Skip to main content

எதிர்ப்புகளும் நெருக்கடிகளும் எனக்கு தூசு - ‘இங்கிலாந்து’ மேயர் சாருலதா

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

England  Mayor Charulatha Interview 

 

தமிழ்நாட்டு பெண்கள் கடல் கடந்தும் சாதனை படைத்து வருகிறார்கள். அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த சாருலதா என்கிற மோனிகா தேவேந்திரன் பல் மருத்துவம் படித்த கையோடு ஒரு அமைப்பை உருவாக்கி பல்வேறு சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இங்கிலாந்தில் மேயராகவும் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருடன் ஒரு சிறப்பு நேர்காணல்..

 

இங்கிலாந்தில் துணை மேயராக இருந்த நான் இப்போது மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். துணை மேயராக இருந்தபோது மக்களுக்கான பணிகளைத் தொடர்ந்து செய்தேன். மக்களுக்கான பிரச்சனைகளைக் கண்டறிந்து அதற்கான தீர்வுகளை வழங்கினேன். தலைவர்களுடன் மக்களுக்கு தொடர்பை ஏற்படுத்தினேன். அதிகாரிகளுடன் பேசி மக்களின் பல பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தேன். அதனால் மக்கள் என்னை மேயராக இப்போது தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். கடவுளின் அருளும் இதற்கு ஒரு காரணம். 

 

மார்கரெட் தாட்சர் அவர்களுடைய புத்தகங்களை சிறு வயதிலிருந்து படிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. என்னுடைய கணவர் ஒரு விஞ்ஞானி. தொழிலதிபராக ஒரு நிறுவனத்தை இங்கு உருவாக்கினேன். மக்கள் சேவையையும் தொடர்ந்து வந்தேன். கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து என்னை அழைத்து எனக்கு சிட்டிங் எம்.எல்.ஏ சீட் வழங்கினர். நானும் வெற்றி பெற்றேன். என்னுடைய தந்தையும் ஒரு தொழிலதிபர் தான். அரசியலுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் சம்பந்தமே இல்லை. என்னுடைய உழைப்பு தான் என்னை அரசியலுக்கு அழைத்து வந்தது.

 

நாம் முன்னேறும்போது நமக்கு நெருக்கடிகள் வருவது இயல்பு. அவற்றை நாம் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். நம் மீது நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். கடவுளின் அருளால் ஒருநாள் இங்கிலாந்து பிரதமராக வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அந்தந்த பணிகளுக்கு அந்தந்த நேரங்களை நான் ஒதுக்கீடு செய்கிறேன். எவ்வளவு பணிகள் இருந்தாலும் என்னுடைய குழந்தைகளுக்காகவும் நான் நேரம் ஒதுக்குகிறேன். வெளிநாட்டில் இருந்தாலும் குழந்தைகளை இந்திய கலாச்சாரத்தின்படியே வளர்க்கிறோம். என்னுடைய முன்னேற்றத்திற்கு என்னுடைய கணவர் மிகுந்த உறுதுணையாக இருக்கிறார்.

 

இளைஞர்கள் தங்களுக்கென்று ஒரு வட்டத்தை உருவாக்கி அதற்குள் முடங்கிவிடக்கூடாது. நம்முடைய கனவுகளை தொலைநோக்குப் பார்வையுடன் விரிவாக்க வேண்டும். அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும். இப்போது இங்குள்ளவர்களும் எனக்கு மிகுந்த உறுதுணையாக இருக்கிறார்கள்.

 


 

Next Story

ஆர்.எஸ்.எஸ்-ல் சுதந்திரப் போராட்டத் தியாகின்னு யாரு இருக்கா? - சிபிஎம் ஜி.செல்வா கேள்வி!

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

 CPM G. Selva Interview

 

புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு மற்றும் சமகால அரசியல் குறித்து பல்வேறு கருத்துகளை நம்மோடு சிபிஎம் கட்சியைச் சேர்ந்த ஜி.செல்வா பகிர்ந்துகொள்கிறார்.

 

நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் எந்தப் பங்கும் வகிக்காதவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர். நம் நாட்டை காட்டிக்கொடுப்பதற்காக ஆங்கிலேயர்களிடம் சம்பளம் பெற்றவர் சாவர்க்கர். பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு பார்க்கும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோலுக்கு புதிய கதைகளை இவர்களாக உருவாக்கியுள்ளனர். அந்தக் காலத்தில் நேரு மறுத்தபோதும் காங்கிரஸ் கட்சியில் இருந்த சில வலதுசாரி சிந்தனையாளர்கள் பல்வேறு பூஜைகள் செய்து அந்த செங்கோலைப் பெற்றனர். பல்வேறு தலைவர்கள் மற்றும் மக்கள் போராடிப் பெற்ற சுதந்திரத்தை செங்கோலை வைத்து இவர்கள் மறைக்கப் பார்க்கின்றனர். 

 

இவர்கள் மனுஸ்மிருதியை ஏற்பவர்கள். அதன் காரணமாகவே மன்னர் காலத்து செங்கோலை வைத்து அரசியல் செய்கின்றனர். இந்தக் காலத்து மக்கள் நம்புவதற்காக புதிய கதைகளை உருவாக்குகின்றனர். மவுண்ட் பேட்டனிடம் கொடுக்கப்பட்ட செங்கோல் நேருவிடம் வந்ததாக எந்த ஆவணமும் இல்லை. பிரிட்டிஷாரிடம் மூன்று முறை மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர் சாவர்க்கர். மத அடிப்படையில் இந்த தேசத்தை முதலில் வரையறுத்தவர் சாவர்க்கர் தான். ஒரே ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியைக் கூட ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் காட்ட முடியாது. 

 

புதிய நாடாளுமன்றக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் பட்டியலினத்தைச் சேர்ந்த அன்றைய குடியரசுத் தலைவரை இவர்கள் அழைக்கவில்லை. இப்போது நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை. இது ஒரு மிகப்பெரிய துரோகம். பாராளுமன்றத்துக்கே வராத, எந்த வேலையும் செய்யாத பிரதமருக்கு புதிய பாராளுமன்றம் எதற்கு? நாடாளுமன்ற ஜனநாயகத்தை இவர்கள் சிதைக்கிறார்கள். அதனால்தான் எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணித்தனர். பாஜக எம்.பி மீதான பாலியல் புகாரில் மல்யுத்த வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களை பாஜக கண்டுகொள்ளவே இல்லை. இதுதான் இவர்கள் ஜனநாயகத்தை மதிக்கும் போக்கு.