Skip to main content

"ரவுடியை பிடிச்சிருக்கீங்க பார்த்து இருங்கன்னு சொல்றாங்க... ஆனா நம்ம வேலையே அதுதானே"!! - தில் போலீஸின் தூள் பேட்டி!

Published on 22/09/2021 | Edited on 22/09/2021

 

hjk


சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் ஒரு காட்சி தொடர்ந்து காட்டப்பட்டு வந்தது. காவலர் ஒருவர் வேகமாக ஓடிவந்து சாலை வளைவில் விழுந்துவிடுவார், இருந்தும் நொடிப்பொழுதில் சுதாரித்துக்கொண்டு ஒருவரைத் துரத்திக்கொண்டு ஓடுவார். திருவண்ணாமலையில் திருடப்பட்ட காரை பட்டுக்கோட்டையில் துரத்திப்பிடித்த அந்தக் காவலர் பெயர்தான் பிரசாத். தமிழ்நாடே கொண்டாடிய அவரின் துணிச்சலைப் பாராட்டாதவர்கள் யாரும் இல்லை. அவரிடம் இதுதொடர்பாக நாம் பேசினோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,


நீங்கள் செய்த செயலுக்காக தமிழ்நாடே உங்களைக் கொண்டாடுகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? 

 

ரொம்ப பெருமையாக இருக்கிறது. காவல்துறையில் சேர்ந்ததற்கான நோக்கம் நிறைவேறியிருக்கிறது. எல்லாரும் பாராட்டுவதைக் கேட்கும்போது பெருமையா இருக்கு. டிஜிபி சார் மூன்றுமுறை ஃபோன் செய்து பாராட்டினார். சந்தோஷமாக இருக்கு. 

 

எப்படி அந்த திருடப்பட்ட காரை அடையாளம் கண்டுபிடித்தீர்கள், குறுகிய காலத்துக்குள் வண்டி எண் உள்ளிட்டவற்றை நினைவில் வைத்தது எப்படி? அன்றைக்கு என்ன நடந்தது? 

 

காவல் கண்காணிப்பாளர் மேடம் அவர்கள் இந்த மாதிரி திருடு போன சம்பவம் பற்றி கூறுகிறார்கள், TN 07 CL 8454  எண் கொண்ட கார் திருவண்ணாமலையில் இருந்து திருடப்பட்டுள்ளது. நமது மாவட்டத்திற்குள் வந்தால் அதை தடுத்து நிறுத்திப் பிடித்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். பிறகு டிஎஸ்பி சாரும் அனைத்து சப் ஸ்டேஷன்களுக்கும் இதைப் பற்றி தெரிவித்தார். நாங்களும் அலுவலகத்தில் இதைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தோம். அப்போது என்னை ஒரு வேலையாக வெளியே அனுப்பினார்கள். அந்த நேரத்தில் இந்தக் கார் என்னுடைய கண்ணில் பட்டது. வண்டி எண்ணைப் பார்த்ததும் இது திருடப்பட்ட கார் என்பதை உறுதி செய்துகொண்டேன். நான் அந்தக் காரை நிறுத்த முயன்றபோது அவர்கள் மீறி சென்றார்கள். உடனே காரை வேறு பக்கம் திருப்பி ஓட்ட முற்பட்டார்கள். உடனே நானும் அவர்களைத் துரத்திக்கொண்டு ஓடினேன். அப்போதே டிஎஸ்பி சாருக்கு தகவல் தெரிவித்துக்கொண்டே செல்லும்போது சாலை வளைவில் விழுந்துவிடுகிறேன். பிறகு எழுந்து ஓடி காரை பிடித்துவிட்டேன்.

 

இந்த சம்பவத்துக்குப் பிறகு உங்களை டிஜிபி பாராட்டியுள்ளார், எஸ்பி, ஐஜி என அனைவரும் பாராட்டியுள்ளனர். இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

விவரிக்க வார்த்தைகளே இல்லை சார். இந்த சம்பவம் கேள்விப்பட்ட உடனே டிஜிபி சார் என்னை ஃபோனில் கூப்பிட்டு பாராட்டி, 25 ஆயிரம் பரிசு வழங்கியிருக்கிறேன் என்றார். அதைப் போல எங்க மேடம் (தஞ்சை காவல் கண்காணிப்பாளர்) கூப்பிட்டு பாராட்டி பரிசு வழங்கினார்கள். எங்கள் டிஎஸ்பி சாரும் பாராட்டினார். என்னுடைய நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் பாராட்டினார்கள். 

 

இந்த சம்பவத்தைப் பத்தி உங்கள் ஊரில் என்ன சொல்கிறார்கள்?

 

நிறைய பேரு ஃபோன் போட்டு பேசுவாங்க. நேர்லையும் சொல்வாங்க, ரவுடிய பிடிச்சிருக்கீங்க, பார்த்து இருங்கன்னு. அம்மா கூட, ஊருக்குள்ள பேசிக்கிறாங்க, பார்த்து இரு சொன்னாங்க. நம்ம வேலையே ரவுடிகளைப் பிடிப்பதுதானே, அதற்காகத்தானே பணியாற்றுகிறோம். 

 

வீரதீர செயலுக்கான விருதுக்கு உங்கள் பெயரை காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்துள்ளார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

 

ரொம்ப பெருமையாக இருக்கிறது. அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. மிக உயரிய வருது. கிடைத்தால் ரொம்ப பெருமையாக இருக்கும். 

 

 

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.