Skip to main content

ஹெலிகாப்டரை வணங்கியவர்கள்..! மக்களிடம் கனிமொழி! - களத்தில் கனல் மொழி!

 

ddd

 

கலைஞர் இல்லாத தி.மு.கவில் சி.ஐ.டி. காலனி இல்லம் மீண்டும் பரபரப்படைந்தது, கடந்த ஜனவரி 5ஆம் நாள் அன்றுதான். தி.மு.க. மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழியின் பிறந்தநாளுக்காக நேரில் வாழ்த்தியவர்கள் ஏராளம். கட்சித் தலைவரின் அன்பான வாழ்த்துகளுடன் பிறந்தநாளைக் கொண்டாடிய கனிமொழி, தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறார்.

 

தூத்துக்குடியில் பெண்களைத் திரட்டி சமையல் எரிவாயு விலையேற்றத்திற்கெதிராகப் போராட்டம் நடத்திய கனிமொழி, "மக்களின் அத்தியாவசியத் தேவையான சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு குறைக்காவிட்டால் நாங்கள் மத்திய அரசுக்கெதிராக போராடுவோம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரலின் விலை குறைந்தபோதும் ஏன் இந்த விலையேற்றம்?'' என்ற கேள்வியை அழுத்தமாக எழுப்பினார்.

 

தென்காசி மாவட்டத்தின் ராயகிரி பகுதியில் மலைவாழ் பழங்குடியினரை கனிமொழி சந்தித்தபோது, வனத்துறை மற்றும் அரசு அதிகாரிகளால் தங்களுக்கு ஏற்படும் துயரங்களை முன்வைத்தனர். “தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆட்சியமைந்தவுடன் உங்களின் நியாயமான உரிமைகள் உங்களுக்குக் கிடைக்கும்'' என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

சிவகிரி பகுதியில் கனிமொழி மக்களைச் சந்தித்தபோது, கிருஷ்ணவேணி என்பவர், “கொரோனா நேரத்தில் வேலை வெட்டியில்லாம முடங்கிக் கிடந்த மகளிர் சுயஉதவிக் குழுவினர், ஏற்கனவே வாங்கிய கடன் தொகைக்கு அரசு தெரிவித்தபடி வட்டிச் சலுகை இல்லை. வட்டியும் அதிகமாகிறது. வட்டி தள்ளுபடி பண்ணனும் இல்லன்னா வட்டியைக் குறைத்தாலும் போதும்'' என்று ஈனஸ்வரத்தில் சொல்லியிருக்கிறார்.

 

தாமரை என்ற பெண்மணியோ, "புள்ளைகளப் படிங்க படிங்கன்னு சொல்லுதாவ. படிச்சிப்புட்டுப் பதினோரு வருஷமா எங்க புள்ளைக வேலையில்லாம இருக்கிறப்ப, ஏம் புள்ளைகளப் படிக்கவைக்கணும்'' என்றார். கனிமொழி, "ஆட்சி மாற்றம் நிலைமையை மாற்றும்” என அவருக்கு ஆறுதல் கூறினார்.

 

கிராமப்புறங்களில் "கழிப்பிட வசதியில்ல... கழிவுநீர் போக வழிவகை செய்யல்ல' என்று தெரிவித்த பெண்களிடம், “மத்திய அரசு, தொகுதி மேம்பாட்டு நிதியாக 5 கோடி ஒவ்வொரு எம்.பி.க்களுக்கும் இதுவரை தொடர்ந்து கொடுத்து வந்தது. மோடி அரசு அந்த நிதியை நிறுத்திவிட்டு அதனைக் கொண்டு ஆயிரம் கோடியில் புதிய பாராளுமன்றம் அமைக்கிறார்கள். நாங்கள் தொகுதிநலன் பொருட்டு அதற்காகப் போராடிவருகிறோம். நிச்சயம் உங்கள் கவலை தீரும்'' என்று பிரச்சனையின் மையத்தையும் அதன் காரணத்தையும் சுட்டிக்காட்டினார்.

 

புளியங்குடியில் கனிமொழி விவசாயிகளைச் சந்தித்தபோது "கொல்லம் - மதுரை நான்கு வழிச் சாலைய வேற வழியில போடுங்க. விவசாய நிலம் பாதிக்கிறது' என்றவர்களிடம் “இந்த ஆட்சியில் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களே கொண்டுவரப்படுகிறது. ஹெலிகாப்டரில் பறந்து வந்தவங்கள வணங்கினவர்கள் எதுவும் செய்யமாட்டார்கள்’’ என்று பஞ்ச் வைத்தார்.

 

சுமார் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி நெசவுத்தொழிலாளர்களைக் கொண்ட தொழில் நகரமான சங்கரன்கோவிலில் விசைத்தறிக் கூடம் சென்ற கனிமொழியிடம் பொங்கியிருக்கிறார்கள் தொழிலாளர்களும், ஜவுளி உற்பத்தியாளர்களும்.

 

மணி, சங்கரன், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் "விசைத்தறிக்குன்னு 500 யூனிட் கரண்ட் இலவசமாகக் குடுத்தவர் கலைஞர். இந்த அரசு இந்தத் தொழிலுக்குன்னு எதுவும் செய்யல. மாதந்தோறும் கரண்ட் பில் கட்டுறத விட்டுப்புட்டு, ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவ கணக்கு எடுக்குறது தொழில் செலவை அதிகரிக்குது'' என்றனர்

 

“ரகக் கட்டுப்பாடுன்னு சொல்லிக்கிட்டு மத்திய அரசின் என்ஃபோர்ஸ்மெண்ட் அதிகாரிகள் இன்ன ரகம் உற்பத்தி பண்ணக்கூடாதுன்னு எங்க மேல கிரிமினல் கேஸ் போடுறாங்க. நெசவுத் தொழில் பண்ற நாங்க என்ன கிரிமினல்களா? உற்பத்தி பண்ணுன ரகங்களுக்கு ஜி.எஸ்.டி. வரிகட்டுன எங்களுக்கு, வருஷங்கள் போயும் ரீபண்ட் கெடைக்கல்ல. தொழில்சிக்கல் வேற, இதுல ஜி.எஸ்.டி. ரீபண்ட்லயே எங்க முதல் முடங்கிப் போனதால தொழில நகர்த்தமுடியல. தமிழகம் முழுதும் நெசவுத்தொழிலின் நிலை இதுதான்’’ என்ற புலம்பலைக் கேட்டு அதிர்ந்த கனிமொழி,

 

"இதுபோன்ற சிறு தொழில்களை எல்லாம் மத்திய, மாநில, அரசுகள் கவனிக்காது. உங்களின் இந்தக் குறைகளைப்போக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்'' என்று நம்பிக்கையளித்திருக்கிறார். விசைத்தறி தொழில்கூடத்தைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த கனிமொழியின் பக்கம் கூட்டம் திரண்டுவிடக்கூடாது என்பதற்காக அவர் சென்றிருந்த விசைத்தறிக்கூடம் எதிரில், தொகுதியின் அமைச்சர் ராஜலட்சுமிக்கு நன்றி சொல்கிற மக்கள் நிகழ்ச்சியைத் திடீரென ஏற்பாடு செய்த நகர அ.தி.மு.க. நிர்வாகிகள், அவர்கள் பாணியில் கூட்டம் சேர்த்துப் பார்த்தனர். ஆனால் அதையும் தாண்டி, நகர மக்கள் கனிமொழியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கூடியிருந்தனர்.

 

"இதுபோன்று தொகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த பணிகளில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளைப் பற்றி டைமிங்காக எடுத்து வைக்கும் கனிமொழி, அரசுகளைத் தெறிக்கவிடுகிறார். அவரின் பரப்புரையில் ஏற்படும் நிகழ்வுகளை, எதிரொலிப்பை அறியும் பொருட்டு அரசு இயந்திரங்கள் அவரைப் பின்தொடர்கின்றன.

 

மக்களிடம் பேசுகையில் கனிவான மொழி, அரசை விமர்சிக்கையில் கனல்மொழி எனும் பிரச்சார யுக்தி, மக்களின் கவனத்தை ஈர்ப்பதோடு தி.மு.க.வின் வாக்குப் பலத்தையும் அதிகரிக்க வைத்திருக்கிறது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்