Advertisment

அரசு மருத்துவரால் உயிருக்குப் போராடும் இளம் பெண்! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?

Erode district thalavadi government doctor made wrong operation to woman

Advertisment

ஈரோடு மாவட்டம், தாளவாடியில் வசிக்கும் ஓட்டுநர் பிரதீப்குமாரின் மனைவி அனுபல்லவி. வயது 25. இவர்களுக்கு 5, 3 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாட்டு செய்யப்போய் தனக்கு நேர்ந்த அவலத்தை அனுபல்லவியே நம்மிடம் கூறுகிறார்.

“என்னுடைய வீட்டுக்காரர் டிரைவர். குடும்ப வறுமை காரணமா பெண் குழந்தைகளே போதுமென்று முடிவுசெய்து குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவுசெய்தோம். தாளவாடி அரசு மருத்துவமனையில் 2022, பிப்ரவரி 22-ஆம் தேதி அட்மிட்டானேன். 28 ஆம் தேதி 8 பேருக்கு ஆபரேஷன் செய்தாங்க. என்னைத் தவிர 7 பெண்களும் டிஸ்சார்ஜாகி வீட்டுக்குப் போய்ட்டாங்க.

எனக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு அபாய கட்டத்துக்குச் சென்றேன். அவசர அவசரமா என்னை ஆம்புலன்ஸ்ல ஏத்தி கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுபோனாங்க. அங்க 25 நாட்கள் ஐ.சி.யூ.வில் இருந்தேன். பிறகுதான் சுயநினைவே வந்தது.

Advertisment

தாளவாடி அரசு மருத்துவமனையில் எனக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த டாக்டர் என்ன செய்தாரோ தெரியலை. இதயத்துக்குச் செல்லும் அயோட்டா என்ற ரத்தப்போக்கு லேயரை (நரம்பை) துண்டித்து விட்டதாகவும் அதனைச் சரி செய்ய முடியாது. உயிருக்கு ஆபத்தானது என்றும் கோயம்புத்தூர் டாக்டர்கள் கூறினார்கள்.

இப்ப என்னால எந்த வேலையும் செய்யமுடியாது. இரண்டு குழந்தைகள் இருக்குது. என்னுடைய தாயார் வீட்டில்தான் இருக்கிறேன். அடிக்கடி வாந்தி, மயக்கம் இப்படி ஏதேதோ பல்வேறு தொந்தரவுகள், உபாதைகள் இருந்துக்கிட்டே இருக்குது. தாளவாடி டாக்டர்கள் தவறான ஆபரேஷன் செய்ததன் விளைவு நான் என் உயிரை காப்பாற்றிக் கொள்ள போராடிக்கொண்டிருக்கிறேன்.

மீண்டும் ஒரு ஆபரேஷன் செய்யவேண்டுமாம், அதற்கு தனியார் மருத்துவமனைகளில் பல லட்சங்கள் செலவாகும் என்கிறார்கள். கூலி வேலை செய்து பிழைக்கும் நாங்கள் பணத்திற்கு எங்கே செல்வோம்? என்னை பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கான அறுவை சிகிச்சையை அரசாங்கம் செய்யவேண்டும். தவறான அறுவை சிகிச்சை செய்த அந்த மருத்துவரை தண்டிக்க வேண்டும். அரசு மருத்துவமனையை நம்பிச் சென்று குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்தேன். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் கவனத்திற்கு நக்கீரன் மூலமாக கொண்டுசென்று எனக்கு உரிய நீதியும், நிவாரணமும் பெற்றுத் தாருங்கள்” என்றார் பாதிக்கப்பட்ட அனுபல்லவி.

ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுங்கராவிடமும் மனு கொடுத்தார். மருத்துவர் குழுவை அழைத்து உடனடியாக என்ன செய்யவேண்டும் என பாருங்கள் என்றார். அந்த மருத்துவர்கள் குழு அறிக்கை தருவதாக கூறிவிட்டுச் சென்றுவிட்டது.

அரசு மருத்துவர்களால் பாதிப்புக்குள்ளான அனுபல்லவிக்கு தாமதமின்றி நீதியும், நிவாரணமும் கிடைக்க தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் உதவுவாரா?

Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe