலேயே முடித்து விட்டு வந்து விட்டேன் அம்மா” என்றவுடன் அம்மா அவர்களின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சிப் பிரவாகம்!

former cm jayalalithaa admk former mp ph pandiyan interview

அம்மா போட்ட சாட்சி கையெழுத்து!
 

அதன் பின்னர், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அதே கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற எனது தங்கை டாக்டர் தேவமணி பாண்டியனின் திருமணத்திற்கும் வருகை தந்து இறுதிவரை இருந்து மணமக்களை ஆசீர்வதித்தார். அப்போது எனது தாய் சிந்தியாபாண்டியன் மற்றும் என் தந்தை பி.எச்.பாண்டியன் ஆகியோரோடு மனம் விட்டு அம்மா அவர்கள் சிரித்து மகிழ்ந்த காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும். இந்தத் திருமணத்தில் மற்றும் ஒரு சிறப்பு என்னவென்றால், மணமக்களை ஆசீர்வதித்து விட்டு அம்மா அவர்கள் வெளியே செல்ல எத்தனிக்கும் போது எனது தந்தை பி.எச்.பாண்டியன் அவர்கள் குறுக்கிட்டார். “அம்மா...... இந்தத் திருமணத்துக்கு இரண்டு சாட்சிகள் கையெழுத்திட வேண்டும்.....எங்கள் வீட்டார் சார்பில் நீங்கள் தான் சாட்சி கையெழுத்திட்டு எங்களுக்குப் பெருமை சேர்க்க வேண்டும்”என்று கேட்டுக் கொண்டார். 


இதைக் கேட்டு முகம் சுழிக்காமல், மிகுந்த மன மகிழ்ச்சியோடு அம்மா அவர்கள் சாட்சி கையெழுத்திட்டார். எதற்குமே கலங்காத எனது தந்தை பி.எச்.பாண்டியன் அவர்கள் எங்கள் குடும்பத்தின் மீது அம்மா அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையையும், மரியாதையையும் கண்ட அந்தத் தருணத்தில் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராகக் காணப்பட்டார்.
 

“அம்மா போட்டியிட சட்டத்தடை இல்லை!”- அனைத்து ஊடகங்களிலும் பேட்டி! 
 

1996-2001 வரை கழகம் எதிர்கட்சியாக இருந்த காலகட்டத்தில் நான் மிகவும் சுறுசுறுப்பாக கழகப்பணிகளை செய்து வந்ததால், அம்மா அவர்கள் அடிக்கடி என்னைப் பாராட்டி உற்சாகப்படுத்தி வந்தார்கள். 2001 பொதுத்தேர்தலுக்கு ஒரு நான்கு மாதங்களுக்கு முன்பாக அம்மா அவர்கள் என்னை அழைத்து தன்னுடைய உதவியாளர் அறையில் அமரச் செய்து இனிப்புவகைகளை சாப்பிடச் செய்தார்கள்.

former cm jayalalithaa admk former mp ph pandiyan interview

அப்போது இண்டர்காமில் என்னை அழைத்து, “ உங்கள் தந்தைக்கு தலைவர் எப்படி ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தந்தாரோ, அதே போல உங்களுக்கும் நான் ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தருவேன்” என்றார். பின்னர் அவர் 2001 பொதுத்தேர்தலில் போட்டியிடமுடியாது என்று பலரும் கூறிவந்த நிலையில், அம்மா நீங்கள் போட்டியிட எந்தவிதமான சட்டத்தடைகளும் இல்லை என்பதை நான் அம்மாவிடம் தெரிவித்தேன். உடனே அம்மா அவர்கள் ஜெயா டிவி முதல் அனைத்து ஊடகங்களிலும் எனது பேட்டியை வெளிவரச் செய்து அதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.
 

வழக்குகளின் வெற்றியில் மகிழ்ச்சி! 
 

பின்னர் 2001-ஆம் ஆண்டு என் தந்தை தொடர்ச்சியாக நான்குமுறை வென்ற சேரன்மாதேவி தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்தார். அவரது ஆசியுடன் நான் சேரன்மாதேவி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிக்கனியை அம்மா அவர்களின் காலடியில் வைத்து ஆசிபெற்றேன். அவர் முதல்வரானதும், அவரது கட்டுப்பாட்டில் இருந்த துறைகள் குறித்து சட்டப்பேரவையில் கேள்விகள் கேட்பதற்கும், பேசுவதற்கும் எனக்கு வாய்ப்பளித்தார்கள். என்னுடன் இந்த வாய்ப்பு அப்போதைய சட்டமன்ற உறுப்பினர்களான புதுக்கோட்டை விஜயபாஸ்கர், பெரம்பலூர் ராஜரத்தினம் போன்றோருக்கும் வழங்கப்பட்டது.


அடுத்து 2006-ல் கழகம் எதிர்கட்சி வரிசையில் அமர்ந்த போது கழகத்தின் முன்னணி தலைவர்கள் மீது அடுக்கடுக்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அப்போது அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கழக மாவட்டச் செயலாளர் பூ.செந்தூர்பாண்டியன் அவர்களைச் சந்தித்து நலன் விசாரிக்க அம்மா அவர்கள் அங்கு வந்திருந்தார். அப்போது அவரிடம் கழகத் தோழர்கள், “அம்மா! உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகின்ற கழக முன்ணணியினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி வி.பி.ஆர்.சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.” என்ற தகவலைத் தெரிவித்தனர். 
 

இதைக்கேட்டவுடன் அம்மா அவர்கள் என்னை அழைத்து, உடனடியாக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்தார்கள். கழக முன்னணித் தலைவர்கள் ஒன்றுகூடி விவாதித்து அப்போதைய முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பெயரில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்தோம். இந்த வழக்கில் நானே ஆஜராகி வாதிட்டேன். வழக்கு நீதிபதி சதாசிவம் அவர்கள் முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் அவசர முக்கியத்துவம் கருதி அவர் தலைமை நீதிபதியின் அனுமதியைப் பெற்று வழக்கை நீதியரசர்கள் நாகப்பன் மற்றும் பிரபாஸ்ரீதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வை விசாரிக்க உத்தரவிட்டார்.


இந்த அமர்வு வழக்கை விசாரித்து,  உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு முழுமையான போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. மேலும் எந்தவித ஜாமீன் மனுவும் போடாமலேயே இந்த ரிட்மனுவில் உள்ள சாராம்சங்களைக் கொண்டே கைது செய்யப்பட்ட வி.பி.ஆர்.சுரேஷூம் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வைக் கேள்விப்பட்ட அம்மா அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் என்னைப் பார்த்து, “இந்த வழக்கை ரொம்ப நல்லா நடத்தினீங்க..” என்று பாராட்டினார்கள். அதே போல,  கட்சிக்காக அம்மா அவர்களின் ஆணைப்படி நான் நடத்திய மூன்று வழக்குகளில் கிடைத்த வெற்றி அம்மா அவர்களை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. அதில் இரண்டு வழக்குகளில் பெற்ற வெற்றிக்கு என்னை வாழ்த்தி பாராட்டுக் கடிதங்களை அளித்தார்.  அம்மா, ஒரு வழக்கின் வெற்றிக்கு தொலைபேசியில் அழைத்து பாராட்டுத் தெரிவித்தார். 
 

பாராட்ட தவறியதே இல்லை!
 

விருதுநகர் மாவட்டம்- இராஜபாளையம் நகராட்சியில் எதிர்கட்சியான அ.இ.அ.தி.மு.கவுக்கு மெஜாரிட்டியான நகராட்சி உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்ததை அறிந்ததும் ஆளுங்கட்சியினரின் தலையீட்டால் அந்த நகராட்சி கலைக்கப்பட்டது. இதை எதிர்த்து நடந்த வழக்கில் அம்மா அவர்கள் கழகத்தின் சார்பில் என்னை வாதாடுமாறு கேட்டுக் கொண்டார். நான் இந்த வழக்கில் ஆஜராகி இராஜபாளையம் நகராட்சியைக் கலைத்தது செல்லாது என்ற தீர்ப்பைப் பெற்றேன். இது அம்மா அவர்களின் மனதில் எல்லையில்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக என்னை வாழ்த்தி எனக்கு ஒரு பாராட்டுக் கடிதத்தை அனுப்பி வைத்தார்.

former cm jayalalithaa admk former mp ph pandiyan interview

அடுத்தபடியாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சியில் வெற்றி பெற்ற அ.இ.அ.தி.மு.க வேட்பாளரை தோல்வியுற்றதாக அறிவித்து, ஆளுங்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து நடைபெற்ற வழக்கிலும் என்னை ஆஜராகி வாதிடுமாறு அம்மா அவர்கள் கேட்டுக்கொண்டார். அதன்படி, இந்த வழக்கிலும் அ.இ.அதி.மு.க வேட்பாளரின் வெற்றிதான் செல்லும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் வெற்றியும் அம்மா அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்ட காரணத்தால் மறுபடியும் ஒரு பாராட்டுக் கடிதம் அவர்களால் எனக்கு வழங்கப்பட்டது.
 

கட்சித் தொண்டன் மீது கரிசனம்!


இன்னொரு வழக்கு ஒன்று, என் வாழ்க்கையிலேயே மறக்கமுடியாததாகும். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தைச் சேர்ந்த கலைச்செல்வன் என்ற கட்சி பேச்சாளர் அப்போதைய மத்திய அமைச்சர் முரசொலிமாறன் அவர்களை விமர்சனம் செய்து பேசிய காரணத்தால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் கலைச்செல்வனுக்கு ஜாமீன் கோரி வாதிடுமாறு அம்மா அவர்கள் என்னைப் பணித்தார்கள். அம்மா அவர்கள் அலுவலகத்தில் இருந்து எனக்குத் தகவல் வந்தபோது,  நான் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி, கோவிந்தப்பேரியில் உள்ள எனது இல்லத்தில் இருந்தேன். மறுநாள் 28.12.2006 அன்று எனது தாய் சிந்தியாபாண்டியன் அவர்களின் 60வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதற்காக நாங்கள் குடும்பசகிதமாக அங்கே சென்றிருந்தோம்.


அம்மா அவர்கள் கட்டளையை ஏற்று மறு நாள் காலை 04.00 மணிக்கே ஊரில் இருந்து கிளம்பி மதுரை சென்று, அங்கே காலை 07.00 மணி விமானத்தைப் பிடித்து சென்னை சென்றேன். 10 மணிக்கெல்லாம் நீதிமன்றம் சென்றால், கீழ்கோர்ட்டில் கலைச்செல்வனின் ஜாமீன் மனு தள்ளுபடியாகி விட்டது. உடனே, அன்று மதியமே உயர்நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த ஜாமீன் மனு, நீதியரசர் சந்துரு அவர்கள் முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர் அரசுத்தரப்பின் பலத்த எதிர்ப்பையும் மீறி கலைச்செல்வனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
 

ஜாமீன் கிடைத்த தகவல் மற்றும் என் தாய் சிந்தியாபாண்டியன் அவர்களின் 60-வது பிறந்த நாள் இன்று என்பதையும், அம்மாவின் கட்டளையை ஏற்று நான் சென்னை வந்த விபரத்தையும் அம்மாவுக்கு ஒரு நோட் எழுதி போயஸ் இல்லத்தில் கொடுத்துவிட்டு, நான் அன்று மாலையே விமானம் மூலம் என் சொந்த ஊரான சேரன்மாதேவி- கோவிந்தப்பேரிக்கு வந்து விட்டேன். 
 

“எனக்கு மிகுந்த சங்கடமாக இருக்கிறது..”- வாஞ்சையுடன் பேசினார் அம்மா!


மறுநாள் 29.12.2006 அன்று காலையில் சிறுதாவூர் பங்களாவின் லேண்ட்லைன் எண்ணிலிருந்து எனது அலைபேசிக்கு ஒரு கால் வந்தது. பேசியவர் அம்மா அவர்களின் உதவியாளர் சகோதரர் பூங்குன்றன். அம்மா அவர்கள் உங்களிடம் பேசவேண்டுமாம்..என்று சொல்லிவிட்டு, எனது பதிலுக்குக் காத்திருக்காமல் அம்மாவிற்கு இணைப்பைக் கொடுத்து விட்டார். அம்மா அவர்கள் என்னிடம், “உங்கள் பெற்ற தாயின் 60-வது பிறந்த நாள் என்று நன்கு தெரிந்திருந்தும், எனது கட்டளையை ஏற்று சென்னை வந்து ஒரு தொண்டனை ஜாமீனில் எடுத்திருக்கும் உங்களைப் பாராட்டுகிறேன்.


அதே வேளையில் உங்கள் தாயின் 60-வது பிறந்த நாள் அன்று உங்களை அவர்களுடன் இருக்க விடாமல் செய்தது எனக்கு மிகுந்த சங்கடமாக இருக்கிறது” என்று மிகுந்த வாஞ்சையுடன் பேசினார். ஒரு தொண்டனைக் காப்பாற்ற இன்னொரு தொண்டனுக்கு உத்தரவு பிறப்பித்து, அது நல்லபடியாக முடிந்ததும் அதற்குக் காரணமான தொண்டனைப் பாராட்டுகின்ற தாயுள்ளம் அம்மாவிற்கே உரித்தானதாகும்.
 

அம்மா முகத்தில் ஆயிரம் வால்ட் பிரகாசம்!– அங்கீகாரம் கிடைத்த நிகழ்வு!


2009-ல் இளம் அரசியல் தலைவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பிய நிகழ்வில், அ.இ.அதி.மு.க. சார்பில் என்னை அனுப்பி மகிழ்ச்சியடைந்தவர் அம்மா அவர்கள். அ.இ.அ.தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் சட்ட திட்டங்களை திருத்தம் செய்வது குறித்து இளையவனான என்னைப் பேசவைத்து அழகு பார்த்தவர் அம்மா அவர்கள். அதேபோல,  2010-ல் எனக்கு நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகும் வாய்ப்பை வழங்கியவர் அம்மா அவர்கள். அப்போது நான் வேட்பு மனு தாக்கல் செய்த போது எதிர்கட்சித்தலைவராக இருந்த அம்மா அவர்கள் நேரடியாக சட்டப் பேரவைச் செயலரின் அலுவலகத்துக்கே வந்து அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

former cm jayalalithaa admk former mp ph pandiyan interview

இதுவரை அம்மா அவர்கள் இதுபோன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வேட்புமனு  தாக்கல் நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்ததே இல்லை. எனது வேட்புமனுத் தாக்கல் நிகழ்வுக்குத்தான்,  அவரே நேரடியாக முன்நின்று என்னை வாழ்த்தினார். அப்போது அவரது முகத்தில் ஆயிரம் வால்ட் பிரகாசம். என்னைப் பார்த்து அவர் ,” I have not given you any gift. It is something you have earned by your hard Work” என்றார். “இந்த சீட் நான் உங்களுக்கு தந்த பரிசு கிடையாது. மாறாக, நீங்கள் கழகத்துக்கு ஆற்றியிருக்கும் அளப்பரிய சேவைகளுக்கான அங்கீகாரம்” என்று மனமகிழ்வுடன் குறிப்பிட்டார். ஒரு தாய்,  தன் மகனுக்கு இப்படி ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தால் எப்படி மனம் மகிழ்வாரோ, அதே மகிழ்ச்சியுடன் அவர் என்னை அங்கு வந்து வாழ்த்தியது இன்றும் என் மனக்கண்களில் நிழலாடிக் கொண்டே இருக்கிறது.
 

அம்மா மனம் திறந்து பேசிய விஷயங்கள்!
 

2011-ல் அம்மா அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் கட்சியிலும், ஆட்சியிலும் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போது அவர் தனது போயஸ்தோட்ட இல்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் பெரும் பகுதியை இந்த எளியவனுக்கு வழங்கினார். நமது எம்ஜிஆர், ஜெயா டிவி போன்றவற்றைக் கவனிக்கும் பொறுப்பையும் அவர் எனக்குக் கூடுதலாக வழங்கினார். அப்போது, அவரது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் பட்டியலில் என்னையும் இணைத்துக் கொண்டார். அப்போது அவர் என்னிடம் பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசினார். அரசியல் நாகரிகம் கருதி அதை வெளியில் சொல்ல எனக்கு மனம் வரவில்லை. அவரைச் சந்திப்பதற்கு நான் எப்போது அப்பாயின்ட்மெண்ட் கேட்டாலும் உடனடியாகக் கொடுத்து சந்திப்பார். 
 

ஆனால் என்னை அவர் தனது சொந்த மகனைப் போல பாவித்து அன்பு காட்டியதை என் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது. வெளியில் பார்ப்பவர்களுக்கு சிம்மசொப்பனம் போல திகழ்ந்த அந்தத் தலைவி,  மிகவும் மென்மையான இதயத்துக்கு சொந்தக்காரராவார். தன்னை நம்பியிருக்கும் கட்சியின் அடிமட்டத் தொண்டனுக்கு ஒரு பிரச்சனை என்றால் கூட துடித்துப்போய்விடும் தாயுள்ளம் அவருக்கு மட்டுமே உரித்தானதாகும்.
 

பி.எச்.மனோஜ் பாண்டியன் போலவே, அதிமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ள பலரும்,    ஜெயலலிதாவுக்கு குழந்தை மனதென்றும், மன்னிக்கும் மனப்பான்மை கொண்டவர் என்றும்,  கள்ளம் கபடம் இல்லாமல் சிரிப்பவர் என்றும் தங்களது அனுபவத்தை வைத்துக் கூறுகின்றனர். ஆனாலும்,‘இரும்புப் பெண்மணி’என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. 




 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.