சென்னை ஐஐடியில் சில நாட்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக வாத பிரதிவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், இன்று அந்த தற்கொலை தொடர்பாக தமிழக கேரள எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பினார்கள். தமிழகத்தை சேர்ந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பாத்திமா மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை முன்வைத்து நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பான இதுவரை ஒருவர் கூட கைதாகவில்லை? பாத்திமா தற்கொலை விவகாரத்தில் யாரை பாதுகாக்க முயற்சி நடக்கிறது? எஃப்.ஐ.ஆர் அறிக்கையில் பாத்திமா கூறிய பேராசிரியர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. பாத்திமா தற்கொலை குறித்த தகவல் அறிந்ததும் அவரது பெற்றோர், பாத்திமாவின் அறைக்கு சென்ற போது அந்த அறை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டிருந்தது. ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்தன. அவர் தூக்குமாட்டிக்கொள்ள பயன்படுத்திய கயிறு கூட அங்கு இல்லை. கல்வி நிலையங்களில் சாதி மற்றும் மத ரீதியிலான பாகுபாட்டிற்கு இடமளிக்கக் கூடாது. உயர்கல்வி நிலையங்களில் பாகுபாடு தொடர்பாக இதுவரை 72 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதிக மாணவர்கள் உயிரிழக்கும் இடமாக ஐஐடி மாறி வருகிறது. மாணவர்கள் தற்கொலை என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம் எனத் தெரிவித்தார்

jh

Advertisment

இதற்கு பதிலளித்த மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், உயர் கல்வித்துறை செயலாளரை விசாரணைக்காக அனுப்பி உள்ளதாக கூறினார். மேலும் சென்னை மாநகர கமிஷனர் ஏற்கனவே விசாரணையை தொடங்கி உள்ளதாக தெரிவித்த அவர், அவர்கள் தரும் அறிக்கைக்கு உட்பட்டு நிச்சயம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இதே பிரச்சனையை வலியுறுத்தி கேரள மாநில எம்பி பிரேமசந்திரன் நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசினார். ஐஐடியில் படிப்பதற்கு உரிய சுழ்நிலைகள் இல்லை என்றும், சாதி பாகுபாடுகள் அதிக அளவில் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அவரின் கருத்துக்கு மற்ற கேரள மாநில எம்பிகளும் ஆதரவு தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக உறுப்பினர்கள் ஆவேசமாக பேசியதால் நாடாளுமன்றம் சில மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.