ADVERTISEMENT

டெல்லி போராட்டத்தில் பங்கேற்போம்... பி.ஆர்.பாண்டியன் அதிரடி!

12:47 PM Nov 28, 2020 | rajavel

ADVERTISEMENT

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக பஞ்சாப் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. டெல்லியில் விவசாயிகள் நுழைவதைத் தடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி நடத்தினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்து நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன்.

அப்போது அவர், ''மாநில அரசுகள், அரசியல் கட்சிகள், விவசாயிகளின் கருத்துகளை கேட்காமல், உரிய அவகாசம் அளிக்காமல், அவசரம் அவசரமாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டங்கள் முற்றிலும் விவசாயிகளின் நலனுக்கு எதிரானது.

குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது, மத்திய உணவுக் கழகம் கொள்முதல் செய்வது இந்த சட்டத்தில் இடம்பெறவில்லை. அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதை அனுமதிக்க மாட்டோம். பெரும் கார்ப்பரேட்டுகள் சந்தைகளில் அனுமதிப்படுவதை ஏற்க மாட்டோம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்துதான் இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

பாராளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றிய அன்றைய தினமே பஞ்சாப்பில் போராட்டம் வெடித்தது. தொடர்ந்து ஒரு மாதக் காலத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்தது. மத்திய அரசு அம்மாநில அரசையும், விவசாயிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் கொள்கை முடிவு என்பதில் இடம்பெற செய்ய மாட்டோம், வாய்மொழி உத்தரவு தருவதாக சொன்னார்கள். அதனை ஏற்க விவசாயிகள் மறுத்தனர். இதனால்தான் போராட்டம் தீவிரமானது.

டெல்லியில் பஞ்சாப் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம்

போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு, முதல்கட்ட பேச்சுவார்த்தையில் விவசாயிகள் வைத்த கோரிக்கைகளை ஏற்க மறுத்தது. இப்போது போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று சொல்வது, போராட்டத்தை திசை திருப்ப முயற்சிதானேயொழிய, விவசாயிகளக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்காது.

விவசாயிகள் தங்கள் அமைதி வழிப் போராட்டத்தை தொடங்கிவிட்டார்கள். விரைவில் உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட அனைத்து மாநில விவசாயிகளும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். மத்திய அரசு வரும் 3ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு அழைப்பது முக்கியமில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான் முக்கியம்.

விவசாயிகளுக்கு விரோதமாக இருக்கக்கூடிய அம்சங்களை திரும்பப்பெற்றோம் என்ற நிலையை அவர்கள் உருவாக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டில் இருந்தும் வடநாட்டு போராட்டக் குழுவோடு இணைந்து போராட நாங்கள் தயாராக இருக்கிறோம்.

டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக போராடும் விவசாயிகள் மீது போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதல் மனிதாபிமானம் அற்ற செயல். அதனை கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாலை திருவாரூரில் எங்கள் சங்கத்தின் சார்பாக அடையாளப்பூர்வமான கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். தொடர்ந்து காவிரி டெல்டா உள்பட தமிழ்நாடு முழுவதும் ஆதரவு தரும் வகையில் போராட்டம் நடத்துவோம். வரும் 3ஆம் தேதி நல்ல தீர்வு வரும் என்று எதிர்பார்க்கிறோம். நல்ல தீர்வு வராத பட்சத்தில் நாங்களும் டெல்லி போராட்டத்தில் பங்கேற்போம்'' என்றார் உறுதியாக.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT