Skip to main content

கோயில் கட்டினார்களா? குஷ்புவுக்கு வெட்கமா இல்ல? - இள. புகழேந்தி 

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

Ela Pugzhendhi comment on udhayanidhi issue

 

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேச்சு மற்றும் அதற்கு எழுந்த எதிர்ப்புகள் குறித்து நமக்கு திமுக தேர்தல் பணிக் குழுச் செயலாளர் இள. புகழேந்தி நமக்கு அளித்த பேட்டியில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை இங்கு கொடுத்துள்ளோம்.

 

திமுக தான் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. ஆனால், கட்டற்ற சுதந்திரம் பெற்ற சனாதனம் கொண்ட இந்துமதத்தை  உதயநிதி எதிர்க்கிறார் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்?


சனாதனம் என்ற கொடுமையான கோட்பாடு சமத்துவத்திற்கு எதிரானது என்பது அனைவருக்கும் தெரிந்தது. உதயநிதி சொல்வது போல், சிலவற்றை எதிர்க்கலாம். ஆனால், சிலவற்றை அழிக்கத்தான் முடியும்.

 

சனாதனம் மனிதர்களை பிரித்து வைத்து நெற்றியில், தோலில், காலில், கையில் பிறந்தவன் என்று பேதம் பார்க்கிறது. மேலும், சூத்திரர்கள் என சொல்லி வெளியே தள்ளுகிறது. அதில், பார்ப்பனர்கள் நெற்றியில் பிறந்தவர்கள் எனக் கூறி பிற மக்களை கீழே பிறந்தவர்கள் என சனாதனம் காட்டுகிறது. இந்த கொடுமையெல்லாம் வானதிக்கு தெரியுமா? அவர் எங்கே சென்று படித்தார். எதற்கு இது போன்று அநியாயமாக நடந்து கொள்கிறீர். சனாதன மனுதர்மம் பெண்களைப் பற்றி எவ்வளவு இழிவாகப் பேசுகிறது என்பது இவர்களுக்கு தெரியுமா. இன்றைக்கு வானதி ஸ்ரீனிவாசன் போன்றோர் சட்டமன்ற உறுப்பினர் ஆவதும், மைக்கில் பேசுவதற்கும் திராவிடப் பேரியக்கத்தின் கருத்துகள் தான் காரணம். 

 

முன்பு பெண்கள் படிக்கக் கூடாது, வேலைக்குச் செல்ல தடை, வீட்டிற்குள் அடைபட்டு இருக்க வேண்டும், உடன்கட்டை ஏறவேண்டும், குழந்தை திருமணம் செய்துகொள்வது, பெண்களை பிள்ளை பெறும் இயந்திரமாகவும் வைத்திருந்தார்கள். இது போன்று மேலும் நிறைய இழிவான விஷயங்கள் கொண்டதுதான் சனாதனம். இதைப் பற்றியெல்லாம் அறிவாரா வானதி ஸ்ரீனிவாசன். தனக்கு பதவி, காசு வந்தால் போதும் என அனைத்தையும் ஆதரித்துக் கொண்டு இருக்கக் கூடாது.

 

எதைக் கொடுத்தாலும் சூத்திரர்களுக்கு - கீழ்சாதியினருக்கு கல்வியை கொடுக்காதே என்றும், குளித்த குதிரை, மதம் பிடித்த யானை, படித்த சூத்திரன் மிகவும் ஆபத்தானவர்கள் என சனாதன மனுதர்மம் கூறுகிறது. இதனையெல்லாம் அவர்கள் படிக்க வேண்டும். இதற்கெல்லாம் மூலநூலாக இருப்பது கொடுமையான மனுதர்மம். ஆகவே, சரியான கருத்தை ஆதரித்து பேசவேண்டும். 

 

பெண்களை ஒட்டுமொத்தமாக அடிமைகளாக, படிக்க அனுமதிக்காமல் மிகவும் மோசமாக வைத்தது சனாதனம். உடன் கட்டை ஏறவைத்தது, குழந்தைத் திருமணம் செய்துவைத்தது சனாதனம்.

 

ஆனால், திராவிடம் இன்று பெண்களை விளையாட்டுப் போட்டியில் பங்குபெற வைக்கிறது. மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்களை கொண்டுவருகிறது. இதற்கும் மேலாக, விண்வெளி ஆராய்ச்சி தலைமைப் பொறுப்பு வரை பெண்கள் சென்றதற்கு அவர்களின் படிப்புதான் காரணம். படிப்பைதை மறுத்த சனாதனத்தை ஆதரிப்பவர்கள் வானதியாக இருந்தாலும் வேறு எவராக இருந்தாலும் அவர்களின் அறிவு வேலை செய்யவில்லை; பேசுகிறார்கள் என எடுத்துக் கொள்ளவேண்டும். அல்ல, தெரிந்தே மாற்றி பேசுகிறார்கள் என்றால் மோசமான மட்டமான பேச்சு என்றே பார்க்கிறேன். 

 

பிராமண சமூகப் பெண்களைக் கூட மொட்டை அடித்து மூலையில் உட்கார வைத்திருந்தனர். இதனையும் முறியடித்து அவர்களுக்கு கல்வி கற்க உதவியது சமூக நீதியும், நமது திராவிட இயக்கமும் தான். வானதி அவர்கள் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டியின் புத்தகத்தை வாசித்தால் உணருவார். இந்தியாவின் ஜனாதிபதியையே வடநாட்டுக் கோவிலில் நுழைய விடாமல் நிறுத்தி வைத்தார்கள். காரணம், பஞ்சமர்கள்-சூத்திரர்கள் தீட்டு என சொல்கிறார்கள். வானதி அவர்கள் முடிந்தால் எச்.ராஜா வீட்டில் தண்ணீர் குடிக்க செல்லட்டும் முதலில்.

 

பெண்களை அடிமைப் படுத்தியது சனாதனம் என சொல்றீங்க.. திமுகவில் வாரிசு அரசியலில் கூட ஆணாதிக்கம் தான் இருக்கு.... ஸ்டாலினுக்கு பெண் இருந்தும் அவர் உதயநிதியை அரசியல் படுத்தியுள்ளார் என்று சொல்கிறார்களே?

 

எந்த விஷயத்திற்கு எதனைப் பேசுவது என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை. ஏனென்றால், மக்களின் ஆதரவில் தான் உதயநிதி வென்று பொறுப்பிற்கு வந்துள்ளார். இவர்கள் சனாதனத்தை பற்றி பேசும்பொழுது வேறொன்றை எடுத்து வருகிறார்கள். இருந்தும் இவர்களுக்கு சொல்லிக்கொள்வது, எங்களின் கட்சி எங்களின் குடும்பம். இதனை ஸ்டாலினும் அடிக்கடி பேசியுள்ளார். 

 

இந்த சமூகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் இந்துத்துவா கூட்டத்தின் கொடுமைகளைப் பற்றி பேசிவருகிறோம். ஆனால், இவர்கள் திமுக கட்சியை குறித்து பேசுகிறார்கள். உங்களால் முடிந்தால், சனாதனத்தில் இருக்கும் நியாங்களை எடுத்து கூறுங்கள். மேலும், சனாதனம் தான் இந்து மதம் என்று கூறுகிறார்கள். இவர்களுக்கு ஸ்டாலின் மிகச் சரியான தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். 3% பிராமணர்கள் கூட மொத்தமாக சனாதனத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வேண்டுமானால், மனசாட்சி இல்லாதவர்கள் ஏற்றுக்கொள்வர். இப்படி இருக்கின்ற சனாதனத்தை வேறோடு களைய வேண்டும் என உதயநிதி பேசியதில் எந்தவித தவறும் இல்லை.

 

முஸ்லிமான எனக்கு கோவில் கட்டினார்கள். அது தான் சனாதனம் என குஷ்பு கூறியுள்ளார்?


இதெல்லாம் சொல்வதற்கு வெட்கமாக இல்லை. என்றைக்கோ இரண்டு பேர் கோவில் கட்ட முயன்றதை பத்திரிக்கையாளர்கள் பெரிதுபடுத்தினர். பின்பு விளையாட்டு பொம்மை போல தூக்கி எறிந்துவிட்டனர்.  இவர்களுக்கு கோவில் கட்டிய சமாச்சாரம் எல்லாம் எங்களுக்கு தெரியும். 

 

சமீபத்தில் கூட, உ.பி யில் சிவில் சப்ளை அமைச்சர் சதீஷ் ஷர்மா, சிவன் கோவிலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு சிவ லிங்கத்தின் மேல் கை கழுவுகிறார். இதனை வீடியோவாக பதிவு செய்துவிட்டனர். இதற்கு அதீத நம்பிக்கையுடைய அந்த ஊர் மக்கள் அவரை கடுமையாக எதிர்த்தனர். அவர் கைகழுவி ஊற்றியதே சனாதனம். இதுவே, அந்த இடத்தில் மாற்று சாதியை சேர்ந்தவர்கள் இருந்தால் எதிர்வினைகள் வேறுமாதிரியாக இருந்திருக்கும். அவர் நெற்றியில் பிறந்தவர் என்பதால் ஒன்றும் செய்யமுடியவில்லை. 

 

குஷ்பு இதையெல்லாம் அறிந்து வானதிக்கும் சொல்லித்தர வேண்டும். இது மாதிரி பிறப்பால் பேதம் பார்த்த அயோக்கிய சிகாமணிகள் கூட்டத்தில் இருப்பதே சனாதனம். மாறாக பெருமை பேசுவது தவறு. அதனை குஷ்பு தவிர்க்க வேண்டும்.

 

உதயநிதி பேச்சிற்கு அயோத்தி சாமியார் 10 கோடி தருகிறேன் என சொல்வது?


உ.பி மாநிலமும் இந்தியாவில் சட்டங்களுக்கு உட்பட்டு தானே இருக்கிறது. அந்த அகோரி பரம ஹம்ச ஆச்சாரியார், உதயநிதி படத்தை தொடுவதற்கே தகுதி இல்லாதவர். இவர்கள், இனிமேல் சாதிய பாகுபாடு இல்லை. மக்கள் அனைவரும் சமம். அதுவே சனாதனம் என்று கூற வேண்டும் தானே. இவர்கள்  கோட்சேவை மகாத்மா என அழைப்பவர்கள். மேலும், இவரைப் போன்றோர்தான் பாஜக பின்னணியில் வந்து மதத்தின் பெயரால் வாக்கு கேட்பார்கள். 

 

தமிழ்நாட்டில் அண்ணாமலை என்ற ஐ.பி.எஸ் இருக்கிறாரே, அவர் அந்த சாமியார் மீது ஐபிசி 506 பகுதி 1, 153எ கீழ் வழக்கு தொடுத்திருக்கலாம். ஆனால், கைது செய்யாமல் சுயோ மோட்டோ வழக்காக எடுப்பது ஏன். பணத்தை கொடுத்து யாரை வேண்டுமானாலும் வெட்டுங்கள் என சொல்லும் கெடுமதியாளர்களின் கூட்டம் இவர்கள். இவர்களின் தலைவர் தான் மோடி. அதனால் தான் அவர் இந்த பிரச்சனையில் அமைதி காத்து நிற்கிறார். 

 

உதயநிதி ஸ்டாலின் மீண்டும் சனாதனம் குறித்து பேசினால் ஆட்சியை கவிழ்க்க ஆளுநரை அணுகுவேன் என சுப்ரமணிய சாமி சொல்லியிருக்கிறார்?


சுப்ரமணிய சாமி என்பவர் எப்பொழுதும் தி.மு.க.விற்கும் திராவிட, சமூக நீதி கருத்திற்கும் எதிரானவர். எனவே அவரின் பார்வையில் உயர்ந்த வகுப்பினரைத் தவிர எவருமே நன்றாக இருக்க கூடாது என நினைப்பார். அவர் எவராக இருந்தாலும் ஒன்று கெடுப்பார். இல்லை அழிப்பார்.  சுப்ரமணிய சாமியவை விட எங்களுக்கு சட்ட அறிவு அதிகம் என நிரூபித்துக் காட்டுவோம். இந்திய ஜனநாயகத்தை அவர்களின் வீடு என நினைத்து பேசுகிறார்கள். இதுபோன்று காவிக் கும்பலினால் கொழுப்பு ஏறி இருக்கும் சுப்ரமணிய சாமி எந்த நாட்டிற்காவது ஓடிப்போக வேண்டும். அதிலும் முக்கியம், சுப்பிரமணிய சாமி என்ற கொடியவர் இலங்கையுடன் சேர்ந்து தேசத்துரோக காரியங்களில் ஈடுபடுபவர் என அனைவருக்கும் தெரியும். ஆகையால், அவரை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம் என தெரிவித்துக் கொள்கிறேன்.

 

முழு பேட்டி  வீடியோவாக: