/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/8900.jpg)
கடந்த செப்.28ஆம் தேதி நடந்த அதிமுக செயற்குழுவில் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் உறுதியாக இருந்தனர். ஆனால் 2017ம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவில் முடிவு செய்தபடி கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்க வேண்டும். அந்த குழுதான் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக கூறினார்.
இதையடுத்து அதிமுக மூத்த அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் ஓ.பன்னீசெல்வம் இல்லத்திற்கும், எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கும் மாறி மாறி சென்று பஞ்சாயத்து செய்தனர். பேச்சுவார்த்தை நீண்டுகொண்டே சென்றது. திடீரென ஓ.பன்னீர்செல்வம் தேனிக்கு பயணம் மேற்கொண்டதால் 7ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாரா என்ற விவாதங்களும் நடந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/400_55.jpg)
இந்த நிலையில் இன்று ஓ.பி.எஸ். விரும்பிய வழிகாட்டு குழுவின் உறுப்பினர்களை அறிவித்தார் ஈ.பி.எஸ். அதேபோல் ஈ.பி.எஸ்.தான் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் என மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன் என அறிவிக்க வைத்துவிட்டார் ஈ.பி.எஸ். உண்மையில் இது திடீரென்று நடந்தது இல்லை. அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடிதான் என அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல, பொதுமக்கள் மத்தியிலும் இதுதான் பேசப்பட்டது. அந்த அளவுக்கு அதிமுகவில் ஸ்ட்ராங் பேஸ்மண்ட் போட்டுவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
தமிழ் மக்கள் சினிமா நாயகர்களை முதல்வராக்கி ரசித்தவர்கள். எப்போதும் ஒரு நாயக பிம்பத்தை, தன்மையை எதிர்பார்ப்பவர்கள். பல முதல்வர்களின் பலமாக இருந்தது பேச்சுதான். கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆளுமை, பேச்சு, வீச்சு ஆகியவற்றை ரசித்தவர்கள், எடப்பாடி பழனிசாமி முதல்வரானபோது, 'அது ஒரு விபத்து', 'ஒரு வாரம் தாங்காது, ஒரு மாதம் தாங்காது' என்றே அனைவரும் நினைத்தனர். விவாதித்தனர்.
ஆனால் ஆண்டுகளை கடந்ததோடு தன் ஆட்சியையும் செலுத்த ஆரம்பித்த எடப்பாடி, சமீபமாக தன் இமேஜை இன்னும் உயர்த்த ஜெயலலிதாவின் பாணியை பல விஷயங்களில் பின்பற்றினார். செல்லும் இடங்களிலெல்லாம் பேனர்கள், பிரம்மாண்ட வரவேற்பு, போலீஸ் பந்தபஸ்துகள், விவசாயி அவதாரம் என அமர்க்களப்படுத்தி தனக்கென ஒரு இமேஜை உருவாக்க தன் ஆதரவு கட்சிக்காரர்கள் மூலம் பல வேலைகளை செய்து வருகிறார்.
அதன் லேட்டஸ்ட் விஷயமாக ஆவேசமாக பேசுவதை கையில் எடுத்துள்ளார். ஏற்கனவே கரோனா குறித்து சட்டமன்றத்தில் நடந்த விவாதமொன்றில் ‘இதெல்லாம் ரொம்ப தப்புங்க’ என்று அவர் பேசியது வைரலானது. கடைசியாக நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் நீட் தேர்வு குறித்து, கூடுதல் ஆவேசத்தோடு, ஜெ. பாணியில் பேசி மாஸ் ஹீரோவாகும் முயற்சியை மேற்கொண்டார் எடப்பாடி பழனிசாமி.
சட்டப்பேரவையில் ஆவேசமாகவும் கோபமாகவும் எடப்பாடி பழனிசாமி பேசியதால், அன்றைய தினம் பேசப்பட்ட ‘ஜனவரி மாதம் விடுதலையாவார் சசிகலா. சசிகலா வந்தால் அதிமுக உடையுமா, இப்போதுள்ள எம்எல்ஏக்கள், அமைச்சர்களில் யார் சசிகலாவை சந்திப்பார்கள்' ஆகிய பரபரபப்பான செய்திகள் பின்னுக்கு தள்ளப்பட்டன. கடந்த செப்.28ஆம் தேதி நடந்த செயற்குழுவிலும் எடப்பாடி பேசியதாக வெளியான தகவல்கள் கட்சிக்குள் தனது ஆளுமையை காட்டியதாக கூறப்படுகிறது. இப்படி கவனத்தை தன் மீது திருப்பும் கலையை கற்றுக்கொண்டார். திடீர் முதல்வரானாலும் இப்போது தான் நினைக்கும் திசையில் முடிவுகளைநகர்த்துகிறார். முதல்வரான சில நாட்களிலேயே அதற்கான பேஸ்மண்ட்டை அமைக்க தொடங்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்கின்றனர் கட்சியினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)