Advertisment

'இனி பேசவேண்டாம்' கோபமும் வெறுப்புமாகக் கணவரிடம் தெரிவித்த குஷ்பு! கட்சித்தாவலின் பரபரப்பு பின்னணி!

khushbu

Advertisment

"மயிலுக்குசோறு போடும் மோடி, மனிதர்களுக்குசோறு போடுவாரா? மோடியின் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை"என்று அக்டோபர் 6-ஆம்தேதி வடசென்னை காங்கிரஸ் கூட்டத்தில் பேசியவர் குஷ்பு. அதற்கடுத்த ஆறாவது நாளில் (அக்டோபர் 12-ஆம்தேதி), அதே குஷ்பு, காங்கிரசிலிருந்து விலகி பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டதுடன், "மோடியே அனைத்து மக்களுக்கும் காவலர்; நாட்டை நல்வழியில் நடத்திச் செல்கிறார் பிரதமர்' என்று அதிரடி காட்டினார்.

khushbu

கட்சித்தாவல் என்பது குஷ்புக்கு புதிதல்ல. தி.மு.க.வில் ஓரங்கட்டப்பட்டபோது காங்கிரசுக்குத் தாவினார். காங்கிரசிலிருந்து பா.ஜ.க.வுக்குத் தாவியுள்ளார். எனினும், 'பா.ஜ.க. தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட மிரட்டல்தான் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்புவின் கட்சித் தாவலுக்குப் பின்னணி'என்கின்றன டெல்லி தகவல்கள்.

Advertisment

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதால் மாற்றுக் கட்சியிலிருக்கும் பிரபலங்களை பா.ஜ.க.விற்குள் இழுக்கும் அசைன்மெண்ட்டில் முக்கியமானது, ஆபரேஷன் குஷ்பு. காங்கிரசில் குஷ்புவின் அதிருப்தியை ஏற்கனவே அறிந்திருந்த மத்திய அமைச்சர் அமீத்ஷா, குஷ்புவிடம் பேசுமாறு தமிழக பா.ஜ.க. தலைவர் முருகனுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, குஷ்புவையும் அவரது கணவர் சுந்தர்.சி.யையும் பொதுவான நண்பர் ஒருவரின் வீட்டில் சந்தித்தார் முருகன் (இதனை முதன்முதலாக அப்போதே பதிவு செய்திருக்கிறது நக்கீரன்).

khushbu

அந்தச் சந்திப்பில், ராஜ்யசபா எம்.பி., தேசிய அளவில் கட்சி பொறுப்பு ஆகிய நிபந்தனைகளை வைத்தார் குஷ்பு. அதற்கான உத்தரவாதத்தை முருகனால் தர முடியவில்லை. அமித்ஷாவுக்கு இதனை முருகன் பாஸ் செய்ய... "காங்கிரசில் அவருக்கான முக்கியத்துவம் இல்லை என்கிற நிலையில்தான், பா.ஜ.க.வின் அழைப்பை பயன்படுத்திக்க குஷ்பு நினைக்கிறார். அவரைத் தவிர அவருடன் யாரும் வரப்போவதில்லை. அப்படியிருக்கும் நிலையில், கட்சியில் சேருவதற்கு முன்பே நிபந்தனை போடுவது சரி அல்ல. பா.ஜ.கவில் இணையச் சொல்லுங்கள்; பிறகு பதவிகள் வரும். நம்பியவர்கள் கைவிடப்பட மாட்டார்கள்'' என்றிருக்கிறார் அமித்ஷா. இதனை குஷ்புவின் கணவரிடம் தெரிவித்துள்ளார் முருகன்.

khushbu

இதனையறிந்த குஷ்பு, "எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே மாதிரி தான். நம்முடைய பாப்புலாரிட்டியை பயன்படுத்திக்க குறியாக இருக்கிறார்கள். ஆனால், நம் எதிர்பார்ப்புகளை மட்டும் ஏற்பதில்லை. பா.ஜ.க.விலிருந்து இனி அழைப்பு வந்தால் பேசவேண்டாம்"எனக் கோபமும் வெறுப்புமாக தனது கணவரிடம் தெரிவித்திருக்கிறார் குஷ்பு. அந்த கோபம்தான் 6-ஆம்தேதி நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் மோடிக்கும் பா.ஜ.க.வுக்கும் எதிராக அவர் கர்ஜித்தவை என்கிறார் நம்மிடம் பேசிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஒருவர்.

khushbu

குஷ்புவின் கட்சித்தாவல் குறித்து மேலும் விசாரித்தபோது, "குஷ்பு வைத்த கோரிக்கையை அமித்ஷா நிராகரித்த நிலையில், அவர் அமைதியாக இருந்திருக்க லாம். ஆனால், காங்கிரஸ் கூட்டத்தில் பா.ஜ.க.வை அட்டாக் செய்த குஷ்புவின் பேச்சை முழுமையாக டேப் செய்த மத்திய உளவுத்துறையினர் அதனை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க, பிரதமர் அலுவலகம் டென்சனாகியிருக்கிறது. அமித்ஷாவும் கோபமாகியிருக்கிறார். மோடிக்கு எதிராக குஷ்புவை பயன்படுத்தும் வகையில், அவரது அதிருப்தியை சரி செய்து, காங்கிரசில் முக்கியத்துவம் தர ராகுல்காந்தி யோசிக்கலாம். அது காங்கிரசுக்கு ப்ளஸ் பாயிண்டாக அமையலாம்'' என யோசித்தது பா.ஜ.க. தலைமை.

khushbu

காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அக்கட்சிப்பிரபலங்களின் வருமான வழிகளையும் முதலீடுகளையும் சேகரித்து வைத்திருக்கிறது மத்திய வருமானவரித்துறை. அந்த வகையில், குஷ்பு மற்றும் அவரது கணவர் சுந்தர்.சி.யின் வெளிநாட்டு முதலீடுகளும் பா.ஜ.க.விடம் சிக்கியிருக்கிறது. அதனை வைத்து சுந்தர்.சி.யின் வழியாக மிரட்டப்பட்டார் குஷ்பு. சினிமாவிலும் சரி, பொதுவாழ்விலும் சரி, மிகவும் துணிச்சலானவர் என பெயரெடுத்துள்ள குஷ்புவும் அவரது கணவரும் பா.ஜ.க.வின் இத்தகைய மிரட்டலை எதிர்கொள்ள முடியவில்லை. வேறு வழியில்லாமல் பா.ஜ.க.வில் இணைய நேரிட்டுள்ளது'' என்கிறார்கள் டெல்லி சோர்ஸ்கள்.

amitshah

டெல்லியிலிருந்து சென்னை வந்த குஷ்புவுக்கு அசத்தலான வரவேற்பை தந்தனர் தமிழக பா.ஜ.க.வினர். இதனையடுத்து கமலாலயத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த குஷ்பு, " 'எதிர்க்கட்சியான காங்கிரசில் இருந்ததால் பா.ஜ.க.வையும் மோடியையும் விமர்சிக்க நேர்ந்தது. என் கணவர் வலியுறுத்தியதால் தான் பா.ஜ.க.வில் சேர்ந்தேன்'என காங்கிரஸ் தலைவர் (கே.எஸ்.அழகிரி) சொல்வது அபத்தம். கணவருக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை. காங்கிரஸில் இருக்கும்போது நான் நடிகையாகத் தெரிய வில்லையா? சிந்திக்கக்கூடிய மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ்'' என்றெல்லாம் போட்டுத் தாக்கினார் குஷ்பு. அதேநேரத்தில் "கட்சி மாறினாலும் கொள்கை மாறவில்லை என்றும், பா.ஜ.க.வில் இருந்தாலும் பெரியார் கொள்கையுடன் இருப்பேன்'' என்றும் தெரிவித்தார்.

khushbu

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்டபோது,’ "அரசியலுக்கும் தனது கணவருக்கும் (சுந்தர் சி) சம்மந்தம் இல்லையெனில் பா.ஜ.க.வில் சேர டெல்லிக்குச் செல்லும் போது சுந்தர்சி.யை அழைத்துச் சென்றது ஏன்? குஷ்பு நடிகை என்பதை தவறாக நாங்கள் பார்க்கவில்லை. நடிகை என்பது தவறான சொல் கிடையாது. அது பெருமையானது. அவர் நடிகை என்பதால்தான் காங்கிரஸில் அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டாரே தவிர சுதந்திரப் போராட்ட தியாகி என்பதாலோ, பொருளாதார நிபுணர் என்பதாலோ அல்ல. இப்போ, பா.ஜ.க. அவரை சேர்த்துக்கொண்டது கூட நடிகை என்பதால்தான். காங்கிரசில் இருந்துகொண்டே பா.ஜ.க.வுடன் தொடர்பில் இருந்தது துரோகமில்லையா?''’என்கிறார் அழகிரி.

Ad

இதற்கிடையே குஷ்புவின் கட்சித் தாவல், காங்கிரஸ் தலைவர்களிடம் விவாதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அவர்களில் சிலரிடம் பேசியபோது, "குஷ்புவின் பாப்புலாரிட்டி காங்கிரஸுக்குத் தேவை. அதனால் அவரை பாதுகாக்க கட்சித் தலைமை தவறிவிட்டது. பா.ஜ.க.வில் இருக்கும் நயினார் நாகேந்திரன் அதிருப்தியாக இருப்பதையும் அவரை தி.மு.கவளைக்க முயற்சிப்பதையும் அறிந்த பா.ஜ.கமுருகன், உடனே நெல்லைக்கு கிளம்பிபோய் அவரை சமாதானப்படுத்தினார். அந்த அணுகுமுறை குஷ்பு விஷயத்தில் காங்கிரசில் இல்லைங்கிறது துரதிர்ஷ்டம். குஷ்புவைத் தொடர்ந்து, தலைமையால் புறக்கணிக்கப்படும் முக்கிய நிர்வாகிகள் பலரையும் வளைக்க பா.ஜ.க. ஸ்கெட்ச் போட்டுள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க பா.ஜ.க.வின் ஆட்டம் காங்கிரசை மிரள வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை''’ என்கின்றனர்.

congress KhushbuSundar kushboo
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe