Skip to main content

எடப்பாடி மகனே என்னோட ஃபரெண்ட் தான்... நெருக்கமாக இருக்கும் படத்தை வெளியிடுவேன்... போலி ஐ.ஏ.எஸ்ஸின் அதிர வைத்த சம்பவம்! 

Published on 22/06/2020 | Edited on 22/06/2020

 

incident

 

சுழல்விளக்கு பொருத்திய காரில் வலம் வந்தபடியே, பிரகாஷ் அரங்கேற்றிய லீலைகளை அறிந்த காவல்துறையினர் ஆடிப்போயிருக்கிறார்கள். திருவண்ணாமலை மாவட்ட கோட்டையூரைச் சேர்ந்த 28 வயதான பிரகாஷூக்கு நாவப்பன் என்ற பெயரும் உண்டு. விதவிதமான ஆடம்பர உடைகளுடன், தன்னை ஐ.ஏ.எஸ் அதிகாரி என்றும், ஐ.பி.எஸ்., டி.என்.பி.எஸ்.சி. அதிகாரி என்றும் வித விதமாகக் கதையடித்து பலரையும் ஏமாற்றியிருக்கிறார். உச்சபட்சமாக முதல்வர் எடப்பாடியின் மகன் எனக்கு நெருக்கமான நண்பர் என்றும் பீலா விட்டுப் பலரையும் ஏமாற்றியிருக்கிறார். வி.ஐ.பி.-க்கள் சிலரைக் கையில் வைத்துக்கொண்டு, மாடல் அழகிகளுடன் உல்லாசம், கெட் டு கெதர் பார்ட்டிகள், பணம் கொடுத்தவர்களை ஆபாசமாகப் படம் எடுத்து மிரட்டுதல், ஹோமோ செக்ஸ் கூத்தடிப்புகள் என அவர் நடத்திய கிளுகிளு க்ரைம்கள் காக்கிகள் மத்தியிலேயே பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

 

ராமநாதபுரத்தைச் சேர்ந்த டெய்ஸி என்ற ஓய்வுபெற்ற ஆசிரியர்தான், பிரகாஷைப் பற்றி முதல்வர் அலுவலகத்துக்கு புகார் அனுப்பி, அந்தத் திருட்டுப் பூனைக்கு மணிகட்டியிருக்கிறார். அந்த மனு ராமநாதபுரம் மாவட்ட காவல் துறைக்குப் போக, எஸ்.பி. வருண்குமார் தலைமையிலான டீம் எடுத்த ஆக்ஷனால் பிரகாஷ் கம்பி எண்ணிக் கொண்டி ருக்கிறார்.

 

காவல்துறை விசாரணையின்போது டெய்ஸி...

 

"என் மகள் சைனி வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். எங்கள் மருமகன் ஜூபலுக்கு வேலை தேடிக் கொண்டிருந்தோம். அப்போது, சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஜார்ஜ் மூலம், பிரகாஷ் என்பவர் தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று சொல்லிக்கொண்டு அறிமுகமானார். சைரன் காரில் வலம் வந்ததால் அவர் சொன்னதை நம்பினோம். உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஐ.ஏ.எஸ்.-ஆக இருந்ததாகவும், அங்கிருந்து சென்னை தலைமைச் செயலகத்தில் பணியமர்த்தப்பட்டு வேலை பார்ப்பதாகவும் சொன்னார்.

 

தனக்கு மேலிடத்தில் உள்ள செல்வாக்கால், யாருக்கு வேண்டுமானாலும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித்தர முடியும் என்றும் பிரகாஷ் சொன்னார். ஒவ்வொரு வேலைக்கும் குறிப்பிட்ட தொகையைச் சொல்லி பணம் வசூலித்துக் கொண்டிருந்தார். இவரை நம்பி, நானும், எங்களுக்குத் தெரிந்த 10 பேரும் அரசு வேலைக்காக ரூ.45 லட்சம் வரை அவரிடம் கொடுத்தோம். அவர் எங்களுக்கு வேலை எதுவும் வாங்கித் தராததோடு நாங்கள் கொடுத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார்'' என்று கண்கலங்கினார்.

 

incident

 

இதைத் தொடர்ந்து, போலி அதிகாரியாக வலம் வந்த பிரகாஷ் என்ற நாவப்பனை எஸ்.பி.வருண்குமார் அதிரடியாகக் கைது செய்தார். விசாரணையில் பலரையும் ஏமாற்றி கோடிக்கணக்கான ரூபாய்களை பிரகாஷ் மோசடி செய்தது தெரிய வந்ததோடு, அவரது அதிரவைக்கும் லீலைகளும் அம்பலத்துக்கு வந்திருக்கின்றன.

 

பிரகாஷிடம் ஏமாந்தவர்களில் ஒருவரான அபி என்பவரைத் தேடிப்பிடித்து நாம் விசாரித்தபோது, அவரது பல்வேறு க்ரைம்கள் பற்றிய விபரங்களும் தெரியவந்தது. நம்மிடம் பிரகாஷின் லீலைகள் பற்றி விவரிக்கத் தொடங்கிய அபி...

 

incident

 

"சென்னையில் இருக்கும் ஒரு ஐ.ஏ.எஸ் அகடமியில் நான் சேர்ந்து படித்துகொண்டிருந்த போது, திடீரென சைரன் வைத்த காரில் இரண்டு துப்பாக்கி ஏந்திய நபர்களோடு அங்கே வந்து இறங்கினான் பிரகாஷ். தன்னை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, சென்னை தலைமைச் செயலகத்தில் துறைச் செயலாளராக இருப்பதாகச் சொன்னான். அங்கு படித்துக்கொண்டிருந்த அனைவரின் முகவரி, போன் நம்பரை தன்னோடு வந்த தன் உதவியாளர் மூலம், வாங்கிக் கொண்டு எங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமென்றால் தன்னைத் தொடர்புகொள்ளுமாறு சொன்னவன், கோச்சிங் சென்டரில் தன்னம்பிக்கை வகுப்பையும் எடுத்துவிட்டுச் சென்றான்.

 

அடுத்த சில நாட்களில் எங்களை எல்லாம் தொடர்புகொண்டு, தான் வேலை வாங்கித் தருவதாகவும், இப்போதைக்கு செய்தி மக்கள் தொடர்புத் துறையில் ஏ.பி.ஆர்.ஓ. போஸ்டிங் காலியாக இருப்பதாகவும், அதற்குத் தேர்வெல்லாம் கிடையாது என்றும் சொன்னவன், துறை அமைச்சர் மூலம் அந்த வேலையை வாங்கித் தருவதாகவும் ஆசை காட்டினான். அமைச்சர் தனக்கு நெருக்கமானவர் என்றும் சொல்லி, வேலைக்காக என்னிடம் 7 லட்ச ரூபாயை வாங்கிக்கொண்டான்.

 

அடுத்த சில வாரங்களில், நேர்முகத் தேர்வு நடக்கப்போவதாக அரசு முத்திரையுடன் எங்களுக்குப் போலி கடிதம் அனுப்பினான்.

 

incident

 

அதற்கு அடுத்த நாள், தலைமைச் செயலகத்தில் இருந்து பேசுகிறோம். கடிதம் கிடைத்ததா? என்று யாரையோ பேசவைத்து மேலும் நம்பிக்கையை ஊட்டினான். பிறகு அவனே லைனில் வந்து கூட்டுறவு டிப்பார்ட்மெண்ட், பொதுப்பணித்துறை என்று சில துறைகளில் வேலை வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி. என்னைப் போன்றவர்களிடம் தலைக்கு 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வசூலித்தான். பின்னர் பணம் கொடுத்தவர்களுக்கு ’கெட் டு கெதெர்’ பார்ட்டி வைப்பதாக ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு அழைத்தான்.

 

எல்லோரையும் குடித்துக் கும்மாளம் போடவைத்து, ஆளுக்கு ஏற்ப, மாடல் அழகிகளையும் ஏற்பாடு செய்து, சபலம் ஊட்டினான். சிலரை சிலரோடு ஹோமோ செக்ஸில் ஈடுபடுத்தி அதையும் செல்போனில் படம் பிடித்து வைத்துகொண்டான். அதனால் அவனிடம் எல்லோரும் பயந்தார்கள். இதுபோல் எண்ணற்றவர்களிடம் கோடிக் கணக்கில் சுருட்டிகொண்டான். அதுமட்டுமல்லாமல் தலைமைச் செயலகத்தில் இருந்து நியமன ஆணை வருவது போல் போலி உத்தரவுகளையும் பலருக்கும் அனுப்பினான்.

 

பின்னர் சம்மந்தப்பட்டவர்களை தலைமைச் செயலகத்துக்கு வரவழைத்து, ஒவ்வொரு 10 பேருக்கு ஒருவரை வசூலிப்பவராக நியமித்து, ஏதேனும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி அறைக்கு வெளியில் நாற்காலியில் அவர்களை அமரவைத்து அங்கேயே பணத்தையும் அவன் வசூலித்தான்'' என்றெல்லாம் பிரகாஷின் ஜெகஜால லீலைகளை விவரித்து திகைக்கவைத்தவர், தொடர்ந்து பல உண்மைகளை விவரித்தார்.

 

"நாங்கள் ஏமாற்றப்பட்ட கதையை இன்னும் கேளுங்கள். என்னைப் போன்றவர்களை மறுபடியும் அழைத்து, உங்களுக்கு கட்டாயம் வேலை கிடைத்து விடும். ஆனால் அதற்குப் பிறகு, நான் மீண்டும் ஐ.ஏ.எஸ். படிக்கப் போகிறேன் என்று அடம் பிடித்து நீங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்கக் கூடாது. அதனால் பணத்தைத் திரும்பிக் கேட்க மாட்டோம் என்று கையெழுத்து போட்டு கொடுங்கள் என்று சாமர்த்தியமாகப் பேசி எங்களிடம் கையெழுத்தும் வாங்கி வைத்துக் கொண்டான். ஒரு கட்டத்தில் பணம் கேட்டு நெருக்குபவர்களிடம் என்னிடம் பணத்தைக் கொடுத்துவிட்டதாகச் சொல்லி என்னையும் சிக்கலில் சிக்கவைத்தான். இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழிகளைத் தப்பிக்கவிடக் கூடாது'' என்றார் கலக்கமாக.

 

இவரைப் போலவே ஏமாந்த வெங்கடேசன் என்பவர் நம்மிடம், “இவன் நடிகர் ராதாரவி, பாடகர் மனோ, கவிஞர் சிநேகன் உள்ளிட்ட பிரபல வி.ஐ.பி.க்கள் பலரோடும் எதேச்சையாக படம் எடுத்து வைத்துக் கொண்டு தனது முகநூலில் அதை வெளியிடுவான். அதோடு டிக்டாக்கில் பலரைப் போலவும் வேடிக்கையாக நடித்து பெண்களைக் கவர்வான். மேலும், முக்கிய அமைச்சர்கள் தொடங்கி, நடிகர்கள் இயக்குநர்கள் வரை தனக்கு நெருக்கம் என்றும் காட்டிக்கொள் வான். குறிப்பாக இவன் செய்யும் அத்தனை ஃபோர்ஜரிக்கும் மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உடந்தை.

 

மேலும், 4 எம்.பி., 10 எம்.எல்.ஏ.க்களையும் தன் கையில் வைத்திருப்பதாகச் சொல்வான். அதேபோல் முதல்வர் எடப்பாடியின் இரண்டாவது மகன் பெயரையும் அடிக்கடி சொல்லி, அவர் தனக்கு மிகவும் நெருக்கம் என்பான். இதனால் அவனைப் பார்த்து எல்லோரும் மிரண்டு போனார்கள். எப்போதும் சின்னத்திரை நடிகைகளோடும், மாடலிங் பெண்களோடும்தான் சல்லாபமாக காட்சி தருவான்.

 

மணல் குவாரியில் இருந்து பொதுப் பணித்துறை வரையில் டெண்டர் வாங்கித் தருவதாகவும் சொல்லி, ஏறத்தாழ 600 கோடிகளுக்கு மேல் சுருட்டியிருக்கிறான். 1,500 பேர்வரை இவனிடம் ஏமாந்திருக்கிறார்கள். இவனுக்குப் பின்னணியில் இருக்கும் பிரபலங்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும்'' என்கிறார் அழுத்தமாக.

 

இந்த விவகாரம் குறித்து இராமநாத புரம் எஸ்.பி. வருண்குமாரிடம் கேட்டபோது, "பிரகாஷ் மேல் பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவாகி இருக்கிறது. எனவே அவனை குண்டாஸில் கைது செய்துள்ளோம்'' என்று கச்சிதமாகச் சொன்னார். பிரகாஷுக்கு உதவிய சுகாதாரத்துறை ஜார்ஜும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

 

http://onelink.to/nknapp

 

"ஏற்கனவே இதேபோன்ற மோசடியில் ஈடுபட்டுக் கைதான பிரகாஷ், கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் வெளியே வந்திருக்கிறான். வந்த சூட்டோடு மறுபடியும் தனது போர்ஜரி லீலைகளை ஆரம்பித்ததால் இப்போது வசமாகச் சிக்கிக்கொண்டிருக்கிறான். மோசடி பிரகாஷ், தான் சுருட்டிய பணத்தில் சொந்தமாக சொகுசு பங்களா கட்டியிருப்பதோடு, ஏராளமாக நிலங்களையும் வாங்கிப் போட்டிருக்கிறான்'' என்கிறார்கள் அவனை அறிந்தவர்கள்.

 

பிரகாஷின் மோசடித் தனங்களுக்கு பின்னணியில் இருந்து உதவிய பிரபலங்களின் மீதும் உடனடியாகக் காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிறார்கள் பலரும்.

 

பொள்ளாச்சி பாலியல் பயங்கரம் ஓயும் முன்னரே கன்னியாகுமரி காமுகன் காசியின் லீலைகள். அதன் மீதான விசாரணை தொடங்கிய நிலையில், போலி ஐ.ஏ.எஸ்ஸின் வில்லங்கங்கள். எல்லாவற்றிலும் ஆளுந்தரப்பின் பெயரே அடிபடுகிறது. பலிகடாக்களைச் சிக்க வைத்து, சூத்திரதாரிகள் தப்பிக்கிறார்களோ!