Skip to main content

ஐந்து ஆண்டு உண்டியல் சேமிப்பு பணத்தை மக்களுக்காக செலவு செய்த மாணவி...

Published on 27/04/2020 | Edited on 27/04/2020

 

தனது குடும்ப வறுமையிலும் கிராம மக்களின் ஆரோக்கியம் காக்க 5 ஆண்டு உண்டியல் சேமிப்பு பணத்தில் ஆயிரம் பேருக்கு நோய் எதிர்ப்பு  சக்தியைப் பெருக்கும் சூப் வழங்கியுள்ளார் பள்ளி மாணவி ஒருவர். மாணவியின் இந்த செயலால் கிராம மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

 

ariyalur



அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட குந்தபுரம் கிராமத்தில் அபி என்ற மாணவி அந்த கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் படிப்பிலும் சுட்டி. கல்வித் தொடர்பான பல போட்டிகளில் வென்று பரிசுகளையும், விருதுகளையும் வென்றவர். 
 

கடந்த 5 ஆண்டுகளாக தனது பெற்றோர் வழங்கிய சில்லரை காசுகளை, தனது செலவு போக மீதியை உண்டியலில் சேர்த்து வைத்துள்ளார்.   3000 ரூபாய் உண்டியலில் சேமித்து வைத்துள்ளதை தனது வீட்டில் உள்ளவர்களிடம் பெருமையாக அவ்வப்போது கூறிக்கொள்வார். 

 

ariyalur



இந்தநிலையில் கரோனா வராமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனது கிராமத்தில் உள்ள அனைவருக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் வகையில் மூலிகை சூப் வழங்க வேண்டும் என தீர்மானித்தார். அதற்காக தான் சேமித்து வைத்த 3000 ரூபாய் பயன்படும் என நினைத்த அவர், இதனை தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். 'அபி'யின் தாயாரும் சம்மதம் தெரிவித்துள்ளார். தனது தாயாரின் உதவியோடு நோய் எதிர்ப்பு  சக்தியைப் பெருக்கும் சூப்பை தயாரித்து கிராமம் முழுக்க வழங்கினார். 

 

ariyalur



இதுகுறித்து மாணவி அபி கூறுகையில், என்னால் முடிந்த அளவு எனது கிராமத்தை காப்பாற்ற எனது சேமிப்பு பணத்தை பயன்படுத்தினேன். மனிதன் நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ உதவி செய்துள்ளேன் என்றார். 

மாணவி அபியின் தந்தை அண்மையில் ஒரு விபத்தில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது தகப்பனாரை இழந்து தனது குடும்பம் வறுமையில் வாடினாலும், மக்கள் நலமுடன் வாழவேண்டும் என்றே தான் நினைத்தாகவும், தான் படித்து ஐஏஎஸ் அதிகாரியாக வந்து சிறந்த முறையில் மக்களுக்கு சேவை செய்வேன் என்றார் நம்பிக்கையுடன் அபி. 

குடும்ப வறுமையிலும் தனது கிராம மக்களின் நலனில் அக்கறை கொண்டு, இந்த இளம் வயதில் செயல்படும் குழந்தையின் அரிய செயலைக் கண்டு கிராம மக்களும் பொது நல ஆர்வலர்களும் போற்றுகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக ரோட் ஷோவில் விதிமீறல்; கோவையில் எழுந்த சர்ச்சை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Violation at BJP road show; Controversy in Coimbatore

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று கோயம்புத்தூர் வந்திருந்த பிரதமர் மோடி ரோட் ஷோவில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் நடைபெற கலந்துகொள்ள இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் தற்பொழுது கூட்டணியில் இணைந்திருக்கும் பாமக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று கோவையில் நடந்த ரோட் ஷோ நிகழ்ச்சியில் விதி மீறலாக பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்த, இது தொடர்பாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில், அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த பாஜக நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குற்றச்சாட்டுக்கு காரணமாகியது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் விசாரணை நடத்தப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Next Story

நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்; பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம்!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Tragedy happened to the school student for Head-on collision vehicles

திருச்சி, மாவட்டம் சோமரசம்பேட்டை போசம்பட்டி அருகேயுள்ள நரியன்காடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் கிஷோர் (14). இவர் கரூர் மாவட்டம், ஆர்.டி.மலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி இரவு, கிஷோர் தனது வீட்டிலிருந்து வியாழன்மேட்டில் உள்ள மளிகை கடைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். 

அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனமும், கிஷோர் சென்ற வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாகின. இதில், படுகாயமடைந்த கிஷோர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், பள்ளி மாணவன் கிஷோரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இந்த விபத்தில், கிஷோர் வாகனம் மீது மோதிய, எட்டரை நடராஜபுரத்தை சேர்ந்த தர்மராஜ் (40) மற்றும் அவருடன் வாகனத்தில் அமர்ந்து வந்த கிருஷ்ணராஜன் ஆகிய இருவரும் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த சோமரசம்பேட்டை காவல்துறையினர், இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 9ஆம் வகுப்பு மாணவன், விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.