/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_160.jpg)
அறிஞர் அண்ணாவுக்கும், கலைஞருக்கும் அரசியலில் பக்கபலமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். அமரராகி 33 வருடங்கள் ஆனபிறகும், தமிழக மக்களின் மனதில் குடியிருந்து வருகிறார். அவர் உருவாக்கிய கட்சியான அதிமுக, போஸ்டரிலோ, பேனரிலோ, நாளிதழ் விளம்பரத்திலோ, சில நேரங்களில் ‘ஸ்டாம்ப் சைஸ்’ இடம்கூட அவருக்குத் தருவதில்லை. அதே நேரத்தில், எம்.ஜி.ஆர். என்ற அந்த மூன்றெழுத்து மந்திரத்தின் மகிமை அறிந்தவர்கள், அவரைப் பொதுவாக்கி, தனதாக்கிக்கொள்வது தாராளமாக நடந்துவருகிறது. அந்த வகையில், கே.பாக்யராஜ், விஜயகாந்த் போன்ற திரை நாயகர்கள் வரிசையில், லேட்டஸ்ட் வரவு கமல்ஹாசன்.
தனது ஆதரவாளரான கே.பாக்யராஜை, திரையுலக வாரிசு என்றே அறிவித்தார் எம்.ஜி.ஆர். இந்த அங்கீகாரம் போதாதா? பின்னாளில் ‘எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில், புதிதாகக் கட்சியே தொடங்கினார் பாக்யராஜ்.
எம்.ஜி.ஆர். அளவுக்கு இல்லையென்றாலும், ‘வள்ளல் இமேஜ்’ விஜயகாந்துக்கும் இருந்தது. ‘இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே’ என்பதை கொள்கை முழக்கமாக்கி, 2005-ல் ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ என்ற பெயரில். புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கினார். அவருக்கும் எம்.ஜி.ஆர். லேபில் தேவைப்பட, ‘கருப்பு எம்.ஜி.ஆர்.’ என்று அழைக்கலானார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-3_5.jpg)
பாக்யராஜ், விஜயகாந்த் போன்ற நடிகர்களுக்கெல்லாம் சீனியராக, இந்தியத் திரையுலகில் தனிமுத்திரை பதித்து வருபவர் கமல்ஹாசன். ஆளவந்தானாகட்டும்.. அவ்வை சண்முகியாகட்டும்.. தசாவாதாரம் ஆகட்டும்.. கேரக்டருக்காக, தன்னை வருத்திக்கொள்வதோடு, ரொம்பவே மெனக்கெடுபவர் கமல். தன்னை ‘வித்தியாசமான’ தோற்றத்தில் ரசிகர்கள் பார்க்கவேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி வருபவர். அவரும், 2018-ல் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கினார்.
கட்சி ஆரம்பித்த புதிதில், கமலுக்கு ஏனோ ‘எம்.ஜி.ஆர். பிராண்ட்’ தேவைப்பட்டதில்லை. அதற்குக் காரணம்கூட உண்டு. கடவுள் மீதான பக்தியை எம்.ஜி.ஆர். என்றும் மறைத்ததில்லை. கர்நாடகா மாநிலம் – கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்குப் பலமுறை சென்றிருக்கிறார். ‘மூகாம்பிகை வடிவில் என் தாயைப் பார்க்கிறேன்’ என்று சொன்ன எம்.ஜி.ஆர்., அக்கோவிலுக்கு முக்கால் கிலோ எடையுள்ள தங்கவாள் அளித்துள்ளார். கடவுளுக்கும் கமல்ஹாசனுக்கும் வெகுதூரமாயிற்றே! பகிரங்கமாக, தன்னை ‘பகுத்தறிவுவாதி’ எனச் சொல்லிவரும் கமல்ஹாசன், கடவுள் விஷயத்தில், எம்.ஜி.ஆருடன் முரண்படுகிறார். அதனாலேயே, பொதுவாழ்க்கையில் எம்.ஜி.ஆரை தனது வாத்தியாராக, கமல் காட்டிக்கொள்வதில்லை.
தேர்தலை எதிர்கொள்ளும் அரசியல் கட்சியின் தலைவராகி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிரச்சாரம் செய்துவரும் அனுபவத்தாலோ என்னவோ, கமல்ஹாசனுக்கும் எம்.ஜி.ஆர். முகமூடி அவசரமாகத் தேவைப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_39.jpg)
தனது ட்விட்டர் பக்கத்தில், ‘புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது, திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு, அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம். எம்.ஜி.ஆர். முகத்தைக்கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும்.’ என, எம்.ஜி.ஆர். தனக்கு முத்தமிடும் வீடியோவை வெளியிட்டு, இன்றைய அதிமுக தலைவர்களுக்கு எதிராக அறைகூவலே விடுத்திருக்கிறார்.
இன்றைய அதிமுக தலைவர்களை ஒரு பிடிபிடிப்பதற்கும், எம்.ஜி.ஆரின் சினிமா பாடலையே பயன்படுத்தியிருக்கிறார் கமல்ஹாசன் -
சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்;
ஒரு மானமில்லை; அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால் பிடிப்பார்
எதிர்காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01 (1)_0.png)
இன்று, எம்.ஜி.ஆர். நினைவு தினம் என்பதால், வாட்ஸ்-ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற வலைத்தளங்களில், எம்.ஜி.ஆர். ரசிகர்களும், கமல்ஹாசன் ரசிகர்களும், போட்டி போட்டுக்கொண்டு, அவருக்குப் புகழஞ்சலி செலுத்துகின்றனர்.
மிகவும் நேர்மையான கமல் ரசிகர்களோ ‘அரசியலில் தனித்தன்மையுடன் பயணிக்கலாமே!’ என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)