Advertisment

எப்ஸ்டீன் ஃபைல்ஸ் விவகாரம் : “ஏன் தேசிய அரசியல் அதிரவில்லை?” - ஒரு அலசல்!

epstein

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்ததாக பா.ஜ.க. அரசையும், அதற்குத் துணைபோகும் அதிமுகவையும் கண்டித்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சிவகாசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மைக் பிடித்த சிவகாசி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோகன், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதுபோல், மோடிக்கு தமிழ்நாட்டில் பூஜ்யம்தான் கிடைக்கும். பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பெரிய ஏமாற்றம். சிறு, குறு தொழில்களுக்கு முழுமையான பாதிப்பு. ஏன் இந்தப் பிரச்சனைன்னு ஆராய்ந்தால்,மோடியுடைய சின்ன ஒரு... எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்..... அமெரிக்காவுல ஒரு தீவுல வந்து.. பலவிதமான தப்பான காரியங்களுக்கு வந்து.. அரசியல்வாதிகள் எல்லாரையும் கூப்பிட்டு போயி.. சின்ன புள்ளைகள வச்சி.. இதத்தான் ராகுல் காந்தி.. மாறி மாறி பேசுறதுக்கு எடுக்க வந்தா.. அப்படி ஒண்ணு நடக்காத மாதிரி பேசுறாங்க.. மோடி பார்த்தீங்கன்னா.. ” என்று  பேசினார். 

Advertisment

இந்தப் பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, “பிரதமர் மோடியை அமெரிக்க தீவு சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி எப்படி பேசலாம்?” எனக் கேள்வியெழுப்பி பா.ஜ.க.வினர் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அமெரிக்காவிலிருந்து இந்திய அரசியல் வரை விரிந்த இந்த சர்ச்சை பெரிய அளவில் பூகம்பமாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மோடி எதிர்ப்பில் தீவிரமாக உள்ள திமுக கூட இந்த விவகாரத்தில் மவுனம் காத்து வருவது கவனிக்கத்தக்கது. தேசிய அளவிலும் ‘எப்ஸ்டீன் ஃபைல்ஸ்’ விவகாரம் பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதற்கான காரணங்களை அரசியல் மற்றும் சட்டப் பின்னணியுடன் அலசினோம்.

Advertisment

சமீபத்தில் அமெரிக்காவில் வெளியிடப்பட்ட ‘Epstein Files’ என அழைக்கப்படும் ஆவணங்கள், பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய Jeffrey Epstein தொடர்பான நீதிமன்றப் பதிவுகள் மற்றும் துணை ஆவணங்களாகும். இந்த ஆவணங்களில்  பல பிரபலங்களின் பெயர்கள் இடம் பெற்றதாக சமூக வலைத்தளங்களில் குறுந்தகவல்கள் பரவியதன் பின்னணியில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெயரும் ஒரு குறிப்பில் இருந்ததாகக் கூறி சர்ச்சை எழுந்தது. ஆனால், அந்தக் குறிப்புகள் எந்தவிதமான குற்றச்சாட்டாகவும், நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட ஆதாரமாகவும் இல்லை என்பதே சட்ட ரீதியான நிலை.

congress-mla
காங்கிரஸ் எம்.எல்.ஏ.

இந்த விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி  பேச முயன்றபோது அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி அவை களேபரமானது. அதே சமயம், இந்த விவகாரத்தை தேசிய அரசியல் ஆயுதமாக மாற்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்னெடுக்காததற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. முக்கியமாக, ‘எப்ஸ்டீன் ஃபைல்ஸ்’ல் பரவிய குறிப்புகள் தெளிவான, உறுதிப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளாக இல்லை என்பதும், மோடி பெயர் இடம்பெற்றதற்கும் குற்றச்சாட்டுக்கும் நேரடி தொடர்பை நிரூபிக்கும் ஆவணம் எதுவும் இல்லாததும்தான். இவ்வகை உறுதிப்பாடில்லாத குற்றச்சாட்டுகளை மேடைகளிலும் பிரச்சாரங்களிலும் முன்னிறுத்துவது சட்ட சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்ற எச்சரிக்கையே எதிர்க்கட்சிகளின் மவுனத்துக்கான முதன்மைக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரத்துக்கான இந்திய அரசின் பதிலாக, வெளியுறவுத் துறை தரப்பில், அந்த ஆவணங்களில் காணப்பட்ட குறிப்புகள் பிரதமரின் 2017 இஸ்ரேல் பயணத்துடன் தொடர்புடைய பயணத் தகவல்களைச் சுற்றிய குறிப்புகள் மட்டுமே என்றும், அதற்கு அப்பால் எந்தவிதமான குற்றச்சாட்டு தொடர்பும் இல்லை என்றும் விளக்கப்பட்டது. மேலும், அது குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவரின் தனிப்பட்ட, ஆதாரமற்ற கற்பனைக் குறிப்புகள் என நிராகரிக்கப்பட்டது.  பா.ஜ.க. தரப்பிலும், மோடிக்கும் எப்ஸ்டீனுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று தெளிவாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

modi-1

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் சில பேச்சாளர்கள் மற்றும் தலைவர்கள்,  அரசிடம் வெளிப்படைத்தன்மை கோரி கேள்வி எழுப்பிய அளவிலேயே இந்த விவகாரத்தைத் தொட்டனர். ஆனால், அதை மையமாக வைத்து நாடு முழுவதும் அரசியல் இயக்கமாக மாற்றும் முயற்சி எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. தமிழக அரசியலில் திமுக உள்ளிட்ட பா.ஜ.க. எதிர்ப்பு நிலை கொண்ட கட்சிகளும், இந்த விவகாரத்தை பிரதான பிரச்சாரமாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம், சட்டபூர்வமாக நிலைநாட்ட முடியாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசியல் செய்வது பின்னடைவை ஏற்படுத்தும் என்ற கணக்கில்தான்.  

மொத்தத்தில், ‘எப்ஸ்டீன் ஃபைல்ஸ்’ விவகாரம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டாலும், இந்திய அரசியலில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததற்கு, உறுதியான ஆதாரங்கள் இல்லாததும்,  சட்ட சிக்கல்களின் அபாயம், மற்றும் எதிர்க்கட்சிகளின் அரசியல் கணக்கீடும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. சிவகாசியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பேசிய இந்தப் பேச்சு மாநில அளவில் சர்ச்சையைக் கிளப்பினாலும், தேசிய அரசியலில் அது ஒரு வரம்புக்குள் மட்டுமே நின்று போனதற்கும், மேற்கூறிய காரணங்களே பின்னணியாக உள்ளன. 

Parliament Narendra Modi CONGRESS MLA congress Sivakasi America Epstein files
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe