Skip to main content

''யார் பலசாலி?'' EPS-OPS மோதல்! கவலையில் ர.ர.க்கள்... வேடிக்கை பார்க்கும் சசிகலா... 

Published on 21/08/2020 | Edited on 21/08/2020
wwww

 

 

"முதல்வர் ரேஸ்' என கடந்த இதழ் நக்கீரனில் வெளியான அட்டைப்பட கட்டுரைதான் தமிழக அரசியல் களத்தின் தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை 2021 தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவதில் பெரிய தடை ஏற்பட்டிருக்கிறது. அந்த தடையை ஏற்படுத்தியவர் தர்ம யுத்தம் கதாநாயகனான ஓ.பன்னீர் செல்வம்.

 

ஜனவரி மாதம் சிறையைவிட்டு சசிகலா வருவதற்கு முன்பே பல காரியங்களை திட்டமிட்டு செய்ய முயற்சித்தார் எடப்பாடி பழனிசாமி. அதில் ஒன்று ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை அரசுடைமையாக்கியது. அதற்கு அடுத்தபடியாக தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து அங்கிருக்கும் முக்குலத்தோர் சமூகத்தை சார்ந்த அ.தி.மு.க.வினரின் மத்தியிலும் அடுத்த முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்துவதற்கு வேலை செய்தார். இதுதவிர தென் மாவட்டத்தில் உள்ள முக்குலத்தோர் அல்லாத அ.தி.மு.க. மந்திரிகளான கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி மற்றும் முன்னாள் அமைச்சர் தள வாய் சுந்தரம் ஆகியோரை தூண்டிவிட்டு அடுத்த முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என பேச வைத்தார்.

 

இது ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்தது. இதனால் ஏற்பட்ட மோதலால் அமைச்சர் செல்லூர் ராஜு முதல்வர் வேட்பாளர் பற்றி செய்தி யாளர்களிடம் பேச, அதற்கு எதிராக எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எடப்பாடி சொல்லி ஒரு ட்வீட் வெளியிட்டார். இது விவாதமாக ஓ.பி.எஸ்.ஸின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ்.தான் 2021ல் முதல்வராக வருவார் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

 

அமைச்சர்களின் கருத்து மோதல்களாக இருந்த இந்த விவகாரம் தொண்டர்களின் போஸ்டர் மோதலாக மாறியது. இதனால் கடுப்பான எடப்பாடி பழனிசாமி, அதற்கு பதிலடி கொடுக்க சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை பயன்படுத்தி கொண்டார். ஆகஸ்ட் 15ஆம் தேதி நடந்த சுதந்திரதின கொண்டாட்டத்தில் கோட்டையில் கொடியேற்றி விட்டு அரசு விருதுகளை எடப்பாடி வழங்கினார். அதில் சிறந்த சேவைக்கான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது, முதல் விருதாக செல்வக்குமார் ஆனந்தம் என்கிற இளைஞருக்கு வழங்கப்பட்டது. சாகச செயலுக்கான கல்பனா சால்வா விருது பெரம்பலூரைச் சேர்ந்த மூன்று பெண்களுக்கு வழங்கப்பட்டது. மகளிர் சேவைக்கான விருது கோவை மாவட்டத்தை சேர்ந்த குடும்பநல ஆலோசகர் கோதணவள்ளிக்கு வழங்கப்பட்டது. அதற்கு பிறகு சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருது டாக்டர் ஷாமளாவுக்கு வழங்கப்பட்டது. கோவிட் 19 ஒழிப்புக்கான முதல்வரின் சிறப்பு விருது உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளரான டாக்டர் சௌமியா சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது. ஆறாவதாக நல் ஆளுமை விருதாக கருவூல கணக்குத்துறைக்கான விருது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டது.

 

eps ops

 

முதல் ஐந்து விருதுகள் வழங்கப்படும்வரை ஓ.பி. எஸ்.ஸை வரிசையில் நிற்க வைத்தார் எடப்பாடி பழனிசாமி. 6வதாக விருது பெற ஓ.பி.எஸ்.ஸை அழைத்த எடப்பாடி, அவரை பக்கத்தில் நில்லுங்கள் என கை காட்டி நிற்க வைத்தார். முதல்வர் வேட்பாளர் என ஓ,பி.எஸ். ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து கொண்டாடி வரும் நிலையில் தன்னை எடப்பாடி பத்தோடு பதினொன்றாக எடப்பாடி நிற்க வைத்ததை ஓ.பி.எஸ். பெரிய அவமானமாக கருதினார். வாங்கிய விருதை கையில் பிடிக்காமல், விருது பெற்ற மற்றவர்களுடன் எடுக்கப்பட்ட குரூப் போட்டோவில் நின்ற ஓ.பி.எஸ். கோபத்தில் சிவந்த முகத்துடன், "என்னை அவமானப்படுத்தாதீங்க'' என முதல்வர் அலுவலக அதிகாரிகளை திட்டிவிட்டு நேராக வீட்டிற்கு சென்றார்.

 

அவரை சமாதானப்படுத்த தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்பட 12 அமைச்சர்கள் ஓ.பி.எஸ். வீட்டிற்கு சென்றனர். அவர்களிடம் கோபமாக பேசிய ஓ.பி.எஸ்., "நான் மூன்று முறை முதலமைச்சராக இருந்துள்ளேன். என்னை வரிசையில் நிற்க வைத்து அவமானப்படுத்தினார் எடப்பாடி. ஓ.பி.எஸ். என்பவன் பத்தோடு பதினொன்றாக நிற்கத்தான் தகுதி உடையவன் என்கிறீர்களா?'' என கேட்டார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், "ஆண்டிப்பட்டியில் 2021 தேர்தலில் ஓ.பி.எஸ்.தான் முதல்வர் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீங்களும் நாளை நமதே என டிவிட்டரில் செய்தி வெளியிடுகிறீர்கள். இதெல்லாம் சரியான நடவடிக்கையா'' என்றார். அது ஓ.பி.எஸ்.ஸின் கோபத்தை மேலும் கிளறிவிட்டது. "அதே தேனியில் ‘இரும்பு மனிதர் எடப்பாடி என பால்பாண்டியன் என்பவர் போஸ்டர் அடித்தார். அந்த போஸ்டரை எடப்பாடித்தான் அடிக்க சொன்னாரா'' என கோபமாக கேட்டார். அதேபோல் என்றென்றும் மக்கள் முதல்வர் ஓ.பி.எஸ்., 2021 CM OPS என அடையாளம் தெரியாதவர்கள் போஸ்டர்கள் அடித்துள்ளனர் என ஓ.பி.எஸ். பதில் கொடுத்தார். "பால்பாண்டியன் அடித்த போஸ்டர்மீது இடம்பெற்ற இ.பி.எஸ். முகத்தில் மாட்டுச்சாணி பூசப்பட்டது. இதெல்லாம் முதல்வரை கோபப்பட வைத்தது. நாங்கள் தான் அவரை சமாதானம் செய்தோம்'' என தங்கமணியும், வேலுமணியும் எடுத்துச்சொல்ல, "2021ல் என்னை முதல்வர் வேட்பாளர் என யாரோ ஒருவர் போஸ்டர் அடித்ததை பற்றி பேசுகிறீர்கள். 2021ல் எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி யாரிடம் கேட்டு, ட்விட்டரில் பதிவிட்டார். அவரை எடப்பாடி பழனிசாமி கண்டித்தாரா'' என தங்கமணி, வேலுமணியிடம் கோபமாக எகிறினார் ஓ.பி.எஸ்.

 

அதற்கிடையே முதல்வர் வேட்பாளர் யார் என முடிவு செய்யாமல் தேர்தலை சந்திப்பது அ.தி.மு.க.விற்கு பலவீனத்தை தரும் என எடப்பாடிக்கு தேர்தல் ஆலோசனை சொல்லி வரும் சுனில் போன்றவர்கள் திகைக்கிறார்கள். எனவே முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியையே அடுத்த முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என தங்கமணியும், வேலுமணியும், செங்கோட்டையனும் மாறி மாறி பேசினார்கள்.

 

அவர்களிடம், "முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிப்பதற்கு நேரம் இருக்கிறது. இப்பொழுதே என்னை எடப்பாடி அவமானப்படுத்துகிறார். எனக்கு துணை முதல்வர் என்ற அடிப்படையில் எந்த மரியாதையும் அளிக்கப்படவில்லை. தொடர்ச்சியாக நான் அவமானப்படுத்தப்படுகிறேன். இந்த சூழ்நிலையில் என்னால் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என சொல்ல முடியாது. யார் முதல்வர் வேட்பாளர் என யாரும் பேசக்கூடாது என நாங்கள் இருவரும் சேர்ந்து அறிவித்துள்ளோம். துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி, யார் முதல்வர் வேட்பாளர் என கட்சித் தலைமை முடிவு செய்யும் என அறிவித்திருக்கிறார். அதற்கு முன்பு ஏன் அவசரப்பட வேண்டும். என்னால் இப்பொழுதே முதல்வர் வேட்பாளர் பழனிசாமி என அறிவிக்க முடியாது'' என்று கோபத்துடன் ஓ.பி.எஸ். பேச, அந்த தகவலை எடப்பாடியிடம் பகிர்ந்து கொண்டார்கள் பேச்சுவார்த்தைக்கு சென்ற மந்திரிகள்.

 

இருபுறமும் மாறி மாறி நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியில், "யார் முதல்வர் என்பதைப் பற்றி தலைமையின் ஒப்புதல் இல்லாமல் யாரும் பேசக்கூடாது. இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என ஒரு அறிக்கை இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். ஆகியோர் கூட்டாக வெளியிட்டார்கள்.

 

இதற்கிடையே சசிகலா வெளியே வந்தால் என்ன நடக்கும் என்பது பற்றியும் காரசாரமாக இந்த பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கப்பட்டுள்ளது. சசிகலா வரும்போது ஏற்படும் நிலைமைகளைப் பற்றி அப்போது முடிவு செய்து கொள்ளலாம் என ஒரு தரப்பும், சசிகலா வகையறாக்களை அனுமதிக்கக்கூடாது என ஒரு தரப்பும் பேசியிருக்கிறார்கள். இந்த மோதலை சசிகலா வகையறாக்கள் மௌனமாக வேடிக்கை பார்த்ததாக மன்னார்குடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பா.ஜ.க.வும் அ.தி.மு.க தலைவர்கள் இப்படி வெளிப்படையாக மோதுவது தி.மு.க.வுக்கு சாதகமாகும் என கவலை தெரிவித்துள்ளது. மொத்தத்தில், அ.தி.மு.க.வின் ஒட்டுமொத்த தலைவர், முதல்வர் வேட்பாளர், வருங்கால பொதுச்செயலாளர் என எடப்பாடி உருவாக்கி வந்த இமேஜுக்கு பலத்த அடி கொடுத்துள்ளார் ஓ.பி.எஸ்.

 

சசிகலா வருகைக்கு முன்பு தங்களில் யார் பலசாலி என்பதை நிரூபிக்க ஒரு பெரிய மோதலே அ.தி.மு.க.வில் நடைபெற்று வருகிறது. என்ன நடக்குமோ என்ற கவலையுடன் நடப்பவற்றை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அதிமுக தொண்டர்கள்.