Skip to main content

குழி தோண்டிப் புதைத்து... சிமெண்ட் பூசி மறைத்து... ஆட்டோ சங்கர் #14

as 14 titleலலிதா இறந்து போய் விட்டாள் என்பதையே உணரவில்லை! மயங்கியிருக்கிறாள் என்றே திடமாக நம்பினேன். நீர் தெளித்துக் கொண்டிருந்தேன்   முகத்தில்! எத்தனையோ முறை தண்ணீர் விட்டுப் பார்த்தும் துளி சலனமில்லை; கைகால்களில் அசைவுமில்லை; நிலைமை புரிபட, உறைந்து போனேன்.

"கொ... கொலை பண்ணிவிட்டேனா?'

நினைத்துப் பார்க்கவே நடுக்கமாயிருந்தது. கண்களுக்குள் நெருப்பை அள்ளிப் போட்டு இமைகளை கோணி ஊசியால் தைத்துவிட்டது போல் இருந்தது. முகத்தில் அறைந்து கொண்டு கதறி அழுதேன்! தேர்தலுக்கு அப்புறம் மாயமாகி விடுகிற எம்.எல்.ஏ. கணக்காய், போதை எப்போதோ தொலைந்து போயிருந்தது.

 

 


அழுதேன்! உலகத்து துக்கத்தை எல்லாம் மொத்தக் குத்தகைக்கு எடுத்தவன் போல அப்படி ஒரு அழுகை! லலிதாவை இழந்ததற்காக அல்ல. என்னை  இழந்ததற்காக! போதையில் தன்னை இழந்து, ஆத்திரத்தில் நிதானத்தை இழந்து, ஆணவத்தில் அறிவை இழந்து! கொலைகாரப் பாவம் ஒன்று   பாக்கியிருந்தது. அதையும் செய்தாயிற்று. ஏதோ உணர்ச்சிவசப்பட்டதில் செய்த காரியமென்றாலும் தவறு தவறுதானே?

வேர்த்து விறுவிறுத்து, வீட்டுக் கதவைப் பூட்டிக்கொண்டு சாராயக் கடைக்குப் பறந்தேன். சகாக்களின் காதுகளில் விஷயத்தை விதைத்தேன்!மோகன், எல்டின், சிவாஜி, பாபு என மொத்த "கேபினெட்”டும் யோசித்தது! சாராய குடவுனுக்குள் லலிதாவைக் கொண்டு வந்தார்கள்! பார்த்தவர்கள் யாருக்கும் சந்தேகம் வரவில்லை! கள்ளச் சாராயம் என்று நினைத்துக்கொண்டனர். நடுநிசியில் அங்கே இப்படி சரக்கு வருவது வழக்கமான ஒன்றுதானே?!

 

 

autoஆறடி ஆழத்திற்கு நான்கு பேருமாக குழி தோண்டினோம்! தரையில் கடப்பாரை மோதும் சத்தத்தால் யாருக்கும் சந்தேகம் வந்து விடக்கூடாதே! டேப் ரிக்கார்டில் டி.எம்.எஸ்.ஸும், பி.பி.எஸ்.ஸும், சீர்காழியும் அலறித் தீர்த்தனர்.

"பொன் ஒன்று கண்டேன்!
பெண் அங்கு இல்லை...
என்னென்று நான் சொல்லலாகுமா?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா?''

நாலைந்து திடகாத்திரர்களும் இரண்டு ஃபுல் பேக்பைப்பருமாக சேர்ந்துகொண்டு ஆறடி குழியை உருவாக்கிவிட முடியாதா என்ன?நிமிஷமாய் தயாராயிற்று. தரை வாயைப் பிளந்துகொண்டு நிற்க, முன்பே வாயைப் பிளந்திருந்த லலிதா சாக்குமூட்டையிலிருந்து வெளியே  உருவப்பட்டாள். வளையல், காதுத்தோடு... என நகைகள் எல்லாம் ஒன்றுவிடாமல் எடுத்து வைத்துக்கொண்டோம்! உடுத்தியிருந்த துணிமணி கூட   நீக்கப்பட்டு பூஜ்ஜியமானாள்! குழி நோக்கி உருட்டி விடப்பட்டாள்!

 

 


அம்பாரமாய் குவிந்து கிடந்த மணலை அவள் மீது கொட்டி குழியை மூடினோம். பகலில் தயாராக வாங்கி வைத்திருந்த சிமெண்டை நீரில் கரைத்து மேலே புதுசாய் தளம்... உள்ளுக்குள் பிணத்தை ஒளித்து வைத்திருப்பதைக் காட்டிக்கொள்ளாது 'சாது'   போஸ்   கொடுத்தது தரை...! மீதமிருந்த மணல் குப்பை அப்புறப்படுத்தப்பட்டது.

"சங்கர்... நாளைக்கு ஒரு நா கடை லீவு விட்டுருவோம்! நாளை ராத்திரி பூசின இடத்திலே நல்லா தண்ணீ தெளிச்சுட்டா தரை இறுகிடும்! சாராய   கேனையெல்லாம் இங்கே கொண்டு வந்து அடுக்கிடுவோம். சரிதானே?'' ஒப்புக் கொள்ளப்பட்டது. அவ்வளவு பேரும் குழாய் திறந்து அலுப்பு தீர குளித்தோம்! துணியிலிருந்து அழுக்கெல்லாம் நீரில் அடித்துக் கொண்டு ஓடினது.

 

 

drinkingகுளித்துவிட்டு வந்ததும் மறுபடி அலமாரி திறந்து விஸ்கி பாட்டிலை வெளியே எடுத்தோம். போதையின் இரண்டாவது அத்தியாயம் ஆரம்பமாயிற்று.கழுத்து முட்டும் அளவு குடித்துவிட்டு, மூச்சு முட்டும் அளவு சாப்பாடு! சிக்கன் 65, ஆஃப்பாயில், தலைக்கறி   என சகலமும் வயிற்றில் புதைத்தோம். லலிதாவை தரையில் புதைத்தோமே... அதேமாதிரி!

 

 


மறுநாள் பகல் முழுக்க அடித்துப்போட்ட மாதிரி அசதியான தூக்கம். முந்தின தினத்து அசதி! இரவு அனைவரும் மறுபடி தங்கள் வேடந்தாங்கலுக்கு   வந்தார்கள் இளைப்பாற! எனக்கு மட்டும்தான் சங்கடமாயிருந்தது. மற்றவர்களுக்கு லலிதாவின் மரணம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தினதாகத் தெரியவில்லை. கொஞ்சம் சந்தோஷம்கூடபட்டார்கள் என்று சொல்லலாம்! வெட்டியாய் அதிகாரம் பண்ணிக் கொண்டிருந்தவள் தொலைந்தாளே என்று சந்தோஷம்! பாபுவுக்கு சற்று அதிகப்படியாகவே மகிழ்ச்சி! அந்த மகிழ்ச்சிக்கு அர்த்தம் அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

 

குறிப்பு: பயன்படுத்தப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சித்தரிப்புக்காகவே. தொடரின் மனிதர்களுக்கும்  புகைப்படங்களுக்கும் தொடர்பில்லை. 
 

அடுத்த பகுதி:

இரவு இரண்டு மணிக்கு 'பெண்' கேட்ட தேசிய தலைவர்! - ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம் #15 

முந்தைய பகுதி:

முதல் பெண்... முதல் கொலை...  ஆட்டோ சங்கர் #13

 

இதை படிக்காம போயிடாதீங்க !