Advertisment

என் பெயரைப் போட்டுடாதீங்க பிரச்சனை பண்ணுவாங்க... முதல்வரின் ஆயிரம் ரூபாய் அரசியல்... அதிர்ச்சியில் திமுக!

21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால், வீட்டில் முடங்கும் ஏழை, எளிய மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாவார்கள் என்று தமிழக எதிர்கட்சிகளும் பொருளாதார வல்லுநர்களும் வலியுறுத்தியதின் பேரில், குடும்ப அட்டைகளுக்கு ஆயிரம் ரூபாயும், 25 கிலோ அரிசி, சர்க்கரை, எண்ணெய், பருப்பு போன்ற பொருட்களும் ஏப்ரல் மாதம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த அறிவிப்பு வரவேற்பைப் பெற்றது.

Advertisment

பொதுவிநியோக ஊழியர் சங்கத் தலைவர் பால்ராஜ், "ரேஷன் கடையில் பணியாற்றுவோருக்கு பாதுகாப்பில்லாத நிலையில், 1000 ரூபாயை கடைகளில் வழங்க முடியாது''’என்றார் அச்சத்துடன். இதன்பிறகே, நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதோடு, மக்கள் கூடுவதைதடுக்க, வீடுவீடாக சென்று டோக்கன் வழங்குவது பற்றி அறிவிக்கப்பட்டது.

admk

ஏப்ரல் 01ந்தேதி, ஒவ்வொரு ரேஷன் கடை விற்பனையாளரும், தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் கடைகளுக்கு கீழ்வரும் குடும்பஅட்டைதாரர்களை நூறு நூறாகப் பிரித்து, தேதிவாரியாக டோக்கன் வழங்கினார். தமிழகம் முழுவதும் ஏப்ரல் 02ந்தேதி முதல் பணம், பொருட்கள் விநியோகம் தொடங்கிய நிலையில், அது வீடுவீடாக வழங்கப்படுகிறதா என்பதை அறிய களமிறங்கினோம். திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்கால் கிராமத்தில் வீடுவீடாக பணம் மற்றும் பொருட்களைவழங்கும் திட்டத்தை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன், கலெக்டர் கந்தசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். குட்டியானை வண்டியில் வீடுவீடாக சென்று டோக்கனை சரிபார்த்து பொருட்களை வழங்கினார்கள்.

Advertisment

nakkheeran app

அதேநேரம், திருவண்ணாமலை நகரத்தில் நிலைமை தலைகீழாக இருந்தது. மாவட்ட வனத்துறை அலுவலகம் எதிரேயுள்ள போயர் தெருவைச் சேர்ந்த நூறு பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், வீடு வீடாக சென்று பொருட்களை வழங்காமல், மூடப்பட்ட ஒரு பங்க் கடை முன்பு வண்டியை நிறுத்தி, மக்களைக் கூட்டமாக வரவைத்து பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தார், ரேஷன் கடை ஊழியர். மக்கள் முண்டியடித்துக் கொண்டிந்தனர். கூட்டத்தில் நின்றிருந்த ஒரு பெண்ணிடம் கேட்டோம். "வெயிலா இருக்குதான். அதான், வீட்டுக்கு வந்துகொடுக்காம, இங்க வரச்சொல்லி இருக்காங்க'' என்று சொன்னவர், "என் பெயரைப் போட்டுடாதீங்க. நாளை பின்ன கடைக்கு வந்தா பிரச்சனை பண்ணுவாங்க'' என்றார் தயக்கத்துடன்.

பேகோபுரத் தெருவில், சக்தி தியேட்டர் அருகே அரசமர நிழலில் வண்டியை நிறுத்தி ரேஷன்கடை ஊழியர் அழைத்தபோது, 200க்கும் அதிகமான பெண்கள் அங்கு குவிந்துவிட்டனர். டோக்கன்களைச் சரிபார்த்து "முதல் நூறு பேருக்கு மட்டுமே இன்று தரப்போகிறேன்'' என்று சொன்னதால் அங்கு குழப்பம் உருவானது. இதுதொடர்பாக, திருவண்ணாமலை வட்ட வழங்கல் அலுவலருக்கு, மாவட்ட வழங்கல் அலுவலருக்கும் புகார்சொல்ல அந்தப்பகுதி இளைஞர்கள் அழைத்தபோது ரெஸ்பான்ஸ் இல்லையாம்.

admk

நகரத்தைப் போலவே, நாச்சாந்தல், மெய்யூர், பாவுப்பட்டு, பறையம்பட்டு, ஈராடி ஆகிய கிராமங்களிலும், வீடுவீடாக செல்லாமல், தொடக்கப் பள்ளிகளில் வைத்தே பொருட்கள் வழங்கப்பட்டன. பல இடங்களில் ரேஷன்கடை ஊழியர்களோடு அதிமுகவினரையும் பார்க்க முடிந்தது. தமிழகம் முழுவதும் இதுதான் நிலைமை. சென்னை விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் அத்தியாவசியப் பொருட்களும், ஆயிரம் ரூபாயும் அதிமுகவினராலேயே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. வீடுவீடாக சென்று பொருட்களை வழங்கும் உத்தரவை சென்னை மாநகரிலேயே பல இடங்களில் கடைபிடிக்கவில்லை.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டியிலுள்ள ரேஷன் கடைக்கு படை பரிவாரங்களோடு சென்ற கே.வி.குப்பம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ லோகநாதன், பணம் மற்றும் பொருட்களை வழங்கினார். அதேபோல் கொண்டசமுத்திரம், கலப்பாடி, கொட்டினப்பள்ளி போன்ற ஊராட்சிகளிலும், அ.தி.மு.க. பிரமுகர்களான மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராமு, கூட்டுறவு வங்கித்தலைவர் கோபி இருவரும், பொதுமக்களுக்கு பணமும், பொருட்களையும்வழங்கினார்கள்.

இப்படி, அரசின் நிதியுதவித் திட்டத்தை அ.தி.மு.க. நிகழ்வாக மாற்றியிருப்பது பற்றி அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, "ரேஷன்கடை ஊழியர்கள் பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கசெல்லும்போது, அதிமுக பிரமுகர்களையும் உடன் அழைத்துச் செல்லவேண்டும் என்ற உத்தரவு முதல்வர் அலுவலகத்தில் இருந்தே வழங்கப்பட்டது. இதற்காக ஊராட்சிமன்றத் தலைவர்களைப் பயன்படுத்தினால், பாதி இடங்களுக்கு மேல் திமுகவினர் வருவார்கள் என்பதால்தான், கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்களை அனுப்பி வைத்திருக்கிறது அதிமுக அரசு. இப்படி நடக்குமென்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளே எதிர்பார்க்கவில்லை'' என்றார்கள்.

சென்னை பெருவெள்ளத்தின் போது, செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டு, மாநகர மக்களை பிரச்சனைக்குள் தள்ளியது அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான தமிழகஅரசு. அதிலிருந்து மீண்டுவந்துஅத்தியாவசியப் பொருட்களுக்காக அம்மக்கள் ஏங்கியபோது, தன்னார்வலர்கள் முன்வந்து செய்த உதவியில் ஜெயலலிதா படமிட்ட ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள் அதிமுகவினர். அதுபோலவே, நோய்த் தொற்று அச்சத்தில் வீடுகளில் முடங்கி இருக்கும் வேளையில், மக்கள் வரிப் பணத்தில் இருந்து தரப்படும் அவசரகால ஆயிரம் ரூபாய் உதவியில் தங்களுக்கான அரசியல் ஆதாயத்தைத் தேடத் துடிக்கிறது அதிமுக.

admk

ஏப்ரல் 14ந்தேதி வரை இந்த நிதி மற்றும் பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் பண உதவி கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் அல்லாடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் செஞ்சி, மேல்மலையனூர் வட்ட ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட் வேளாங் கண்ணியிடம் இதுதொடர்பாக பேசினோம். "ரேஷன்கார்டு இல்லாமல் அதிகளவு பாதிக்கப்படுவது காட்டுநாயக்கன், இருளர் மற்றும் பூம்பூம் மாட்டுக்காரர் சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள்தான். விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ரேஷன் அட்டைகூட இல்லாமல் பல்லாயிரக்கணக்கான இருளர் சமுதாய மக்கள் இப்போதும் தவிக்கிறார்கள். அவர்களும் மனிதர்கள்தான், அவர்களுக்கும் பசிக்கும். சமூக ஒடுக்குதலுக்கு ஆளாகி, செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக தவிக்கும்அந்த மக்களுக்கும் இந்த அரசு உதவ முன்வர வேண்டும்'' என்ற கோரிக்கையை முன்வைத்தார் ஆல்பர்ட்.

தமிழகத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள், குடும்ப அட்டை இல்லாமல், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர். அவர்கள் மிக,மிக ஒடுக்கப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள். இந்த மண்ணின் பூர்வக்குடிகள். திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, விழுப்புரம், திருப்பத்தூர், கடலூர், ஈரோடு, நாமக்கல் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நிரந்தர வீடுகூட இல்லாமல் சாலையோரங்கள், ரயில்வே பிரிட்ஜ், ஊருக்கு ஒதுக்குபுறமாக, காடுகளில் வாழ்கிறார்கள். அன்றாடம் உழைக்க வாய்ப்புள்ள மக்களே அல்லாடும்போது, வீடற்ற, குரலற்ற இவர்களது தேவைகளைப் பூர்த்திசெய்ய இப்போதாவது அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இந்த நிலையின் தீவிரத்தை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் கொண்டுசென்றோம். அவர் நம்மிடம், "திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஆயிரம் பேர் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களுக்கு அரசு அறிவித்திருக்கும் ஆயிரம் ரூபாய் நிதி, உணவுப் பொருட்கள் வழங்குவது தொடர்பாக அரசிடம் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளோம்.'' என்று உறுதியளித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அடப்பன்வயலில் வீடு வீடாக சென்று டோக்கன் தருவதற்கு பதில் ஒரே இடத்தில் தந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திருக்கோகர்ணத்தில் 3அடி இடைவெளியில் நாற்காலிகள் போட்டு மக்களுக்கு வசதி செய்திருந்தனர்.

ரேஷன் அட்டை இல்லாதவர்கள்-பழங்குடி மக்களின் பசி குறித்து தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜின் கவனத்திற்கும், நக்கீரன் மூலமாக கொண்டு சென்றுள்ளோம். நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

-பகத்சிங்

படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்

admk eps minister politics Speech stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe