Skip to main content

பிக்பாஸை இப்படியும் நடத்தலாம் !!!

Published on 03/08/2017 | Edited on 03/08/2017



புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தார்... கமல்ஹாசனோடு சேர்ந்து வாழ்ந்தார்... பிரிந்த போதும் கடினமான வார்த்தைகள் இல்லை... பிரபலமாக இருப்பதால் கருத்துகளை சொல்லிக்கொண்டு மட்டும் இருக்காமல், சில செயல்களிலும் ஈடுபடுகிறார்.  மோடியை சந்தித்தார், ஜெயலலிதா மரணத்திற்கு விசாரணை வேண்டும் என்று கோரினார். 'ஆர்ஜே'வாகவும் ஒரு முகம்... செயல்கள் மாறுகின்றனவே தவிர,   எந்த புள்ளியிலுமே இவரது வாழ்க்கை நிற்பதில்லை. அதையே பிறருக்கும் சொல்ல, 'லைஃப் அகெயின்' (Life Again)  என்ற   சேவை நிறுவனத்தை நடத்தி வருகிறார்... கௌதமியை சந்தித்தோம்...  

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மீண்டு வந்து கமல்ஹாசனுடன் சேர்ந்து திரையிலும் தோன்றினீர்கள். உங்கள் வாழ்வை புற்றுநோய் பாதிப்புக்கு முன், பின் என்று பிரிக்கலாமா?

பிரிக்கலாம்...ஆனால், என் வாழ்வு அந்த பாதிப்பையும் தாண்டி, நேற்று இன்று நாளை என்று பிரிக்குமளவு மாறிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் உள்ளே வெவ்வேறு விஷயங்கள் தோன்றுகின்றன. அதில் எனக்கு மிகவும் பிடித்தமான நெருக்கமான விஷயம் மெல்ல வளர்ந்து, பின் நான் என்பது அந்த விஷயம் தான் என்னும் அளவுக்கு மாறுகிறது. முன்பு எனக்குள் சின்னதா இருந்த ஆர்வம் இப்பொழுது வளர்ச்சியடைந்த நிலையைத் தான் நீங்கள் பார்க்கிறீர்கள். ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு வகையில் நான் வளர்கிறேன்.



புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 'லைஃப் அகெயின்' (Life Again)  என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறீர்கள். இதன் மூலம் என்னென்ன செயல்பாடுகள் நடக்கின்றன?

'மீண்டும் வாழ்க்கை'...வாழ்க்கை இன்னும் இருக்கு என்பதுதான் இதன் அடிப்படை. புற்றுநோய் மாதிரியான ஒரு கொடுமையான, உயிர் போகக்கூடிய, வலி மிகுந்த நோயைத் தாண்டி நான் வந்தப்போ, அதுக்கு மேலயும் வாழ்க்கை இருக்கு என்பதை நம்பவே எனக்கு கடினமா இருந்தது. அந்த சமயத்துல, நாளை என்ற ஒன்று இருக்கு என்றே நான் நினைக்கல. ஆறு மாசம் கழிச்சு இந்த ஊருக்கு சுற்றுலா போகணும்னு திட்டமிடுபவர்களையெல்லாம் பார்த்து, 'என்னடா இது, இவ்வளவு சில்லியா இருக்காங்களே, நாளைக்கு என்ன நடக்கப் போகுதுன்னே தெரியாது, இவுங்க ஆறு மாசத்துக்கு பிளான் பண்றாங்களே'னு  நான் நினைப்பேன்.  அப்போ என் மனநிலை அப்படித்தான் இருந்தது. ஆனால், அதையெல்லாம் தாண்டி, 'நான் இன்னும் இருக்கேன், இருப்பேன், இந்த உலகம் இருக்கு' என்று ஒரு நம்பிக்கை மெல்ல வந்தது.  அப்பொழுது,  மிச்சமிருக்கும் அந்த வாழ்க்கையை எப்படி வாழப்போறேன் என்று மனதில்  ஒரு கேள்வி. அந்த பயணத்துல, என்னைப் போல நிறைய பேர் இருக்காங்கன்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன். அவுங்ககிட்ட பேசணும், என் அனுபவங்களை பகிர்ந்துக்கணும். அதன் மூலமா, அவுங்க ஆரோக்கியத்த பார்த்துக்கிட்டா, பல உயிர்களைக் காப்பாத்தலாம். பேச்சுக்கு பெரிய சக்தி இருக்கு. சரியான வார்த்தையை, சரியான நேரத்தில், இடத்தில் பேசுனா அது பெரிய 'பாசிட்டிவ்' விளைவை ஏற்படுத்தும். அதுக்காகத்தான்  'லைஃப் அகெயின்' ஃபவுன்டேஷன் ஆரம்பிச்சோம். உடல்நலம், ஆரோக்கியம் பற்றிய பல நிகழ்ச்சிகளை கடந்த ஆறேழு மாசமா நடத்திக்கிட்டிருக்கோம்.

புற்றுநோய்க்கு உணவுப்பழக்கம் ஒரு முக்கிய காரணமாய் இருப்பதாக சொல்லப்படுகிறதே?

வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால், மனிதன் கண்டுபிடித்ததிலேயே மிகவும் மோசமான, கன்றாவியான  விஷயம் 'ஃபாஸ்ட் ஃபுட்' தான். அதுல பயன்படுத்துற பொருட்கள் எல்லாம் விஷம். உதாரணத்துக்கு, ஐஸ் க்ரீம் எடுத்துக்கலாம். குழந்தைகளுக்கு ஆசையா வாங்கிக்கொடுக்குறோம். பால், க்ரீம், சக்கரை, ஏதாவது ஒரு பழச்சுவை ஆகியவை தான் பொதுவாக பயன்படுத்தப்படவேண்டியவை. ஆனா இன்னைக்கி எந்த பிராண்ட் எடுத்துக்கிட்டாலும், இதைத் தவிர கலர்ஸ், சிலிக்கான் பொருட்கள் அது இதுன்னு ஏதேதோ சேக்குறாங்க. நாம சாப்பிட வாங்கும் எந்தவொரு உணவுப் பொருளையும் செய்யப் பயன்படுத்தும் பொருள், நமக்குத் தெரியாததாக, கேள்விப்படாததாக இருந்தால், அதை நாம் வாங்க வேண்டியதில்லை. சாப்பிடும்போது நம்ம நாக்குல நிக்கிற பத்து நொடி சுவைக்காக, கண்டதையும் வாங்கி சாப்பிடுகிறோம். உள்ளே போய் அது என்னென்ன வேலை செய்கிறது என்பதைப் பற்றி நமக்கெல்லாம் எந்தக் கவலையுமில்லை. இதெல்லாம் என்னைக்காவது ஒருநாள் சாப்பிட்டா பரவாயில்ல, அடிக்கடி சாப்பிடுவது, வாங்கிக்கொடுப்பது, நம்ம உறவுகளை , நம்ம குழந்தைகளை நாமே கழுத்தை நெறிப்பது போலாகும்.




மக்களே தவிர்க்க நினைத்தாலும், இந்த உணவுகள் மிகப்பெரிய வியாபாரமாகி அவர்களைத் துரத்துகிறதே?

உண்மைதான்... வண்ணமயமான, வசீகரிக்கும் விளம்பரங்களெல்லாம் போட்டு நம்மை இழுப்பார்கள். இவையெல்லாம் கனவுகள் போலத்தான். சுவை சீக்கிரம் கலைந்துவிடும். ஆனால், கனவுகளை வாங்கும்போதும், கவனமாக, ஆரோக்கியமான கனவுகளை வாங்க வேண்டும். பீட்சா, பர்கர்லாம் கூட விடுங்க, நாம தினமும் பயன்படுத்தும் உப்பும் சக்கரையும் எப்படியிருக்கு? 'பள பள'னு மேக்-அப் போட்டுக்கிட்டு வந்து நிக்குது. அடிப்படையா உப்பும் சக்கரையும் அப்படியா இருக்கும்? இப்பிடி அதை மாத்தணும்னா என்னென்ன கலந்துருப்பாங்க, என்னென்ன செஞ்சுருப்பாங்க? நாம பாரம்பரியத்தை விட்டு எப்போ விலகுறோமோ, அப்பவே நமக்கு ஆபத்து ஆரம்பிக்குது.

புற்று நோய்க்கான சிகிச்சை இந்தியாவில் எந்த நிலையில் இருக்கிறது?

சிகிச்சைக்கான செலவு என்று எடுத்துக்கொண்டால், பிற நாடுகளை விட இந்தியாவில் குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால், அது அனைவரையும் சென்றடைந்திருக்கிறதா என்றால், இல்லை. அந்த செலவும் செய்ய முடியாதவர்களை, புற்றுநோய் ஒரு தொற்று வியாதி என்று நம்பி தனிமைப்படுத்தப்படுபவர்களை எல்லாம் இன்னும் சிகிச்சை சென்று சேரவில்லை. நாம் செய்யவேண்டிய வேலை நிறைய இருக்கிறது, செல்ல வேண்டிய தூரமும் நிறைய இருக்கிறது.

உங்க சுருள் சுருளான முடி அப்போ பிரபலம். அதை மிஸ் பண்றிங்களா?

(சிரிக்கிறார்) வாழ்க்கையில இவ்வளவையும் கடந்து இருக்கிறோம். ஏதாவது ஒன்று அடிவாங்க வேணாமா? எப்போதாவது தோன்றும். அப்போ, பழைய புகைப்படங்களை எடுத்து பாத்துக்க வேண்டியதுதான். ஆனால், நான் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலயும் கூட, புற அழகைப் பத்தி அவ்வளவாக கவனம் கொண்டதில்லை. ஷூட்டிங் அப்போல்லாம், உதவி இயக்குனர்கள், 'டச்-அப் பண்ணிக்கங்க, கண்ணாடி பாத்துக்கங்க'னு துரத்துவாங்க. நான், 'அதெல்லாம் நல்லாத்தான் இருக்கும், ஷாட்க்கு போலாம் வாங்க'னு சொல்லுவேன்.   



கமலைப் பிரிந்தாலும் எப்பொழுதும் அவரின் ரசிகை நான் என்று கூறினீர்கள்... அவர் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கிறீர்களா?

இல்லைங்க...  'பிக்பாஸ்' மட்டுமில்லை. எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் பார்க்க நேரம் கிடைக்கவில்லை.

'ரியாலிட்டி ஷோ'க்கள் இன்று மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்டும், விவாதிக்கப்பட்டு வருகின்றன. இன்னொரு பக்கம் அவை,   மக்களுக்கு தேவையில்லாதவை, முழுக்க வியாபாரம் சார்ந்தவை  என்றும்  கூறப்படுகின்றது.  உங்கள் பார்வை?

'ரியாலிட்டி ஷோ'க்கள் ஒரு மிகப்பெரிய வியாபாரம் என்பதை மறுக்க முடியாது. அதனால் தான் ஒரு நிகழ்ச்சியே கூட, இத்தனை நாடுகளிலும், மொழிகளிலும் நடத்தப்படுகிறது. அது ஒரு புறம் இருக்கட்டும்.   'ரியாலிட்டி ஷோ ' என்பதைத் தாண்டி மீடியாவுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வீச்சு இருக்கிறது. அந்த மீடியாவில் இது ஒரு கான்செப்ட் தான். அந்த வீச்சை வேறு விதமாக பயன்படுத்தலாம். இதே 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இருக்கும் அந்த பத்து பேரோ, இருபது பேரோ தெரியவில்லை...அவர்களை ஒரு வளமிழந்த, வறட்சியான கிராமத்திற்கு அழைத்துச்சென்று அங்க, ஒவ்வொரு வாரமும் ஒரு 'டாஸ்க்' கொடுக்கலாமே... அதுவும் அவர்களுக்கு மிக புதியதான ஒரு சூழ்நிலை தான்... அங்க அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்று பார்த்து வெற்றியாளரை தேர்வு செய்யலாம். அப்படி செய்தால், அந்த நூறு நாட்கள் கழித்து அந்த கிராமமே மாறிடும்ல? 
ஊரை சுத்தப்படுத்துறதோ, விவசாயத்துல இறங்கி  உதவுறதோ, குழந்தைகளுக்கு மாலை நேரம் வகுப்புகள் எடுக்கவோ செய்து வந்தால் அதில் ரியாலிட்டி ஷோவுக்கான சுவாரசியமும் இருக்கும், நல்லதும் நடக்கும். இப்படி நல்ல விதமா நிகழ்ச்சிகள் நடந்தால், எதுவுமே தப்பில்ல.
 



முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் மரணத்தைப் பற்றிய மர்மங்கள் விசாரிக்கப்பட வேண்டுமென்று திரைத்துறையிலிருந்து முதலில் குரல் கொடுத்தவர் நீங்கள்... இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லையே?

ஆம்...நான் குரல் கொடுத்தேன்... அதை மறக்கவில்லை. அது கண்டிப்பாக வெளிக்கொண்டு வரப்பட வேண்டிய விஷயம் தான். உண்மைகள் வெளிவருவது மிக முக்கியம்.

ஜெயலலிதா இல்லாத அதிமுக  ஆட்சி எப்படி இருக்கிறது?

அதைத்தான் எல்லோரும் பார்க்கிறோமே ??? 
   
  
ஃபெலிக்ஸ் இன்ப ஒளி 
வசந்த்  

சார்ந்த செய்திகள்