Skip to main content

பாஜக செயல் திட்டம் ஒருபோதும் தமிழகத்தில் நடக்காது - இள. புகழேந்தி திட்டவட்டம்

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

Ela Pugazhendi Interview

 

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி குறித்தும் பல்வேறு கருத்துகளை ஆளுநர் பேசியது தொடர்பாகவும், பாஜக செயல் திட்டம் மற்றும் அண்ணாமலை பற்றியும் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தியை சந்தித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...

 

தேசியவாத காங்கிரஸில் நடந்ததைப் போல ஆம் ஆத்மி கட்சியிலும் அடுத்து நடக்கும் என்று பாஜகவினர் கூறியிருக்கிறார்களே?

 

ஒவ்வொரு கட்சியையும் விலைக்கு வாங்கி அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுவா இவர்கள் கூறும் ஜனநாயகம். ஆம் ஆத்மி கட்சி ஆண்டு கொண்டிருக்கும் டெல்லியில் காவல்துறைகள் மத்திய அரசின் கையில் இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு கெஜ்ரிவாலுடைய அரசுக்கு கெட்ட பெயர்களை உண்டாக்கி அந்த மாநிலத்தில் சட்ட ஒழுங்கு கெடும் வகையில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆக இப்படிப்பட்ட தவறான செயல்களை செய்து தான் வருவார்கள். அதை எதிர்த்து பாஜகவை வீழ்த்துவதே அத்தனை மாநிலத் தலைவர்களின் இன்றைய இலக்காக இருக்கிறது.

 

கன்னியாகுமரியில் அண்ணாமலை பேசியதைப் பற்றி ?

 

அண்ணாமலை கூறியதைப் போல் ஏ.கே. ரானடேவிற்கும் திருக்குறளுக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது என்று தெரியவில்லை. அதற்கு அண்ணாமலை விளக்கம் சொல்ல வேண்டும். அதனால் அண்ணாமலை வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவார். கலைஞரை போல் மிகப்பெரிய ஆளுமை மிக்கத் தலைவரையும் பார்க்க முடியாது. அதே போல், அவரைப் போல் அன்போடும் பண்போடும் அரவணைக்கும் தலைவரையும் பார்க்க முடியாது.

 

மேலும் கன்னியாகுமரியை நாசப்படுத்தியது பாஜகதான். அதுமட்டுமல்லாமல், அங்கு இருக்கும் அத்தனை ஏழை எளிய மக்கள் உள்பட அத்தனை மக்களும் திராவிட இயக்கத்தை ஆதரிக்கக் கூடியவர்கள் தான். காமராஜர் முதல்வராக வேண்டும் என்று சொன்ன தந்தை பெரியாரை ஆதரிப்பவர்கள் தான் கன்னியாகுமரியில் இருப்பவர்கள். காமராஜர் தந்தை பெரியார் மீதும் அண்ணா மீதும் அதிக பற்று கொண்டிருந்தவர்கள். அப்படிப்பட்ட காமராஜரை கொலை செய்ய திட்டமிட்ட கூட்டம் தான் இவர்களுடைய ஆர்.எஸ்.எஸ் கூட்டம். பகவத் கீதை படித்த அம்பேத்கர் அதில் ஒன்றும் இல்லை என்று கூறியிருக்கிறார். ஆனால், அம்பேத்கர் சொன்னதை ஏற்றுக் கொள்ளாமல் வெறும் வாக்கு வங்கிக்காக அவரை தலையில் தூக்கிக் கொண்டாடி வருகின்றனர்.

 

அதுமட்டுமல்லாமல், கீதை படிப்பதை விட கால்பந்து விளையாட கற்றுக்கொள்வது மேல் என்று விவேகானந்தர் கூறியிருக்கிறார். இப்படி முற்போக்கு கருத்துகளை கூறிய விவேகானந்தரை தள்ளி வைத்து விட்டு அவருக்கு காவி பெயிண்ட் அடித்து அவர் இவர்களுடைய ஆள் என்று நினைத்துவிட்டார்கள். ஆகவே, வள்ளலாரை போல விவேகானந்தரும் சமரச சன்மார்க்கத்தை கையில் எடுத்தார். அதை இவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் தான் வள்ளுவருக்கும் விவேகானந்தருக்கும் இந்தியாவினுடைய எல்லையில் உள்ள கன்னியாகுமரியில் சிலை வைத்தார் கலைஞர். அதனால், கலைஞர் மீது ஏதாவது ஒரு குறை சொல்ல வேண்டும் என்று எதையாவது சொல்கிறார்கள். மேலும் இவர்கள், கற்பனையில் தமிழக இளைஞர்களையும் கெடுத்து விடலாம் என்று எண்ணி இப்படிப் பேசி அதனால் திமுகவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அது ஒரு போதும் தமிழகத்தில் நடக்காது.