Skip to main content

ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களின் பதவி தப்புமா? அ.தி.மு.க. ஆட்சி வீழுமா? தி.மு.க.-வின் திட்டத்தால் பதற்றத்தில் இ.பி.எஸ்.!

Published on 19/06/2020 | Edited on 19/06/2020

 

admk


துணை முதல்வர் ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி, தி.மு.க. தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார் எனத் தெரிவித்து கடந்த பிப்ரவரியில் வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.

 

இந்நிலையில், மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை 16-ஆம் தேதி செவ்வாய் அன்று நடக்கவிருக்கிறது. தகுதி நீக்கம் பிரச்சனையை மீண்டும் தி.மு.க. கையில் எடுத்திருப்பதால் அ.தி.மு.க. தலைவர்களிடம் திடீர் பரபரப்பும் பதற்றமும் உருவாகியுள்ளது.

 

உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. தாக்கல் செய்துள்ள மனு குறித்து கட்சியின் மூத்த வழக்கறிஞரும் எம்.பி.யுமான என்.ஆர்.இளங்கோவிடம் நாம் பேசிய போது, "தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி, தனது தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பை 18.2.2017 ஆம் தேதி கோருகிறார். அ.தி.மு.க. உறுப்பினர்களில், ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 பேர் எதிர்த்து வாக்களித்தனர். அரசியலமைப்பு சட்டத்தின் 10- ஆவது அட்டவணையில் சொல்லப்பட்டுள்ள ஷரத்துகளின்படி 11 பேரின் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டிருக்க வேண்டும்.

 

கட்சித்தாவலைத் தடுப்பது குறித்த ஷரத்துகளை பத்தாவது அட்டவணையில் இணைக்க நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில், ஜனநாயக மாண்புகளைப் பாதுகாக்கும் நீதிபதி போன்றவர் சபாநாயகர். கட்சி சார்பையும் கடந்து நடு நிலையாக முடிவுகளை எடுப்பார் என்கிற நம்பிக்கையை பார்லிமெண்ட் முன்வைத்தது. தகுதிநீக்கம் செய்யும் அதிகாரம் சபாநாயகருக்குத் தரப்பட்டது. ஆனால், சபாநாயகர் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், அவரது அதிகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிட முடியுமா? சபாநாயகருக்குக் கால அவகாசத்தை நிர்ணயிக்க முடியுமா? என ஜனவரி, 2020-க்கு முன்பு வரை பல வழக்குகளில் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எந்த ஒரு வழக்கிலும், மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த ராஜேந்திரசிங்ராணா வழக்கில் உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொடுத்துள்ள தீர்ப்பினை கணக்கில் காட்டப்படவே இல்லை. ராணா வழக்கில், பதவி இழக்க தகுதியானவர்கள் ஒரு நாள் கூட பதவியில் இருக்கக்கூடாது. எப்போது எதிர்த்து வாக்களித்தார்களோ அப்போதே தகுதியிழக்கின்றனர்.
 

dmk


அதில், சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லையெனில், நீதிமன்றமே தகுதி நீக்கம் செய்யலாம் என 5 நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

 

2020 ஜனவரியில் மணிப்பூர் மாநில தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாரிமன், ராஜேந்திரசிங் ராணா வழக்கில் 5 நீதிபதிகள் அளித்த தீர்ப்பினை வழக்காடியவர்கள் சுட்டிக்காட்டியிருந்தால், தகுதி நீக்க வழக்கினை இத்தனை நாட்கள் வைத்திருந்திருக்கவே மாட்டோம். எனவே, எங்களுக்குள்ள அதிகாரத்தின்படி, நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற தேதியிலிருந்து 3 மாதத்திற்குள் சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என இந்திய அரசின் சட்டமாகச் சொல்கிறோம் என்று தீர்ப்பளித்தார்.

 

ஓ.பி.எஸ். உள்ளிட்டவர்களுக்கு எதிராக தி.மு.க. தொடர்ந்த வழக்கில், கடந்த பிப்ரவரி 14- ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, 3 மாதத்திற்குள் சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என நாரிமன் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்புதான் இந்திய நாட்டின் சட்டம். அதனால் சட்டத்திற்குட்பட்டு சபாநாயகர் நடந்து கொள்வார் எனச் சொல்லி வழக்கை முடித்து வைத்தார்.

 

கடந்த மே 14-ஆம்  தேதியோடு 3 மாத கெடு முடிந்துவிடுகிறது. ஆனால், ஓ.பி.எஸ். உள்ளிட்டவர்களுக்கு எதிராக சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. கரோனா காலம் என்றாலும் காணொளி மூலமாக நீதிமன்றங்களும், தலைமைச்செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களும் இயங்குகின்றன. கரோனா நெருக்கடிக்கு முன்பு, பிப்ரவரி 14-ஆம் தேதியிலிருந்து மார்ச் 24 வரை சட்டமன்றம் நடந்ததே. அந்த 40 நாட்களில் உரிய நடவடிக்கையை சபாநாயகர் எடுத்திருக்க முடியுமே, ஏன் செய்யவில்லை?
 

admk


2017 பிப்ரவரி 18-ஆம் தேதிதான் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப் பட்டபோது, ஓ.பி.எஸ். உள்ளிட்ட11 பேர் சபையில் இருந்தார்களா? தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தார்களா என்பதை அன்றைய சட்டமன்ற நட வடிக்கைகளில் பதிவாகியிருப்பதைப் பார்த்தாலே சபாநாயகரால் தெரிந்துகொள்ள முடியும்.

 

தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேருக்கு எதிரான தகுதி நீக்கம் குறித்த சபாநாயகரின் நோட்டீஸுக்குப் பதில் அளிக்க மேலும் 1 வாரம் டைம் கேட்கப்பட்டதற்கு மறுத்த சபாநாயகர், நோட்டீஸ் கொடுக்கப்பட்ட 15 நாளிலேயே அவர்களை தகுதி நீக்கம் செய்தார். ஆனால், ஓ.பி.எஸ். உள்ளிட்டவர்களுக்கு எதிரான விவகாரத்தில் கரோனா நெருக்கடி இல்லாமல் 40 நாட்கள் இருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? மேலும், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க கேட்டுக்கொண்டார் சபாநாயகர். ஆனால், அ.தி.மு.க.-வில் ஓ.பி.எஸ். அணியினர் இணையும் நாள் (மார்ச்-20, 2017) வரை மன்னிப்புக் கேட்கவில்லை. அதனால் அவர்களது பதவி எப்போதோ பறிக்கப்பட்டிருக்க வேண்டும்.

 

அவர்களோ, கட்சி கொறடா எங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கவில்லை எனச் சொல்லி வருகிறார்கள். இதுவே தவறு. தலைமைத் தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ்., செம்மலை கொடுத்த பிரமாண பத்திரத்தில், கொறடா நோட்டீஸ் கொடுத்ததாகச் சொல்லியிருக்கிறார்கள்.

 

சட்டமன்றத்தின் அ.தி.மு.க. தலைவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். அவர்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். அதன் மீதுதான் வாக்கெடுப்பு நடக்கிறது. இரட்டை இலையில் வென்றவர்கள் அனைவரும் ஆதரித்து வாக்களித்திருக்க வேண்டும். அதனால் இந்த இடத்தில் கொறடாவின் உத்தரவு அவசியம் இல்லை.

 

ஓ.பி.எஸ். உள்ளிட்டவர்கள் அதனை எதிர்த்து வாக்களித்ததால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டியவர்கள். ஆனால், தகுதி நீக்கம் செய்யப்படாததால், மூன்று மாதத்திற்குள் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தந்துள்ள தீர்ப்பும் புறக்கணிக்கப்பட்டிருப்பதால் புதிய அஸ்திரத்தை எடுக்கும் வகையில் புதிய மனுவைத் தாக்கல் செய்திருக்கிறோம்.

 

இந்த வழக்கின் தீர்ப்பு வரும்வரை ஓபிஎஸ், மாஃபா பாண்டியராஜன் இருவரும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும், 11 எம்.எல்.ஏ.க்களும் சட்டமன்றத்துக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும், அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மனுவில் கோரியுள்ளோம்''’ என விரிவாகப் பேசினார்.

 

புதிய அஸ்திரத்தை தி.மு.க. கையிலெடுத்திருப்பதை எடப்பாடி எதிர்பார்க்கவில்லை. இதன் சாதக-பாதகங்களை அரசின் குற்றவியல் வழக்கறிஞர்களிடம் விவாதித்திருக்கிறார். வழக்கறிஞர்கள் தரப்பில் நம்பிக்கை கொடுக்கப்பட்டிருந்தாலும், எடப்பாடியிடம் ஒரு பதட்டம் இருந்தது என்றே விசயமறிந்த அ.தி.மு.க. சீனியர்கள் சொல்கின்றனர்.

 

http://onelink.to/nknapp


இந்தநிலையில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் கேட்டபோது, "சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை. அதனால்தான் சபாநாயகரே முடிவு செய்யட்டும் எனச் சொல்லி தி.மு.க. போட்ட வழக்கை ஏற்கனவே முடித்து விட்டது உச்சநீதிமன்றம். சபாநாயகர் எங்களிடம் விளக்கம் கேட்டார். நாங்களும் கொடுத்துவிட்டோம். தி.மு.க.-வுக்கு மக்களுக்கான அரசியல் செய்ய வழியில்லாததால் எங்களை சீண்டும் வகையில் இப்படி தேவையற்ற மனுக்களைப் போட்டு தங்களை நிலை நிறுத்திக்கொள்ள முயற்சிக்கிறார் மு.க.ஸ்டாலின். இதிலும் அவர்கள் தோற்றுப்போவார்கள்'' என்கிறார் அழுத்தமாக.

 

தி.மு.க.-வின் புதிய அஸ்திரத்தில் அ.தி.மு.க. ஆட்சி வீழுமா? ஓ.பி.எஸ். உள்ளிட்டவர்களின் பதவி தப்புமா? என்கிற விவாதங்கள் அ.தி.மு.க. அரசியலில் அதிகரித்துள்ளது.

 

 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.