கெட்ட நேரம் வந்தால் புடலங்காய் கூட பாம்பாய் மாறும். அதுபோல அ.தி.மு.கஅமைச்சர்களிலேயே ஜென்டில்மேன் என வர்ணிக்கப்படுபவர் அமைச்சர் தங்கமணி. மத்திய பாஜகவுடன் எடப்பாடிக்கு நெருக்கமான தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தவரும் தங்கமணிதான். அப்படிப்பட்டவருக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களில் மத்திய அரசின் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி மிரட்டியிருக்கிறது.
ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் சாலையில் இருக்கிறது நந்தா கல்வி நிறுவனம். அந்தப்பகுதியில் பள்ளிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள், பார்மசூட்டிகல் கல்லூரி என மொத்தம் 18 நிறுவனங்கள் நந்தா கல்வி நிறுவனத்திற்கு இருக்கிறது. இங்கு கடந்த 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இந்தகல்வி நிறுவனம் தொடர்பாக கோவை, ஈரோடு, நாமக்கல், சென்னை என 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டுகளை நடத்தியுள்ளார்கள்.
இதுபற்றி வருமான வரித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, இந்த கல்வி நிறுவனங்களில் வாங்கப்படும் கட்டணத்திற்கு முறையான கணக்கு இல்லை. இந்த கல்வி நிறுவனம் சமீபத்தில் EBA-வுக்கு சொந்தமான ஒரு இஞ்ஜினியரிங் கல்லூரியை விலைக்கு வாங்கியது. பொதுவாக தமிழகத்தில் இஞ்ஜினியரிங் கல்லூரிகள் மூடப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் நந்தா கல்வி நிறுவனம் மட்டும் புதிது புதிதாகக் கல்லூரிகளை வாங்குவது எப்படி என வருமான வரித்துறைக்கு சந்தேகம் வந்தது.
"இந்த கல்லூரியின் உரிமையாளர் வி.சண்முகம். இவர் தி.மு.க.வுக்கு நெருக்கமானவர் எனக் கருதப்பட்டது. அதனால் அந்த கல்லூரிக்குள் நாங்கள் சோதனை செய்யப் புகுந்தோம். சோதனையில் ரூபாய் 150 கோடிக்கு கணக்கு இல்லை. அது தவிர ரூபாய் 30 கோடி ஹாட் கேஷாக இருந்தது. கணக்கு வழக்குகளைப்பார்த்தால், இந்த நிறுவனத்தில் பலர் முதலீடு செய்திருந்தனர். இந்த நிறுவனம் சார்பில், ரியல் எஸ்டேட் வணிகமும் நடைபெற்று வந்தது. இந்த நிறுவனத்தில் இருந்து, நிலம் வாங்கிய கிருஷ்ணன் என்கிற பையா கவுண்டர் என்கிற தி.மு.கநிர்வாகியின் வீட்டிற்கு நாங்கள் ரெய்டுக்கு போனோம்.
அதேபோல, பி.எஸ்.டிகன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளரான தென்னரசு, சத்தியமூர்த்தி கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளரான சத்தியமூர்த்தி ஆகியோரது வீட்டிற்கும் நாங்கள் ரெய்டுக்கு போனோம். சத்தியமூர்த்தியின் அலுவலகத்தில் இருந்து கிடைத்த சில குறிப்புகள் அமைச்சர் தங்கமணியின் சம்பந்தியான சிவா, மருமகனான தினேஷ், மாப்பிள்ளை உறவுமுறை கொண்ட செந்தில் ஆகியோர் வீடுகளுக்கு நீண்டது.
அந்த வீடுகளுக்கு நாங்கள் சென்றிருந்தோமேயானால் அங்கிருந்து அமைச்சர் தங்கமணியின் வீட்டிற்கு நாங்கள் ரெய்டுக்கு சென்றிருப்போம். அமைச்சரின் உறவினர்கள் மற்றும் அமைச்சர் வீட்டிற்கு ரெய்டு போவதற்கு வருமான வரித்துறையின் உயர் அதிகாரிகள் சம்மதிக்கவில்லை. அதனால் இந்த அளவில் எங்களுடைய ரெய்டை முடித்துக்கொண்டோம். இந்த நேரத்தில் தங்கமணியின் சம்பந்தியும் மருமகன் தினேஷூம் தொடர்பு வைத்திருந்த சத்தியமூர்த்தி கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் பி.எஸ்.டிகன்ஸ்ட்ரக்ஷன் கட்டி வந்த நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. அதில் ஐந்து பேர் காயமடைந்தார்கள்.
அதுபற்றி விளக்க வேண்டிய நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஊடகங்களிடம் பேட்டி அளிக்கவில்லை. அமைச்சர் தங்கமணி முன்வந்து அங்கு நடந்தது விபத்து அல்ல, அதிகாரிகள் துணையுடன்தான் அந்தக் கட்டிடம் இடிக்கப்பட்டது என்றார். இதுவே, எங்களது ரெய்டுக்குள்ளான சத்தியமூர்த்திக்கும் பி.எஸ். தென்னரசுக்கும் அமைச்சருக்கும் உள்ள தொடர்பைக் காட்டியது. எங்கள் உயர் அதிகாரிகள் சம்மதிக்காததால் நடந்த நிகழ்வுகளை ஒரு குறிப்பாக மட்டும் எங்கள் ஃபைல்களில் குறித்துக் கொண்டோம்'' என்கிறார்கள்.
நாம் இதுபற்றி ஈரோடு மற்றும் நாமக்கல் வட்டாரங்களில் விசாரித்தோம். நந்தா கல்வி நிறுவனர் வி.சண்முகம் தி.மு.க.வில் தற்போது இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினரும் முன்பு அதி.மு.க.வில் அமைச்சராக இருந்தவருமான முத்துசாமிக்கு நெருக்கமானவராக ஒரு காலத்தில் அறியப்பட்டவர். அடிப்படையில் முத்துசாமி வழியில் இவரும் தி.மு.கஎனத் தற்பொழுது அறியப்படுகிறார்.
சண்முகமும் கோவை மாவட்ட தி.மு.கபிரமுகரான பையா கவுண்டர் என்கிற கிருஷ்ணனும் உறவினர்கள். இந்த உறவு வட்டாரத்தில் தி.மு.கஆட்சி காலம் தொட்டு அரசு கட்டிடங்களை கட்டிவரும் சத்தியமூர்த்தியும் பி.எஸ்.டிகன்ஸ்ட்ரக்ஷனை சார்ந்த தென்னரசும் வருகிறார்கள். இவர்கள் அதே சமூகத்தைச் சார்ந்த தங்கமணிக்கும் நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள். இந்த டீம் மேற்கொள்ளும் ரியல் எஸ்டேட் வேலைகள் மற்றும் அரசு துறை கட்டுமான வேலைகள் போன்றவற்றில் அமைச்சர் தங்கமணி, அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வர் எடப்பாடி எனப் பலருக்கும் நெருக்கம் இருக்கிறது. ஒரு சமூகத்தைச் சேர்ந்த பணக்காரர்களின் ஒற்றுமை வளையம் என்கிற விதத்தில் தி.மு.க., அ.தி.மு.க. எனக் கட்சி பேதம் இல்லாமல் லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இவர்கள் இயங்கி வருகிறார்கள்.
இதில், சண்முகத்திற்கும் அவரது இரண்டு மகன்களுக்கும் இடையே சமீபத்தில் தகராறு ஏற்பட்டது. அவர்கள் குடும்பத்தைச் சார்ந்த ஒருவரே, வருமான வரித்துறைக்கு தகவல்களைப் போட்டுக் கொடுத்துள்ளார். தி.மு.கபிரமுகர் நிறுவனம் என்ற அடையாளத்தில் உள்ளே புகுந்த வருமான வரித்துறை கடைசியில் அமைச்சர் தங்க மணி வரை ஒன்றன் பின் ஒன்றாக அடியொற்றிச் செல்ல முதல்வர் அலுவலகமும் அமைச்சரும் அவர்களுக்கு நெருக்கமான திரிவேணி எர்த் மூவர்ஸ் என்கிற நிறுவனம் வழியாக, பிரபல தொழிலதிபர் அதானி மூலம் டெல்லி மேலிடத்தைத் தொடர்பு கொண்டுள்ளனர். அதனால், கடைசி கட்டத்தில், அமைச்சர் மற்றும் உறவினர்கள் மீது நேரடியாகப் பாய்வதை தவிர்த்திருக்கிறார்கள். வருமான வரித்துறையை அதன் போக்கிலேயே விட்டிருந்தால் இந்த ஒரே சமூகத்தைச் சேர்ந்த பணக்காரர்கள் அமைத்துள்ள நெட்வொர்க் சிக்கியிருக்கும்'' என்கிறார்கள்.
அமைச்சர் தங்கமணியோடு இது நின்றிருக்காது. எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது மகன் மிதுன் வரை வருமான வரித்துறை தொட்டிருக்கும். தங்கமணியும் எடப்பாடியும் உறவினர்கள். சுடுகாட்டு கொட்டகை ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட இன்று தி.மு.க.வில் இருக்கும் அமைச்சர் செல்வகணபதியிடம் அவர் அதி.மு.கஅமைச்சராக இருக்கும்போது பி.ஏ.வாக இருந்தவர்தான் தங்கமணியின் எல்லா வேலைகளையும் கவனிக்கும் சிவா என்பவர். அவரது மகன் தங்கமணியின் மகளை திருமணம் செய்துள்ளார். இப்படி பாய்ந்திருக்கக் கூடிய வருமான வரித்துறை நடவடிக்கைகளை கஷ்டப்பட்டு தங்கமணியும் எடப்பாடியும் தடுத்துள்ளார்கள்.
தங்கமணி மீது தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி லஞ்ச ஒழிப்புத்துறையில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், தங்கமணி போலி கணக்குகளை எழுதி கோடிக்கணக்கான பணம் கொள்ளையடித்தார் என குற்றம் சாட்டியிருந்தார். அதேபோல் நந்தா கல்வி நிறுவனத்தில் ரெய்டு நடத்திய வரு மான வரித்துறை அதிகாரிகள் நந்தா கல்வி நிறுவனம் போலி பில்கள் மூலம் பல கோடி ரூபாய் போலி கணக்குகள் எழுதியுள்ளதாகக் கண்டுபிடித்துள்ளார்கள். வருமான வரித்துறையின் மத்திய நேரடி வரிகள் வாரியம்தான் இந்த ரெய்டுகளை நடத்தியுள்ளது. அவர்கள் சத்தியமூர்த்தி கன்ஸ்ட்ரக்ஷனிலும், பி.எஸ்.டி. தென்னரசு கன்ஸ்ட்ரக்ஷனிலும் அவர்கள் இதுவரை எடுத்துச் செய்த தமிழக அரசுக்குச் சொந்தமான கட்டிடங்களின் கணக்கு வழக்குகளையும் ஆராய்ந்துள்ளனர். அதில், பல போலி கணக்கு வழக்குகளைக் கண்டுபிடித்துள்ளனர். அந்த கணக்குகள் தமிழக அரசில் நடந்த ஊழல்களை வெளிக்கொணர்வதற்குப் போதுமான சான்றாக அமையும்.
அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர் உள்பட பல அமைச்சர்களுக்கு இதில் நெருக்கடி ஏற்படும். நெடுஞ்சாலைத்துறை வேலைகளை இவர்கள் மேற்கொண்டதன் மூலம் முதல்வர் எடப்பாடிக்கும் நெருக்கடிதான். இத்தனை ஆதாரங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு வருமான வரித்துறை காத்திருக்கிறது. அவர்களது நடவடிக்கைகளுக்கு தற்பொழுது ஒரு கமா போடப்பட்டுள்ளது. மத்திய நிதித்துறை அமைச்சகமும் ஒப்புதல் அளித்தால் உடனடியாக தமிழக அமைச்சர்கள் பலரது வீடுகளுக்குச் செல்ல இந்த இரண்டு கட்டுமான நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களே போதுமானது என்கிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்.
தனது மனசாட்சி போல செயல்படும் அமைச்சர் தொடர்புடைய இடங்களுக்கு டெல்லி விரித்த வலை, முதல்வரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.