Skip to main content

களத்தைக் காதலிக்கும் கால்பந்தாட்ட வீரன்!

Published on 05/02/2018 | Edited on 05/02/2018
களத்தைக் காதலிக்கும் கால்பந்தாட்ட வீரன்!

 கிரிஸ்டியானோ ரொனால்டோ பிறந்த நாள் 





தல-தளபதி, தோனி-கோலி, ஹெச்.ராஜா - சீமான் என நமக்குத் தெரிந்த தமிழ்நாட்டு  ரசிகர்கள் ரைவல்ரியைத் தாண்டிய உலக அளவு ரைவல்ரி ரொனால்டோ - மெஸ்ஸி ரசிகர்கள் ரைவல்ரி. இந்தியாவிலும் இவர்களுக்கு ரசிகர்கள் அதிகம். கேரளாவில் ரசிகர் மன்றங்களே உண்டு. ரொனால்டோ, இந்தப் பெயர்  கால்பந்தாட்டத்திற்கு மிகவும் பிடித்த பெயர் போல. ரொனால்டோ, ரொனால்டினோ, கிரிஸ்டியானோ ரொனால்டோ மூவரும் கால்பந்தாட்டத்தில் ஜாம்பவான்கள்தான்.  கிரிஸ்டியானோ ரொனால்டோ, இளம் வயதிலேயே உலகளவில் பிரபலம், கால்பந்தாட்டம் காலூன்றாத இந்திய தேசத்தில் இவரின் உருவமும் பெயரும் அவரது ஸ்டைலும் ஊன்றியது. தனக்கென ஒரு ரசிக பட்டாளத்தை வளர்த்து இருக்கிறார். விளையாட்டு ரசிகர்களை இவரின் வேகமும் சுறுசுறுப்பும் கவர்ந்தது. இவரது பதிலடி, ரிவென்ஜ்  எல்லாம் கோல் மூலம் தான். இவர் பெண்களின் காதல் மன்னன் கூட, அத்தனை உடல் கட்டமைப்பு. வசீகரமான கண், கண்ணும் சேர்ந்து செய்யும் புன்னகை என்று விளையாட்டில் தோற்றத்தில் அனைத்திலுமே கோல் தான். 





தற்போது கோடிகளில் புரளும் இவர், தன் ஆரம்ப வயதில் ஒரு ஏழைக்  குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.  அவரின் தந்தையால்  ஷூ வாங்கிக்  கொடுக்கக்கூட முடியாது. இருந்தாலும் தன் தந்தையிடம் ரொனால்டோ, "வருங்காலத்தில் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நினைத்ததை வாங்க முடியும்" என்று சொல்வாராம். ரொனால்டோ சொன்னது எல்லாம் உண்மை ஆனது என்றாலும் அதை அனுபவிக்க அவருடைய தந்தை உயிருடன் இல்லை. தன் தந்தை போதைப் பழக்கத்துக்கு ஆளாகியிருந்ததால் ரொனால்டோ போதையிலிருந்து விலகியே இருந்தார், மதுப்பழக்கம் உள்ளிட்ட எந்த கெட்ட பழக்கமும் இல்லை. வருடா வருடம் இரத்ததானம் செய்வதால் உடம்பில் பச்சைகுத்திக் கொள்ளவில்லை. கால்பந்து வீரர்கள் என்றாலே உடம்பில் ஏதோ ஒரு பகுதியில் டாட்டூ  இருக்கும், ஆனால் அதைக் கூட ஒரு நல்ல விஷயத்திற்காக போடாமல் இருக்கிறார். 






கடந்த வருட யூரோ கோப்பையில் தன் அணியை வழிநடத்தி இறுதிப்போட்டி வரை கூட்டிக்கொண்டு சென்றார். இறுதிப்போட்டியில் முதல் 20 நிமிடத்திலேயே கீழே விழுந்து காயம் ஏற்பட்டு விளையாட முடியாத நிலைக்குச் சென்றார். கண்ணில் நீர் ஊற்ற, புல் தரையை ஓங்கி அடித்துக்கொண்டு விரக்தியுடன் தூக்கி செல்லப்பட்டார். மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கும் கண்ணீர் வர, கத்தி அவரை  உற்சாகப்படுத்தினர்.  வெளியே வந்த பிறகும் தன்னால் முடிந்த அளவுக்கு வழிநடத்த வேண்டுமென காலை நொண்டிக்கொண்டே, உள்ளே விளையாடும் போர்ச்சுகல் அணிக்கு அறிவுரை கூறி வழிநடத்தினார். 'ரொனால்டோ இல்லாமல் எப்படி போர்ச்சுகல் அணி  பிரான்ஸ் அணியை எதிர்த்து விளையாடும்' என்று  யோசித்தவர்களுக்கு,தான் இல்லையென்றாலும் தன் வழிகாட்டலால் அணியை வெற்றிக்குச் செலுத்துவேன் என்று புரியவைத்த தருணம் அது. ரொனால்டோவின் தலைமையில் யூரோ கோப்பையை வென்றது போர்ச்சுகல் அணி. உள்ளே இருந்தாலும் இல்லையென்றாலும் ஒரு போட்டியை தன் வசம் வைத்திருந்தவர்தான் கிரிஸ், சிஆர் 7 (CR7) என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் கிரிஸ்டியானோ ரொனால்டோ. இந்தியாவில் கால்பந்து ஆட்டத்தை கவனிக்காதவர்களுக்குக் கூட ரொனால்டோ  என்றால் தெரியும். இந்தியாவில் விடிய விடிய கண் விழித்து கால்பந்து போட்டியை பார்க்க வைத்த பெருமை இவரையும் சேரும். இந்த வருட ஆரம்பத்தில் இருந்து அவருக்கு சனிப்பெயர்ச்சி  போல, கொஞ்சம் சுமாராகத்தான் போகிறது. இந்த பிறந்தநாளில் (05 பிப்ரவரி) இருந்து பழைய ரொனால்டோவைப்  போல் வலம் வர வாழ்த்துக்கள். ஹேப்பி  பர்த் டே ரொனால்டோ...

சந்தோஷ் குமார் 
  

சார்ந்த செய்திகள்