/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sankar_7.jpg)
இயக்குநர்ஷங்கர் வெளியிட்டிருக்கும் அறிக்கை பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. ‘எந்திரன்’ கதைத் திருட்டு வழக்கில் இயக்குநர் ஷங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தின் சார்பில் கடந்த 30-ந் தேதி அறிவிப்பு வெளியானது.
உடனே, அவரது வழக்கறிஞரிடம் இதைக் காட்டி இதுபற்றி அவரிடம் உறுதி செய்த பிறகே, அது தொடர்பான செய்திநக்கீரன்உள்ளிட்ட ஊடகங்களில் வெளியிடப்பட்டது. இந்த உண்மையை மறைத்து திங்கட்கிழமை இயக்குநர் ஷங்கர், ஒரு அறிக்கையைத் திரைமறைவில் இருந்து வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், ’எனக்கு பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பதாக ஒரு பொய்யான செய்தியைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். எனது வழக்கறிஞர் சாய் குமார் இன்று நீதிமன்றத்தை அணுகி இந்தச் செய்தியை அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். எனக்கெதிராக எந்த வாரண்ட்டும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை உடனடியாக நீதிபதி உறுதி செய்தார்’என்று தெரிவித்திருக்கிறார்.
அவர் அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. ஆனால் எல்லாமே தன் கையில் என்பது போல் அவர் மேலும் சில செய்திகளை அந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறார்.
அதன் அடிப்படையில் எழும் கேள்விகள் என்னவென்றால்...
1. “இணையத்தில் தினசரி நீதிமன்ற வழக்குகளின் நிகழ்வுகள் பதிவேற்றுவதில் நடந்த தவறு காரணமாக இப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது. அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.” என்று நீதிமன்றத்தின் சார்பில் -அதன் குரலில், அந்த அறிக்கையில் இயக்குநர் ஷங்கர் அறிவித்திருக்கிறார்.
நீதிமன்றத்தின் நடவடிக்கை குறித்து, அல்லது அதன் தரப்பில் நிகழ்ந்த தவறு குறித்து நீதிமன்றம்தானே அறிவிக்க வேண்டும்? ஆனால் இயக்குநர் ஷங்கர் எந்த அதிகாரத்தில் இப்படி அறிவித்திருக்கிறார்?நீதிமன்றத்தின் சார்பில் ஒரு அறிவிப்பை வெளியிடும் அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தார்கள்?
2. அடுத்து, ”சரி பார்க்கப்படாமல் இப்படி ஒரு பொய்யான செய்தி உலவுவதைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது” என்றும்இயக்குநர்ஷங்கர் முழு உண்மையை மறைத்திருக்கிறார். உண்மையில் இவரது வழக்கறிஞரிடம் அந்தப் பிடிவாரண்ட் செய்தியை உறுதிசெய்த பிறகே, அதை ஊடகங்கள் வெளியிட்டன.
இதை முழுமையாக மறைத்து அவர், ஒட்டுமொத்த ஊடகத்தின் மீதும் ஒரு குற்றசாட்டை வைத்திருக்கிறார்.நீதிமன்ற இணைய இதழில் வெளியான அதிகாரப்பூர்வ செய்தியை ஊடகங்கள் வெளியிட்ட நிலையில், ஊடகங்கள் பொய் செய்தி வெளியிட்டதாக எப்படி அவரால் பழிபோட முடிகிறது?
3. குற்றவியல் வழக்குகளில் வக்கீலும் ஆஜர் ஆகாமல், குற்றம் சாட்டப்பட்ட நபரும் ஆஜர் ஆகாமல் இருந்தால் பிடி ஆணை பிறக்கப்படுவது நியதி. இவரது வழக்கிலும் அவ்வாறே இருவரும் ஆஜராகவில்லை. அதனால் பிடி ஆணை பிறப்பிக்கப்படுகிறது என நிதிமன்ற வெப்சைட்டில்குறிப்பிடப்பட்டிருந்தது. அதை ஊடகங்கள் வெளியிட்டது எப்படி பொய் செய்தி ஆகும்?
4. ”சரிபார்க்கப்படாமல் இப்படி ஒரு பொய்யான செய்தி உலவுவதைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது” என்றும் அந்த அறிக்கையில் அங்கலாய்த்திருக்கும் அவர்,நீதிமன்ற வெப்சைட்டில் வரும் ஒவ்வொரு உத்தரவையும் சம்மந்தப்பட்ட நீதிபதிகளிடமே சென்று சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறாரா?
5. நீதிமன்றக் கணிணி பதிவில்‘எந்திரன்’ தொடர்பான வழக்கில், இவரும் ஆஜராகவில்லை. இவர் சார்பாக இவர் வக்கீலும் ஆஜராகவில்லை என்று இருந்ததே அதுவும் பொய்யா?
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/3311.jpg)
6. மேலும் வாரண்ட் செய்தி பற்றிக் குறிப்பிட்டிருக்கும் அவர், ”இந்த விஷயம் எனது குடும்பத்துக்கும், நலம் விரும்பிகளுக்கும் தேவையில்லாத மன உளைச்சலைத் தந்துள்ளது” என்று சொல்லியிருக்கிறார்.அப்படிப்பட்டவர் கதையைப் பறிகொடுப்பவர்களின் மன வேதனையை ஏன் எண்ணிப் பார்க்கவில்லை. தனக்கு வந்தால்தான் அது ரத்தமா? மற்றவர்களுக்கு வந்தால் அது தக்காளி சட்னியா?
7. இப்படி எல்லாமே நம் பக்கம் என்ற மன நிலையில் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கும் ஷங்கர், எந்த வழக்கின் அடிப்படையில் நீதிமன்றத்தில் இருந்து அப்படியொரு உத்தரவு வந்தது என்பது குறித்து ஏன் எதையும் குறிப்பிடவில்லை?
8. தன் மீது என்ன வழக்கு? யார் தொடுத்தது? எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு? அந்த வழக்கில் தானோ அல்லது தனது வழக்கறிஞரோ எத்தனை முறை ஆஜர் ஆனோம் என்று அவர் ஏன் சொல்லவில்லை? இனியாவது அவர் சொல்லத்தயாரா?
9. நீதிமன்றம் தனக்குப் பிடிவாரண்ட் பிறப்பிக்கவில்லை என்று சொல்லியிருக்கும் ஷங்கர், தனக்கு அது என்ன உத்தரவைப் பிறப்பித்தது என்று சொல்ல வேண்டாமா? இல்லை வெறுமனே அவர் பெயரை பாராயணம் செய்வதற்காக அவர் குறித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதா?
10. பிடிவாரண்ட், நீதிமன்ற நோட்டீஸாக மாறிவிட்டது என்றாவது அவர் சொல்லியிருக்க வேண்டமா? இதுவரை ‘எந்திரன்’ தொடர்பான வழக்கில் ஒருமுறை கூட ஆஜராகாத அவர், அதற்காகவே உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் ஏற்கனவே அபராதம் கட்டிய அவர், தனக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது என்று குறைந்தபட்ச உண்மையையாவது அவர் வெளிப்படுத்த வேண்டாமா?
11. அதேபோல், நீதிமன்றம் தனது உத்தரவை இணையத்தில் ஏற்றும்போது தவறு நேர்ந்திருக்கிறது என்று சொல்லுமானால், அதற்குக் காரணமானவர்கள் யார்?அவர்கள் மீது என்ன நடவடிக்கை என்பதெல்லாம் கூட வெளிப்படையாகச் சொல்லப்பட வேண்டியவையே.
12. கடந்த 11 ஆண்டுகளாக நடந்துவரும் இந்த வழக்கில் எத்தனை முறை இது தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்துள்ளார்? வழக்கு குறித்த தன் நிலைப்பாட்டை அவர் எங்கே சொல்லியிருக்கிறார்?
13. இப்படி எல்லாவற்றையும் மறைத்தும் மழுப்பியும் அறிக்கை வெளியிட்டிருக்கும் இயக்குநர் ஷங்கர், இனிமேலாவது நீதிமன்றத்தை மதிப்பாரா? நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பாரா? இதன்மூலம் நாம் நீதிமன்றத்தை துளியளவும் விமர்சிக்கவில்லை. நீதிமன்ற நடைவடிக்கைகளைக்கையில் எடுத்துக்கொண்டு, அத்துமீறல் அறிக்கை வெளியிட்டிருக்கும் இயக்குநருக்கான, ஒரு செய்தியாளரின் விளக்கம்தான் இது.
- நமது நிருபர்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)