ADVERTISEMENT

அ.தி.மு.க. எம்.பி.க்களின் செயல்பாடு பா.ஜ.க. அரசுக்கு சாதமாக இருக்கிறது: பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு பேட்டி

05:04 PM Mar 22, 2018 | rajavel



ADVERTISEMENT



மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி, 2016-ம் ஆண்டு தமிழகத்தில் 381 விவசாயிகள் தற்கொலை செய்து இருப்பது குறித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடிய உள்ளது குறித்தும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோரை தொடர்பு கொண்டு பேசினோம்...

ADVERTISEMENT

அய்யாக்கண்ணு கூறுகையில்,

"விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருளுக்கு லாபகரமான விலை இல்லை, பயிரிட நிலத்தடி நீர் இல்லை, அரசு உரிய நீரை பெற்று தராததால் விவசாயி வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. கடனை தள்ளுபடி செய்யவில்லை. வங்கியில் நெருக்கடி தருகிறார்கள். ஆகையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆனால் தமிழக அரசோ குடும்பப் பிரச்சனையில் தற்கொலை என்று சொல்லுகிறது. மத்திய அரசு தமிழக விவசாயிகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறது என மத்திய அரசு நினைப்பதில்லை. தமிழகம் மிகவும் சீரழிந்து கிடக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு சுப்ரீம் கோர்ட் சொல்லியிருக்கிறது. இதனை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம். யாரும் தொடரவில்லை என்றால், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம்" என்றார்.

பி.ஆர்.பாண்டியன் கூறுகையில்,

"தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கையை குறைத்து காட்டியிருக்கிறார்கள். தமிழக அரசும் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கைகளை குறைத்து காட்டும் முயற்சிகளை கவுரவுத்துக்காக மேற்கொள்கிறார்கள். உண்மையான பட்டியலை வெளியிட்டு தீர்வு காண முயற்சி எடுப்பதில்லை. எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதால் விவசாயிகள் வளமாக இருப்பதாக நினைக்க முடியாது.

தற்போது விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விலைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும். நீர் ஆதார பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும். மழைநீர் சேமிப்புத் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். விவசாயிகளுக்கான சந்தை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும். இந்த அடிப்படையில்தான் விவசாயிகளை பாதுகாக்க முடியும்.



தென் மாநிலங்களை சேர்ந்த அரசுகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு சென்றுள்ளனர். இதனால் தென் மாநிலங்கள் ஒன்றிணைய ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக இந்தத் தீர்மானத்திற்கு தமிழக அரசு வலுவூட்டி மத்திய அரசை பணிய வைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடிய உள்ளதை மத்திய அரசுக்கு கண்டிப்போடு தமிழக அரசு சுட்டிக்காட்ட வேண்டும்.

அதிமுக பாராளுமன்றத்தை முடக்குவதை பாஜக அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது. தெலுங்கானா எம்பிக்கள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழியக்கூட அதிமுக எம்பிக்கள் அனுமதிக்கவில்லை. அனுமதிக்காமல் தொடர் போராட்டத்தில் அதிமுக எம்பிக்கள் ஈடுபடுவதால் பாஜகவுக்கு இது சாதகமாக இருக்கிறது. தீர்மானத்தை முன்மொழிந்தால் தென் மாநிலங்கள் ஒன்றுபட வாய்ப்பு உள்ளது. மத்திய பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்படும். அப்போது தமிழகம் பக்கம் அவர்கள் திரும்பி நமது கோரிக்கைக்கு செவி சாய்க்க வாய்ப்பு உள்ளது."

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT