ADVERTISEMENT

என்னது... இவரு என்ஜினியரா???

09:30 PM Sep 16, 2017 | Anonymous (not verified)




நேற்று (15 செப்டம்பர்), இந்தியாவில் 'தேசிய பொறியாளர்கள் தினம்' கொண்டாடப்பட்டது. இந்திய பொறியியல் துறையின் தந்தை என அழைக்கப்படும் விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்த நாள் தான் இவ்வாறு கொண்டாடப்படுகிறது. 1861 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம், சிக்பல்பூர் அருகே உள்ள கிராமத்தில் பிறந்த இவர், தன் பொறியியல் கல்விக்குப் பின்னர், அன்றைய பம்பாய் பொதுப்பணித்துறையில் இருபத்தி ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு விருப்ப ஓய்வு பெற்றார். மைசூர் அரசின் தலைமை பொறியாளராகப் பொறுப்பேற்று, இவர் தலைமையில் உருவாக்கப்பட்ட கிருஷ்ணராஜ சாகர் அணை உள்ளிட்ட பல கட்டிடங்கள் இன்றும் இவர் பெயரைச் சொல்கின்றன. 1908இல் ஹைதராபாத்தில் ஏற்பட்ட வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தி நகரையே கிழித்துப்போட்டது. வெள்ள மேலாண்மைத் திட்டத்தை உருவாக்கி, நகரத்தின் கட்டமைப்பை மேம்படுத்தும் பொறுப்பை ஏற்று விஸ்வேஸ்வரய்யா செயல்படுத்திய திட்டங்கள், இன்றும் வெள்ள மேலாண்மைத் துறையில் பின்பற்றப்பட வேண்டிய பாடங்களாய் இருக்கின்றன. இத்தகைய ஒருவரின் பிறந்த தினம் தான் தேசிய பொறியாளர்களின் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.




சமூக வலைத்தளங்களின் சம்பிரதாயப்படி 'பொறியாளர் தின'த்திற்கும் மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டன. தமிழ் மீம்ஸ்களில் பொறியாளன் என்று பெருமைப்படும் மீம்ஸ்கள் சிலவும், 'ஏன் படித்தோம் இதை', 'வேலை கிடைக்காது' என்ற ரீதியில் பல மீம்ஸ்களும் உலவின. அவற்றில் உண்மை இருப்பதையும் மறுக்க முடியாது. 2006 ஆம் ஆண்டு, கிராமப்புற மாணவர்களின் நலனுக்காக, பொறியியல் மற்றும் மருத்துவக் கல்விக்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை மாணவர்களோடு போட்டி போட்டு, கல்வி வியாபாரிகள் பயன்படுத்திக்கொண்டனர். அய்யங்கார் பேக்கரிகள், கும்பகோணம் டிகிரி காபிக்கடைகள் ஆரம்பிப்பது போல ஆளாளுக்கு பொறியியல் கல்லூரிகளைத் தொடங்கினர். ஊருக்கு வெளியே ஒரு காடு, நடுவில் ஒரு கட்டிடம், ஒரு புறம் மாணவர் விடுதி, மறுபுறம் மாணவிகள் விடுதி என இருந்தால் போதுமென வேறு எந்தத் தரமும் இல்லாமல் பல கல்லூரிகள் உருவாகி, பொறியாளர்களை உருவாக்கித் தள்ளின. எதைப் பற்றியும் கவலை இல்லாத அரசுகளால் தரமற்ற கல்லூரி, கல்வி என ஏமாந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்ததற்கு சம்மந்தமில்லாத வேலையை செய்தும், வேலை இல்லாதவர்களாகவும் இருக்க, இவர்களை 'டீக்கடை ராஜா'க்களாகவும், VIPகளாகவும் காட்டி கல்லாக் கட்டின திரைப்படங்கள். இன்று, 'ஒரு சீட் வாங்கினால் இரண்டு சீட் இலவசம்', 'ஐந்து மாணவர்களை சேர்த்துவிட்டால் தான் பேராசிரியருக்கு வேலை' என தாங்கள் செய்த அனைத்து ராஜதந்திரங்களும் வேலை செய்யாமல் கல்லூரிகளை மூடி, கல்யாண மண்டபங்களாகவும், ஷூட்டிங் நடத்தவும் வாடகைக்கு விடத்தொடங்கிவிட்டனர் வியாபாரிகள். இவர்களெல்லாம் ஏற்படுத்திய கரையைச் சுமந்து நிற்கிறது தமிழ்நாட்டில் பொறியியல் கல்வி.




ஆனால், உலக அளவில் நிகழ்ந்து வரும் பல்வேறு அறிவியல் முன்னேற்றங்களில் பொறியாளர்களின் பங்கு மிகப்பெரியது. இவர்கள் நாளுக்கு நாள் வாழ்க்கையை எளிதாகவும் சுவாரசியமாகவும் ஆக்கி வருகின்றனர். தமிழகத்திலும், பொறியியல் கல்வி படித்தவர்கள் அதே துறையிலும், பிற துறைகளிலும் சாதித்து வருகின்றனர். குடிமைப் பணி தேர்வுகள், வங்கித் தேர்வுகள் என என்ஜினீயர்கள் கலக்கிவருகின்றனர். பொறியியல் கல்வி படித்து பிற துறைகளில் சாதித்தும், சோதித்தும் வரும் சில VIPகளைப் பார்ப்போம்.





உதயசந்திரன் IAS

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் செயலாளராக பொறுப்பேற்று பல பாராட்டத்தக்க, பாராட்டப்பட்ட மாற்றங்களை செயல்படுத்தி, இப்பொழுது, 'பாடத்திட்டத்திற்கு மட்டும்' என்று அரசியல் கடிவாளம் போடப்பட்டுள்ள உதயசந்திரன் IAS ஈரோடு சாலை மற்றும் போக்குவரத்து தொழில்நுட்பக் கல்லூரியில் (IRTT) பி.ஈ படித்தவர்.

சுந்தர் பிச்சை

உலக அளவில் 'தமிழர்'களின் பெருமைக்கு இன்னும் கொஞ்சம் பலம் சேர்த்திருப்பவர் கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை. அப்துல் கலாமிற்கு பிறகு, சொல்லாத தத்துவங்களையெல்லாம் சொன்னதாக, அதிகம் மீம்ஸ் உருவாக்கப்படுவது இவரது பெயரில் தான். உலகத்தின் முக்கிய வியாபார நிறுவனத்தின் உயரிய பொறுப்பில் இருக்கும் இவர் ஒரு உலோகவியல் (Metallurgical) பொறியாளர்.

'மாஃபா' (Mafoi) பாண்டியராஜன்

'தேமுதிக'வில் இருந்து எம்எல்ஏவாகி, பின்னர் தொகுதி நலனுக்காக ஜெயலலிதாவை சந்தித்தவர். கடந்த தேர்தலில், அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராகி அமைச்சராகவும் ஆனவர். 'மஃபாய்' என்று துவங்கப்பட்டு தற்போது 'ராண்ஸ்டட்' என்று செயல்பட்டு வரும் மனித வள நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திவரும் தொழிலதிபர். சொல்ல சற்று கடினமாய் இருப்பதால் 'மாஃபா பாண்டியராஜன் ஆனார். இவரது தெளிவான பேச்சும் அணுகுமுறையும் நம்பப்பட்டது. ஆனால் 'நீட்' விஷயத்தில் சற்று களங்கப்பட்டது. இவர் கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் படித்த என்ஜினீயர்.

சுஜாதா

இளைஞர்களுக்கு, ஷங்கர், மணிரத்னம் படங்களின் 'வைப்ரன்ட்' வசனகர்த்தா, அதற்கு மூத்தவர்களுக்கு தொழில்நுட்பத்தையும், நிகழ் காலத்தையும், துப்பறிதலையும் கலந்து கொடுத்த எழுத்தாளர் என அறிமுகமான மறைந்த எழுத்தாளர் சுஜாதா, இன்றும் தமிழின் 'பெஸ்ட் செல்லர்' எழுத்தாளர்களில் ஒருவர்.இவர் சென்னை MITயில் படித்த பொறியாளர். பெங்களூர் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தவர். இன்றைக்கு பயன்பாட்டில் இருக்கும் மின்னணு வாக்கு இயந்திரத்தை, இவர் தலைமையிலான குழுதான் முதன் முதலில் வடிவமைத்தது. எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷினை கண்டுபிடிச்சது இவர் தான், ஆனா அதுல எந்த பட்டனை அமுக்குனாலும் ஒரே கட்சிக்கு ஓட்டு விழுகுறதைக் கண்டுபிடிச்சது இவரில்லை...

ரகுராம் ராஜன்

இந்திய ரிசர்வ் வங்கியின் 23ஆவது கவர்னராக இருந்த ரகுராம் ராஜன் , 'பணமதிப்பிழப்பு' (Demonitization) நடவடிக்கையை விமர்சித்தவர். பாஜகவிற்கு ஒத்துப்போகமாட்டார் என்பதால் ஒதுக்கப்பட்டவர். டெல்லி IITயில் பொறியியல் படித்த இவர், அடிப்படையில் தமிழர்.





நந்தன் நிலக்கேனி

'இன்ஃபோஸிஸ்' நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான நந்தன் நிலக்கேனி, இன்று நம்மையெல்லாம் ஆட்டி வைக்கும் 'ஆதார் கார்டு' குழுவின் தலைவராக காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்டவர். செயல்படுத்தலில் தொல்லை இருந்தாலும், தேசிய அடையாள அட்டை என்பது இந்தியாவின் முக்கிய முன்னெடுப்பு. இவர் மும்பை IITயில் படித்த எலக்ட்ரிகல் என்ஜினீயர்.

அரவிந்த் கெஜ்ரிவால்

இந்தியாவின் தலைநகரில், பாஜகவிற்கு தலைவலியாகத் திகழும் 'ஆம் ஆத்மீ', அரவிந்த் கெஜ்ரிவால். இவர் IIT காரஃக்பூரில் பொறியியல் படித்து, பின் அரசு பணியில் இருந்தவர். தனது முதல் தேர்தலிலேயே டெல்லியின் முதல்வர் ஆனவர்.

அணில் கும்ளே

இவரது சுழற்பந்துகள் இன்னும் கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் சுழன்றுகொண்டிருக்கின்றன. அணில் கும்ளே பெங்களூரைச் சேர்ந்தவர் என்று நம் எல்லோருக்கும் தெரியும். அவர் ஒரு மெக்கானிக்கல் என்ஜினீயர் என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

நிதிஷ் குமார்

ஊழல் நிறைந்த பீகார் மாநிலத்தில் நல்லாட்சியைக் கொடுத்ததாக பாராட்டப்பட்டவர் நிதிஷ் குமார். சமீபத்தில் ஒரே இரவில், லாலுவை வெட்டிவிட்டு, பாஜகவுடன் ஒட்டிக்கொண்டு, பதவி விலகிய மறுநாளே மீண்டும் முதல்வராகப் பதவியேற்று பரபரப்பு கிளப்பியவர். இவர், பாட்னாவில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்.

முகேஷ் அம்பானி

'ஜியோ' என்னும் ஒற்றை வார்த்தையில், இருந்த அத்தனை எதிர்மறை கருத்துகளையும் அழித்து இந்தியர்களின் மனதில் அமர்ந்தவர் முகேஷ் அம்பானி. தன் தந்தை உருவாக்கிய ரிலையன்ஸ் சாம்ராஜ்யத்தை வளர்த்து, இந்திய தொழிலதிபர்களின் வரிசையில் எப்பொழுதும் 'டாப் -5'ல் இருக்கும் இவர் மாதுங்காவில் உள்ள பொறியியல் கல்லூரியில் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்.





கெளதம் வாசுதேவ் மேனன்

தமிழோ ஆங்கிலமோ, அழகிய மொழி, மிக அழகிய காதல் என தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் கெளதம் மேனன். இவரது படங்களைப் பார்த்தவர்களுக்கு இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர் என்பது கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். அந்த அளவுக்கு, தன் நாயகர்களை மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க வைத்தவர். இவர் படித்தது திருச்சி மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில். தற்பொழுது தமிழ் சினிமாவில் உள்ள புதிய இயக்குனர்களில் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலரும் பொறியியல் படித்தவர்களே. நடிகர்களிலும் கார்த்தி, ஆர்யா, நிவின் பாலி, சிவகார்த்திகேயன் என பலரும் பொறியியல் படித்தவர்கள்.

ஹர்ஷா போக்லே

கிரிக்கெட் ரசிகர்களுக்கெல்லாம் தெரிந்த பெயர் இது. இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர்களில் மிகப் புகழ் பெற்றவரான ஹர்ஷா போக்லே ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்.

சேத்தன் பகத்

இந்தியாவில் ஆங்கில கதைப் புத்தகங்களுக்கு இவ்வளவு பெரிய சந்தையை உருவாக்கியதில் முக்கியமானவர் சேத்தன் பகத். படங்களுக்கு டீசர் வெளியிடப்பட்ட காலத்தில், இவரது புத்தகத்திற்கு டீசர் வெளியிடப்பட்டது. புதிய தலைமுறையின் வாழ்க்கை முறையை காதலும் சின்ன சின்ன அரசியலும் சமூக சிந்தனையும் சேர்த்து இவர் எழுதிய நாவல்கள் அத்தனையும் வெற்றி. மிகப்பெரிய வெற்றி பெற்ற '3 இடியட்ஸ்' (தமிழில் 'நண்பன்') உள்ளிட்ட வெற்றிப்படங்களாக இவரது நாவல்கள் உருவாகின. இவர் டெல்லி IITயில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்.

'மிஸ்டர் பீன்' ரோவன் அட்கின்சன்

திரு திரு முழியாலும், துரு துரு உடல் மொழியாலும், சிரிக்காமல் செய்யும் சேட்டைகளாலும் நம்மை சிரித்தே நோகவைக்கும் 'மிஸ்டர் பீன்' ரோவன் அட்கின்சன். உலகப் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகரான இவர் இங்கிலாந்தில் படித்த எலக்ட்ரிகல் என்ஜினீயர்.

சுஷாந்த் சிங் ராஜ்புட்

'சென்னையின் சூப்பர் கிங்' என தமிழ் ரசிகர்களாலும் கொண்டாடப்படும் தோனியாக, MS தோனி திரைப்படத்தில் அச்சு அசலாய் வாழ்ந்து ரசிகர்கள் மனதில் ஆணியடித்த
சுஷாந்த் சிங் ராஜ்புட் டெல்லியில் படித்த மெக்கானிக்கல் என்ஜினீயர்.

கல்வி, வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் முக்கியமான காரணமாக இருக்கும். அதே நேரம் கல்வி மட்டுமே முழுவாழ்வின் வெற்றியையும் தீர்மானிப்பதில்லை. விளம்பரங்களையும், ஆசை வார்த்தைகளையும் கண்டு விருப்பமில்லாத கல்வியில் பிள்ளைகளை சேர்த்து ஏமாறும் மந்தை மனநிலையை நாம் கைவிட வேண்டும். அவர்களுக்கு விருப்பமானதைப் படிக்கும்போதுதான் உயர்ந்த நிலையை எளிதில் அடைவார்கள். இப்போது கேட்டரிங், சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட், சிவில் சர்வீஸ், வங்கித் தேர்வுகள், தொழிற்சாலை பாதுகாப்பு (Industrial Safety) ஆகியவற்றை தொழில் ஆக்கி விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் தான் கவனமாய் செல்ல வேண்டும். நாளை, அந்தப் படிப்புகளைப் பற்றி மீம்ஸ் போட வேண்டிய நிலையைத் தவிர்க்கலாம்.

வசந்த் பாலகிருஷ்ணன்

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT