தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வெளிநாடு சுற்றுப்பயண நேரத்தில் கட்சிக்குள் பூகம்பம் கிளம்பலாம் என எதிர்பார்க்கப் பட்டது. அவரது வெளிநாட்டு பயணத்தின் போது அ.தி.மு.க.வில் எந்த அசைவும் இல்லை. அதற்கு காரணம் அ.தி.மு.க.வில் நடந்து கொண்டிருக்கும் ஒருவிதமான பங்கு பிரிப்புதான் என்கிறார்கள் கட்சியின் மேல்மட்டத்தில்.

Advertisment

admk

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் கள்ளக்குறிச்சி பிரபு. இவரது தந்தையார் கள்ளக் குறிச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளராக பல வருடமாக கோலோச்சி வருகிறார். அ.தி. மு.க. கட்சிப் பதவி, உள்ளாட்சி அமைப்புகளில் பதவி வகித்தார். அந்த செல்வாக்கில் கார், பங்களா என கோடிகளில் புரண்டு வாழ்பவர். அவருக்கு கிடைக்காத எம்.எல்.ஏ. பதவியை பிரபுவுக்கு சசிகலா கொடுத்தார் என்பதால் திவாகரனுக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் விசுவாசமாக இருந்தார். ரிசர்வ் தொகுதி எம்.எல்.ஏ.வான பிரபுவும் அப்பா போல் செல்வாக்கு சேர்ப்பதில் கவனமானவர்.

admk

Advertisment

பிரபுவை எடப்பாடி அணிக்கு கொண்டு வர அவரது தந்தையார் மூலம் முயற்சி செய்தனர். அவர், அப்பா பேச்சை கேட்கவில்லை. அதனால் அந்த பொறுப்பை அமைச்சர் வேலுமணியிடம் ஒப்படைத்தார். வேலுமணியின் சிஷ்யரான தி.நகர் எம்.எல்.ஏ. சத்யா, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமார், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. ரவி ஆகியோர் வேலுமணியால் களம் இறக்கப்பட்டார்கள். இம்மூவரும் கள்ளக்குறிச்சி பிரபுவுடன் தோள் மேல் கை போட்டுக் கொண்டு சட்டமன்ற கூட்டத்தொடரின் போது நடந்து சென்ற சம்பவம் நக்கீரன் உட்பட பத்திரிகைகளிலும் அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களிலும் செய்தியானது.

admk

அதன்பிறகு டி.டி.வி.தினகரனை சந்தித்த பிரபு, "என் அப்பா என்னை எதிர்க்கிறார். சபாநாயகர் கொடுத்த நோட்டீஸுக்கு எதிராக வழக்கை நடத்த வழக்கறிஞர் கபில்சிபில் லட்சக்கணக்கில் பணம் கேட்கிறார். அதை தர முடியவில்லை' என புலம்ப, "சரி நீ போய் எடப்பாடியை ஆதரித்துக் கொள்' என தினகரன் பெர்மிஷன் தர, எடப்பாடியை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார் பிரபு. தனது அணிக்கு வந்த பிரபுவுக்கு வெயிட்டாக ஒரு நன்கொடை தரவேண்டும் என நினைத்த எடப்பாடி, கொடைக்கானலில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்காக காலனி ஒன்றை உருவாக்கி வருகிறார். அதில் பிரபுவுக்கு ஒரு இடத்தை ஒதுக்கீடு செய்தார். கொடைக்கானல் வட்டம் வில்பட்டி கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட கோவில்பட்டியில் சர்வே எண்: 1751/1-ல் உள்ள ஒரு ஹெக்டேர் 57 ஏர்ஸ் நிலத்தில் 10 ஏர்ஸ் 12.0 ள்வ்ன் ஏர்ஸ் அகலமும், 23.0 ஏர்ஸ் நீளமும் கொண்ட நிலத்தை உழ்..கே.கணேஷ் குமார் என்பவரிடமிருந்து கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவுக்கு வாங்கிக் கொடுத்துள்ளார் எடப்பாடி.

Advertisment

admk

இதே கணேஷ்குமார் தி.நகர் சத்யா, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. விஜயகுமார், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. விருகை ரவி ஆகியோருக்கும் ஆளுக்கு 25 சென்ட் வீதம் நிலத்தை கொடுத்துள்ளார். பிரபு அந்த பட்டியலில் இடம் பெறும் நான்காவது எம்.எல்.ஏ. என்கிறது அ.தி.மு.க. வட்டாரம். ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி 2019ஆம் ஆண்டு பிரபுவுக்கு இந்த நிலம் விற்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்களுக்கு வில்பட்டி எல்லைக் குட்பட்ட கோவில்பட்டியில் ஆளுக்கு 25 சென்ட் என நிலம் எடப்பாடியால் வழங்கப்பட்டுள்ளது. சிரமமான காலத்தில் எடப்பாடிக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அ.தி.மு.க. கட்சி நிதியில் இருந்து அங்கு சொகுசு உல்லாச பங்களாக்கள் கட்டித் தர இந்த ஆட்சி முடி வதற்குள் ஏற்பாடு செய்யப்படும் என எடப்பாடி உத்திரவாதம் அளித்துள்ளதாக அ.தி.மு.க. வட்டாரம் தெரிவிக்கின்றது.

admk

இந்த வேலைகளை செய்யும் அமைச்சர் வேலுமணியின் தொண்டரான தி.நகர் சத்யா சென்னை நகரம் முழுவதும் சீட்டாட்ட க்ளப்கள், மசாஜ் விடுதிகள் நடத்திக்கொள்ள காவல்துறை உதவியுடன் அமைச்சர் வேலுமணி அனுமதித்துள்ளார். சென்னை கொளத்தூர் அருகே உள்ள சூதாட்ட விடுதியில் ஒரு நபர் அங்கேயே தற்கொலை செய்து கொண்டார். அந்த விவரம் சமூக வலைத்தளங்களில் பரவியது. அதுகுறித்த நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. பிரபல ரவுடியான சி.டி.மணி சத்யாவுக்காக கட்ட பஞ்சாயத்துகள் பேசுகிறார் என தகவல்கள் பரவுகின்றன. ஆனால் சி.டி.மணியை கைது செய்ய போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எல்லாம் அமைச்சர் வேலுமணியும் சத்யாவும் நெருக்கமாக இருப்பது தான் காரணம் என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.

இதற்கிடையே சில எம்.எல்.ஏ.க்கள் சென்னைக்கு பக்கத்தில் நிலம் வேண்டுமென்று கேட்க, அவர்களுக்கு தி.நகர் சத்யா கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கத்தில் பக்கிங்காம் கால்வாய் கடலோடு சேருமிடத்தில் வைத்துள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் கொண்ட ரிசார்ட்டில் சொகுசு வீடு கட்ட எடப்பாடி நிலம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். எம்.எல்.ஏ.க்கள், சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த அதிகாரிகள் என பலருக்கும் தனது ரிசார்ட் நிலத்தை விற்று வருகிறார் தி.நகர் சத்யா. மாநகராட்சி அதிகாரிகள் சத்யா சொல்லும் விலையில்தான் நிலத்தை வாங்க வேண்டும் என நிர்பந்தமும் தரப்படுகிறது என நொந்து போயுள்ளனர் என்கிறார்கள் அ.தி.மு.க.வினரும் சென்னை மாநகராட்சியை சேர்ந்தவர்களும்.

இவையெல்லாம் தனியார் நில விற்பனைகள். இதைப் பற்றி வருமான வரித்துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்களுக்காக எடப்பாடி கட்டிக் கொடுக்கும் சொகுசு விடுதிகள் பற்றி வருமானவரித்துறை ஒன்றும் செய்யாது என எம்.எல்.ஏ.க்கள் தெம்பாக இருக்கிறார்கள். ஆனால் இந்த விவரங்கள் லீக் ஆகிவிட்டன. இந்த விவரங்களை வைத்து சமூக ஆர்வலர்கள் "வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார்கள்' என அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குப் போடுவார்கள் என்கிற பயம் மட்டும் இருக்கிறது. அப்படி ஒரு வழக்கு வந்தாலும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வந்த வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு வழக்கு உயர்நீதிமன்றத்திலேயே ஆதாரம் இல்லை என தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையால் புஸ்வாணமாக்கப்பட்டது. அதுபோல செய்யலாம் என அ.தி.மு.க. தலைமை எம்.எல்.ஏ.க்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.

இதுபற்றி தி.நகர் சத்யா, கள்ளக்குறிச்சி பிரபு, விருகை ரவி, கும்மிடிப்பூண்டி விஜயகுமார் ஆகியோரை கேட்டோம். "எல்லாம் பொய். எடப்பாடி சொகுசு விடுதிகள் கட்டித் தருகிறேன் என வாக்குறுதி அளிக்கவில்லை. அதற்காக எந்த நிலத்தையும் நாங்கள் வாங்கவில்லை'' என மறுக்கிறார்கள். அ.தி.மு.க. தரப்பிலோ புது கிஃப்ட் உற்சாகம் தெரிகிறது.