Advertisment

ஓபிஎஸ்ஸின் கட்சி பதவி பறிபோகும் வாய்ப்பு? சசிகலாவிற்கு முக்கியத்துவம்... ஓபிஎஸ்ஸிற்கு ஷாக் கொடுத்த இபிஎஸ்!

சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கிய பிறகு கடந்த இரண்டாண்டுகளாக கூடாமல் இருந்த அ.தி.மு.க.வின் பொதுக்குழு கடந்த ஞாயிற்றுக் கிழமை எப்பொழுதும் பொதுக்குழு நடக்கும் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த பொதுக்குழுவை ஓ.பி.எஸ்.சின் முக்கியத்துவத்தை ஓரங்கட்டி, ஒழித்து கட்டும் பொதுக்குழுவாக எடப்பாடியார் நடத்தினார் என்கிறார்கள் அந்த பொதுக்குழுவில் கலந்து கொண்ட அ.தி.மு.க. வினர்.

Advertisment

admk

சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டாலும் அவரை டி.டி.வி. தினகரனை நீக்கியது போல அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கவில்லை. சசிகலா தனது உறுப்பினர் பதிவை வருடா வருடம் தலைமைக் கழக நிர்வாகியான மகாலிங்கம் மூலம் புதுப்பித்து வருகிறார். வருகிற மார்ச் மாதம் அவர் சிறையிலிருந்து வெளியே வருகிறார் என மன்னார்குடி வகையறாக்கள் சொல்லி வரும் வேளையில், சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்ப்பார்களா? என்கிற கேள்வி தமிழகம் முழுவதுமுள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. அத்துடன் உள்ளாட்சி தேர்தல் உண்மையில் நடக்குமா என்கிற ஆவல் மிகுந்த கேள்வியும் அ.தி.மு.க. வினர் மத்தியில் எழுந்திருக்கிறது. இந்த கேள்விகளுடன் தமிழகம் முழுவதுமுள்ள அ.தி.மு.க.வின் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப் பாளர்கள் என அழைக்கப்பட்ட 3410 அழைப்பாளர்களில் 2300 பேர் மட்டும் இந்த பொதுக்குழுவில் கலந்து கொண்டனர். மாநில சுயாட்சி, திராவிட இயக்கத்தின் அடித்தளமான இருமொழிக் கொள்கை எல்லோருக்கும் பயன்பெறும் கல்விமுறை, நீட் தேர்வில் இருந்து விலக்கு, மருத்துவ பட்ட மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டவருக்கான இடஒதுக்கீடு, அ.தி.மு.க. அரசை விமர்சிக்கும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு கண்டனம், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி என 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஓ.பி.எஸ். அணியிலிருந்து எடப்பாடி ஆதரவாளராக லேட்டஸ்ட்டாக மாறியுள்ள மைத்ரேயன் போன்றவர்களுக்கு தீர்மானங்களை முன்மொழிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. செயற்குழு முடிந்து நடந்த பொதுக்குழுவில் பேசிய கே.பி.முனுசாமியின் பேச்சில் அனல் பறந்தது.

admk

Advertisment

சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியபோது சசி குடும்பத்தை எதிர்த்து அனல் தெறிக்க பேசியவர் கே.பி.முனுசாமி. "ஆட்சி ஒருவிதமாகவும் கட்சி வேறு விதமாகவும் ஒன்றோடொன்று ஒட்டாமல் செயல்படுகிறது'' என்கிற விமர்சனத்தை முன்வைத்தார். "இந்த ஏற்றத்தாழ்வு உடனடியாக களையப்பட வேண்டும். இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் ஒன்றாக இருந்தால் மட்டும் போதாது. ஆட்சியும் கட்சியும் இணைய வேண்டும்; இல்லையேல் அது ஆபத்து'' என எச்சரித்தார் துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி.

admk

மற்றொரு துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கமும் "எடப்பாடி அரசில் அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டன் மகிழ்ச்சியுடன் இல்லை. அவன் ஒருவிதமான விரக்தியில் இருக்கிறான்'' என சுட்டிக் காட்டினார். இந்த இருவருக்கும் நேர்மாறாக எடப்பாடியின் உறவுக்காரரும் அமைச்சருமான தங்கமணியின் பேச்சு அமைந்தது. எடப்பாடி அரசின் சாதனைகளை பட்டியலிட்ட தங்கமணி "2021 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். அந்த வெற்றியை முதல்வர் எடப்பாடி காலடியில் சமர்ப்பிப்போம்'' என்றார்.

கடந்த முறை நடந்த பொதுக்குழுவில் ஓ.பி.எஸ்.சை ஒருங்கிணைப்பாளராகவும் இ.பி.எஸ்.சை இணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்ந்தெடுத்தனர். அந்த பொதுக்குழுவில் பேசிய தங்கமணி "அடுத்து வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதுடன் அதை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். கால்களில் சமர்ப்பிப்போம்' என பேசினார். அவரே இன்று சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை இ.பி.எஸ். காலில் சமர்ப்பிப்போம் என்கிறார். ஜெ. பொதுச்செயலாளராக இருந்த பொழுது ஜெ.வின் கால்களில் வெற்றியை சமர்ப்பிப்போம் என பேசுவார்கள். ஜெ.வின் இடத்தில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என இருவர் ஆட்சியை வழி நடத்தும் போது இ.பி.எஸ்.சை ஜெ.வின் இடத்தில் வைத்து தங்கமணி பேசியது அ.தி. மு.க.வில் முக்குலத்தோர் இன பிரதிநிதிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. ஓ.பி.எஸ். கைகாட்டி அந்த சலசலப்பை அமைதிப்படுத்தினார்.

அதன்பிறகு கட்சி அமைப்பு விதிகளில் திருத்தம் செய்து ஒரு தீர்மானம் நிறை வேற்றினார்கள். புதிதாக உருவான மாவட்டங்களோடு சேர்த்து மொத்தம் 52 மாவட்டங்களாக இருந்த அ.தி.மு.க., 57 மாவட்டங்களாக மாற்றியமைக்கப்பட்டதோடு இணையதளங்களில் அ.தி. மு.க.வின் செயல்பாடுகளின் முன்னோடியான தகவல் தொழில்நுட்ப அணி முக்கியமான அணியாக உருப்பெற்றது. கே.ஏ.செங்கோட்டையனை வைத்து அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக உறுப்பினராக இருக்க வேண்டும் என ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.

மேலோட்டமாக பார்த்தால் கடந்த ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி. தினகரன் உட்பட மன்னார்குடி வகையறாக்கள் கட்சி நிர்வாகிகளாக வருவதற்கு தடைசெய்ய போட்ட தீர் மானம். சசிகலா இணைப்பு மன்னார்குடி ஆதிக்கம் மறுபடியும் வரும் என்கிற பயத்தை இந்த தீர்மானம் ஏற்படுத்தியுள்ளது. உள்ளர்த்தத்தில் இது வேறு நோக்கத்திற்காக எடப்பாடியால் கொண்டு வரப்பட்டுள்ளது. ஐந்து வருடங்கள் தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் கட்சி பதவிக்கு வரமுடியாது. பேரவை போன்ற துணை அமைப்புகளில் பதவிக்கு வரலாம். தொடர்ந்து ஐந்து வருடம் கட்சியில் இருந்தால் அவர்கள் கட்சியின் பதவிகளுக்கு வரலாம் என்பது ஜெ. காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ள ஒரு அமைப்புச் சட்டம். இந்த சட்டம் அமலில் இருக்கும்போதே ஜெ.வால் அரசியலில் அதிரடியாக விரட்டியடிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் ஆனார். அந்த சட்டத்தில் திருத்தமாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியையும் சேர்த்திருக்கிறார்கள்.

இந்த பதவிகளை இணைத்தது ஓ.பி.எஸ்.சை மட்டம் தட்டும் வேலை. இந்த சட்டத்தின்படி ஓ.பி.எஸ்.சின் ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாகும் வாய்ப்பு உள்ளது. சசிகலா பொதுச் செயலாளராக இருந்தபொழுது அவருக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பி.எஸ்., கே.பி.முனுசாமி, மைத்ரேயன் உள்பட ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.க்களை கட்சியை விட்டு நீக்கினார். அதன்பிறகு எடப்பாடியை முதல்வராக்கிவிட்டு சிறைக்குப் போனார். 2016-ல் நடைபெற்ற இந்த நீக்கம் ஓ.பி.எஸ்.சும் அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து அ.தி.மு.க.வில் இல்லை என்கிற நிலையை உருவாக்குகிறது. எடப்பாடியை யாரும் எந்த காலத்திலும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கவில்லை. அதேபோல் சசிகலாவும் நீக்கப்படவில்லை.

கர்நாடகாவில் ஆளும்கட்சியை எதிர்த்து கலகம் செய்த 18 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது போல் ஓ.பி.எஸ்.சுடன் சேர்த்து எடப்பாடிக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது என்றால் என்ன செய்வது என்பதை சிந்தித்தே எடப்பாடி இந்த விதியை ஒருங்கிணைப்பாளர் தேர்வுக்கும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும் பொருத்தியுள்ளார். 11 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு அவருக்கு எதிராக வந்து ஓ.பி.எஸ். துணை முதல்வர் பதவியை இழந்து தனித்து விடப்பட்டாலும்... நாளை சசிகலா வெளியே வந்து அவர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளராக வருவதற்கும், அதை ஓ.பி.எஸ். எதிர்த்து போட்டி போடாமல் இருப்பதற்குமான செக் தான் இந்த சட்டத் திருத்தம் என்கிறார்கள் அ.தி.மு.க.வின் உள் விவகாரங்களை தெரிந்த இரண்டாம் கட்ட தலைவர்கள்.

அ.தி.மு.க.விலிருந்து வெளியேறி தனி அணி கண்டு ஓ.பி.எஸ். ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் எடப்பாடி அணியை எதிர்த்தே நின்றார். இரு அணிகள் இணைந்ததும் அதில் எடப்பாடி தலைமையிலான அணிக்கே பெரும்பான்மை இருந்தது. அந்த வரலாறுகளின் வழியே பார்த்தால் ஓ.பி.எஸ். மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி அவர் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிடுவதை தடுக்க முடியும் என்கிறார் எடப்பாடியின் முக்கிய தளபதியான அமைச்சர் ஒருவர். பொதுக்குழுவின்மைய நோக்கமாக, ஓ.பி.எஸ்.சுக்கு வேட்டு வைக்கும் வேலையைத் தொடங்கியிருக்கிறார் இபி.எஸ். பொதுக்குழு முடிந்தபிறகும் அ.தி.மு.க.வினர் ரகசியமாக கூடி விவாதித்தனர். உள்ளாட்சித் தேர்தல் தேவையில்லை என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருக்க, கடைசியில் தமிழகம் முழுவதும் ஓட்டுக்கு 200 கொடுத்தால்தான் முழுமையான வெற்றி கிடைக்கும் என 250 கோடி கட்சி நிதியாக வைத்துள்ள ஆளுந்தரப்பு ரகசியமாக முடிவு செய்தது.

admk eps Meeting ops sasikala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe