Skip to main content

எங்க கோவணத்தையும் உருவப் பார்க்கிறார் மோடி: இளைஞர்களின் ஆண்மைக்கும் ஆபத்து: அய்யாக்கண்ணு பேட்டி 


 

ayyakkannu601.jpg


நஞ்சில்லா உணவு மூலம் மனித குலத்தை மீட்கவும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்யக் கோரியும், மார்ச் 1 முதல் 100 நாட்கள் குமரி முதல் சென்னை கோட்டை வரை விவசாயிகள் விழிப்புணர்வு நடைப்பயணத்தை நடத்துகிறார் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு.
 

குமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் நடைப்பயணத்தை தொடங்கிய அய்யாக்கண்ணு நக்கீரன் இணையதளத்திடம் பேசுகையில்,
 

நம் நாட்டின் பலமும், பாதுகாப்பும் ராணுவத்தால் மட்டும் அல்ல, உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதிலும் தான் உள்ளது. விவசாயிகளின் உணவு பொருட்களை அரசே நியாயமான விலைக்கு வாங்கி அவற்றை மக்களுக்கு இனாமாக கூட கொடுக்கலாம். லாபகரமான, நியாயமான விலை கொடுக்காமல் விவசாயிகளை ஏமாற்றி மொட்டை அடித்து மோசடி செய்த தொகை ரூபாய் 400 லட்சம் கோடிகள். விவசாயிகளை விவசாயததை விட்டு வெளியேற்ற செய்யும் கொடுமையை மத்திய அரசு செய்கிறது.
 

கார்ப்பரேட் கம்பெனிகள் கல்உப்பு வேண்டாம் என்று அயோடின் உப்பில் அலுமினியத்தூள்களை சேர்த்து விற்கிறார்கள். இதனால் 10 வயது உள்ளோருக்கு கூட சுகர், இரத்த அழுத்த நோய் தாக்குவதால், ஆண்டுக்கு 10 லட்சம் கோடிக்கு மாத்திரை, மருந்துகளை கார்ப்பரேட் கம்பெனிகள் விற்று லாபம் அடைகிறது.

 

ayyakkannu

நாட்டு பசும்பால், நாட்டு கோழி சாப்பிட்டு 16 வயதில் பருவம் அடைந்த பெண்கள், ஆண்மையுடன் இருந்த ஆண்கள், வெள்ளை பன்றியின் அணுவையும் நாட்டு பசுவின் அணுவையும இணைத்து ஜெர்சி மாட்டு பால், ஊசியின் மூலமாக அணுக்கள் ஏற்றப்பட்ட பிராய்லர் கோழியை சாப்பிட்டு 8 முதல் 10 வயதில் பெண்கள் பருவம் அடைகிறார்கள். 100க்கு 50 இளைஞர்கள் ஆண்மையை இழப்பதற்கும், பெண்கள் கருத்தரிக்கும் வாய்ப்பை இழக்க வாய்ப்பு உள்ளது. பிறகு ரூபாய் 10 லட்சம், 20 லட்சம் கொடுத்து டெஸ்ட் டியூப் குழந்தை பெறும் நிலையும், அதனால் சமுதாயம் அழிய வாய்ப்பு உள்ளது.
 

இந்த கொடுமை நிகழாமல் இருக்கத்தான் நடுரோட்டில் படுத்தோம், கடலிலே இறங்கினோம். மலையில் ஏறி குதிக்க முயன்றோம். பலமுறை சிறை சென்றோம். விவசாய விளை பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. தனிநபர் பயிர் காப்பீடு, 60 வயது கடந்தவர்களுக்கு ஓய்வூதியம், நதிகளை நீர் வழிச்சாலை மூலமாக இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம், முல்லை பெரியாறு, காவிரி வைகை குண்டாறு, காவிரி அய்யாறு, பாலாறு இணைப்பும் நதிகளின் குறுக்கே தடுப்பணைகள், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டியும் போராட்டம் நடத்தினோம்.

 

ayyakkannu


ஒரு ஏக்கர் வாழை சாகுபடி செய்ய தேவை ஒரு லட்சம் ரூபாய். வாழை அழிந்தால் அரசு கொடுக்கும் நஷ்ட ஈடு ரூபாய் ஆயிரம் மட்டும். கடன் வாங்கி செலவு செய்த பணம் கூட கிடைக்காமல் பிச்சைக்காரர்கள் வருமானத்தைவிட கேவலமாக விவசாயிகள் வாழ்கிறார்கள். இந்தியாவில் உள்ள 70 பெரிய கம்பெனிகளுக்கு மத்திய அரசு வரிச்சலுகை என்ற பெயரில் தள்ளுபடி செய்தது ரூபாய் 30 லட்சம் கோடிகள்.
 

விஜய் மல்லையா ரூபாய் 10 ஆயிரம் கோடி, நிரவ் மோடி ரூபாய் 11,500 கோடி, கோத்ரேஜ் ரூபாய் 5 ஆயிரம் கோடி, அக்ரோ நிறுவனம் ரூபாய் 2,730 கோடி மற்ற கம்பெனிகள் ரூபாய் ஒரு லட்சம் கோடி ஏமாற்றி ஒடிவிட்டார்கள். விவசாயிகளுக்கு நியாயமான விலை கொடுக்காமல் மத்திய அரசு ஏமாற்றிய பணம் ரூபாய் 400 லட்கம் கோடிகள். அந்த பணம்தான் அனைத்து வங்கிகளிலும் உள்ளது. அதை கடனாக விவசாயிகள் கேட்டால், வங்கி மேலாளர் உங்க அப்பன் வீட்டு பணமா கடன் தருவதற்கு என்று கேட்கிறார்.
 

தமிழகத்தில் இருந்து பெட்ரோல், டீசல், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுத்தால் வருடம் ரூபாய் 10 லட்சம் கோடி மோடி அரசுக்கு வருமானம் கிடைக்கும். தமிழகத்திற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீர் விட உத்தரவிட்டும், முல்லை பெரியாற்றில் நீர்மட்டத்தை உயர்த்த ஆணையிட்டும் மத்திய அரசு கேட்காமல் தமிழகத்தை பாலைவனமாக மாற்ற பார்க்கிறது.
 

தமிழக விவசாயிகளுக்கு நியாயமான விலை, தண்ணீர் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டால் தமிழக விவசாயிகள் விவசாயத்தை விட்டு விட்டு நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்றுவிட்டு ஓடிவிடுவார்கள். பிறகு பிளாஸ்டிக்கினால் ஆன அரிசி, சர்க்கரை மற்ற உணவு பொருள்களையும் மரபணு மாற்றப்பட்ட உணவு பொருள்களையும் கமிசன் பெற்றுக்கொண்டு இறக்குமதி செய்து கொடுத்து மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களை சாப்பிட சொல்லி இவர்களை ஆண்மை இழக்க, மூளை செயலிழக்க செய்துவிட்டு அடிமைகளாக மாற்றாமல் இருக்கத்தான் டெல்லியில் போராடினோம். ஆனால் மத்திய அரசு விவசாயிகளை பார்க்காமல் மதம், ஜி.எஸ்.டி, பணம் பற்றியே பேசுகிறார்கள்.
 

இப்போது குமரியில் இருந்து சென்னை வரை 100 நாள் நடைப்பயணம் செய்து போராட்டம் நடத்துகிறோம். ஏற்கனவே மோடி எங்களுக்கு பட்டையை போட்டுவிட்டார். சட்டையை உருவி விட்டார். அடுத்து எங்களது வேட்டியையும், கோவணத்தையும் உருவுவதற்கு முயற்சி செய்கிறார். பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த போராட்டம் வருங்கால சந்ததிகளை காப்பாற்றுவதற்கான போராட்டம். இவ்வாறு கூறினார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...