Skip to main content

மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோகும் உயிர்கள்

Published on 03/10/2018 | Edited on 03/10/2018



 

Electricity Board's Negligence

 

மின்சாரம் இல்லாமல் மனிதனால் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது என்று சொல்லும் அளவிற்கு நம் அன்றாட வாழ்க்கையுடன்  மின்சாரம் இணைந்து விட்டது. மின்சாரத்தினை உற்பத்தி செய்ய அனல் மின் நிலையம், அனு மின் நிலையம், புணல் மின் நிலையம், நீர் மின் நிலையம், சூரிய சக்தி, காற்றாலை என பல்வேறு வழிகளில் மின்சாரம் தயாரிக்கப்பட்டாலும், மின்சாரத்தின் உற்பத்தி என்பது இன்று வரை பற்றாக்குறையாகத்தான் உள்ளது.
 

அனல் மின்சார உற்பத்தியில் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள அனல் மின் நிலையத்துக்கு பெரும் பங்குண்டு. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாது பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. 
 

எவ்வகை மின்சாரமும் உற்பத்தி பிரிவிலிருந்து துணை மின் நிலையங்களுக்கு அனுப்பப்படும், துணை மின் நிலையங்களிலிருந்து உயர் மற்றும் தாழ்வு மின் அழுத்த பாதைகளாக பிரித்து, மின் பகிர்மான பெட்டிகள் மூலம் நகரம் மற்றும்  கிராமங்களுக்கு மின் கம்பிகள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.

 

eb


 

இவ்வாறு கொண்டு செல்லப்படும் மின் பாதையில் பழுது ஏற்பட்டாலும், புயல் மற்றும் அதிவேக காற்றினாலும்,  நீண்ட கால பயன்பாட்டினாலும் மின் கம்பிகள் மற்றும் மின் கம்பங்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்யும் பணிகளில் மின் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். 
 

அவ்வாறு பழுது நீக்க வேலையில் ஈடுபடும்போது, கம்பங்களில் ஏறி நிற்பதற்கு எவ்வித நவீன பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கயிறு மட்டுமே கொண்டு 36 அடி உயரம் கொண்ட மின் கம்பங்களில் வேலை செய்கின்றனர்.  
 

மேலும் கோடை மற்றும் மழைக்காலங்கள் என அனைத்து சூழ்நிலைகளிலும் மின்சார பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய பாதுகாப்பு உபகரணங்களான மின் கடத்தா கையூறை, பாதுகாப்பு கயிறுகள்,  தலை மற்றும் பென்சிங் கவசங்கள், சுவாச உதவிகள், முகமூடிகள், பாதுகாப்பு பெல்ட் ஆகியவற்றை முறையாக வழங்கப்படுவதில்லை.
 

இதனால் மின் ஊழியர்களோ, கால் மற்றும் இடுப்புக்கு மட்டும் கயிறுகளை பயன்படுத்தி கொண்டு அந்தரத்தில் தொங்கியபடியே வேலை செய்து வருகின்றனர். 

 

eb


 

இவ்வாறு எவ்வித பாதுகாப்பு இல்லாமல் கயிறு அறுந்து கீழே விழுவதால் தொழிலாளர்கள் கீழே விழுந்தும், சில நேரங்களில் கம்பங்களுக்கு கீழே செல்லும் மின் கம்பிகள் மற்றும் வயர்களில் சிக்கியும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. 
 

அதேபோல் பெரும்பாலும் இரவு நேரங்களில் பழுது சரி செய்யும் பணியாளர்கள் வெறும் கை டார்ச் லைட் மட்டுமே வைத்துக்கொண்டு குறைவான வெளிச்சத்தில் வேலை பார்க்கின்றனர். அதனால் கவனக்குறைவாக மின் கம்பிகளில் படுவதாலும், விஷ ஜந்துக்கள் தீண்டுவதாலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. 
  

பாதுகாப்பாக வேலை செய்வதை பற்றி அவ்வப்போது மின் ஊழியர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டாலும், அதற்கேற்றார்போல நவீன பாதுகாப்பு கருவிகள் தருவதில்லை. சில தொழிலாளர்கள் அவற்றை கடைபிடிக்காமல்  அலட்சியமாக பணியாற்றுவதும் நடக்கிறது.
 

மேலும் மின் ஊழியர்களின் ஆள் பற்றாக்குறையால் இரவு பகல் பாராமல் வேலை செய்வதால் ஏற்படும் மன அழுத்தங்கள், அதனால் குடும்பத்தில் ஏற்படும் மனகுழப்பங்கள், நிம்மதியின்மை இவற்றால் ஏற்படும் கவனக்குறைவு, பாதுகாப்புமின்மை  போன்றவற்றாலும் பணியில் ஈடுபடும் போது, சில நேரங்களில் மின் விபத்தில் சிக்க நேரிடுகிறது.

 

eb


 

"ஒருவருக்கு மின்சாரம் தாக்கும் போது, தாக்கப்படும் மின்னோட்டத்தினை அளவை பொறுத்து அவரது நரம்பு மண்டலம் முதலில் பாதிப்படைந்து, மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் தடைபடுகிறது, மேலும் அதே சமயத்தில்  நுரையிரல் சுருங்குதல், இதய துடிப்பு வேகமாக துடித்தல், ரத்தத்தில் வெப்பத்தின் அளவு கூடுதல் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் கன நேரத்தில்  நிகழ்வதால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 

அதே நேரத்தில் மின் விபத்தில் சிக்கியவர்களை மின்னோட்டத்தில் இருந்து அப்புறபடுத்தி, முதலுதவி அளித்து சுமார் 30 நிமிடத்திற்குள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் 90% சதவித காயம் உடையவர் கூட காப்பாற்றி விடலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
 

பல வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட மின் கம்பிகளின் தரம் குறைந்து போனதால், அறுந்து விழும் போது அதனை மாற்றாமல் இனைத்து செயல்பட வைப்பது, சிமெண்ட் கலவையால் அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் முற்றிலும் சேதமடைந்து விழும்  நிலையில் இருக்கும்போது உடனடியாக மாற்றாமல் அலட்சியம் காட்டுவது, எளிதில் மின் கடத்தும் மரம், செடி, கொடிகள் உள்ளிட்டவை மின் கம்பி மற்றும் கம்பங்கள் மீது தொட்டு கொண்டு இருக்கும் போது, அவற்றை அகற்றாமல் அலட்சியாமாக இருப்பது போன்ற பல்வேறு பிரச்சினைகளை உடனே சரி செய்யாமல் மெத்தனபோக்காக மின்சார வாரியம் இருப்பதினால் தான் மின் கசிவு, மின் தாக்குதல்கள் ஏற்பபட்டு  பொதுமக்களுக்கும் உயிரிழப்பு ஏற்படுகிறது. 
 

உயிரிழப்பு எற்பட்ட  பின்னர் மின் ஊழியர்கள் அவசர அவசரமாக ஆபத்து ஏற்படுத்திய அம்சங்களை சரி செய்வதற்கு பதிலாக அவ்வப்போது சரி செய்தால் ஆபத்துகளிலிருந்து அப்பாவி மக்களை காக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
 

மேலும் நகர்புறங்களில் உள்ள மாடிவீடுகளுக்கு அருகாமையிலே சுமார் ஒரு அடி தூரத்தில் மின் கம்பிகள் செல்வதாலும், விவசாய நிலங்களில் மிகவும் தாழ்வாக கைகள் தொடும் அளவிற்கு மின் கம்பிகள் இருப்பதானாலும் உயிரிழப்பு என்பது தொடர் கதையாகி வருகிறது.
 

உயர் மின் அழுத்த பாதைகள் செல்லும் வழிகளில் உள்ள வீடுகளுக்கு மின் இனைப்பு கொடுக்கக்கூடாது, வீட்டின் அருகில் செல்லும் மின் கம்பிகளுக்கு, மின் கடத்தா பொருளால், பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட வேண்டும், மின் பகிர்மான பெட்டிக்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட வேண்டும், மின் ஊழியர்கள் பாதுகாப்பு கவசங்கள் அணிந்து தான் வேலை செய்ய வேண்டும் போன்ற விதிமுறைகளை பின்பற்றாமல் மின்சார வாரியம் செயல்படுவதாக நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள் மட்டுமல்ல மின்துறையில் பணியாற்றும் ஊழியர்களே குற்றம் சாற்றுகின்றனர்.
 

மின்சார விபத்தை முற்றிலுமாக தடுக்க முடியாமல் இருப்பதற்கு காரணம் மின் துறை அதிகாரிகளின் அலட்சியபோக்கும், மக்களிடையே போதிய விழிப்புணர்வும் இல்லாததுமே காரணம் என அனுபவசாலிகள் எச்சரிக்கின்றனர்.  
 

சரியான நேரத்தில் மின் கட்டணம் செலுத்தாவிட்டால் இனைப்பை துண்டிக்கும் மின் வாரியம் பல வகைகளிலும் ஆபத்துகளை ஏற்படுத்தும் அம்சங்களை சரி செய்யாமல் அலட்சியமாக இருப்பது ஏன் என்ற கேள்விகளும் எழுகின்றன.  


மனிதர்கள் மட்டுமல்ல, ஆசை ஆசையாக வளர்த்த ஆடு, மாடு, கோழிகள் என அனைத்து உயிர்களையும் மின் விபத்தில் இருந்து காப்பாற்ற,  இந்த ஆண்டு பருவமழை தொடங்குவதற்கு முன்பே முன்னெச்சரிக்கையாக  மின்சார துறை விரைந்து செயல்பட்டு மின் பாதைகள் செல்லும் வழித்தடங்களில் உள்ள மரங்களை அகற்றி, பழுதடைத்த மின் கம்பங்கள், கம்பிகளை மாற்றினால் மட்டுமே, மின் விபத்தால் ஏற்படும் உயிரிழிப்பை தடுக்கலாம் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
 

 

 

 

Next Story

5 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
Extension of time for electricity bill payment in 5 districts

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன் தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. 

தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டும், மாற்று பாதையில் இயக்கப்பட்டும் வருகின்றன. மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கான அவசர உதவிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னச்சரிக்கை ஏற்பாடுகளும், மீட்புப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியிருந்தார்.

இதனையடுத்து, பேரிடர் மீட்புப்பணியை துரிதப்படுத்த ஏற்கனவே கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகிய 5 அமைச்சர்கள் நியமித்திருந்த நிலையில், கூடுதலாக மேலும் 4 அமைச்சர்களை நியமித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், ராஜகண்ணப்பன், மூர்த்தி ஆகிய 4 அமைச்சர்களை முதலமைச்சர் நியமித்துள்ளார். மேலும், 4 மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் 4 பேரும் விரைந்து சென்று மீட்புப்பணிகளை துரிதப்படுத்துவர் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், கனமழை எதிரொலியால் 5 மாவட்டங்களில் உள்ள மக்கள் தங்களுடைய மின்கட்டணம் செலுத்த மின்சாரத்துறை அவகாசம் கொடுத்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள மக்கள் இன்று மற்றும் நாளைக்குள் மின்கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் வரும் 20ஆம் தேதி வரை தாமதக் கட்டணமின்றி மின்கட்டணம் செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது. 

Next Story

வீட்டு மின் இணைப்புகளுக்கான மின் கட்டணங்கள்; தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

Electricity charges for household electrical connections; Tamil Nadu Government New Notification

 

வீட்டு இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்தகால ஆட்சியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டுமொத்த நிதி நிலை மோசமாக பாதிப்படைந்து இருந்தது. மேலும், மத்திய அரசின் ஆணையின்படி மின் எரிபொருள் மற்றும் கொள்முதல் விலை உயர்வினை உடனுக்குடன் நுகர்வோரிடமிருந்து வசூல் செய்வது கட்டாயமாக்கப்பட்டது. மேலும், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மத்திய அரசு இட்ட ஆணையின்படி, இந்த விலை உயர்வினை மின் கட்டணத்தை உயர்த்தி நுகர்வோர்களிடமிருந்து மாதந்தோறும் பெற வேண்டும். இந்த விலை உயர்வினால் ஏற்படக்கூடிய சுமையைக் குறைக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2022-23 முதல் 2026- 27 வரை 5 ஆண்டுகளுக்கான கட்டண உயர்வை பல்லாண்டு மின் கட்டண வகையில் (MYT) வழங்கியது. மேற்படி உத்தரவில் 2022-23 ஆண்டுக்கான உயர்த்தப்பட்ட கட்டணத்தை அறிவித்தது. அடுத்து வரும் 4 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் கீழ்க்கண்ட கட்டண உயர்வு முறையை அறிவித்தது.

 

அதன்படி, ஆண்டுதோறும், ஏப்ரல் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணுடன் ஒப்பீடு செய்து, கணக்கிடப்படும் நுகர்வோர் பணவீக்க உயர்வு அல்லது 6%, இவற்றில் எது குறைவோ அந்த அளவில் மின்கட்டண உயர்வை நடைமுறைப்படுத்த வேண்டும். இதன்படி, 2023 ஜூலை மாதத்தைப் பொறுத்தவரையில், 2022 ஏப்ரல் மற்றும் 2023 ஏப்ரல் ஆகியவற்றின் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின்படி கணக்கிட்டால், 4.7 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இந்த நடைமுறையை ஆய்வு செய்த மாண்புமிகு முதலமைச்சர், மாண்பமை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தும் போது பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

 

இதன்படி கட்டண உயர்வு விகிதம் மறு ஆய்வு செய்யப்பட்டு, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், 2022 ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணிற்கு பதிலாக சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் விலை குறியீட்டு எண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் கட்டண உயர்வின் அளவு 4.7%லிருந்து 2.18% ஆக குறைக்கப்பட்டது. இந்த குறைந்த உயர்விலிருந்தும் பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கோடு, வீட்டு இணைப்பு நுகர்வோருக்கு ஏற்படும் 2.18% உயர்வையும் தமிழ்நாடு அரசே ஏற்று, மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

 

இந்த முடிவால்,

அ) வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது. 

ஆ) வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம். கைத்தறி, விசைத்தறிகள் போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரச் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்.

(இ) வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும்.

 

இந்த ஆண்டு நமது நாட்டின் பிற மாநிலங்களில் வீட்டு இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்கும் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த உயர்வுகளோடு ஒப்பிடும் போது மகாராஷ்டிரா (62 பைசா/யூனிட்), கர்நாடகா(70 பைசா/யூனிட்), அரியானா (72 பைசா/யூனிட்), மத்தியப் பிரதேசம் (33 பைசா/யூனிட்), பீகார் (147பைசா/யூனிட்) - தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளுக்கு மின்கட்டணங்கள் எவ்விதமும் உயர்த்தப்படாதது மட்டுமன்றி, வணிக மற்றும் தொழில் மின் இணைப்புகளுக்கும் மிகக்குறைந்த அளவிலேயே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.