அனாதை பிணங்களை ஆதரித்த பெண்...
சேலம் நகரிலுள்ள 12-காவல் நிலைய எல்லையிலும், மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் அனாதை பிணங்கள் கிடந்தால் உடனே லைப் டிரஸ்ட் அறக்கட்டளைக்கு போன் பண்ணுவார்கள்.
/nakkheeran/media/post_attachments/UltimateEditorInclude/UserFiles/+- kamal/lifetrust.jpg)
இந்த அறக்கட்டளையை நிர்வகித்து வரும் கலைவாணி மற்றும் வாசுதேவன் இருவரும் தங்கள் அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்களுடன் சென்று அந்த பிணத்தை எடுத்துக் கொண்டுவந்து தங்களின் செலவில் அடக்கம் செய்கின்றனர்.
பிணம் என்றாலே பெண்கள் பக்கத்தில் போக பயப்படுவார்கள். அதுவும் சாலையோரங்களில் பிச்சை எடுப்போர், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்து விட்டு, பின்னர் வேறு போக்கிடம் இல்லாமல் மேம்பாலத்துக்கு அடியில் படுத்துக்கிடந்து அங்கேயே உயிர் பிரிந்தவர்கள். வயதான காலத்தில் கவனிப்பாரில்லாமல் சாக்கடையில் விழுந்து இறந்தவர்கள், ஒதுக்குபுறமான இடங்களில் படுத்துக்கிடந்த நிலையிலேயே இறந்து போனவர், பேருந்து நிலையத்தில் படுதிருந்த நிலையிலே உயிரிழந்தவர்கள் என பார்க்கவே அருவருப்பாக இருக்கும் பலருடைய உடல்களை கலைவாணி உள்ளிட்ட அந்த அமைப்பின் பெண்களே எடுத்துக் கொண்டுபோய் அடக்கம் செய்து வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/UltimateEditorInclude/UserFiles/+- kamal/kalaivani.jpg)
அவரை சந்தித்த நாம் “எப்படி இந்த சேவையை தேர்வு செய்தீர்கள்....?” என்று கேட்டோம்.
“திருமணம் முடிந்து பரமத்தி வேலூருக்கு வாழப்போன எனக்கு கணவர் வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனால் வெறுத்துப்போன நான் சேலத்துக்கே திரும்பி வந்துட்டேன். எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருந்த என்னை இந்த அமைப்பின் நிறுவனரான தயாநிதி மாறன் சார் தான் ஆதரவற்றவர்களுக்கு ஏதாவது உதவிகள் செய்யலாம் என்று கூப்பிட்டார்.
/nakkheeran/media/post_attachments/UltimateEditorInclude/UserFiles/+- kamal/be 1.jpg)
மனநிலை பாதிப்பினால் சாலையோரம் படுத்துக் கிடக்கும் பலருக்கும் ஒரு வேளை உணவு கொடுத்து வந்தோம். அப்போது தான், ஆதரவில்லாமல் இறந்து போகும் பலருடைய உடல்கள் கிடந்ததை பார்த்துவிட்டு, போலீசாரின் உதவியுடன் அதை எடுத்துக் கொண்டுபோய் அடக்கம் செய்தோம்.
இதை கேள்விப்பட்ட சேலம் மாநகராட்சி ஆணையாளர் பழனிசாமி சார் எங்களை கூப்பிட்டு, அவர்கள் அலுவலகத்தில் இருந்த ஒரு பழைய வேனை கொடுத்து உதவினார். படிப்படியாக, 2010-இல் துவங்கிய இந்த வேலை இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 20 முதல் 25 உடல்களை நாங்கள் அடக்கம் செய்கிறோம். இதுவரை (இந்த ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதிவரை) 2034-உடல்களை அடக்கம் செய்துள்ளோம்”.
இந்த சேவைக்கு உங்கள் உறவினர்களிடம் வரவேற்பு உள்ளதா...?”
ஆதரவற்றவர்களின் உடல்களை அடக்கம் செய்யப்போன காரணத்தால் என்னுடைய உறவினர்கள் கூட என்னை தங்களுடன் சேர்க்க வெட்கப்பட்டனர். எதாவது ஒரு இடத்தில் எங்களுடைய பழைய ஆம்புலென்ஸ் வண்டியை கொண்டுபோய் நிறுத்தினால்கூட, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அந்த வண்டியை அங்கிருந்து எடுக்கச் சொல்லுவார்கள். நான் செய்து வரும் இந்த வேலையை சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள பலரும் வந்து பாராட்டுவதால், இப்போது என்னை பலரும் மதித்து நடக்கிறார்கள். முன்பு இருந்தது போல இப்போது எதிர்ப்பு இல்லை.
ஆதரவற்றவர்களுக்கு வேறு என்ன சேவை செய்து வருகிறீர்கள்...?
/nakkheeran/media/post_attachments/UltimateEditorInclude/UserFiles/+- kamal/be2.jpg)
இந்த வேலையைத் தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக தகவல் வந்தது. எங்கள் குழுவினருடன் அங்கு போய் பார்த்தபோது, அந்த அம்மா மூச்சு, பேச்சில்லாமல் கிடந்தார்.
ஆனால், உடலில் லேசான சூடு இருந்தது. அதற்கு பிறகு, முகத்தில் தண்ணீர் தெளித்து ஜூஸ் வாங்கிக் கொடுத்த பின்னர் அந்தம்மா எழுந்து உட்கார்ந்து கொண்டார்.
பத்து நாளாக காய்ச்சல் இருந்ததால் அவர் அப்படி மயங்கி கிடந்துள்ளார் என்பது தெரிந்தது. பிறகு அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுத்து காப்பற்றினோம். வெளியே வந்ததும் அந்த அம்மாவை எங்கே கொண்டுபோய் விடுவது என்று தெரியாமல் மீண்டும் மாநகராட்சி ஆணையாளர் பழனிசாமி சாரை போய் பார்த்தோம்.
அப்போதுதான், ஒவ்வொரு மாநகராட்சியிலும் ஆதரவில்லாமல் இருக்கும் முதியவர்கள் இரவுநேரங்களில் வந்து தங்கிக்கொள்ள ஏற்றவகையில் ஒரு நைட் சென்டர் தொடங்கவேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது என்று கூறியவர், அன்னதானப்பட்டி மாநகராட்சி பள்ளியில் பயன்படாமல் இருந்த ஒரு பகுதியை எங்களுக்கு ஒதுக்கி கொடுத்து நைட் சென்டரை துவக்கி வைத்தார். இப்போது அந்த நைட் சென்டரில் 32-ஆதரவற்ற முதியவர்கள் தங்கியுள்ளனர்.
வெளியூரில் இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பெரியவர்கள், பேருந்து நிலையம் மற்றும் இரயில்வே ஸ்டேசன்களில் பல நாட்களாக தங்கியிருப்பவர்களை எல்லாம் போலீசார் எங்களிடம் கொண்டுவந்து விடுவார்கள். அல்லது நாங்களே போய் அழைத்து வருவோம். முடிந்த அளவுக்கு அவர்களிடம் பேசி அவர்கள் பற்றிய விபரத்தை தெரிந்து குடும்பத்தினருக்கு தெரியப்படுத்துவோம். இங்கே வரும் பலருக்கு தான் யாரென்ற நினைவு கூட இருப்பதில்லை. அப்படிபட்டவர்களை அவர்கள் உயிரிழக்கும் வரையில் சாப்பாடு போட்டு பாதுகாத்து வருகிறோம்.
ஆதரவற்றவர்களின் உடல்களை எப்படி அடக்கம் செய்கிறீர்கள்...?
/nakkheeran/media/post_attachments/UltimateEditorInclude/UserFiles/+- kamal/puthai1.jpg)
“அதரவில்லாதவர்களின் உடல்களை சட்டப்படி புதைக்கத்தான் வேண்டும். இறந்து போனவரின் போட்டோவை அச்சிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் உள்ள நோட்டீஸ் போர்டுகளிலும் ஒட்டவேண்டும். எதிர்காலத்தில், இவர்களின் படத்தை உறவினர்கள் யாரவது பார்த்துவிட்டு வந்து அந்த உடலுக்கு உரிமை கோரினால், காவல் துறையினரின் உதவியுடன் உடலை எடுத்து அவர்களிடம் ஒப்டைக்க வேண்டும். அல்லது இறப்பு சான்றிதல் வாங்கி கொடுக்கவேண்டும் என்பதால் இதுவரை இறந்த 2034 உடல்களையும், பெரமனூர் சுடுகாட்டில் தான் புதைத்துள்ளோம்.
/nakkheeran/media/post_attachments/UltimateEditorInclude/UserFiles/+- kamal/puthai 2.jpg)
ஒவ்வொரு உடலுக்கும் பக்கத்தில் இருக்கும் சமாதியை அடையாளம் காட்டி, அதிலிருந்து எத்தனை அடி தொலைவு எந்தப்பக்கத்தில் புதைக்கப்பட்டது என்ற விபரங்களை எல்லாம் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.
/nakkheeran/media/post_attachments/UltimateEditorInclude/UserFiles/+- kamal/vasu.jpg)
உடலை எடுத்துக் கொண்டுபோய் குழி வெட்டி, அடக்கம் செய்யவும், வண்டியை கழுவி விடவும், உடல்களை எடுத்துகொண்டு போவோருக்கான பாதுகாப்பு கை உறைகள், சுத்தம் செய்வதற்கு தேவையான சோப்பு, டெட்டால் போன்ற பொருள்கள் வாங்குவதற்கு செலவினங்கள் என சராசியாக 1500 ரூபாய் வரை செலவாகும்..” என்றார் இந்த அமைப்பின் செயலர் வாசுதேவன்.
உங்கள் அமைப்பிற்கு அரசு நிர்வாகத்தின் ஒத்துழைப்பு எப்படி உள்ளது...?
முன்பு டி.ஆர்.ஓ வாக இருந்த செல்வராஜ் சார் முயற்சி செய்து உத்தமசோழபுரத்தில் 12 செண்டு நிலத்தை எங்கள் அமைப்பிற்கு ஒதுக்கிக் கொடுத்தார். அந்த இடத்தில் இருபத்தி ஐந்து இலட்சம் ரூபாய் செலவில் ஒரு கட்டிடம் கட்டியுள்ளோம். இங்குள்ள நைட் சென்டரை அங்கே கொண்டுபோகும் முயற்சியில் உள்ளோம். ஒவ்வொரு மாதமும், ஒரு இலட்ச ரூபாய்க்கு குறைவில்லாமல் செலவாகிறது. ஒரு முறை நன்கொடை கொடுத்தவர்களையே மீண்டும், மீண்டும் போய் பணம் கேட்கவேண்டியுள்ளது.
/nakkheeran/media/post_attachments/UltimateEditorInclude/UserFiles/+- kamal/letter.jpg)
எங்களது வேலையை பற்றி வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மூலமாக தெரிந்துகொள்ளும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பலர் எங்கள் அமைப்பிற்கு உதவி செய்யும் நோக்கில் எங்களுடைய வங்கி கணக்கு எண் கேட்கிறார்கள். சட்டப்படி வெளிநாட்டில் வாழும் இந்தியர்களிடம் இருந்து பணம் வாங்குவதற்கு எப்.சி.ஆர்.ஏ என்ற சான்றிதழ் வேண்டும், இதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறவேண்டும்.
2010 இல் சந்திர குமார் ஆட்சியாராக இருந்த போதே அனுமதி கேட்டு விண்ணப்பம் கொடுத்தோம். அதன் பின்னர், மகரபூசனம், சம்பத் என மூன்று ஆட்சியர்கள் மாறி விட்டனர். தற்போது நான்காவதாக வந்துள்ள ரோஹினி மேடத்தையும் மூன்று முறை போய் பார்த்தோம். மீண்டும், மீண்டும் மனு கொடுத்தோம். அவருக்கு கீழே உள்ள அதிகாரிகள் ஒரு பெரிய தொகையை கொடுத்தால் மட்டுமே நாங்கள் அனுமதி கொடுப்போம் என்று சொல்கிறார்கள். அந்த அளவுக்கு எங்களிடம் பணம் இல்லாததால் எங்களுக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.
அதே நேரத்தில், எங்களுக்கு பிறகு விண்ணப்பம் செய்த அழகாபுரத்தில் உள்ள லோட்டஸ் என்ற அமைப்பினருக்கு இதே அதிகாரிகள் வெளிநாட்டு பணம் வாங்கும் அனுமதியை கொடுத்துள்ளனர்...” என்கிறார் கலைவாணி.
“லட்சுமி” இல்லாமல் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எந்த வேலையும் நடக்காது என்பதற்கு இதை விட வேறு சாட்சி தேவையில்லை.
-பெ.சிவசுப்ரமணியம்