Skip to main content

கேரளா முதல்வரை பின்பற்றும் எடப்பாடி... சளைக்காமல் போராடும் கேரளா முதல்வர்... கேரளா காட்டிய பாதை! 

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

பஞ்சாப், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் நான்கு மாநில மருத்துவ மற்றும் நிர்வாக அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் கேரளாவின் கொரோனா தடுப்பு முறைகளை கேள்விப் பட்டு அங்கே வருகிறார்கள். கேரளா மேற்கொண்ட தடுப்பு மற்றும் மருத்துவ நிவாரண முறைகளைக் கண்டு வியந்தவர்கள் அதே போன்று தங்கள் மாநிலத்திலும் நடை முறைப்படுத்துகின்றனர்.

 

keralaவெளிநாடுவாழ் இந்தியர்களை அதிக அளவில் கொண்ட மாநிலமான கேரளா, கொடூர கொரோனாவின் தாக்கத்திலும் முதன்மையிலிருக்கிறது. ஆனாலும் துவண்டுவிடாத பினராய் விஜயன் தடுப்பு மற்றும் நிவா ரண நடவடிக்கைகளைத் துணிச்சலாகவே மேற்கொள்கிறார். ஏனெனில் வெளிநாட்டிலிருக்கும் மலையாளிகள் தங்களின் தாயகம் வந்து போவதுதான் அடிப்படைக் காரணம்.

மார்ச் 20-ல் மட்டும் ஒரே நாளில் பிரிட்டிஷ், துபாயிலிருந்து வந்தவர்களால் காசர்கோட்டில் 6, எர்ணாகுளத்தில் 5 பேர், பாலக்காட்டில் ஒருவர் என 12 பேருக்கு கொரோனா பாஸிட்டிவ் என்று கண்டறியப்பட்டு "ஐஸோலேஷன்' எனப் படும் தனிமைப்படுத்தும் வார்டின் அதி தீவிரக் கண்காணிப்பில் வைக்கப் பட்டவர்களின் கொரோ னா பாஸிட்டிவ் எண்ணிக்கை 52. மாநிலம் முழுவதும் அந்தந்த மாநி லங்களின் மருத்துவர்களின் கண்காணிப்பி லிருப்பவர் (வீடுகளில்) கள் சுமார் பல ஆயிரம் பேர்கள். இவர்களில் 3 ஆயிரம் பேர்கள் அவரவர்களின் வீடுகளிலேயே தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு அந்தந்த சரகத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவப் பணியாளர்களால் அன்றாடம் கவனிக்கப்பட்டு வருகின்றனர். மாநிலமே பினராய் விஜயனுக்கு தோளுக்குத் தோள் நிற்கிறது. மட்டுமல்ல மூன்றாம் நிலையில் கொரோனாவின் தாக்கம் வீரியம் கொண்டவையாக இருக்கும் என்பதால் பலவிதமான முன்னேற்பாடுகள்.

பிளான் ஏ திட்டப் படி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று 40 படுக்கைகள், பிளான் பி யில் தனியார் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகளில் 500 படுக்கைகள், பிளான் சி படி நட்சத்திர ஹோட்டல்கள், பழைய மருத்துவமனைகள், தேர்வு செய்யப்பட்ட பள்ளிகள் போன்றவைகளை ஒருங்கிணைத்து சுமார் 3 ஆயிரம் படுக்கைகள் எனப் பக்காவாக அமைக்கப்பட்டு மருத்துவர்கள் உபகரணங்கள் என்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கொல்லம் மாவட்டத்தில் மட்டும் இப்படி என்றால் மாநிலத்திலுள்ள 19 மாவட்டங்களிலும் இதே போன்று நடவடிக்கைகள். வரும் மூன்றாம், நான்காம் நிலைகளில் கொரோனாவின் தாக்கம் கடுமையாகலாம், பாதிப்புகளின் எண்ணிக்கையும் உயர வாய்ப்பு என்பதால் இந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


கொரோனாவின் ஆரம்ப கட்டத்தாக்குதல் காரணமாக பாதிப்பில் பல ஆயிரம் குடும்பங்களின் அடிப்படை வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டிருப்பதோடு அவர்கள் அடியோடு முடக்கப்பட்டுள்ளார்கள். மேலும் கேரளாவின் பிற தொழில்கள், அடித்தட்டு மக்களின் வாழ்க்கை கட்டமைப்பும் நிலைகுலைந்து போயுள்ளன. இவைகளனைத்தையும் கணக்கில் கொண்ட பினராய் விஜயன் அந்த குடும்பங்களை மீட்டெடுக்க தேசத்தின் பிற மாநிலங்களின் சிந்தனையில் எட்டாத நிவாரணப் பணிகளைத் துணிச்சலாக செய்தவர், 20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மார்ச்19 அன்று மீட்பு நிவாரணங்களை நடைமுறைப் படுத்தியிருக்கிறார்.

இந்த மக்கள் நலப்பணிகள், பினராய் விஜயனின் நேரடிக் கண்காணிப்பில், ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்துறை மூலமாகச் செயல்படுத்தப்படுகின்றன. அதன்படி, இந்த நிதியின் மூலமாக, குடும்பஸ்ரீ திட்டத்தின் கீழ்வருகிற குடும்பங்கள் உடனடிக் கடன் பெறலாம். கொரோனா தாக்கம் காரணமாக முடங்கிப்போன குடும்பங்களுக்கு இந்த மார்ச்சில் சமூகப் பாதுகாப்பு பென்சன் வழங்கப்படும். 1320 கோடி ஒதுக்கப்பட்டதில் அவர்களுக்கான இரண்டு மாத பென்ஷன் தொகைகள் அவர்களின் வங்கிக்கணக்குகளில் செலுத்தப்படும். சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வராத குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்கான ஒதுக்கீடு 100 கோடி. மேலும் அந்தக் குடும்பங்களுக்கான ஒரு மாத உணவிற்கான செலவு தொகையும் வழங்கப்படும்.

 

 

admk50 கோடி மதிப்பீட்டில் ஏப்ரலில் மாநிலம் முழுவதிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவகங்கள் ஏற்படுத்தப்பட்டு அவற்றில் மக்களுக்காக இருபது ரூபாய் குறைந்த கட்டணத்தில் உணவு சப்ளை செய்யப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் புனரமைப்பிற்காக அவர்களின் மருத்துவச் செலவிற்காக ஐந்நூறு கோடி தயார் நிலையில். கேரளா முழுவதிலும், நிறுத்தி வைக்கப்பட்ட காண்ட்ராக்ட் பணிகளின் பில் தொகை ஏப்ரலில் செட்டில் செய்யப்படுவதற்காக ஒதுக்கப்பட்ட தொகை பதினான்காயிரம் கோடி.

கொரோனா தாக்க நேரத்தில் ஆட்டோக்கள் சிறப்பாகச் செயல்பட்டதால் மாநிலம் முழுவதிலுள்ள ஆட்டோக்களுக் கான பிட்னஸ் சார்ஜ் எனப்படும் எப்.சி. கட்டணத்தில் முழு விலக்கு.

சிறு வாடகை வாகனங்கள், ஒப்பந்தப் பேருந்துகளுக்கு அரசு வரிக்கட்டணம் குறைப்பு. போக்குவரத்து டாக்ஸிகள் கட்டுகிற மூன்று மாதத்திற்கான அரசு வரிக்கட்டணத்தின் கால அவகாசம் நீட்டிப்பு. மாநிலம் முழுவதிலும், மின்கட்டணம், குடிநீர்க்கட்டணம் செலுத்துவதில் ஒரு மாதம் அலவன்ஸ் அளிக்கப்படுகிறது. தவிர, கேரளாவிலுள்ள அனைத்து திரையரங்குகளின் கேளிக்கை வரியினைக் குறைப்பதற்காகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் மேலாக, மாநில வங்கிகளின் அமைப்புச் செயலாருடன் பேசிய முதல்வர் பினராய்விஜயன் கேரளாவின் அனைத்து வங்கிகளிலும், கடன் பெற்றவர்களிடம் ஒரு வருடம் கடன் தொகையைக் கேட்டு நிர்ப்பந்திக்கக் கூடாது. பாக்கித் தவணைக்காக அவர்களின் இனங்களை ஜப்தி செய்யவும் கூடாது என்று வலியுறுத்தியதை வங்கிகளின் சம்மேளனம் ஏற்றுக் கொண்டுள்ளது.

சுற்றுலா, எஸ்டேட் தொழில் அண்டிப்பருப்பு தொழிற் சாலைகள் உள்ளிட்ட சிறு நிறுவனங்களின் மூலமாகவே சொற்ப அளவிலான வருமானத்தைக் கொண்ட கேரளா, இந்த பேரிடரில் இத்தனை பெரிய தொகையை நிவாரணமாகக் கடுமையான நிதி நெருக்கடிக்கிடையிலும் நடைமுறைப்படுத்துவது அசாதாரணம் என்கிறார்கள். இவைகளனைத்தையும் சுட்டிக்காட்டி தங்களின் மாநிலத்திற்கு முறையாக வரவேண்டிய நிலுவை நிதியினை உடனே விடுவிக்கவேண்டும் என்று மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார் பினராய்விஜயன்.

இதனிடையே கேரள காவல்துறை கொரோனா தடுப்பு முறைபற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாஸ்க் அணிந்து கைகளில் சோப்பு கொண்டு கழுவும் முறையைக் காவலர்கள் குரூப் டான்ஸ் ஆடிக்கொண்டு கானாபாட்டுப் பாடியபடி குத்தாட்டம் மூலம் வெளிப்படுத்தும் வீடியோ வைரலாகியுள்ளது.

கஜா, ஒக்கி, இருபெரும் புயல்களால் சிதைக்கப்பட்ட கேரளாவைப் பல்வேறு வழிகளில் புனரமைத்து மீட்டெடுத்த பினராய் விஜயன், கொடூரக் கொரோனாவின் தாக்கத்திலும் மீட்டெடுக்க அசுரபலத்துடன் போராடி வருகிறார். கேரளாவைப் பார்த்து ஓரளவு கற்றுக்கொண்டு -இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.


 

 

Next Story

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Former Minister MR Vijayabaskar appears in court

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

மேலும் இது தொடர்பாக மேலக்கரூர் பொறுப்பு சார்பதிவாளரும் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதே சமயம் இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். 

Former Minister MR Vijayabaskar appears in court

அதனைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி எம்.ஆர். விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனுவும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே தலைமறைவாக கேரளாவில் பதுங்கி இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தனிப்படை போலீசாரால் கடந்த 16 ஆம் தேதி (16.07.2024) கைது செய்யப்பட்டார். இத்தகைய பரபரப்பான சூழலில் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை என 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையே பிரகாஷ் வாங்கல் காவல் நிலையத்தில் ஏற்கனவே  எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 13 பேர்  மீது அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 8 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சி மத்திய சிறையில் இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று (19.07.2024) ஆஜர்படுத்தப்பட்டார். 

Next Story

‘போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - இ.பி.எஸ். வலியுறுத்தல்!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Government should take action on time basis EPS Emphasis

கொலை பாதகர்களிடமிருந்து மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று சிந்தித்து போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “திமுக அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டி, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தராமல், அவர்களை சிரமத்திற்குள்ளாக்கி தனது நிர்வாகத் திறமையின்மையை நாள்தோறும் வெளிக்காட்டி வருகிறார். கடந்த மூன்றாண்டுகளாக திமுக ஆட்சியில் நடைபெறக்கூடிய சமூக விரோதச் செயல்களை சுட்டிக்காட்டினால், தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று கூறும் முதல்வர் மு.க. ஸ்டாலின்,  நான் எத்தனையோ முறை வேண்டுகோள் விடுத்த பின்னரும் காவல் துறையினரை சுதந்திரமாக செயல்பட விடாமல் வைத்திருப்பது, நாள்தோறும் நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்களின் மூலம் நிரூபணமாகிறது.

யார் ஆட்சியில் இருந்தாலும் அங்கொன்றும், இங்கொன்றும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், வக்கிர புத்தி படைத்தவர்களாலும், ஒருசில கொலைகள் நடப்பது இயல்பு. குற்றவாளிகளை காவல் துறையினர் கண்டுபிடித்து கைது செய்வது நடைமுறை. ஆனால், திமுக ஆட்சியில் கொலைகள் செய்வதையே தொழிலாகக் கொண்டு பலர் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து வெறியாட்டம் ஆடுவதும், பல கொலைகளில் ஈடுபட்ட கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறையினர் திணறுவதும் கண்கூடாகும். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில்கூட 'நாங்கள்தான் செய்தோம்' என்று தானாகவே முன்வந்து சிலர் சரணடைந்துள்ளதும், அதில் ஒருவரைச் சென்னை மாநகர் காவல் துறையினர் என்கவுண்டர் செய்ததும் விந்தையான சம்பவமாகும். 

Government should take action on time basis EPS Emphasis

காங்கிரஸ் கட்சியின் நெல்லை மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் படுகொலை, சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக பகுதிக் கழகச் செயலாளர் சண்முகம் படுகொலை, மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன் படுகொலை என்று கட்சி பேதமின்றி பல படுகொலைகள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. இவற்றில் ஒருசில கொலை நிகழ்வுகளைத் தவிர, ஏனைய குற்றங்களில் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. உண்மைக் குற்றவாளிகள் இதுவரை பிடிபடாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. 2021இல் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தின் தலைநகராம் சென்னை கொலை நகரமாக மாறியுள்ளது என்ற நிலையில், கடந்த 200 நாட்களாக தமிழகமே கொலைக்களமாக மாறியுள்ளது. மக்கள் தங்களது உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் வாழ்வது அபாயகரமான ஒன்றாகும்.

திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 80 கொலைகளும்; பிப்ரவரி மாதம் 64 கொலைகளும்; மார்ச் மாதம் 53 கொலைகளும்; ஏப்ரல் மாதம் 76 கொலைகளும்; மே மாதம் 130 கொலைகளும்; ஜூன் மாதம் 104 கொலைகளும்; ஜூலை 17-ஆம் தேதி வரை 88 கொலைகளும் என, மொத்தம் சுமார் 200 நாட்களில் 595 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் சென்னை மாநகரில் மட்டும் 86 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது, இரண்டாவது மதுரையில் 40 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 35யும், விருதுநகரில் 31 கொலைகளும் நடைபெற்று முறையே மூன்றாவது, நான்காவது இடங்களைப் பிடித்துள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. 

Government should take action on time basis EPS Emphasis

'அடுத்தவர்கள் சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும்' என்ற இருமாப்போடு இனியும் செயல்படாமல், சுய சிந்தனையோடு கொலை பாதகர்களிடமிருந்து மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று சிந்தித்து, போர்க்கால அடிப்படையில் இந்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்துகிறேன். கையில் அதிகாரம் இருக்கிறது என்ற மமதையில் தொடர்ந்து காவல் துறையை தங்களின் சுயநலத்திற்காக இந்த ஆட்சியாளர்கள் ஏவல் துறையாக பயன்படுத்துவார்களேயானால், 'அரசியல் பிழைத்தோர்க்கு, அறம் கூற்றாகும்' என்பதை நினைவூட்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

The website encountered an unexpected error. Please try again later.