Skip to main content

"கைநாட்டு! தொண்டர்கள் ஷாக்! சிகிச்சையும் சர்ச்சையும்!' ஜெ. மரணம்? -அதிரவைக்கும் டாக்டர்கள்!

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

சிகிச்சையில் இருந்த ஜெ.விடம் 3 தொகுதி தேர்தலுக்காக வேட்புமனுக்களில் பெறப்பட்ட கைரேகை மோசடியானது என்பதை 2016 நவ.02-04 நக்கீரன் இதழிலேயே "கைநாட்டு! தொண்டர்கள் ஷாக்! தொடரும் சிகிச்சையும் சர்ச்சையும்!' என்ற தலைப்பில் அட்டைப் படச்செய்தியாக வெளியிட்டிருந்தோம். இதனை அடிப்படையாகக் கொண்டு அ.தி.மு.க. ஏ.கே.போஸின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என திருப்பரங்குன்றத்தில் போட்டியிட்டு, வெற்றியை பறி கொடுத்த தி.மு.க. வேட்பாளர் டாக்டர் பி.சரவணன், 04-01-2017--ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான செய்திகளையும் நக்கீரன் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. ஜெ. மரணத்தில் இருக்கும் மர்மத்தை விசாரிப்பதற்காக நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அமைக்கப்பட்டதும், முதல் ஆளாக கமிஷனில் ஆஜராகி, ஜெ.வின் கைரேகை குறித்த சந்தேகங்களை கிளப்பினார் சரவணன். சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கும் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்தது. 

 

jayalalitha

டாக்டர் சரவணன் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பினை கடந்த 20-ஆம் தேதி நீதியரசர் வேல் முருகன் வழங்கினார். "கவர்னர், அமைச்சர்கள் உட்பட யாருமே ஜெயலலிதாவைப் பார்த்திராத போது, நேரில் கைரேகை பெற்றதாகக் கூறும் டாக்டர் பாலாஜி மட்டும் எப்படி பார்த்திருக்க முடியும். எனவே ஜெயலலிதாவின் கைரேகை மோசடியானது. எனவே ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது' என தீர்ப்பளித்தார் நீதியரசர். 

வழக்கில் வெற்றி பெற்ற டாக்டர் சரவணனை சந்தித்தோம். "அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவரது மரணம் வரை உண்மை நிலவரங்களை தொடர்ந்து எழுதியது நக்கீரன் மட்டும்தான். வேட்பாளர்களின் வேட்புமனுவில் இணைக்கப்படும் ஏ, பி படிவங்களில் ஜெயலலிதாவின் கைரேகையை வாங்க அனுமதிக்க வேண்டும் என அ.தி.மு.க.வின் அவைத் தலைவர் மதுசூதனன், 2016 அக்டோபர் 27-ல் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதுகிறார். அவர் கடிதம் எழுதிய ஆறு மணி நேரத்தில் அனுமதி வழங்குகிறார் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ்லக்கானி.

 

jayalalitha



இரவு 7.08 மணிக்கு ஆர்டர் வர, டாக்டர் பாலாஜியோ அக்.27-ஆம் தேதி மாலை 6 மணிக்கே ஜெ.விடம் கைரேகை வாங்கியதாக, கோர்ட்டில் நடந்த குறுக்கு விசாரணையில் சொல்லியிருக்கிறார். சுதந்திரமாக முடிவெடுக்க முடியாத நிலையில் இருந்த ஜெயலலிதாவிடம் கைரேகை வாங்கியதே குற்றம். அப்படியே வாங்கியதாகச் சொல்லப்பட்டாலும் ஆர்.டி.ஓ. அந்தஸ்தில் உள்ள அதிகாரி முன்னிலையில், கைரேகை வாங்குவதில் பயிற்சி பெற்ற போலீசார் தான் வாங்க வேண்டும். ஆனால் இது எதையுமே கடைப்பிடிக்காமல் டாக்டர் பாலாஜி வாங்கினார் என்றால், அதற்கு பிரதிபலனாகத்தான், உறுப்புதான ஆணையத்தின் தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. 

அ.தி.மு.க.வின் ஃபோர்ஜரி வேலைகளுக்கு நன்றாகவே ஒத்து ஊதியிருக்கிறது தேர்தல் ஆணையம். இதை நீதிமன்றமும் சுட்டிக்காட்டி கண்டித்துள்ளது. எங்கள் கட்சித் தலைவரின் உத்தரவு பெற்று, மீண்டும் ஆறுமுகசாமி ஆணையத்தை நாட முடிவு செய்துள்ளேன்'' என்கிறார் டாக்டர் சரவணன்.  கைரேகை மோசடி சட்டப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், ஜெ. மரண மர்மத்தின் இன்னொரு பக்கம் பற்றியும் மெல்லப் பேசத் தொடங்கியுள்ளனர் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள்.

ஆறுமுகசாமி கமிஷனில் சமர்ப்பிக்கப்பட்ட அப்பல்லோ மருத்துவமனை ஆவணங்கள் படி ஜெ.வுக்கு இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதி கடந்த இருபது வருடங்களாக இருந்து வந்தது. அத்துடன் ஒற்றைத் தலைவலியுடன் கூடிய அடிக்கடி மயக்கம் ஏற்படுத்தும் வெர்ட்டிகோ தோல் நோய், இதய நோய், ஆஸ்துமா மற்றும் அடிக்கடி சிறுநீர் மற்றும் மலம் கழித்தல் (BOWEL#SYNDROME) ஆகிய நோய்களால் நீண்டகாலமாக அவதிப்பட்டார். இதையெல்லாம் மீறி ஜெ.வுக்கு ஐஸ்கிரீம் என்றால் ரொம்ப பிடிக்கும். பொட்டாசியம் உப்பு நிறைந்த மலைவாழைப்பழம், சர்க்கரையை அதிகப்படுத்தும் திராட்சை, கேக்குகள் மற்றும் அடிக்கடி ஏற்படும் மயக்கத்தை போக்க ஒரு ஊட்டச்சத்து பானம். இவற்றை யார் தடுத்தாலும் சரி ஜெ. சாப்பிடுவார். ஆனால், உடல்நிலையில் அவர் கவனமாக இருந்தார். ஒவ்வொரு நாள் காலையிலும் இரவிலும் தன் உடலில் இருந்து இரத்தத்தை எடுத்து பரிசோதனை செய்து அதன் ரிசல்டை தன் டைரியில் குறித்து வைத்துக் கொள்வார். அந்த டைரி இப்பொழுது ஆறுமுகசாமி கமிஷனில் ஆவணமாகவே வைக்கப்பட்டுள்ளது. கர்நாடக சிறையில் இருந்து வெளியே வந்த ஒரு மாதத்திற்குள் (ஜூன் 23, .2015) அப்பல்லோ மருத்துவமனையில் முழு உடல்பரிசோதனை செய்து கொண்டார். அதில், ஜெ.வின் இதயத்தில் பல கோளாறுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

 

jayalalitha



இதயத்தில் உள்ள மிட்ரல் வால்வு (MITRAL VOLVE) எனப்படும் இரத்தக் குழாயில் பூஞ்சைக் காளான்கள் வளர்ந்துள்ளன. அது இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது என கண்டுபிடிக்கப்பட்டது. இதயம் பல வீனமாக உள்ள ஜெ.வுக்கு அப்பொழுதே ஒரு இதய ஆபரேசன் செய்தால் நல்லது என டாக்டர்கள் சொன்னார்கள். இந்த பிரச்சனை ஜெ. அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது பெரிதாக வெடித்தது. ஜெ.வுக்கு நெருக்கமான, அப்பல்லோவை சேராத இதய நோய் நிபுணர் சாமீன் சர்மா என்கிற டாக்டர் "உடனடியாக ஜெ.வுக்கு ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்யலாம்' என்றார். அப்பல்லோ மருத்துவமனையும் அதற்கு தயாரானது. ஆனால், டாக்டர் ரிச்சர்ட் பீலே வேண்டாம் என்று சொன்னதால் அந்த அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டது என்கிறது அப்பல்லோ ஆவணம்.

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ. அனுமதிக்கப்பட்டது இரவு நேரத்தில். ஆனால், அன்று காலை ஜெ.வுக்கு வீட்டில் இரத்த பரிசோதனை நடந்தது. உணவு சாப்பிடாமல் எடுத்த இரத்த சர்க்கரை அளவு 150 எம்.ஜி. இருந்தது. (அனுமதிக்கப்பட்ட அளவு 130 எம்.ஜி. அதை விட 20 எம்.ஜிதான் அதிகம்) இரவு படுப்பதற்கு முன்பு ஒருமுறை இரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அப்பொழுது சர்க்கரை அளவு அனுமதிக்கப்பட்ட அளவான 140 எம்.ஜி.யை விட 35 எம்.ஜி. கூடுதலாக 175 எம்.ஜி.யாக இருந்தது. இரத்த அழுத்தம் நார்மலாக இருந்தது. ஆனால், இரவு படுக்கைக்கு போன ஜெ. மயங்கி விழுந்தார். 

மருத்துவமனையில் அவருக்கு செப்டிக் ஷாக் ஏற்பட்டது என்றார்கள். அத்துடன் (ACUTE# RES PIRATORY SYNDROME) என்கிற மூச்சுவிட முடியாத வியாதியும் இருந்தது. ஜெ. சர்க்கரை வியாதிக்கும் இரத்த அழுத்தத்திற்கும் தினமும் மருந்துகள் எடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு ஏற்பட்ட தோல் வியாதிக்காக WYLSONE  என்கிற ஸ்டிராய்டு மாத்திரைகளை பத்து நாட்கள் மட்டும் சாப்பிட்டார்.

இப்படிப்பட்ட ஜெ.வுக்கு வருடக்கணக்கில் பல வியாதிகள் ஒன்று கூடி அவை முற்றிப்போனதால் வரக்கூடிய செப்டிக் ஷாக் மற்றும் மூச்சுவிட முடியாத வியாதியும் முற்றிய நிலையில் எப்படி இருந்தது என மருத்துவர்களே வியந்து போனார்கள். இந்த வியாதிகளால் நுரையீரலில் தேங்கி நின்ற திரவத்தை நீக்க முற்பட்டார்கள். இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, சீராக பராமரிக்கப்பட்டது. ரிச்சர்ட் பீலே தலைமையில் இதய நோய், தைராய்டு, நுரையீரல், மயக்கம், காய்ச்சல் மற்றும் வயதானவர்கள் உபயோகிக்கும் டயபர்கள் அணிந்ததால் ஏற்பட்ட பாக்டீரிய தொற்று என ஒவ்வொரு வியாதியாக கட்டுக்குள் கொண்டு வந்தார்கள். ஜெ. நன்றாக குணமடைந்து வந்தார். அவர் உடற் பயிற்சி செய்கிறார். "நான் மறு ஜென்மம் எடுத்தேன் என அறிக்கை வெளியிட்டார்' என்கின்றன ஆறுமுகசாமி கமிஷனிடம் அப்பல்லோ மருத்துவமனை கொடுத்த ஆவணங்கள். 

இடையிடையே மானே தேனே போட்டுக் கொள்வது போல "ஜெ. அதிகமாக மலை வாழப்பழத்தையும் இனிப்பு வகைகளையும் சாப்பிட்டார். ஆனால், அவரது மொத்த சர்க்கரை அளவும் உப்புக்களின் அளவும், கூடாமல் பார்த்துக் கொண்டோம்  என்கிறது அப்பல்லோ நிர்வாகம். ஆனால், டிசம்பர் மாதம் 1-ம் தேதி அதுவரை 112 எம்.ஜி. (அனுமதிக்கப்பட்டது 120.எம்.ஜி) என இருந்த சர்க்கரை அளவு 440 எம்.ஜி. என திடீரென எகிறியது. இரத்தப் பரிசோதனை செய்தும் அதுவரை ஜெ.வுக்கு தொடர் மருத்துவ சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தி வைத்திருந்த நோய்க்கிருமிகள் மறுபடியும் பயங்கரமாக வளர்ந்திருக்கிறது என்கிறது அப்பல்லோ மருத்துவமனை. 

"டிசம்பர் 2-ம் தேதியும் அதே நிலைமை தொடர்ந்தது. டிசம்பர் 3-ம் தேதி அவர் அதிகமாக இருமினார் சளி அதிகமானது. மூச்சு விட சிரமப்பட்டார். அதனால் அவரை செயற்கை சுவாச கருவிகளில் நுழைத்தோம். டிசம்பர் 4 ம் தேதி இதய நிறுத்தம் வந்தது (CARDIAC ARREST)  அப்பொழுது சசிகலா அங்கு இல்லை. வெங்கட்ராமன் என்ற மருத்துவரும் மூன்று நர்ஸ்களும் இருந்தனர். அவரது நெஞ்சு பகுதியை பிளந்து இதயத்தை மசாஜ் செய்யும் (CPR) எனப்படும்  சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு ECMO  இதயத்தையும் சிறுநீரகத்தையும் ஒரு கருவியில் இணைத்து இரத்த ஓட்டத்தை ஓட வைக்கும் கருவியை ஜெ.வுக்கு பொருத்தினோம். அதன் பிறகு அவர் இறந்து விட்டார்' என்கிறது அப்பல்லோ ஆவணம். ஆனால் ஜெ.வின் மருத்துவ பயணம் இத்துடன் நின்றுவிடவில்லை.

மருத்துவமனையில் இறந்ததால் ஜெ.வின் உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யப்படவில்லை என வெளியுலகிற்கு சொல்லப்பட்டது. எனினும் ஜெ.வின் முக்கிய இரத்த மாதிரிகள் சேகரிக்கப் பட்டன. அத்துடன் அவர் உடல் முழுவதும் கிடுக்கிபிடி போன்ற கருவியை பயன்படுத்தி அவரது வயிறு, இதயம், கிட்னி, கல்லீரல் ஆகியவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அதை செய்தவர் டாக்டர் மிலோ என்கிற எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர். பிணக்கூறு அறிவியலில் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர் மிலோ. நவம்பர் 30 வரை ஜெ. ஆரோக்கியமாக இருந்ததாக அப்பல்லோவின் மெடிக்கல் ரிக்கார்டுகளில் சொல்லப்பட்டது.

டிசம்பர் 1-ம் தேதி முதல் படுமோசமான நிலைக்கு போய் எப்படி மரணமடைந்தார் என்பதை எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய அரசுக்கு தெரிவிக்க கடமைப்பட்டிருந்தது. அதனால்தான் டாக்டர் மிலோவும், ஜெ.வுக்கு நாளமில்லா சுரப்பிகள் (ENDO#CRINOLOGY) தொடர்பாக சிகிச்சை அளித்த இன்னொரு மருத்துவரும் இணைந்து ஆறுமுகசாமி கமிஷனுக்கு எழுதிய கடிதத்தில், "ஜெ.வின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. இறந்து போன அவரது உடலில் பொட்டா சியமும், சோடியமும் மிக அதிக அளவில் காணப்படுகிறது. ஜெ. இறந்ததற்கு காரணம் நோய்க் கிருமிகளால் ஏற்பட்ட தாக்குதல் மட்டுமல்ல, அவரது உறுப்புகள் சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இவை ஊசி மூலம் செலுத்தப்பட்டுள்ளது. அதிக பட்சம் மூன்றுக்கும் மேற்பட்ட முறை விஷத்தன்மை கொண்ட சோடியமும் பொட்டசியமும் செலுத்தப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளோம்' என ஒரு பெரிய கடிதத்தை எழுதினார்கள். விசாரணைக் கமிஷன் என்ன காரணத்தினாலோ இந்த கடிதங்களை எழுதிய டாக்டர்களை விசாரணைக்கு அழைக்கவில்லை. பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தி வெளிப்படுத்தலாம் என டாக்டர்கள் முயற்சி செய்தார்கள். டாக்டர்களும் பேட்டி அளிக்க சம்மதித்தார்கள். எடப்பாடியை தொடர்பு படுத்தி கொடநாடு கொலைகளில் குற்றம் சாட்டிய சயானுக்கும் மனோஜுக்கும் எதிராக நடந்த, கைது நடவடிக்கைகளை பார்த்ததும் டாக்டர்கள் அந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்த முன்வரவில்லை. ஆனால், ஜெ.வின் இரத்தத்தில் சோடியம், பொட்டாசியம் போன்ற மெல்ல கொல்லும் விஷம் எப்படி செலுத்தப்பட்டது என்பதை மருத்துவமனை  ஆவணங்களில் இருந்தே எடுத்து வைத்துள்ளோம் என உறுதியாக சொல்கிறது நமது டெல்லி தொடர்பு.

"பொட்டாசியம் என்பது மிக மோசமான உப்பு. அது நிலநீர், தக்காளி சட்னி, மலை வாழைப்பழம் போன்றவற்றின் மூலம்  அதிகமாகும். ஜெ. இறக்கும் போது அவரது இரத்தத்தில் பொட்டாசியம் 6.2 மி.கி. இருந்தது. சாதாரணமாக மனிதர்கள் இரத்தத்தில் குறைந்த பட்சம் 3.5.மி.கி முதல் மிக அதிகமாக 5.5 வரையில்தான் இருக்கும். பொட்டாசியம் அளவு ஜெ.வின் இரத்தத்தில் அதிகபட்ச அளவை தாண்டி எப்படி இருந்தது. அது எப்படி ஜெ.வின் உடலில் வந்தது என்பது ஜெ.வின் மரணத்தில் ஏற்படும் நியாயமான சந்தேகமே. பொட்டாசியம் மற்ற எந்த உறுப்புகளை காட்டிலும் இதயத்தின் இயக்கத்தை நேரடியாக பாதிக்கும். அதே போல சிறுநீரக பிரச்சனை இருந்த ஜெ.வுக்கு சோடியம் என்பது ஒத்துக் கொள்ளாது. இது எப்படி ஜெ.வுக்கு செலுத்தப்பட்டது என்பது ஜெ.வின் மரணத்தில் ஆராய வேண்டிய மர்மம்'' என்கிறார் சென்னையை சேர்ந்த டாக்டர் புகழேந்தி. ஜெ.வின் கை ரேகை மர்மம் வெளியான மாதிரி.. ஜெ. மெல்ல கொல்லும் விஷம் வைத்து கொல்லப்பட்டாரா என்கிற மர்மமும் விரைவில் வெளியே வரும். 

-தாமோதரன் பிரகாஷ்,  ஈ.பா.பரமேஷ்வரன்

படங்கள்: எஸ்.பி.சுந்தர்

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு; மதுரையில் பரபரப்பு!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiffin box range Sensation in Madurai

மதுரை அருகே டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு என்ற பகுதியில் காரின் அருகே நின்று கொண்டிருந்தவர் மீது நேற்று இரவு (20.04.2024)  டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த நவீன்குமார் என்பவர் காயமடைந்தார்.

மேலும் டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டதில் நவீன்குமாருக்கு அருகில் இருந்த ஆட்டோக்காரர் கண்ணன் என்பவர் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த கீழவளவு காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த இருவரையும் போலீசார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.