கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரிக்கு அருகில் உள்ள "பெகிலி" என்ற ஊரில் சுமார் 900 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பிற்காலச் சோழர் காலக் கோவிலை காமன்தொட்டி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான ஜெயலட்சுமி கண்டுபிடித்து உள்ளார். அதைப்பற்றி அவர் கூறியதாவது. தமிழர்களின் வரலாற்றில் சோழர்களின் பங்கு அளப்பரியது. அதிலும் பிற்காலச் சோழர்களின் கலை அமைப்பு, கட்டட பாணிகள் உலக அளவில் நமது தமிழகத்தின் பெருமையை இன்று வரை பறைசாற்றி வருகின்றன.
கிருஷ்ணகிரி பகுதி சோழர் காலத்தில் "நிகரிலி சோழ மண்டலம்" மற்றும் "விது கதழகிய நல்லூர்" என்று வழங்கப்பட்டு வந்துள்ளது. சோழர் காலத்தில் இன்றைய ஓசூர் பகுதி "முரசு நாடு " என்ற பெயரில் முக்கிய நகரமாக விளங்கியுள்ளதையும், ஆந்திர, கர்நாடகா பகுதிகளையும் உள்ளடக்கி சோழப் பேரரசு கோலோச்சி இருந்ததையும் கல்வெட்டுகள் வழி நாம் அறிய முடிகின்றது. அந்த வகையில் தற்போது பெகிலி என்ற ஊரில் கி.பி 11 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சோழர் காலச் சிவன் கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெகிலி என்றால் தமிழில் "அடிக் கரடு" என்று பொருள். பெயருக்கு ஏற்றாற் போலவே சிறுமலைக் குன்றின் அடிவாரத்திலேயே இக்கோவில் அமைந்துள்ளது.
கோவிலின் மேற்புறத்தில் சுமார் 200 வருட ஆலமரம் வளர்ந்து முற்றிலும் மூடப்பட்ட நிலையில் இருந்த இக்கோயிலை ஊர் மக்களின் உதவியுடன் சுத்தம் செய்த பிறகே கோவிலுக்குள் நுழைய முடிந்தது.கருவறை, அர்த்த மண்டபத்துடன் கூடிய இக்கோயில் முழுக்க முழுக்க கற்களால் கட்டப்பட்ட கற்றளிக் கோவிலாகும். இக்கோவிலானது அதிட்டானம்,பாதம் பிரஸ்தரம்,கண்டப் பகுதிகள் மற்றும் ஐந்து கோஷ்டங்களுடன் மிக அழகான வகையில் தேர்ந்த சிற்பிகளால் கட்டப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் போதிகை என்னும் அமைப்பின் மூலமே இக்கோவிலானது முதலாம் குலோத்துங்கன் காலத்தைச் சார்ந்தது என அறிய முடிந்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/26/chozha-temple-2-2026-01-26-23-13-47.jpg)
முதலாம் குலோத்துங்கச் சோழனின் காலம் கிபி.1070- 1122 ஆகும்.அப்படியெனில் இக்கோவிலானது சுமார் 900 வருடங்கள் பழமை வாய்ந்த 11ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கோவில் என்பது நமக்கெல்லாம் பெருமை அளிக்கக் கூடிய ஒன்றாகும்.கருவறையின் அடிப்பகுதி புதையலுக்காகத் தோண்டப்பட்டுள்ளது. இங்கிருந்த சிவலிங்கம் களவாடப்பட்டுள்ளது.நந்தி சிலையும் உடைக்கப்பட்டுள்ளது. கோவிலின் அருகிலேயே மிகப்பெரிய அளவில் நீராழி மண்டபம் பாழடைந்த நிலையில் உள்ளது.கல்வெட்டுக்கள் ஏதும் இதுவரை கிடைக்கப்பெறாததால் இக்கோவிலை கட்டியவர் யார் என்ற விவரத்தை நம்மால் அறிய முடியவில்லை. மண்ணுக்குள் பாதி புதையுண்ட நிலையிலும், மரங்களால் சூழப்பட்ட நிலையிலும் உள்ள இக்கோவிலைச் சீரமைத்தால் கல்வெட்டுக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
இக்கோவிலுக்கு நிலதானம் அளிக்கப்பட்டதற்கு அடையாளமாக, அருகில் உள்ள பாறையில் சந்திர சூரியருடன் கூடிய சூலக்குறி காணப்படுவதால், அக்காலத்தில் இக்கோவிலானது புகழ்பெற்று விளங்கி இருக்கக்கூடும் என்பதை நம்மால் அறிய முடிகின்றது. "பாண்டவகுடி" என்று ஊர் மக்களால் அழைக்கப்படும் இக்கோவிலுக்குள் இதுவரை இப்பகுதி ஊர் மக்கள் யாருமே சென்றதில்லை என்பது மிகவும் வியப்பைத் தருகின்றது. இக்கோவில் ஆய்விற்கு கிருஷ்ணகிரி அருங்காட்சியக முன்னாள் காப்பாட்சியர் திரு. கோவிந்தராஜ், இந்நாள் காப்பாட்சியர் திரு. சிவகுமார் மற்றும் கிருஷ்ணகிரி வரலாறு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்ச்செல்வன் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர் என்றார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/26/chozha-temple-1-2026-01-26-23-14-03.jpg)
பராமரிப்பின்றி, மரங்களாலும், புதர்களாலும் சூழப்பட்ட நிலையில் உள்ள இந்தச் சோழர் காலக் கோவிலை புனரமைத்து, வழிபாட்டிற்கு கொண்டு வர உதவ வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் திரு. ஸ்ரீகாந்த், திரு.நாராயணன் மற்றும் ஊர் பொதுமக்கள் அரசுக்கும், தொல்லியல் துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தன்னந்தனியாக ஒரு பெண்ணாக இருந்து இந்தச் சோழர்காலப் பொக்கிஷங்களை உலகிற்கு வெளிக்கொணர்ந்த ஆசிரியர் ஜெயலட்சுமியை கிராம மக்கள் பாராட்டுகின்றனர்.
Follow Us