ADVERTISEMENT

இது முதலில் சேம்பிள் வீடியோ... ஆதாரம் இருந்ததால்தான் பேசுறோம்... என் பெயர் சர்மிளா! அமைச்சரை குறி வைக்கும் வில்லங்க வீடியோ!

08:46 AM Aug 28, 2020 | rajavel

ADVERTISEMENT

"என் பெயர் சர்மிளா. நான் கேரளாவைச் சேர்ந்தவள். நான் திருமணமானவள். எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இப்ப இந்த வீடியோ பண்ணுறதுக்கு மெயின் காரணமே வந்து உங்கள் தமிழ் மக்களோட எல்லோரோட ஹெல்ப்பும் எனக்கு தேவைப்படுது. ஏன்னா அங்க உங்க தமிழ்நாட்ல அமைச்சராக இருக்கிற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், என்னென்ன பண்ணிருக்காருன்னு ஆதாரங்களுடன் உங்களுக்கு மீடியா முன்னாடி கொண்டு வர்றேன்.

ADVERTISEMENT

இது இரண்டு வருடங்களாக நடக்கும் போராட்டம். அவுங்க என்ன சொல்றாங்கன்னா, இந்த வீடியோ வெளியே வந்தாக்கூட எனக்கு தெரியாது, எனக்கும் அவுங்களுக்கும் உறவு கிடையாது. எனக்கும் அவுங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாதுன்னு சொல்லுவாங்க. நாங்க ஆதாரம் இருந்ததால்தான் பேசுறோம் உங்க கிட்ட. எல்லோரோட சப்போர்ட் டும் இதுல எனக்கு தேவைப்படுது. இந்த வீடியோ வெளியிடும்போது நீங்க எல்லோரும் எனக்காக சப்போர்ட் பண்ணனும். அதுக்காகத் தான் இந்த வீடியோ. அவுங்க என்னப் பண்ணியிருக்காங்கன்னு டீடெயிலா சொல்றேன். என்னுடைய குடும்பத்தில் அறிமுகம் ஆகிறார்கள். எங்களுக்குள்ள நிறைய வியாபார உறவுகள் இருந்தது. அது என்னென்ன எப்படி என விரிவாக சொல்கிறேன். இது முதலில் சேம்பிள் வீடியோ. இதை தவறாக புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் யாருக்கும் கிடையாது.

இந்த பரபரப்பான வீடியோ வெளியாகி ஒரு மாதம் ஆகிறது. சர்மிளா, வீடியோவை மட்டும் வெளியிடவில்லை. அவருக்கு ssநெருக்கமான வட்டாரங்களில் சில செய்திகளையும் கசிய விட்டுள்ளார். அதில், அவர் விஜயபாஸ்கர் சில தொலைபேசி எண்களில் என்னிடம் தொடர்பு கொண்டு பேசுவார். அவர் மொத்தம் 12 தொலைபேசி எண்களை பயன்படுத்துகிறார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. நான் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு நெருக்கமானவள் என்று குறிப்பிட்டதோடு, சர்மிளாவும் விஜயபாஸ்கரும் சேர்ந்து நிற்கும் புகைப்படங்களையும் அவரே வெளியிட்டார்.

யார் இந்த சர்மிளா என அறிய அவர் குறிப்பிட்டிருந்த எண்கள் விஜயபாஸ்கரின் எண்களா என நாம் சோதனை செய்தோம். அதில் 99621 என ஆரம்பிக்கும் நம்பர் விஜயபாஸ்கரின் தனிப்பட்ட எண் என ட்ரு காலர் எனும் தொலைபேசி எண் காட்டும் செயலி சொல்லியது. 98400ல் ஆரம்பிக்கும் எண் டாக்டர் தேன்மொழி என்பவருக்கு சொந்தமானது என செயலி கூறியது. 63809 என்கிற எண் சரவண ராஜா என்பவரின் பெயரை காட்டியது. மற்ற இரண்டு எண்களும் செயல்படாத நிலையில் இருக்க 63809 எண் மட்டும் செயல்பட்டது. அந்த போனை எடுத்தவர், மெல்லிய குரலில் முதலில் பேசினார். அவரிடம் நாம், "நக்கீரனில் இருந்து பேசுகிறோம் என்று அறிமுகப்படுத்திக்கொண்டோம். சர்மிளா என்பவர் அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த எண்ணில் இருந்து என்னிடம் தொடர்பு கொண்டு பேசுவார் என கூறுகிறார். யார் இந்த சர்மிளா? அவர் ஏன் இந்த எண்ணைக் குறிப்பிட வேண்டும்'' என்று கேட்டோம்.

சன்னமான குரலிலிருந்து தெளிவாக பேச ஆரம்பித்த அவர், "சார் நீங்கள் நக்கீரன் என்பதால் பேசுகிறேன். சரவண ராஜா என்பவர் என்னுடைய மேனேஜர், என் பெயர் டாக்டர் ஸ்ரீதர்'' என்றார். "நானும் விஜயபாஸ்கரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1990ம் ஆண்டு ஒரே அறையில் தங்கி எம்.பி.பி.எஸ். படித்தோம்'' என்றார். சர்மிளா இந்த நம்பர் பற்றி குறிப்பிடுகிறாரே, அவரைத் தெரியுமா எனக் கேட்டோம். "எனக்கு அவரை நன்றாகத் தெரியும், எனக்கு மட்டுமல்ல என் நண்பர்கள் பத்து பேருக்கும் அவரை நன்றாக தெரியும்'' என்றார்.


அவருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் அறிமுகம் உள்ளதா எனக் கேட்டோம். "விஜயபாஸ்கரை சர்மிளா சந்தித்திருக்கிறார். அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அவர்கள் இருவருக்கும் இடையே அறிமுகம் உண்டு'' என ஒத்துக்கொண்டார். மேலும், "சர்மிளா என்னைத் தேடி வந்தார். இந்த எண் மூலம் விஜயபாஸ்கர் அவரை தொடர்பு கொண்டதாகக் கூறி என்னிடம் வந்து, விஜயபாஸ்கர் மேல் புகார்களை கூறினார்'' என்றார். எதற்காக அமைச்சர் மீது ஒரு பெண் புகார் கூறுகிறார் எனத் திரும்பவும் கேட்டோம். உங்கள் எண்ணில் இருந்து விஜயபாஸ்கர் சர்மிளாவை தொடர்பு கொண்டு பேசினார் என்பது உண்மையா? பொய் என்றால் நீங்கள் ஏன் சர்மிளா மேல் புகார் கொடுக்கக் கூடாது எனக் கேட்டோம்.

அதற்கு அவர், "சர்மிளா விஜய பாஸ்கரை நான் கிழித்துவிடுவேன், அம்பலப்படுத்துவேன், அசிங்கப்படுத்துவேன் எனக் கூறி வந்தார். நான் மட்டுமல்ல விஜயபாஸ்கருக்கு நெருக்கமான பத்து நண்பர்களின் செல்போன் எண்களை வைத்துக்கொண்டு 10 பேரிடமும் இதேபோல் விஜயபாஸ்கரை அம்பலப்படுத்துவேன் என சவால் விட்டார். என்னதான் பிரச்சனையென நாங்கள் கேட்டோம். அவர் தெளிவான பதில் எதையும் சொல்லவில்லை. இப்பொழுது வெளிவந்துள்ள வீடியோவில் பேசியது போலவே மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப்போடுவது போல பேசிக்கொண்டே இருந்தார்.

ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன நாங்கள், சர்மிளா விவகாரம் பற்றி அவர் வீடியோ வெளியிட்ட பிறகு காவல்துறையில் புகார் கொடுக்க தீர்மானித்தோம்'' என்றார்.

நீங்கள் மட்டும் புகார் கொடுக்கப் போகிறீர்களா? அல்லது உங்கள் நண்பர் விஜயபாஸ்கரும் இணைந்து புகார் கொடுக்கப் போகிறாரா? தமிழகத்தில் மிக முக்கியமான அமைச்சரானவர் நினைத்தால் ஒரு நொடியில் புகார் கொடுத்து சர்மிளாவை கைது செய்துவிட முடியும் அல்லவா எனக் கேட்டோம். அதற்கு, "சார் இந்த விவகாரம் கடந்த ஒரு வருடமாக சுற்றி வருகிறது. வீடியோ வந்து ஒரு மாதம் ஆகிறது. புகார் கொடுப்பது பற்றி அரசு வழக்கறிஞர்களிடம் விஜயபாஸ்கர் விவாதித்துக்கொண்டிருக்கிறார். அவர் கொரோனா களப்பணியில் இருப்பதால் பணிச்சுமை காரணமாக தாமதம் ஏற்படுகிறது'' என்றார்.

இது தொடர்பான விளக்கத்திற்காக அமைச்சர் விஜயபாஸ்கரின் பர்சனல் நம்பருக்கு தொடர்பு கொண்டோம். சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது. ஒரு மெசேஜ் போடுங்கள். அவரே லைனுக்கு வருவார் என அவர் தரப்பில் தெரிவித்தனர். மெசேஜ் போட்டுவிட்டு காத்திருந்தும், பதில் அளிக்கவில்லை. நாம் விசாரணையை தொடர்ந்தோம்.

சர்மிளா ஒரு வியாபாரி. அவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர். அவர் விஜயபாஸ்கர் தரப்பின் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்ய உதவி செய்தார். அப்படி முதலீடுகளுக்கு கமிஷன் உண்டு. அந்த கமிஷன் சரியாக வழங்கப்படாததால் சர்மிளா விஜயபாஸ்கருக்கு எதிராக வீடியோ மிரட்டல் விடுகிறார். மொத்தம் 240 கோடி ரூபாய் சர்மிளா மூலம் வெளிநாடுகளில் உள்ள கம்பெனிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என விஜய பாஸ்கருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுபற்றி விஜயபாஸ்கரின் நண்பரான டாக்டர் ஸ்ரீதரிடம் கேட்டோம். "அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லை சார்'' என மறுத்தார்.

ஏற்கனவே துறை ரீதியாக தொடர்பில் இருந்த பெண் அதிகாரிக்கு வெளிநாட்டுப் பயணத்தின்போது லண்டனில் வைர நகைகள், சென்னைக்கு வந்ததும் பென்ஸ் கார் வாங்கிக் கொடுத்தார் என்றெல்லாம் செய்திகள் அடிபட்டன. அத்துடன் முதல்வர் பதவிக்கு விஜயபாஸ்கர் குறி வைத்திருப்பதும் பரபரப்பானது.

புதுக்கோட்டையில் விஜயபாஸ்கர் பேன்ஸ் என வாட்ஸ்-அப் குரூப்பை ஆரம்பித்து அதில் வருங்கால முதல்வர் விஜயபாஸ்கர் எனப் பதிவு செய்து வருகிறார். இதற்காக 10 இளைஞர்களை சுகாதாரத்துறை பணியாளர்கள் என வேலைக்கு வைத்துக்கொண்டு அவர் எங்கு சென்றாலும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்ப ஏற்பாடு செய்துள்ளார். இந்த சர்மிளா விவகாரம் மற்றும் வாட்ஸ் அப் செய்திகள் வருங்கால முதல்வர் கோஷம் இவற்றால் விஜயபாஸ்கர் மீது கடுப்பில் இருக்கிறார் எடப்பாடி. அவர் மேற்கொண்டு வரும் மாவட்டச் சுற்றுப் பயணத்திற்கு "அண்ணா... நான் வரட்டா'' என விஜயபாஸ்கர் கேட்டும், வர வேண்டாம் என மறுத்து, வீட்டிலேயே உட்கார வைத்துவிட்டார் என்கிறார்கள் அ.தி.மு.க. சீனியர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT