ADVERTISEMENT

3,750 கி.மீ. கட்டுப்படாத ராகுல் கால்கள்! 543ஐ கைப்பற்றுமா காங்கிரஸ்!

03:36 PM Jan 30, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்ட 'இந்திய ஒற்றுமை பயணம்' ஸ்ரீநகரில் நிறைவடைந்துள்ளது. 135 நாட்கள், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,750 கிலோமீட்டர் கடந்து நிறைவடைந்துள்ள இந்த பெரும்பயணம் இந்திய அரசியலின் புதிய தொடக்கப்புள்ளியாக அமையுமா?

ADVERTISEMENT

இந்திய ஒற்றுமை பயணம் அறிவிப்பு:

மார்ச் 2022ல் நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பஞ்சாபைத் தவிர்த்து 4 மாநிலங்களை பா.ஜ.க. கைப்பற்றியது. இந்த ஐந்து மாநில தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்த காங்கிரஸ், 2022ம் ஆண்டு மே 13, 14, 15 ஆகிய தேதிகளில் ராஜஸ்தான் உதய்பூரில் நடந்த ‘சிந்தனை அமர்வு’ என்ற மாநாட்டின் வாயிலாக ‘நாங்கள் வீழ்ந்திருக்கிறோம். ஆனால், எழுந்து வருவோம்’ எனச் சூளுரைத்தது. ராகுல் காந்தியின் தலைமையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் (Bharat Jodo Yatra) நடைபெறும் என அப்போதைய காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அறிவித்தார்.

இந்திய ஒற்றுமை பயணம் நோக்கம்:

"இந்தியாவில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது. சாதி, மதம், மொழி, உணவு, உடை ஆகியவற்றின் பெயரால் சமூகம் பிளவுபடுத்தப்பட்டுள்ளது. விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதால் நாட்டில் அரசியல் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மூன்றுக்கும் எதிராக இந்தியாவை ஒருங்கிணைக்கும் பயணம்தான் இந்த நடைப்பயணம்" என்றார் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ்

நடைப்பயணத் தொடக்கம் மற்றும் கடந்து வந்த பாதைகள்:

2022 செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில், ராகுல் காந்தியிடம் தேசியக்கொடியைக் கொடுத்து இந்திய ஒற்றுமை பயணத்தைத் தொடங்கிவைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்தியாவின் மிகப்பழமையான கட்சி நாட்டை அடக்குமுறையிலிருந்து விடுவிக்கும் கடினமான பணியில் இறங்கியிருக்கிறது. நம்முடைய மகத்தான குடியரசுக்கு புத்துயிர் கொடுக்கும் லட்சியத்தில் இந்த யாத்திரை வெற்றிபெற வாழ்த்துகிறேன்" என்றார். கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் வழியாக காஷ்மீரின் ஸ்ரீநகரில் இந்த நடைப்பயணம் நிறைவடைந்துள்ளது.

நடைப்பயணத்தின்போது நடந்த தேர்தல்கள்:

இந்த நடைப்பயணம் நடந்து கொண்டிருந்த போதுதான் 2022 அக்டோபரில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்புக்கான தேர்தல் நடைபெற்றது. “தலைவர் பதவிக்கான போட்டியில் பங்கேற்கப் போவதில்லை” என முன்னாள் பிரதமர் நேரு குடும்பத்தினர் அறிவித்த நிலையில், மல்லிகார்ஜுன கார்கே - சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். பதிவான 9,500 வாக்குகளில் 7,897 வாக்குகளுடன் காங்கிரஸ் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் மல்லிகார்ஜுன கார்கே.

2022 டிசம்பரில் குஜராத் மற்றும் ஹிமாச்சலப்பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடந்து முடிந்தன. குஜராத் மாநிலத்தில் வரலாறு காணாத வெற்றியை பா.ஜ.க. பெற்றிருந்தாலும், 68 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட ஹிமாச்சலப்பிரதேசத்தில் 40 இடங்களில் வெற்றி பெற்று, அங்கு பா.ஜ.க. ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது காங்கிரஸ். இந்த வெற்றி 2024ம் ஆண்டு தேசம் முழுவதும் எதிரொலிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகள் மற்றும் இடதுசாரி பார்வை கொண்டோர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது எனப் பேசப்பட்டது.

இந்திய ஒற்றுமை பயணத்தின் மீதான விமர்சனங்கள்:

இந்த நடைப்பயணத்தால் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை என்பதில் திட்டவட்டமாக இருந்த பா.ஜ.க., அடுத்தடுத்து விமர்சனங்களை வீச ஆரம்பித்தது. ராகுல் காந்தியை பொருட்படுத்த வேண்டியதில்லை என்று கூறிய பா.ஜ.க,. அவருடைய ஒவ்வொரு சொல்லுக்கும், ஒவ்வொரு பேட்டிக்கும் எதிர்வினையாற்றிக் கொண்டிருந்தது. பிரதமர் மோடி குஜராத்தில் பிரச்சாரத்தை ஆரம்பித்தபோதும், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்தார்.

ராகுலுடன் கைகோர்த்த ஆளுமைகள்:

இந்த நடைப்பயணத்தில் மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், RAW உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.துலத், ஜம்மு & காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி உட்பட பெரும் ஆளுமைகள், சாதாரண மக்கள், பல சாதனையாளர்கள், குழந்தைகள், பெரியவர்கள், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பொருளாதார வல்லுநர்கள் எனப் பெரும் கூட்டம் ராகுலுடன் இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்தது.

இந்த நடைப்பயணத்தின்போது 13 முறை செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, பாஜ.க. - ஆர்.எஸ்.எஸ். தொடர்பாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “பாஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் வெறுப்புணர்வைப் பரப்புகிறார்கள்; அவர்களின் அனைத்து கொள்கைகளும் அச்சத்தை விதைப்பதுதான். அவர்களின் திட்டங்களைச் செயல்படுத்த ஒரு போதும் விடமாட்டோம்” என டெல்லியின் எல்லையில் பேசினார் ராகுல்.

நடைப்பயணம் சந்தித்த சிக்கல்கள்:

2022 டிசம்பர் மாதத்தில் மீண்டும் சீனாவில் கொரோனா பரவல் வேகமெடுத்து, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. கெடுபிடிகளை அடிதடியாக ஒன்றிய அரசு அறிவித்தது. இந்திய ஒற்றுமை பயணம் 100 நாட்களைக் கடந்து ராஜஸ்தானில் நடைபெற்று வந்த நிலையில், "பாரத் ஜோடோ யாத்திரையின் போது முகக்கவசம் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் அனுமதிப்பது என கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுங்கள். அப்படி இல்லை என்றால், தேசத்தின் நலன் கருதி யாத்திரையைக் கைவிடுங்கள்" என ராகுல் காந்திக்கும், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும் ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியது. "இது தேசநலன் என்பதைக் கடந்து நடைப்பயணத்தை முடக்கும் யோசனை" என ராகுல் காந்தி விமர்சித்தார்.

கடந்த ஜனவரி 27ம் தேதி நடைப்பயணம் காஷ்மீரின் காசிகண்ட் பகுதியில் நுழைந்தபோது பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே இருக்க வேண்டிய காஷ்மீர் காவல்துறை திடீரென மாயமானதாகவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த காஷ்மீர் காவல்துறை தவறிவிட்டதாகவும், காங்கிரஸ் குற்றச்சாட்டுகளை அடுக்கியது. “கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத சூழலில், நடைப்பயணத்தைத் தொடர வேண்டாம்” என ராகுல் காந்தியின் பாதுகாப்புக்குழு அறிவுறுத்திய நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய ஒற்றுமை பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “இதற்கு நான் சாட்சி. ராகுல் காந்தி நடக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் ஜம்மு காஷ்மீர் காவல்துறை பராமரிப்பிலிருந்த பாதுகாப்பு வளையத்தின் வெளிப்பகுதியிலிருந்த காவல்துறையினர் திடீரென காணாமல் போயினர். நாங்கள் ஜம்முவிலிருந்து காஷ்மீருக்கு வந்திருந்தோம். மேலும் 11 கிலோமீட்டர் நடைப்பயணம் மேற்கொள்வதாக இருந்தோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது ரத்து செய்யப்பட்டது” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளானது.

இந்திய ஒற்றுமை பயணத்தின் நோக்கம் வெற்றி பெறுமா?

2022ம் ஆண்டு செப். 7ம் தேதி துவங்கி, 2023ம் ஆண்டு ஜன. 30ம் தேதி காந்தியின் நினைவு நாளில் காஷ்மீரில் தனது 3,750 கி.மீ நடைப்பயணத்தை முடித்துள்ளார் ராகுல் காந்தி.

மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநில சட்டப்பேரவைகளுக்கு வரும் பிப்ரவரியில் தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து வரும் மே தொடக்கத்தில் கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களில் நடைப்பயணத்தின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைப்பயணம் உணர்த்திய கள எதார்த்தங்களை காங்கிரஸ் ஆய்வுக்கு உட்படுத்தி, 2024ல் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு அவர்கள் வகுக்கும் வியூகமே இந்தியாவின் எதிர்காலத்தையும் காங்கிரஸின் எதிர்காலத்தையும் தீர்மானிக்க இருக்கிறது.

- தி.மு. அபுதாகிர்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT