/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ED 2.jpg)
அமலாக்கத் துறையின் அதிகாரங்கள் என்னென்ன?தேசிய அமைப்பான அமலாக்கத் துறை உண்மையில் யார் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது?இதுவரை அமலாக்கத் துறை எடுத்த நடவடிக்கைகள் எத்தனை? அதில் தண்டனை பெற்றவர்கள் எத்தனை பேர்? அமலாக்கத் துறை ஒன்றிய அரசின் கைப்பாவை என்கிற விமர்சனம் உண்மையா?
இந்தியாவில் 1956 ஆம் ஆண்டு முதல் நாட்டில் ஏற்படும் பொருளாதார குற்றங்களைத்தடுக்கவும் அந்நியச் செலாவணி முறைகேடுகளைத்தடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்புதான் அமலாக்கத் துறை. ஒன்றிய அரசின் பொருளாதார விவகாரத்துறையின் கீழ் இது ஒரு தேசிய அமைப்பாக செயல்பட்டு வந்தது. தலைநகர் டெல்லியில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் ஆரம்பத்தில் ஆறு அலுவலர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டார்கள். சட்டம் தெரிந்த ஓர் உயர் அதிகாரி, அவருக்கு கீழ் ரிசர்வ் வங்கியில் பணியாற்றிய இரண்டு அலுவலர்கள், சிறப்பு காவல் பிரிவில் மூன்று ஆய்வாளர்கள் என மிகக் குறைந்த அலுவலர்களைக் கொண்ட அமைப்பாக இது தொடங்கப்பட்டது.
அதன்பிறகு 1957 ஆம் ஆண்டு இந்த அமைப்புமத்திய அமலாக்கப் பிரிவு எனப் பெயர்மாற்றம் கண்டது. தொடர்ந்து, அதன் சட்டங்களில் பலவிதத்திருத்தங்களும்கொண்டு வரப்பட்டன. தற்போது இதுநிதி மற்றும் வருவாய்த்துறையின் கீழ் செயல்படுகிறது. தொடங்கிய40 ஆண்டுகள் வரைக்கும் இருக்கும் இடம் தெரியாமல்தான்அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் இருந்து வந்தன. அதன்பிறகு புதிதாகச் சேர்க்கப்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரபலமடையத்தொடங்கியது.
கடைசியாக 2018 ஆம் ஆண்டு சட்டத்திருத்தத்தின்படி 5 பணிகள் இதன் முக்கியப் பணிகளாக உள்ளன. சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் 2002,அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் 1999,தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் 2018, அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் 1973, காபிபோசா சட்டம் 1974 ஆகியவற்றை அமல்படுத்துவது அமலாக்கத்துறையின் கீழ் வந்தது.
இப்படி அமலாக்கத் துறையின் கீழ் பல பிரிவுகள் இருந்தாலும் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் 2002 என்ற சட்டத்தில் பல சிறப்புபிரிவுகள் சேர்க்கப்பட்ட பிறகு ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கும் அல்லது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படும் அரசியல்வாதிகளுக்கும் அந்த சட்டம் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. ஆனால், அதே நேரத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் ஒன்றிய அரசுகள் இந்த சட்டத்தைப் பயன்படுத்தி அமலாக்கத் துறையை தங்களின் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றன என்ற விமர்சனமும் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.
அமலாக்கத் துறை பெரும்பாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் மீது மட்டுமே அதிக அளவில் வழக்குகளைப் பதிவு செய்வது அதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இதனால் அமலாக்கத் துறையின் நடவடிக்கைகள் உண்மையிலேயே சட்டப்பூர்வமாகத்தான் நடக்கிறதா அல்லது அதற்கு பின்னால் ஏதேனும்அரசியல் அழுத்தங்கள் இருக்கிறதா என்ற கேள்விகளும் அமலாக்கத் துறையை நோக்கி அடிக்கடி எழுப்பப்படுகின்றன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ED.jpg)
அதேபோல் அமலாக்கத் துறை பதிவு செய்யும் வழக்குகளும் விரைவாக முடிக்கப்படாமல் நீண்டகாலம் இழுத்தடிப்பதால் அமலாக்கத் துறையின் மீதானநம்பகத்தன்மையும் கேள்விக்குள்ளாகிவிடுகிறது. அமலாக்கத் துறையால் போடப்பட்ட பல வழக்குகள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. வெகு சில வழக்குகளில் மட்டுமே இதுவரை தீர்ப்புகள் வெளிவந்திருக்கிறது என்று சொல்லப்பட்டாலும் அமலாக்கத் துறை வேறு விதமான புள்ளிவிவரங்களைத்தந்துள்ளது.
அமலாக்கத் துறை தொடங்கி 67 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், இதுவரை மொத்தம் 33,958 வழக்குகள் அமலாக்கத்துறையால் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இதில் 16,148 வழக்குகளில் விசாரணை முடிந்துள்ளது. 8,440 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 6,847 வழக்குகளில் விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அமலாக்கத் துறை மீது வைக்கப்படும் இன்னொரு முக்கியமான குற்றச்சாட்டு அமலாக்கத் துறையால் செய்யப்படும் கைது நடவடிக்கைகளின்போது அதிக அளவில் மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன என்பதுதான். சமீபத்தில் நடந்த அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையின்போது கூட அப்படி நடந்ததாகப் பரவலாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியை 20 மணி நேரத்திற்கு மேலாக தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமலாக்கத் துறை, அவரை பல்வேறு விதத்தில் துன்புறுத்தியதாகவும், அதனால் அவரது தலைப்பகுதியில் ஒரு இடத்தில் வீக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் கூட சொல்லப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி விஷயத்தில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமைகள்ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டு, மனித உரிமைகள்ஆணையம் நேரில் சென்று விசாரணை நடத்தியது. அப்படி நடந்த அந்த விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையில் மனித உரிமை மீறல் நடந்திருப்பது உறுதியாகி இருக்கிறது. எனவே, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் சார்பில் அமலாக்கத்துறைக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்புள்ளதாகத்தெரிவித்தார். ஒருவேளை தமிழ்நாடு மாநில மனித உரிமைகள்ஆணையத்தின் சார்பில் அமலாக்கத் துறையின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமானால் அமலாக்கத் துறை என்பது ஆளும் ஒன்றிய அரசின் கைப்பாவை என்பது உறுதியாகிவிட வாய்ப்பிருக்கிறது என்பதால் அமலாக்கத் துறை தன் மீது படிந்துள்ள விமர்சனக் கறைகளைக்கழுவிக்கொள்ள முன்வர வேண்டும்.
- எஸ்.செந்தில்குமார்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)