Advertisment

புரட்சித் தமிழர் மாநாடு; கதறிய தொண்டர்கள்... பரிதவித்த மக்கள் 

EPS Madurai meeting cover story

Advertisment

அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு மறைந்தார். அவரது மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்பில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு பிறகு இறுதியாக பொதுச் செயலாளர் பதவியை ஜெயலலிதாவுக்கென நிரந்தரமாக ஒதுக்கி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பில் முறையே ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். செயல்பட்டனர். பிறகு நடந்த தேர்தல்களில் தோல்வி, அ.தி.மு.க.வின் சறுக்கல்கள் உள்ளிட்டவைகளால் நிரந்தர பொதுச்செயலாளர் பொறுப்பை நீக்கி கட்சியினரால் இ.பி.எஸ். தற்போதைய பொதுச் செயலாளராக அமர மீண்டும் கட்சி ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்பட்டுவருகிறது.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களின் பலத்தைக் காட்ட கடந்த ஏப்ரல் மாதம் திருச்சியில் மாநாட்டை நடத்தி முடித்ததும், அ.தி.மு.க.வின் பொன்விழா மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று அ.தி.மு.க.வின் பொன்விழா மாநாடு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மதுரையில் நடைபெற்றது.

EPS Madurai meeting cover story

Advertisment

மாநாட்டிற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் அழைத்து வரப்பட்டதால் மதுரை தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசலில் மூச்சுவிட திணறியது. நேற்று காலை 8.45 மணி போல் மாநாட்டின் மைதானத்திற்கு எடப்பாடி பழனிசாமியின் வாகனம் வந்தது. அதிமுகவின் 51வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் அடையாளமாக மாநாட்டு திடலில் 51 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தில் அதிமுக கொடியை இ.பி.எஸ். ஏற்றினார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து சுமார் ஒரு டன் மலர் கூட்டத்தின் மீது தூவப்பட்டது. இந்தத் துவக்கவிழாவில் திருச்செந்தூரில் இருந்து கொண்டுவரப்பட்ட வெள்ளி வேல் இ.பி.எஸ்.க்கு வழங்கப்பட்டது. அ.தி.மு.க. கொடியை ஏற்றி, இ.பி.எஸ். மாநாட்டை துவக்கிவிட்டுச் சென்றபிறகு காலை முதல் மாலை வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பிறகு மாலை 4.30 மணி அளவில் மாநாடு பந்தலுக்கு வந்த இ.பி.எஸ், இறுதியில் தனது உரையை நிகழ்த்தினார்.

இந்த மாநாட்டில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும், விமர்சனத்துக்கு உள்ளாகும் வகையிலுமான நிகழ்வுகளும் நடந்துள்ளன. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு வந்த அ.தி.மு.க. தொண்டர்களால் மதுரை தேசிய நெடுஞ்சாலை உட்பட புறவழிச் சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று முகூர்த்த நாள் என்பதால் சுப காரியங்களுக்குச் சென்றவர்களும், பல்வேறு பணிகளுக்காக சென்றவர்களும் கடும் சிரமத்தைச் சந்தித்ததாக விமர்சிக்கப்படுகிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவசர மருத்துவச் சேவைக்காக மருத்துவமனைக்குச் சென்றவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர் எனச் சொல்லப்படுகிறது. ஓரிடத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் கூட்ட நெரிசலால் திருப்பியும் அனுப்பப்பட்டது.

EPS Madurai meeting cover story

மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழகம் முழுவதும் இருந்து 15 லட்சம் பேர் வருகை தந்து சாதனை படைத்த” மாநாடு என்று பேசினார். ஆனால் அ.தி.மு.க மாநாட்டு திடலில் 1.25 லட்சம் இருக்கைகளே போடப்பட்டிருந்தது.

போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் அவதிப்பட, முந்தியடித்துக்கொண்டு மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள் தாகத்தைத் தீர்க்கவும் பசியைத் தீர்க்கவும் உணவு அருந்தச் செல்ல உணவின் ருசி அவர்களை முகம் சுளிக்கவைத்துள்ளது. அதோடு தாகம் தீர்க்க கொடுக்கப்பட்ட ஆரஞ்ச் ஜூஸ் வேறு ரகம் என ஆதங்கம் அடைந்தனர் தொண்டர்கள். 5 ஆயிரம் சமையல் கலைஞர்கள் இணைந்து செய்யப்பட்ட உணவு முறையாக இல்லை என்றும், வாயில் வைக்க முடியாத நிலையில் இருந்துள்ளது.

EPS Madurai meeting cover story

மதிய உணவுகளை உண்ணநீண்ட வரிசையில் நின்று சாம்பார் சாதம், புளி சாதங்களை வாங்கினார்கள் தொண்டர்கள். பெருமளவு உணவுகள் கீழே கொட்டியும். குப்பைத் தொட்டியிலும் போடப்படும் காட்சிகள் இணையத்தில் வைரலானது. இது குறித்து தொண்டர்களிடம் கேட்கையில், "சாம்பார் சாதத்தில் உப்பு சரியில்லை. சப்புன்னு இருந்தது, புளி சாதத்தில் மசாலாவின் வாசனை அதிகளவு இருந்தது" என அதிருப்தி அளிக்கும் வகையில் பேசினார்கள். பல தொண்டர்கள் ஒரு வாய் கூட சாப்பிடாமல் தூக்கி எரிந்துள்ளனர். லாரியில் விநியோகிக்கப்பட்ட ஆரஞ்சு ஜூஸில் தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததும், சுத்தமாக இல்லாத லாரியில் கொண்டுவரப்பட்டதும், வரிசையில் நின்று இதனை குடிப்பதற்கு தண்ணீரை குடித்து விடலாம் என தொண்டர்கள் குமுறினர்.

முன்னதாக மாநாட்டின் உணவு குறித்து பேசிய செல்லூரை சேர்ந்த அதிமுக எம்.எல்.எ, "மாநாட்டில் என்ன உணவு என்பது முக்கியமல்ல, சுவைதான் முக்கியம்" என அடுக்குமொழியில் உரைத்தார்.

மாநாடென்றால் மதுவில்லாமலா?; மாநாடு துவங்கும் முன்பே, வளையங்குளம் அருகில் தனியார் கிளப் அருகில் மதுபானம் விற்கப்படுவது அறிந்து அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். பலர் காலை 10 மணி முதலே டாஸ்மாக்கில் குவிந்தனர். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை என மூன்று மாவட்டத்தில் மட்டும் நேற்று ரூ. 46 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. பல கடைகளில் மது பாட்டில்கள் தீர்ந்ததால் சீக்கிரமே கடைகள் மூடப்பட்டுள்ளன. சில இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என மது கடைகள் மூடப்பட்டதாகவும் டாஸ்மாக் மேலாளர்கள் தெரிவித்தனர்.

அ.தி.மு.க.வின் பெரும்பலமான மகளிர் அணி நேற்றையமாநாட்டில் குறைந்து இருந்தது. ஜெயலலிதா இருந்தவரை அ.தி.மு.க. நடத்திய நிறைய மாநாடுகளில் பெண்களின் எண்ணிக்கை பாதியளவு இருக்கும். ஆனால், நேற்றைய தினம் நடந்த மாநாட்டில் 10 ஆயிரத்திற்கும் குறைவாகவே மகளிர் அணியின் படை பலம் இருந்துள்ளது.

EPS Madurai meeting cover story

சிவப்பு சட்டை அணிந்த தொண்டர் ஒருவர், மாநாட்டிற்கு வந்த இ.பி.எஸ்.சின் கார் முன் தரையில் விழுந்து கும்பிட்டார். முன்பு ஜெயலலிதாவின் கார் வரும் போது அதிமுக தொண்டர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர், அதனை இந்த செயல் நினைவுபடுத்தியது.

மாலை மாநாடு உரையை பொதுச்செயலாளரான இ.பி.எஸ். துவங்குவதற்கு முன்பாக அவருக்கு ‘புரட்சித் தமிழர்’ எனும் பட்டம் வழங்கப்பட்டது. மாநாட்டில், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், “இனி இந்தப் பட்டத்தில் தான் எடப்பாடி பழனிசாமியை அழைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். மாநாட்டு பந்தலில் அமர்ந்திருந்த இ.பி.எஸ்.க்கு கட்சி நிர்வாகியின் குழந்தை முத்தம் கொடுத்தது. அதனை வாஞ்சையுடன் வாங்கிய இ.பி.எஸ். மீண்டும் குழந்தைக்கு முத்தம் கொடுத்து மகிழ்ந்தார்.

அதன்பிறகு புரட்சித் தமிழர், அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உரை நிகழ்த்த துவங்கினார். அவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே, தொண்டர்கள் சாரை சாரையாக அணிவகுத்து வெளி சென்றனர். மேலும், சில தொண்டர்கள் மாநாடு மைதானத்தில் படுத்து உறங்கினர். இந்த காட்சிகள் எல்லாம் தற்போது வைரலாகி வருகிறது.

eps madurai admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe