Skip to main content

இலங்கை கிளர்ச்சி தரும் அதிர்வுகள்.. - மு.தமிமுன் அன்சாரி

 

ExMLA Tamilmun Ansari statement on Srilanka issue

 

 

இந்தியாவுக்கு கீழே தேன்கூடு போல் அமைந்திருக்கிறது இலங்கை தீவு. நிலவளம், நீர்வளம் என மலேஷியா மற்றும் பர்மாவின் தோற்றத்தை இத்தீவு காட்சிப்படுத்தும். இதன் தலைநகர் கொழும்பு பினாங்கு நகரை ஒத்திருக்கும்.

 

ExMLA Tamilmun Ansari statement on Srilanka issue


கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, காத்தான்குடி போன்ற நகரங்களும், எழில்மிகு கிராமங்களும், நுவரேலியா போன்ற மலைவாஸ்தலங்களும், அழகிய கடற்கரைகளும் இலங்கையின் புகழை பேசும். நீண்ட கலாச்சார மற்றும் வரலாற்று பின்னணி கொண்ட இத்தீவு புவியியல் அடிப்படையில் சிங்கப்பூர், துபாய் போல கடல் போக்குவரத்தில்  முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.

 

ExMLA Tamilmun Ansari statement on Srilanka issue

 

சிங்கப்பூரை ஆட்சி செய்த அதன் தந்தை லீ குவான் யூ அவர்கள் ஒரு முறை பேசும் போது, இலங்கையை முன்னுதாரணம் காட்டி பேசியிருக்கிறார். அந்த அளவுக்கு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்த அந்த அழகிய தீவு, பெரும்பான்மைவாத இனவாதத்தால் சுமார் 30 ஆண்டு காலம் பெரும் பின்னடைவை சந்தித்தது. 

 

தற்போது அங்கு நடந்து வரும் அரசியல், பொருளாதார கிளர்ச்சி உலகின் தலைப்புச் செய்தியாகியிருக்கிறது.


இலங்கையின் வடகிழக்கில் தமிழ் ஈழ போராட்டங்களை முள்ளிவாய்க்கால் களத்தில் முடித்து வைத்த 'தேசிய தலைவர்' என்று சிங்கள மக்களால் போற்றப்பட்ட பிரதமர் மகிந்தா ராஜபக்க்ஷே பதவியிலிருந்து விரட்டப்பட்டிருக்கிறார். மக்களை இனவாதத்தால் பிரித்து; திட்டமிட்டு வெறுப்பை வளர்த்து; அதன் வழியாக அதிகாரத்தை தக்கவைத்தவருக்கு காலம் பதிலடி கொடுத்திருக்கிறது.

 

உள்நாட்டு போருக்கு பின்பு நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வார் என எதிர்பார்த்த சிங்கள மக்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. அவரும் அவரது தம்பி கோத்தபய ராஜ பக்க்ஷேவும் முன்னெடுத்த குடும்ப அரசியலும், தொடர்ந்து தமிழர்கள் மற்றும் முஸ்லிம்ளுக்கு எதிராக நடத்திய சூழ்ச்சிகளும், பெரும்பான்மை சிங்கள மக்களை தவறாக வழிநடத்தியதும் கடும் அதிருப்தியை வளர்த்துக் கொண்டேயிருந்தது.

 

ExMLA Tamilmun Ansari statement on Srilanka issue

 

எதிர்பாராத வகையில் உருவான அமெரிக்க டொலர் பற்றாக்குறையும், பெட்ரோல், டீசல், எரிவாயு தட்டுப்பாடும், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை உயர்வும் மக்களை தன்னெழுச்சியாக போராட்ட களத்திற்கு அழைத்து வந்தது. அரசியல் தலைமைகள் மீது நம்பிக்கையிழந்த 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களும், மாணவர்களும் காலி திடலில் குழுமி போராட்டத்தை வலிமைப்படுத்தியதை யாருமே எதிர்பார்க்கவில்லை.


முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இதில் அரசியல்வாதிகள் தலையிட கூடாது என அறிவுறுத்தியது அவரது தூர நோக்கு அரசியலையும், முதிர்ச்சியையும் காட்டியது. அரசியல்வாதிகள் தலையீடு இல்லாமல் சிங்கள மக்களின் வழி நடத்தலோடும், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவோடும் நடைபெற்ற இப்போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது.


ஜல்லிக்கட்டு உரிமையை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்ட நிகழ்வுகளில் காணப்பட்ட 'பொது ஒற்றுமையை' அங்கு காண முடிந்தது. இனவாதம் தூக்கியெறியப்பட்டு நாங்கள் எல்லோரும் சகோதரர்கள் என்றும், எங்களுக்கு வேலை வாய்ப்பு, முன்னேற்றம், ஒற்றுமை, அமைதி ஆகியவைதான் தேவை என்றும் மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள்.


அங்கு திரண்டிருந்த மாணவர்களும், இளைஞர்களும் இதுவரை இலங்கை கண்டிராத இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்பியிருப்பதாக சர்வதேச ஊடகவியலர்கள்  வியக்கிறார்கள். ஆயுதமின்றி, வன்முறைக்கு இடங்கொடுக்காமல் போராடியவர்கள் மீது, ராஜேபக்க்ஷ குடும்பத்தினர் சமூக விரோதிகளை அழைத்து வந்து தாக்குதல் தொடுத்தது தான் போராட்டக்களத்தை திருப்புமுனைக்கு நகர்த்தி விட்டது எனலாம்.

 

ExMLA Tamilmun Ansari statement on Srilanka issue


போராட்டத்தில் ஒரு மாதமாக உறுதியாக நின்ற உணர்வாளர்களை கண்டு அதிரடிப்படையினரே பின் வாங்கியிருந்த நிலையில், சமூக விரோதிகள் சிதறுண்டு ஓடியதில் ஆச்சர்யமில்லை. அதனால்தான் ராணுவம் கூட சேவைப் பணியில் மட்டுமே ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டு விட்டது. போராட்ட களம் விரிவடைந்து ஆங்காங்கே பொதுமக்களும் இணைய களம் சூடாகியிருக்கிறது.


மஹிந்த ராஜபக்க்ஷே வீடு எரிக்கப் பட்டிருக்கிறது. அமைச்சர்கள், ஆளும் கட்சி MP க்களின் வீடுகளும் பொதுமக்களால் தாக்கப்படுகிறது. ஒரு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தற்கொலை செய்து கொண்டாரா? கொல்லப்பட்டாரா? என்று விவாதம் நடக்கிறது.

 

ExMLA Tamilmun Ansari statement on Srilanka issue

 

முள்ளிவாய்க்காலில் மக்கள் சிந்திய ரத்தத்தின் சாபம் இது என்றும், கொரோனா காலத்தில் எங்கள் ஜனாஸாக்களை (இறந்தவர் உடல்) எரித்தப் போது வெடித்த பிரார்த்தனையின் வெளிப்பாடு இது என்றும், சர்ச் மீது தாக்குதல் நடத்திய மர்மத்திற்கு துணை போன பாவத்தின் கூலி இது என்றும், உள்நாட்டுப் போருக்கு பின்பு சிங்கள மக்களை தவறாக வழிநடத்தியதன் கோபம் இது என்றும் ஒவ்வொரு தரப்பும் அவரவர் பார்வையில் கதைக்கிறார்கள்.


வரலாறு அரசியல் திசைளை மாற்றுகிறது போலும்!


இக் கிளர்ச்சி சமத்துவமிக்க இலங்கையை உருவாக்கி; வளர்ச்சிப் பாதையில் நாட்டை வழிநடத்திட உருவாகியிருக்கும் புதிய வாய்ப்பு என்று சமூக செயல்பாட்டாளர்கள் கருதுகிறார்கள்.


நாக்பூரின் சங்கபரிவார ஆதரவு பெற்றவர்கள் என கூறப்படும் பெளத்த இனவாத அமைப்பான பொது பல சேனாவின் குரலை கேட்க இப்போது ஆளில்லை. இது ஒரு நல்ல செய்தியாகும். இந்திய வெளியுறவுத்துறையால் முடிந்த வரை பாதுகாக்கப்பட்ட ராஜ பக்ஷே சகோதர்களுக்கு ஏற்பட்ட கதி, இந்திய எதிர்ப்பாக மாறிவிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டிருக்கிறது.


இப்போது சீனாவின் பார்வை கொழும்புவை சுற்றி வட்டமிடுவதும் தெரிகிறது. ஜனதா விமுக்கி பெரமுனா போன்ற இடதுசாரி முற்போக்கு கட்சிகள்,தமிழ் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் யாவும் நிதானமாக செயல்பட வேண்டிய தருணம் இது.

 

ExMLA Tamilmun Ansari statement on Srilanka issue

 

ரணில் விக்ரம சிங்கே, சஜித் பிரேமதாசா போன்றோருக்கு பொறுப்பு அதிகரித்திருக்கிறது. எல்லோரும்  இணைந்து இலங்கையின் வளமிக்க எதிர்காலத்தை; இணக்கமும், சமத்துவமும் மிக்கதாக உருவாக்கிட விட வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.


சமூகவியலில் சிங்கப்பூரை முன்னுதாரணமாக கொண்டு புதிய பயணத்தை இலங்கை முன்னெடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். பொருளாதாரத்தில் தெற்காசியாவின் மலேஷியாவாக உருவாக வேண்டும் என்ற கனவை நோக்கி அது நகர வேண்டும்.


இது மட்டுமல்ல. இலங்கையின் நடைபெறும் மக்கள் புரட்சி சொல்லும் மற்றொரு முக்கிய செய்தியும் இருக்கிறது. 


போலித்தனமாக பரப்புரைகள், பெரும்பான்மைவாதம் மூலம் குறுகிய அரசியலை கட்டமைக்க நினைப்பது, பொருளாதார தோல்விகளை மறைக்க வெறுப்பு அரசியலை தூண்டுவது என இவை போன்றவைகள் விதைக்கப்பட்டால், அங்கு நீதிக்கான புரட்சியைதான் அறுவடை செய்ய வேண்டி வரும் என்பதாகும்.


இது  இமயத்திலும்  எதிரொலிக்கலாம்.

 

 

(சர்வதேச அரசியல் குறித்து அவ்வப்போது கட்டுரை எழுதும் இவர், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்)

 

 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !