Skip to main content

முதல்வர் சொன்னதும் பொய்? கலெக்டர் சொன்னதும் பொய்?  – 8 வழிச்சாலையில் ஒரு பயணம், முடிவு

Published on 08/07/2018 | Edited on 08/07/2018

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளின் எதிர்ப்பு குறைவாக இருப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் இருக்கிறது  என்றார் சென்ற கட்டுரையை வாசித்த தோழர் ஒருவர் நம்மை தொடர்பு கொண்டு. என்னவென்று கேட்டபோது, "100 நாள் வேலைத்திட்டம் என்கிற ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின் நோக்கம், வறட்சி காலங்களில் விவசாயக் கூலி தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருக்கக் கூடாது என்பதுதான். ஆனால், பல இடங்களில் இந்தத் திட்டம் கூலி வேலை செய்யும்  மக்களை சோம்பேறிகளாக்கியது. மர நிழல்ல உட்கார்ந்துட்டு வந்தாலே 150 ரூபா தர்றாங்க எனச் சொல்லியே விவசாயத்துக்கான கூலியை உயர்த்தினார்கள். நியாயவிலைக் கடையில் இலவச அரிசி, உழைக்காமலே 150 ரூபாய் கூலி இவையெல்லாம் இவர்களை விவசாய வேலைக்கு போகவேண்டியதில்லை என்ற எண்ணத்துக்கு தள்ளியது. விவசாயத்துக்கு ஆட்கள் வரவில்லை. இதனால் நிலம் வைத்திருந்த விவசாயிகள் வெறுத்துவிட்டார்கள். அதனால் தற்போது சாலைக்காக எடுக்கிறேன் என்றதும் எடுத்துக்கிட்டு போய்ட்டுப் போறான் என்கிற விரக்தி நிலைக்கு பலர் வந்துவிட்டார்கள்" என்றார். அவரது பார்வை அப்படியிருக்கிறது.

 

salem chennai road



சேலம் டூ சென்னை வரையிலான 8 வழிச்சாலையில் செய்த பயணத்தில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட மக்களின் மனநிலையை அறிந்து எழுதியிருந்தோம். இறுதிப் பகுதியாக இந்த திட்டத்தின் நோக்கம், இதனை பசுமை வழிச்சாலை என குறிப்பிடுவது சரியா, இந்த சாலை உண்மையில் எதற்காக அமைக்கப்படுகிறது, அரசாங்கம் குறிப்பிடுவது போல சேலத்தில் இருந்து 3 மணி நேரத்தில் சென்னை போக முடியுமா, மாவட்ட ஆட்சியர்கள் சொல்வதைப்போல பாதிக்கப்படுபவர்களுக்கு 3 மடங்கு இழப்பீடு கிடைக்குமா என விசாரித்ததன் தொகுப்பு இது.

சேலம் டூ சென்னை சாலையை, பசுமை வழிச்சாலை என குறிப்பிடுவது சரியா?

பசுமை வழிச்சாலை என இதனை குறிப்பிடுவது முற்றிலும் தவறானது என்கிறார்கள் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்கள். இந்த சாலைக்கான திட்ட அறிக்கையை படித்த தங்கிலீஷ் பார்ட்டி, கிரீன் வே ப்ராஜக்ட் என ஆங்கிலத்தில் இருந்ததை அப்படியே தமிழில் மொழிபெயர்க்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அப்படியே பேசினார். இதையே மீடியாக்கள் பின்பற்றின. பசுமையான பகுதி மீது அமைக்கப்படும் புதிய சாலை என்பதே நெடுஞ்சாலைத் துறை அகராதியில் அதன் அர்த்தம் என்கிறார்கள்.

 

 


மத்திய அரசின் திட்டப்படி 2006ல் இது தொடங்கியபோது, இந்தத் திட்டத்துக்கான பெயர் பொருளாதார மேம்பாட்டு சாலை. அந்தப்  பெயரில்தான் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை புத்தம் புதியதாக சேலத்தில் இருந்து சென்னை வரை அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் இப்படி 8 சாலைகள் அமைக்கப்படவுள்ளன. ஆரம்பத்தில் 6 வழிச்சாலையாக இந்த சாலைகள் டிசைன் செய்யப்பட்டன.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபின், பாரத்மாலா என்கிற திட்டத்தின் கீழ் இந்த சாலைகள் 8 வழிச்சாலைகளாக மாற்றப்பட்டன. முதல் கட்டமாக சேலம் டூ சென்னை சாலை புதியதாக அமைக்கப்படுகிறது. இந்த சாலையை தொடர்ந்து மதுரை டூ தஞ்சாவூருக்கு 8 வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. அடுத்தாக சேலம் டூ கோவை இடையே 8 வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது.

இந்த சாலைக்களுக்கான திட்டத்தைத் தயாரித்தது, ஆய்வு நடத்தியது, மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்தது, அதன் உத்தரவுப்படி நிலங்கள் கையகப்படுத்துவது வரை செய்வது பீட்பேக் இன்ப்ரா (feedbackinfra) என்கிற தனியார் நிறுவனம். அவர்கள்தான் தற்போது நில அளவீடு செய்யும் பணியில் உள்ளார்கள். அவர்கள் சொல்லும் இடத்தில் அளவீட்டுக் கற்கள் நடப்படுவதற்கு எதிர்ப்பு வராமல் தடுப்பதும்கூட அவர்களது வேலையாம். கற்களை நடும் கூலித்  தொழிலாளர்களை கூட அந்த தனியார் நிறுவனமே அழைத்து வந்துள்ளது.

 

 

police fighting



இந்த சாலை உண்மையில் எதற்காக அமைக்கப்படுகிறது?

மாநிலத்தில் தொழில்துறை பெருகினால், பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என்கிற கணக்கில் இந்த சாலை அமைக்கப்படுகிறது. யாருடைய பொருளாதார வளர்ச்சி எனக் கேட்டால் கார்ப்பரேட்களின் வளர்ச்சி. மக்களுக்கான சாலை என்றால் சேலத்தில் இருந்து சென்னைக்கு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக உள்ள 3 வழிகளை மேம்படுத்தியிருக்கலாம். அதைத் தவிர்த்து புதியதாக ஒரு சாலையை  விளை நிலங்கள் மீது அமைப்பதே கார்ப்பரேட்களின் நீண்டகால பொருளாதார மேம்பாட்டு திட்டத்துக்காகத்தான்.

இந்த சாலை பயணமாகும் பாதையில்தான் சேலம் கஞ்சமலை, திருவண்ணாமலை வேடியப்பன் – கவுத்திமலை, சேத்துபட்டில் ஒரு மலை என 3 மலைகள் உள்ளன. இந்த மலைகளில் இரும்புத்தாதுக்கள், பிளாட்டின தாதுக்கள் உள்ளதாக ஏற்கனவே ஆய்வு நடத்தி கண்டறிந்துள்ளது ஜிண்டால் என்கிற பெரு நிறுவனம். அந்த கனிம வளங்களை வெட்டியெடுத்துச் செல்ல அந்த நிறுவனத்திற்காகத்தான் இந்த சாலை என்பது ஒருபுறம். மற்றொரு புறம் இராணுவத்திற்கான ஆயுதங்கள் தயாரிப்பில் தனியாரை அனுமதித்துள்ளது மத்தியில் ஆளும் பாஜக அரசு.

 

 


அதன்படி, திருச்சி, சேலம், கோவை போன்ற இடங்களில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு ஆயுதத் தொழிற்சாலைகள் அமைக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு. அந்த நிறுவனங்கள் பொருட்களை உற்பத்தி செய்தபின் அவை பாதுகாப்பாக சென்னை துறைமுகத்துக்குச் செல்ல அந்த நிறுவனங்களுக்காகவே இந்த சாலை அகலமாக, பாதுகாப்புத் தன்மையுடன் அமைக்கப்படுகின்றது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். அதோடு, இந்தியா முழுமைக்கும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் சாலைகள் அமைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

முதல்வர் சொல்வது போல சேலத்தில் இருந்து 3 மணி நேரம் 9 நிமிடத்தில் சென்னை போக முடியுமா?

அதற்கு வாய்ப்பேயில்லை என்பதே வாகன ஓட்டிகளின் கருத்து. அந்த சாலை எத்தனை தரமாக அமைத்தாலும் கார், ஜீப், 200சிசி  இருசக்கர வாகனங்கள் மட்டுமே மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பயணம் செய்ய முடியும். பேருந்து, லாரி உட்பட கனரக வாகனங்கள் தற்போது அந்த வேகத்தில் செல்லவே முடியாது என்கிறார்கள். 80 முதல் 100 கி.மி வேகத்தில் சென்றால் மட்டுமே 3.9 மணி நேரத்தில் 277 கி.மீ தூரத்தை கடக்க முடியும். அந்த வேகத்தில் செல்வதாக இருந்தால் கனரக வாகனங்கள் காலியாகத்தான் செல்ல வேண்டும், சாலையில் சுங்கச்சாவடிகள் இருக்கக்கூடாது. ஆனால், புதியதாக அமைக்கப்படும் இந்த சாலையில் 8 சுங்கச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளது என்கிறார்கள். ஒரு சுங்கச்சாவடியில் 5 நிமிடம் என வைத்துக்கொண்டாலும் 40 நிமிடங்கள் சுங்கச்சாவடிக்கே போய்விடும். பிறகு எப்படி 3 மணி நேரத்தில் சென்னைக்கு போக முடியும்?

அதுமட்டுமல்ல இந்த சாலை சேலம் மாநகரத்துக்கு வெளியே 15 கி.மீ தூரத்தில் பயணத்தைத் தொடங்குகிறது. சென்னைக்கு வெளியே வண்டலூரில் முடிகிறது. இந்த இடத்தில் இருந்து சென்னை செல்ல பீக் ஹவர்ஸில் 2 மணி நேரமாகிவிடும். மற்ற நேரங்களில் ஒன்னரை மணி நேரமாகிவிடும். பிறகு எப்படி 3 மணி நேரம் 9 நிமிடத்தில் சேலத்தில் இருந்து சென்னைக்குப்  போகமுடியும்? முதல்வர் எதைவைத்து இந்தக் கணக்கை சொல்கிறார் என்பது புதிராகவே உள்ளது. ஒருவேளை சாலையெல்லாம் காலி செய்துவிட்டு பிரதமர், முதல்வர்கள் வந்து போகும் கான்வாய் கணக்கை குறிப்பிட்டு சொல்கிறார்களோ என்னவோ...

 

 

eps



மாவட்ட ஆட்சியர்கள் சொல்வதைப்போல பாதிக்கப்படுபவர்களுக்கு 3 மடங்கு இழப்பீடு கிடைக்குமா?

ஒரு ஹெக்டேருக்கு ஒன்னரை கோடி கிடைக்கும், ஒரு தென்னை மரத்துக்கு 50 ஆயிரம் (திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் 80 ஆயிரம் என அறிவித்துள்ளார்) கிடைக்கும் என்றெல்லாம் கூறியுள்ளார்கள். ஒரு ஹெக்டேர் என்பது 2 ஏக்கர் 400 சென்ட். சராசரியாக ஒரு ஏக்கருக்கு 50 லட்சம் இழப்பீடு என்று சொல்லலாம். அவர்கள் சொல்வது போல் கிடைக்க வேண்டுமென்றால் 2015 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்படி பொதுமக்களின் கருத்து கேட்க வேண்டும், நிலத்தின் மதிப்பை 3ல் பெருக்கி இழப்பீடு தரவேண்டும் என்கிறது. அந்த சட்டத்தின்படி இந்த நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


திட்ட அறிக்கை சொல்வதைப் பார்த்தால் நிலம் கையகப்படுத்தும் சட்டம் 1894ன்படி நிலத்தை கையகப்படுத்துகிறார்கள். இந்த சட்டத்தின்படி சந்தை விலைக்கு இழப்பீடு தருவார்கள் என்கிறது. சந்தை மதிப்பை கணக்கிட முடியாது என்பதால் அரசு மதிப்பு அல்லது அந்தப் பகுதியில் கடைசியாக நிலம் அல்லது வீடு விற்பனை சென்ட் அல்லது சதுர அடி என்ன விலைக்கு பத்திரபதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்தத் தொகையில் இருந்து ஒன்னரை சதவிதம் அதிகரித்து தருவார்கள் என்கிறார்கள் அதிகாரிகள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு 75 லட்சமும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 லட்சமும், தருமபுரி – கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 லட்சமும், சேலம் மாவட்டத்தில் 25 லட்சம் அதிகபட்சமாக இழப்பீடு தரலாம் என்று குறிப்பிட்டுள்ளது. அந்தத் தொகை விவசாயம் செய்யும் நிலங்களுக்கு மட்டுமே. கரம்பாக உள்ள நிலங்களுக்கு இதைவிட குறைவான தொகை வழங்கப்படும். அப்படி குறிப்பிட்டது மட்டுமல்லாமல் நிலங்களுக்கான இழப்பீடு எவ்வளவு, அதில் உள்ள மரங்களுக்கான இழப்பீடு எவ்வளவு, கிணறுகளுக்கான இழப்பீடு, வீடுகளுக்கான இழப்பீடு என தனித்தனியாக பட்டியல் போட்டு தந்துள்ளனர். அதன்படி 2600 கோடி இதற்காக செலவிடலாம் எனக் கூறியுள்ளது.  

 

 

 

 


இழப்பீட்டு தொகையும் ஒரே தவணையாக கிடைக்காது. 4 தவணையாக தரப்போகிறார்கள். காலந்தாழ்த்தி வழங்கப்படும் தொகைக்கு அரசுவிதிப்படி ஆண்டுக்கு 12 சதவித வட்டி கணக்கிட்டு தருவார்கள். தற்போது மாநிலத்தை ஆளுபவர்கள் எந்த ஒரு ஒப்பந்தத்துக்கும் 30 சதவிதம் வரை கமிஷனாக வாங்குகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு உள்ளது. திமுக, இடதுசாரி கட்சி தலைவர்களும் அந்தக் குற்றச்சாட்டை வைத்துள்ளார்கள். சுமார் 6 ஆயிரம் கோடியில் அமைக்கப்படும் இந்த சாலையில் யார், யாருக்கு எவ்வளவு கமிஷன் போகும் என்பதை கணக்கிட்டபோது மலைப்பாகவுள்ளது. நிலைமை இப்படியிருக்க எப்படி கலெக்டர்கள் சொல்வது போல் இழப்பீடு கிடைக்கும்? 

ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றில் வளர்ச்சி பெறமுடியும் என்பது உண்மைதான். ஆனால், இழப்பதை விட பெரிய வளர்ச்சி அதனால் ஏற்படுமா என்பதுதான் இங்கு மிகப்பெரிய கேள்வி. மக்களை திருப்திப்படுத்தும் அளவுக்கு வளர்ச்சியை இவர்களாலேயே உருவகித்து காட்ட முடியாத நிலையில் சோறு போடும் விவசாய நிலங்களை இப்படி பெருமளவில் அழித்து கூறு போட அரசாங்கம் துடிப்பது பெரிய துரதிருஷ்டம். பதவியில் இருப்பவர்கள் வெளிநாட்டில் சொத்து சேர்க்க, இருக்கும் நிலத்தில் சுயமாக விவசாயம் செய்பவர்களை அடிமை வேலைகளுக்குத் தள்ளும் இந்த ஆளும் அரசுகள், நின்று யோசிக்க வேண்டும். இல்லையேல் குறிப்பிட்ட காலத்துக்கு பின் வறட்சியும், வறுமையும்தான் நாட்டை ஆளும்.

முந்தைய பகுதிகள்

3. விவசாயிகளை கார்ப்பரேட்டுக்கு அடிமையாக்கும் அரசு – 8 வழிச்சாலை பயண தொடர்ச்சி 

2. நக்சல் பூமியில் மீண்டும் ஏற்படுமா புரட்சி? – எட்டுவழிச்சாலை பயண தொடர்ச்சி

1. ஏழரையான எட்டு வழிச்சாலை – மக்கள் மனம் அறிய 8 வழிச்சாலையில் ஓர் பயணம்